பள்ளித் தளத்தில் கோவில் தான் செய்ய வேண்டாம் அய்யா
ஒரு கழிப்பறை யாவது கட்டலாமே புண்ணியமாப் போகும் !
முன்னூறு கோடியில் வளர்ந்தது
தமிழ் கோவையில்
ஆனா
மூணு கோடியில் வளரவில்லை
கழிவறை பள்ளியில்.
————————–
உதய சூரியன் என்றார்
எழு ஞாயிறு என்றார்
இதய தீபம் என்றார்
ஒளி விளக்கு என்றார்
சிரித்து நின்றார் கை தூக்கி
டிஜிட்டல் தகட்டில் ஒளி மின்ன
எதிரே
குடிசை வீட்டில்
மண்ணெண்ணெய் விளக்கு !
——————————-
கை காட்டினார் ,
வாக்களித்தோம்
கை விரித்துக் காட்டினார்,
வாக்களித்தோம்
கை விரல் இரண்டு காட்டினார்,
வாக்களித்தோம்
காத்திருந்து வாக்களித்தோம்
வாக்களித்துக் காத்திருந்தோம்
இப்பவும்
காத்துக் கெடக்கோம்
கை ஏந்தியே !