யாதுமாகி நிற்கும் இறையுடன் பேரம் பேசும்
முறைமைக்கு வழிபாடு எனப் பெயரிடுதல் முறையோ ?
‘உளன் எனில் உளன் உளநிலன் எனில் இலன்’ என்று
ஆழ்வார் கூற்றுப்படி
இருத்தலை நம்புபவர்க்கு இருப்பவனாகவும்
இருத்தலை நம்பாதவர்க்கு இல்லாதவனாகவும்
இருந்து அருள் வழங்கும் தலைவனை
வேண்டவும் வேண்டும் என்று தேவையோ ?
அவன் தான் அறிவானே
எனக்கு என்ன தேவை என்று ?
அல்லது வழிபாடு நினைவு படுத்தலோ ?
பல வேளைகளில் பல வேலைகள் இருப்பதால்
மறந்திருப்பான் என்பதால் நினைவூட்டும் விதமாக
இருக்குமோ வழிபாடும் வேண்டுதலும் ?
ஆனால் அவனே என்னை மறந்துவிட்டால்
என் இயக்கமும் சாத்தியம் தானோ ?
அவன் மறந்தும் நான் இயங்குவதால்
ஒரு வேளை நானே அவனோ ?
என் வேண்டுதல் என்னவென்று நானே அறியுமுன்னர்
அது குறித்து அவனை வேண்டுதல் முறையோ ?
என் வேண்டுதல் அறிந்திருந்தால் என் அல்லல் ஏனோ ?
என் தேவை நானே அறியுமுன்னர் அவன் அறிந்து
செயல்படுத்தினாலும் அதை நான் அறிவது எங்ஙனம் ?
ஒரு வேளை நானே அறிந்து வேண்டினாலும் அதை
அவன் செய்ய வேண்டிய அவசியம் ?
ஒரு வேளை அவன் செய்கிறான் என்றால் எனது கைம்மாறு ?
இறை தொழுவது ஆன்மிகம் என்றால்
எனது கைம்மாறு வர்த்தகம் அன்றோ ?
ஆக ஆன்மிகமும் வர்த்தகம் தானோ ?
அட வர்த்தகம் செய்ய அவனிடம் போவானேன் ?
சரி, அவனிடம் தான் போனால்
ஏற்பது இகழ்ச்சி ஔவை சொன்னதை
அவனே மறந்து, அதிகம் கொடுத்த
அதிபதியாளர்க்கு அருளாசி வழங்கும்
ஆன்மிகத்தை ஆணவத் தோரணம் ஆக்கிய விந்தையை
அன்பே சிவமென்ற புண்ணிய பூமியில்
பண்பே இல்லாமல் கடவுளை விற்று
ஆதி சிவனின் அடியாளர் என்று
நாமே அரற்றி வழிபாடு செய்வோம் .
Like this:
Like Loading...