நாம் இந்திய நாடாக முதலில் தோன்றினோமா அல்லது பாரத கலாச்சாரமாக இருந்து இந்திய என்று ஒரு நாடு அதனுள் உருவானதா என்ற கேள்வி நம்முள் எழக்காரணமாக உள்ளது தலைமை நீதி மன்றத்தின் தீர்ப்பு.
மரண தண்டனை அளிக்கப்பட்டவர் பல ஆண்டுகள் ஆகியும் தனது கருணை மனு பரிசீலிக்கப்படாமல் இருந்தால் அவரது மரண தண்டனை செல்லுமா செல்லாதா என்பதே கேள்வி. அதற்கு நீதி மன்றம் செல்லும் என்று கூறியுள்ளது நமது மனிதாபிமானத்தின் மீது ஒரு கேள்வியை வைத்துள்ளது.
மரண தண்டனை பெறுபவர் அவ்வளவு கொடூரமான செயல் செய்துதான் அந்த தண்டனை பெறுகிறார். ஐயம் இல்லை. ஆனால் அவரது கருணை மனு மீது சித்தம் போக்கு சிவன் போக்கு என்று இருபது ஆண்டுகள் இருந்துவிட்டு பிறகு மரண தண்டனை நிறைவேற்றுவது மனிதத்தன்மை அற்ற செயல் அல்லவா?
குற்றம் செய்தவர் மனிதத்தன்மையற்ற செயல் செய்ய வில்லையே என்பது கேள்வியானால், அதற்க்காக இருபது ஆண்டுகள் வரை அவரைத் தினம் தினம் கொலை செய்துவிட்டு கடைசியாக ஒரு முறை முழுவதும் கொலை செய்வது ஒரு நாடு செய்கிற செயலாக இருக்கலாம் ஆனால் ஒரு கலாசாரம் செய்யும் செயலாக இருக்க முடியாது.
ராஜீவ் கொலை குற்றவாளிகள், தருமபுரி பஸ் எரிப்புக் குற்றவாளிகள் செய்துள்ளது மனிதம் இல்லாத செயல் தான். அதற்காக பல ஆயிரம் ஆண்டுகள் பழமையும் பெருமையும் கொண்ட பாரத தேசத்தில் அரசாங்கமே இந்தக் கொலையில் ஈடுபடுவது தர்மம் தானா ?
கொலை தண்டனை நமது சட்டத்தில் உள்ளதே என்ற வினா எழுப்பப் படுகிறது. உண்மை தான்.சட்டத்தில் உள்ளது தான்.
சட்டத்தில் கூடத்தான் இந்தியர்கள் அனைவரும் சமம் என்று கூறப்பட்டுள்ளது. ஜாதி அடிப்படையில் மத அடிப்படையில் அரசே மக்களைப் பிரிக்க வில்லையா ? வேறுபடுத்திப் பார்க்கவில்லையா?
இட ஒதுக்கீடு கூடத்தான் தேசத்திற்கு விரோதமானது.அதை முன் மொழிந்த அம்பேத்கரே அதை ஒரு பத்து ஆண்டுகள் மட்டுமே தேவை என்று கூறினார்.ஆனால் நாம் பல முறை அதைத் தொடர்ந்து நீட்டிக்கவில்லையா ?அதே போல் இந்த கொலை தண்டனையை நீக்க கலாச்சாரத்தில் உயர்ந்த பாரதம் முயல வேண்டும்.
மன்னித்துவிட்டால் குற்றம் நீங்கி விடுமா, குறைந்து விடுமா என்ற கேள்வியும் எழுகிறது. மன்னிக்காவிட்டால் குற்றம் குறையப்போவதில்லை.அதேபோல் மன்னிப்பதால் குற்றம் நீங்கவும் போவதில்லை. ஆனால் நமது பண்பாடு தெரியும். கலாசார உறுதி மேம்படும். நாம் ஒன்றும் சவுதி அரேபியா அல்ல!
கொலை தண்டனை என்பது கொடூரமானது. அதை இந்தியா வைத்துக்கொள்ளட்டும், பாரதத்திற்கு அது வேண்டாம் !
Good article Amaruvi!
I like these lines..
“சட்டத்தில் கூடத்தான் இந்தியர்கள் அனைவரும் சமம் என்று கூறப்பட்டுள்ளது. ஜாதி அடிப்படையில் மத அடிப்படையில் அரசே மக்களைப் பிரிக்க வில்லையா ? வேறுபடுத்திப் பார்க்கவில்லையா?”
LikeLike