மெளனம் —
வாழ்வில் பல பதில் தெரியாத பொழுதுகளில் நம்மை ஆட்கொள்வது.
சில நேரங்களில் பதில் தெரிந்தும் திமிரின் காரணமாக ஒரு ஆயுதமாகப் பயன்படுவது மெளனம்.
சிந்திக்க முடியாதவர்கள் பதில் தேட முயற்சிக்காமல் சோம்பிக் கிடக்கும் ஒரு நிலை மெளனம்.
வாழ்வின் நகராத துளிகளில் அயராது தாக்கும் அன்றாடப்போர் வீரர்களின் விடுமுறைக் கணங்கள் பேசும் பாஷை மெளனம்.
ஆட்சியாளர்கள் கயவர்கள் என்றிந்தும் அவர்களையே மீண்டும் தேர்ந்தெடுத்து அல்லல் படும்போது கடைப்பிடிக்கும் விரதம் மெளனம்.
கலை என்ற பெயரில் கலாச்சாரம் காக்கும் வீரர்கள் போர்வையில் திரையில் நிகழ்த்தும் அருவருப்புக் களியாட்டம் கண்டு புழுக்கத்துடன் அமர்ந்திருக்கும் சாதாரண மனிதனின் மொழி.
இலக்கியம் என்று நாயகிகள் உறுப்பளவு சார்ந்த செய்தி பரப்பும் நாளிதழ்கள் காணும்போது சாதாரண மனிதனின் மொழி.
பல நேரம் சாஹித்ய, பத்ம,கலை மாமணி விருதுப்பட்டியல் கண்டு அவமானத்தால் குறுகி நிலம் நோக்கிப் பேசும் உண்மைக்கலைஞன் மொழி.
கோயில் பல சென்று வரம் வேண்டி வந்துதித்த வாரிசு, ‘முக்கியக் குழந்தை’ என்று ஓரங்கட்டப்படும்போது தகப்பன் பேசும் மொழி.
பேருந்தில் கால் கடுக்க பயணித்து உயிருடன் மீண்டு கோயில் வாயிலில் அரசாங்க வழிப்பறி தாண்டி கடவுளை சேவிக்கும் வேளையில் காரில் வந்த பண-பக்தர் நேராக மூலவர் பக்கம் நிற்கும் போது சாதாரண மனிதனின் மூச்சு.
கடவுளைக்காட்டும் வித்தை தெரிந்த வார்த்தை ஜால சித்தர், மூச்சை இழுத்து விடும் ‘கலை’ கற்றுக்கொடுக்க சொத்தைக் கேட்கும் தருணத்தில் சா.மனிதன் இதயக்குரல் மெளனம்.
தமிழ் வளர்த்த லட்சியத் தலைவர் நடத்தும் பள்ளியில் சேர்க்க லட்சங்களைக் கேட்டபோது லட்சியம் அழிந்த சா.மனிதன் ஓலம் மெளனம்.
வேறுபாடு அறியாப் பருவத்தில் சாதி மாறுபாடு புகட்டிப் பள்ளியில் சேர்த்து பின்னர் ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ பாடம் படிக்கும் சா.சிறுவன் குழப்பக் கேள்வி மெளனம்.
விளையாடி,கூத்தாடி, உறவாடிப் படித்துக் கல்லூரி விண்ணப்பம் நிரப்பும் நேரம் சாதி சொல்ல வேண்டிய நிலையில் சா.மாணவன் நிலை மெளனம்.
சான்றோர் என்றெண்ணி முன்மாதிரியாக் கொண்டார் சான்றாண்மை தவறி நிற்கும் தேர்தல் சமயத்தில் சா.மனிதன் மொழி மெளனம்.
அவ்வுலக வாழ்விற்கு வழிகாட்டும் ஆன்மீகப் பெரியவர் இவ்வுலக வங்கிக் கணக்கைத் தீர்த்த போது சா.மனிதன் குரல் – மெளனம்.
கள்உண்ணாமை அதிகாரம் வகுத்த வள்ளுவன் சிலை கீழ் அரசு மதுபானக் கடை காணும் சா.மனிதன் குரல் – மெளனம்.
கல்வியில் தோற்ற சமூக விரோதத் தம்பிகள், தலைவர் உருக்கொண்டு தேர்தலில் கை கூப்பும் நேரம் சா.மனிதன் மறுமொழி – மெளனம்.
போராடிப் போராடி இறுதிவரை போராடி வாழ்வு முடியும் நிலையில் சா.மனிதன் மெளனம் – அவன் மொழி.