81 வயதாகும் வைகோவின் தாயார் இலங்கை தமிழருக்காக உண்ணாவிரதம் இருந்துள்ளார். தனி ஈழம் வேண்டும் என்று கோரிக்கை.
தாயே, தள்ளாத வயதில் இப்படி உண்ணாவிரதம் இருக்க வேண்டாம். உங்கள் வயது வரை நாங்கள் இருப்போமா என்றே தெரியவில்லை.
தங்களின் உணர்வு புரிந்துகொள்ளக் கூடியது தான், ஆனால், தமிழ்த் தலைவர்கள் என்று கூப்பாடு போடுபவர்களும், பகுத்தறிவு பேசி வார்த்தை ஜாலத்தால் மக்களை மயக்கி கணக்கில் அடங்கா மாணவர்களையும் அறியாதவர்களையும் தூண்டி விட்டு, தீக்குளிக்கும் பதின்ம மற்றும் இளைஞர்களின் உடல் தீயில் குளிர் காயும் தமிழ் ஆர்வலர்களும் , ‘தலைவர்’களும் இருக்கட்டும் உண்ணா விரதம்.
காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையே மெரீனா கடற்கரையில் காற்று வாங்கும் விதமாக பள்ளி கொண்ட கோலத்தில் உண்ணா விரதம் இருந்த தலைவர்கள், இலங்கைத் தமிழர் பெயரைச் சொல்லி வங்கி கணக்கு வளர்த்த ‘அறிவாளிகள்’ இருக்கட்டும் உண்ணா விரதம்.
ஏற்கனவே பல தமிழ்ப் பெண்களின் உயிர் சிங்கள வெறியர்களாலும் விடுதலைப் புலிகளாலும் வாங்கப்பட்டுவிட்டது.சிங்கள வெறியர்கள் பெண்களின் உயிரை மட்டும் அல்ல கற்பையும் அழித்தனர். புலிகளோ பதின்ம வயது தமிழ்ப் பெண்களை மனித வெடிகுண்டுகளாகப் பயன்படுத்தி தமிழ்ச் சமுதாயம் எதிர்காலம் இல்லாமால் போக வழி செய்தனர்.
அம்மையே, தனி ஈழம் சாத்தியம் இல்லாதது. ஒரு தனி நாடாக செயல் பட முடியாமல் பெரியவர் அமிர்தலிங்கம், சிறி.சபாரத்தினம், பத்மநாபா, லக்ஷ்மன் கதிர்காமர், ஜோசப் பரராஜ, சாம் துரைப்பா முதலான தலைவர்களை புலிகள் அழித்தனர். தற்போது அவர்களும் அழிந்துவிட்டனர். தற்போது இலங்கைத் தமிழ் மக்களுக்கு வேண்டியது நீதி, மரியாதையுடன் கூடிய ஒரு வழி நடத்துதல், இலங்கையின் இறையாண்மைக்கு உட்பட்ட ஒரு அரசியல் கட்டமைப்பு. அதற்கு இலங்கை அரசாங்கத்தை மேலும் எதிர்க்காமல் தமிழ் மக்ககளுக்கு என்ன வகையில் நன்மை செய்ய முடியுமோ ( பள்ளிகள் அமைத்தல், சாலை வசதிகள், மின்சாரம் ) இந்த துறைகளில் இந்திய அரசாங்கத்தின் / இந்திய ஆற்றல்களின் உறுதுணையுடன் செயல் பட வேண்டும். அது தான் ஆக்க பூர்வமான நடவடிக்கை.
சிங்கப்பூர் தந்தை லீ குவான் யூ தனது சுய சரிதையில் குறிப்பிட்டுள்ளபடி, இலங்கை அரசாங்கம் செய்த தவறு அறிவில் முன்னேறிய தமிழர்கள் ஆங்கிலம் நன்றாகக் கையாண்டதால், அரசாங்கப் பதவிகளில் பெருமளவில் இருந்தனர் ஆங்கிலேயர் இலங்கையை விட்டுப் போகும் போது. அது பொறுக்காமல் சிங்கள பெரும்பான்மையினர் தமிழர்களின் ஆதிக்கத்தைக் குறைக்கும்விதமாக சிங்களத்தை ஆட்சி மொழியாக ஆக்கினர். ( இந்தியாவில் ஹிந்தி விஷயம் நினைவுக்கு வரலாம் ). அதனால் வந்தது கேடு. அன்றிலிருந்து தமிழர்க்குப் பாடு.
ஆகவே ஆங்கிலத்தை இணைப்பு மொழியாகவும், தமிழையும் சிங்களத்தையும் சமமான அந்தஸ்த்தில் வைக்கக் கூடிய ஒரு சட்ட அமைப்பு, அதன் அடிப்படையில் செயல்படக் கூடிய ஒரு தன்னாட்சி அதிகாரம் பெற்ற ஒரு மாநில அரசு தமிழருக்கு என்பது தான் ஒரு நல்ல ஏற்பாடாக இருக்க முடியும்.
நீங்களும் வைகோவும் எங்களுக்குத் தேவை. வைகோ எம் இந்திய நாட்டிற்குத் தேவை.
லஞ்சமும் பகட்டு ஆடம்பரங்களும் இல்லாத,பண்பாட்டுடன் பேசவும் செயல் படவும் கூடிய வைகோ போன்ற ஒரு சில அரசியல் தலைவர்களே நம் இந்தியாவில் உள்ளனர். அவரை இலங்கையிலிருந்து மீட்டெடுத்து இந்தியா அனைத்திற்கும் உரியவராக ஆக்குங்கள். அவர்தம் சேவை நம் நாட்டிற்குத் தேவை.
இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, இனியும் இந்த உண்ணா விரதம் முதலான செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.
– அன்புடன்,
அசட்டு அம்மாஞ்சி
Super. This article more balanced
LikeLike
Thanks. keep visitng.
LikeLike