எழுத்தாளர் ஞாநி யுடன் ஒரு கலந்துரையாடலுடன் இந்த மாத வாசகர் வட்டம் நடைபெற்றது சிங்கப்பூர் அங் மோ கியோ நூலகத்தில்.
பல கருத்துக்கள் மடை திறந்த வெள்ளம் போல் , எந்த வித தங்கு தடையும் இன்றி பரிமாறிக்கொள்ளப்பட்டன.
திருமதி.சித்ரா நமது வாழ்வில் பல சமயம் பல விட்டுக்கொடுத்தல்களையும் சமாதானங்களையும் ஏற்றுக்கொள்வதால் நமது வாழ்வை முழுமையாகவும் உண்மையாகவும் வாழ்கிறோமா என்று ஒரு ஆழ்ந்த தத்துவங்களைத் தன்னகத்தே கொண்ட ஒரு வினா எழுப்பினார்.
மார்சிய சுவை ததும்ப ஒரு நண்பர் சில அமைப்புகளையும் அவர் சார்ந்த சமுதாயக் கட்டுக்கோப்புகளையும் உடைக்க வழி தேடும் விதமாக உணர்ச்சி பூர்வமாகக் கேள்வி எழுப்பினார்.
ஆன்மீகம் முதல், குடும்ப வாழ்க்கை, பெண் விடுதலை, ஆண் பெண் உறவு முறைகள், தமிழ் எழுத்தாளர் பற்றிய பதிவுகள், பாரதியார், பாரதிதாசன்,தமிழ்த் திரைப்பட உலகம் என்று பல விஷயங்கள் பேசப்பட்டன.
ஞாநி இருக்கும் போது அரசியல் இல்லாமல் இருக்குமா ? அணு உலை, கூடங்குளம், தமிழ் நாட்டு ஆட்சிகள் பற்றிய மதிப்புரைகள் இவை பற்றியும் பல கேள்விகள் அதற்க்கான அவரது பதில்கள் அதற்க்கு எங்கள் மறுப்புகள் அவற்றிற்கு அவரது பதிலுரைகள் – எல்லாம் சூடாகவும் அதே சமயம் சுவையாகவும் நிகழ்ந்தன. பதினைந்து நாள் நாராயணசாமியும் இடம் பெற்றார் – அவர் பேச்சில்.
செய்தி ஊடகங்கள்,அவற்றின் ஜெயலலிதா பற்றிய பார்வை, கலைஞர் இவற்றைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வது — இவையும் பேசப்பட்டன. வழக்கம் போல் வெளிப்படையான பேச்சு – ஞாநியின் தனிமுத்திரை.
கூடங்குளம் பற்றி இந்திய ரஷிய ஒப்பந்தங்கள், தற்போதைய மின்சாரத் தட்டுப்பாடு சூழ்நிலையில் கூடங்குளம் அணு உலையின் தேவை பற்றி நான் கேள்வி எழுப்பி இருந்தேன்.அவரது பதில் வழக்கம் போல் வெளிப்படை. இருந்தும் அவரது இந்தக் கருத்தில் உடன்பாடு இல்லை. இருந்தாலும் இந்த விஷயத்தில் அவரது உறுதியும், தொடர்ந்த அவரது போராட்டங்களும் தெரிந்துகொண்டேன்.
சாதி பற்றியும், இட ஒதுக்கீடு மற்றும் மதம் பற்றியும் சில கேள்விகள். அவற்றுக்கும் தெளிவான பதில் அவரிடம். இவை பற்றிய அவரது கருத்துக்கள் சுவை. ஞாநி என்ற அவரது புனைப்பெயர் பற்றிக் கேட்டிருந்தேன்.சுவையான பதில் அவரிடம் – ஞானத்தைத் தேடுவதால் வைத்துக்கொண்ட பெயர் என்றார்.
திருமதி சித்ரா, திரு.ரமேஷ், திரு ராமன், திரு.ஷானவாஸ், திரு.ஆனந்த், திருமதி அழகு நிலா, திருமதி பாரதி , திரு.ரங்கப்ரசாத் மற்றும் பல வாசக வட்ட அன்பர்கள் பங்குபெற்றனர்.
எந்தத் தலைப்புமே இல்லாமல் எல்லாத் தலைப்புகள் பற்றியும் பேசிவிட்டோம் என்ற ஞாநியின் முத்தாய்ப்புடன் கலந்துரையாடல் இனிதே நிறைவு அடைந்தது.