சில புத்தகங்கள் அட்டைப்படம் நளினமாக இருக்கும். உள்ளே சரக்கிருக்காது. சில நேர் மாறாக சரக்குடன் ஆயினும் நேர்த்தியாக அமையாது.
ஆனால் அமைப்பு ரீதியாகவும் கருத்தாக்க ரீதியாகவும் என்னைப் பல வகையிலும் பாதித்த எழுத்துக்கள் மிகச் சிலதே. அதுவும் தமிழில் அப்படி எழுதுவதும் எழுதுபவரும் அருகியுள்ள காலம் இது.
இந்தச் சூழலில் என்னைப் புரட்டிப்போட்ட ஒரு எழுத்தாளர் ஆங்கிலத்தில் அருண் சௌரி. தமிழில் தற்போது ஜெயமோகன் மற்றும் தொ.ப. என்றும அழைக்கப்படும் தொ.பரமசிவன்.
தொ.ப. எழுதியுள்ளது கதை அல்ல, கட்டுரை அல்ல, நாவல் அல்ல, சிறுகதை அல்ல. இவை எதுவும் அல்ல.
அவர் எழுதியுள்ளது நமது ஜாதகம், நமது பூர்விகம்.
நாம் யார், எப்படி இருந்தோம் என்பதை இலக்கியச் சான்றுகளுடனும், ஆராய்ச்சிச் சான்றுடனும் ஆணி அடித்தாற்போல் சொல்லியுள்ளார்.
நூல் எங்கும் வள வள , வழ வழ இல்லை. போலி டாம்பிகங்கள் இல்லை. சுய படாடோபம் இல்லை. வெற்று வார்த்தை இல்லை.
அளந்த. அளவறிந்த சொற்கள். தேவையான அளவு சான்றுகள். மேற்கோள்களும் அப்படியே. அளவாக எழுதுவது தமிழ் எழுத்தாளர்களுக்கு வராத ஒன்று சுஜாதாவைத் தவிர. தொ.ப.விற்கு வருகிறது.
தமிழ் ஆசிரியராகையால் அவரது பார்வை பரந்து விரிந்தது, சைவம் முதல் வைணவம் தொட்டு, சமணம், பௌத்தம், இஸ்லாமியம், கிறித்தவம் என்று விரிந்து வைணவத்தின் உட்பிரிவான வடகலை சம்பியாதாயத்தின் அடி நாதத்தையும் தொட்டுள்ளார். சேக்கிழார், நாவுக்கரசர், பெரியாழ்வார், ஆண்டாள், சங்க இலக்கியம், நன்னூல், என்று பரந்து விரிந்துள்ளது இவரது பார்வை. இருந்தும் அளவாகவே.
இவர் கூறியுள்ள பல விஷயங்கள் எனது பெரிய தந்தையார் காலஞ்சென்ற முனைவர் ராமபதிராச்சாரியார் கூறியவை என்பதால் இன்னமும் ஊக்கத்துடன் படித்தேன் – குறிப்பாக தமிழருக்குத் தாலி கிடையாது, துறவு, துறவிகள் பிச்சை எடுப்பது, பள்ளிக்கூடங்கள், ஆபத் சந்நியாசம் முதலியன பற்றி ஏற்கெனவே அறிந்திருந்தேன். அவற்றை தொ.ப. மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
தமிழில் வரலாற்று ரீதியிலும், சமகாலப் பார்வையுடனும் சுருக்கமாக சான்றுகளுடன் வெளியே அறியப்படாத தமிழகத்தை நறுக்கென்று காட்டியுள்ளார்.
தமிழை வளர்த்தோம் என்போர் இவரது நிழலின் அருகில் கூட வர முடியாது என்பது தெளிவு.
இரண்டு வருத்தங்கள் : புத்தகம் இன்னும் கொஞ்சம் நீண்டிருக்கலாம். பார்ப்பனர் பயன்படுத்தும் சொற்களில் ஒரு தவறு தென்பட்டது ( அத்திம்பேர் – அத்தையின் கணவர், ஆனால் மகன் என்று குறிப்பிட்டுள்ளார் ).