சமீபத்தில் சில ஹைக்கூ கவிதைகளைப் படித்தேன். சிங்கப்பூர் தேசிய நூலகம் ஒரு அரிய பொக்கிஷம்.
ஜப்பானிய குறுங் கவிதை வடிவம் ஹைக்கூ.மொத்தமே மூன்று அடிகள் தான்.ஒரு ஆறு அல்லது ஏழு வார்த்தைகள் மட்டுமே.ஒரு சிலது சம்மட்டி அடி போல் இருக்கும்.பல நேரம் ஒரு நையாண்டி தொனிக்கும்.
தமிழ் ஆர்வலர்கள் வெறுப்பைச் சுமந்து பல காலம் அங்கீகாரம் இல்லாமல் அலைந்தது நம் தமிழ் நாட்டில். கவிஞர்கள் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் அறிவு ஜீவிகளைத் தாண்டி இன்று கிராமங்களில் உள்ள பலருக்கும் சென்று சேர்ந்துள்ளது.
யாப்பு,அணி, சந்தம் என்ற எந்த அளவுகளுக்கும் உட்படாமல் சாதாரண மக்களால் கையாளப்படும் வகையில் ஹைக்கூ இன்று நடை போடுகிறது.
எளிய மக்களால் இது ஒரு ஏற்றம் பெறுகிறது.எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் ஆழமான கருத்துக்களையும் மனதின் ஆற்றாமைகளையும் ஆறு ஏழு வார்த்தைகளில் சொல்ல பெரிய படிப்பெல்லாம் தேவை இல்லை.இதுவே சமூக நீதி என்று தோன்றுகிறது.
மனதில் பதிந்த சில ஹைக்கூக்கள் :
திருவோடு பிடித்தவனிடம்
கையேந்தி யாசிக்கும்
வேட்பாளர்.
————
வேப்ப மரத்தில்
அழகான பிஞ்சு
தூளிக் குழந்தை.
———-
தொலைகாட்சி பார்க்காமல்
விரைவாக உறங்குகிறது
தெரு விளக்கு.
———-
பாதை மாறினால்
பயணத்தில் விபத்து
சிறைக்குள் துறவிகள்.
———-
இயற்கை வளத்தை
என்றும் அழிப்பதில்லை
காடுகளில் வாழும் மிருகங்கள்.
———-
தொட்டிலில்
தூங்கவேண்டிய குழந்தை
குப்பைத் தொட்டியில்
———-
பேய் வீடாம்
மனித பயமில்லாமல்
குடியிருந்தன சிலந்திகள்
———-
வறண்ட ஆறு
தாகம் எடுத்தது
மணல் திருடனுக்கு
———-
சாப்பாட்டுக்குப் பின்
மருந்து விழுங்க வேண்டும்
சாப்பாடே இல்லை
———-
திறந்திருந்த கூடு
பறக்கவில்லை கிளி
பழக்கம்
———-
பூக்களின் தலையில்
பூமி
செங்கல் சுமக்கும் சிறுமி
———-
தாய்ப்பாலா கள்ளிப்பாலா
கருவறைக்குள்
காத்திருக்கும் சிசு
———-
மரம் நடுவிழா
மந்திரி வருகை
வாழைத் தோரணங்கள்
———-
முதல் தேதி சம்பளம்
முதல் ஞாபகம்
மருந்தகம்
———-
எப்போதும்
அழுக்காகவே இருக்கிறார்கள்
சுத்தம் செய்கிறவர்கள்
———-
காக்கைகளைக்கூட
விரட்ட முடியாமல்
காந்தியின் கையில் கழி
———-
குப்பைத் தொட்டி
இங்கே துப்பாதீர்
இருக்கலாம் பிறந்த குழந்தை
———-
சுதந்திர தினம்
பெண்களுக்கு
பிப்ரவரி முப்பது
———-
எந்தக் குழந்தையின்
கண்ணீரோ …
வெடிக்கவில்லை பட்டாசு
———–
தூக்கி எறிந்தவைகளில்
வாழ்க்கையைத் தேடுகிறாள்
குப்பை பொறுக்கும் சிறுமி
———-
பூங்குன்ற பாண்டியன்
April 10, 2013 at 10:27 am
நீங்கள் மேலே குறிப்பிட்டவற்றுள் எது ஒன்றும் ஹைகூ ஆகுமா சந்தேகமே? ஹைகூ ஒரு எளிய அறிமுகம் சுஜாதா நூல் படித்துப் பாருங்களேன்
LikeLike
Right Off Center
April 10, 2013 at 3:02 pm
இந்த கவிதைகள் எல்லாம் தமிழ் நாட்டில் கிராமங்களில், சிறிய நகரங்களில் உள்ள சில கவிஞர்கள் எழுதியவை.இவற்றைத் தொகுத்து ஒரு நூலாகப் போட்டிருக்கிறார்கள்.
அவர்களுக்குத் தெரிந்த அளவில் அவர்களின் அனுபவங்களின் அடிப்படையில் எழுதியிருக்கிறார்கள்.அவ்வளவே.
சுஜாதாவின் நூல் அறிமுகத்திற்கு நன்றி.படிக்கிறேன். நீங்களும் தொடர்ந்து உங்கள் கருத்துக்ககளைப் பதிவு செய்யுங்கள்.
LikeLike