எவ்வளவு தான் யோசித்தாலும், கூகுளில் தேடினாலும், நாடி ஜோசியம் பார்த்தாலும், சாலமன் பாப்பையாவைக் கேட்டாலும், பெரியார் சிலையை எவ்வளவு முறை வணங்கிக் கற்பூரம் ஏற்றினாலும் புரியவில்லை.
தேங்காய் உடைத்துப் பார்த்தேன், கிடா வெட்ட சிங்கபூரில் தடை மட்டும் இல்லாதிருந்தால் அதையும் செய்திருப்பேன்.
இத்தனை செய்தும் புரியவில்லை. சரி போனால் போகிறது என்று அம்மன் கோவிலில் குறி கேட்டுப் பார்த்தேன். குறி சொன்ன அம்மா “ஐயோ அம்மா” என்று தலை தெறிக்க ஓடிவிட்டார்.
வேறு வழியே இல்லை என்று வழியில் உள்ள பிள்ளையார் கோவிலுக்குச் சீட்டுக் குலுக்கிப் போட்டேன். போட்ட இரண்டு சீட்டுமே வெற்றுக் காகிதமாக இருந்தது. பிள்ளையாரே பின் வாங்கினார் என்று கருதினேன்.
சரி எதற்கும் இருக்கட்டும் என்று நண்பர் ஷானவாசிடம் கேட்டேன். என்னை ஒரு மாதிரி பார்த்தவர் “சரி ஒன்று செய்வோம். வாருங்கள் எங்கள் மசூதிக்குச் சென்று ஹாஜியிடம் கேட்போம்”, என்று அழைத்துச் சென்றார்.
ஹாஜியிடம் நான் கேட்டதுதான் தாமதம் விக்கி விக்கி அழ ஆரம்பித்துவிட்டார்.
எதிரில் நண்பர் லியோ தென்பட்டார். வழக்கம் போல் அவரிடம் கேட்டேன். இவனை ஏனடா சந்தித்தோம் என்று நினைத்தவர் போல் “சரி வா”, என்று தனது தேவாலயத்திற்கு அவசரமாக அழைத்துச் சென்றார். அங்கு பேராயரிடம் கேட்டேன். அது வரை கோபமே படாத அவர் ,” தம்பி உனக்குப் பாவ மன்னிப்பே கிடையாது”, என்று கூறி தான் க்ஷண நேர கோபத்திற்காக யேசுவிடம் மன்னிப்புக் கோரினார்.
எல்லோரும் கைவிட்டு விட்டார்கள். வேறு வழி இல்லை. என்ன செய்வது என்று தெரியவில்லை. பதில் தெரியாவிட்டால் தலையே வெடித்துவிடும் போல் இருந்தது.
வேகமாக வீடு வந்தேன். ஆவலாக மனைவியிடம் “உன் அறிவுக்கு ஒரு சோதனை”, என்ற பீடிகையுடன் ஆரம்பித்தேன். கேள்வியை நான் சொல்லி முடித்தவுடன் அவள் பார்த்த பார்வையின் அர்த்தம், ” உன் புத்தி போகுதே ..” என்பதாக இருக்கலாம் என்று ஊகித்துக்கொண்டேன்.
மகனைக் கேட்டேன். “உன்னோடு பேச மாட்டேன் போ”, என்று ஒரே ஓட்டமாக ஓடி விட்டான்.
ஐ-போன் என்னும் ஆபத்பாந்தவன் இருக்கக் கவலை ஏன்? “சிரி’ மென் பொருளை இயக்கினேன். கேள்வியைக் கூறினேன். மெல்லிய அலறலுடன் ஐ-போன் செல்பேசி செயலிழந்தது. “தங்கள் கேள்விக்குப் பதில் இப்பூவுலகிலேயே இல்லை” என்ற செய்தியுடன் செல் பேசி தன் கடைசி மூச்சை நிறுத்திக்கொண்டது.
அது என்ன கேள்வி என்று கேட்கிறீர்களா? இரத்த அழுத்த மருந்து உட்கொண்டீர்களா ? சரி அப்படியென்றால் சொல்கிறேன்.
இதுதான் கேள்வி :- தமிழ் அன்னை சிலையால் தமிழ் எப்படி வளரும்?
என்ன, பேச்சு மூச்சையே காணோம்? ஹலோ, அவசர மருத்துவ உதவியை அழைக்கட்டுமா ?