ஒரு விஷயம் புரிய வில்லை. ஏதோ ராமதாஸ் இன்று தான் சாதி வெறி பிடித்து அலைவது போலவும் அதனால் அவரைக் கண்டித்து அனனவரும் பேசுகிறார்கள்.
அவர் இதுவரையிலும் இப்படித்தானே இருந்து வந்துள்ளார்? சாதி வெறி பிடித்துத் தானே பேசி வந்துள்ளார் ? அவரது செயல்பாடுகள் அப்படித்தானே இருந்தன? ஒன்று தலித்துக்களைத் தாக்கிப் பேசுவார்.அல்லது பிராம்மணர்களைத் தாக்கிப் பேசுவார். தற்போதும் அப்படித்தானே பேசியுள்ளார்? இதில் என்ன புதுமை ?
வன்முறை செய்தார்கள் என்றால் – இதுவரையும் அதுதானே செய்தார்? மரம் வெட்டினார். அரசுப்பேருந்துகள் கொளுத்தினார். தற்போதும் அதைத்தானே செய்கிறார். கூடவே மனிதனையும் வெட்டுகிறார். அவ்வளவே.
நேற்றுவரை பெரியார் வழி என்றார். அப்போதெல்லாம் அவர் இனித்தார். இப்போது ஆகவில்லை. இதுதான் பகுத்தறிவோ?
ஓரிரு மாதம் வரை திருமாவுடன் சேர்ந்து தமிழ் வளர்க்கிறேன் என்று கூத்தடித்தார். ஆட்சிக்குவந்தால் ஒரு தலித்தைத் தான் முதல் மந்திரி ஆக்குவேன் என்றார். வர மாட்டோம் என்று அவ்வளவு நம்பிக்கை.
இன்று மணக்க மணக்கப் பேசும் அரசியல்வாதிகள் நேற்றுவரை அவரைத்தானே கூட்டில் வைத்திருந்தனர். அப்போதெல்லாம் தெரியவில்லையா அவர் சாதி வெறியர் என்று?
நீங்கள் எல்லாம் கூட்டு வைக்கும் போது அவர் நல்லவர், விஷ்ணுவின் அவதாரம். இப்போது கெட்டவர். ஆகவே கைது.
பெரியாரும் அண்ணாவும் சாதியை ஒழித்துவிட்டார்கள் என்றும் அதனால் பாலாறும் தேனாறும் ஓடுகிறது என்றும் பேசினோமே, எழுதினோமே. அப்போ எல்லாமே பேத்தல் தானே?