வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்றோம்.கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே தோன்றிய மூத்த தமிழ்க் குடி என்றோம். மிகவும் முன்னேறிய சமூகம் என்று மார் தட்டினோம். தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று இருமாந்தோம். புலியை முறத்தால் விரட்டிய தமிழ்ப்பெண் பரம்பரை என்றோம். புறமுதுகு காட்டி இறந்த தன் மகனுக்குப் பால் தந்த தன் முலைகளை வெட்டிய வீரத் தமிழ்த் தாய் எங்கள் தாய் என்றோம்.
இப்போது ஒரு புத்த பிட்சுவை பலராக சூழ்ந்துகொண்டு நையப் புடைக்கிறோம். அதுவும் ஒரு துறவியை, நமது தஞ்சை பெரிய கோவிலில் வைத்து அடித்து நமது வீரம் பறை சாற்றுகிறோம்.
பாரோர் வியக்கும் பெரிய கோவில் உலகம் அதிசயிக்கும் பல போர் வெற்றிகள் என்று பெருமை பேசிய ராஜ ராஜ சோழன் கட்டிய ஒரு கோவிலில் ஒரு புத்த துறவி இன்று நம்மால் அடி படுகிறார்.அன்று ராஜராஜன் இலங்கையில் போரால் இடிந்த பல புத்த ஆலயங்களைக் கட்டிக் கொடுத்தான் என்று பொன்னியின் செல்வனால் அறிகிறோம். இன்று ஒரு புத்த துறவி ராஜராஜன் கட்டிய கோவிலில் தமிழர் என்று கூறிக்கொள்வோரால் அடி படுகிறார்.
இது தான் தமிழ் வீரம் என்றால், தமிழனாய் இருப்பதில் வெட்கப்படுகிறேன்.