வைணவ மடங்களில் பிரதானமாகத் திகழும் அகோபில மடம் 610 ஆண்டு கால பாரம்பரியம் கொண்டது. செந்தமிழும் வட மொழியும் கலந்து திருமாலைப் பணியும் தொன்மையான மரபு சார்ந்த வைணவ மடங்களில் முதன்மையானது அகோபில மடம்.
அகோபிலம் ஆந்திராவில் ஒரு மலைப் பிரதேசம். அங்கு எழுந்தருளியுள்ள நரசிம்மர் 600 ஆடுகளுக்கு முன்பு (கி.பி. 1398 )காஞ்சியில் இருந்த கிடம்பி ஸ்ரீநிவாசாச்சாரியார் கனவில் வந்து அவரை அகோபிலம் வருமாறு அழைத்தார். அகோபில மலையில் அவரது கையில் மாலோல நரசிம்ஹர் விக்ரஹமாக வந்து சேர்ந்தார். அத்துடன் ஒரு வயோதிகர் உருவில் வந்து அவரை கிராமம் கிராமமாகச் சென்று மக்களை ஆற்றுப்படுத்த ஆணையிட்டார்.
அதன்படியே அகோபில மடம் உருவானது. அவர் ஆதிவண் சடகோபன் என்ற ஒரு திருநாமத்தை ஏற்று வைணவ சம்பிரதாயம் தழைக்க ராமானுசர் வழியில் விசிட்டாத்வைத மரபைப் பரப்பினார். இந்த மடம் வடகலை சம்பிரதாயத்தைச் சார்ந்தது. ஆதிவண் சடகோப ஜீயர் தென்கலை சம்பிரதாயத்தின் ஆதி குருவான மணவாள மாமுனிகளுக்கு சந்நியாசம் அளித்தார் என்றும் வரலாறு கூறுகிறது. அவரது நாட்களில் வடகலை-தென்கலை வேறுபாடுகள் இல்லை என்று அறியலாம்.
ஆந்திராவைச் சேர்ந்த அன்னமாச்சாரியார் திருவேங்கடவன் மேல் பல பாடல்கள் எழுதியுள்ளார். இவர் ஆதிவண் சடகோப ஜீயரின் சீடர் ஆவார்.
ஆதிவண் சடகோப ஜீயர் வழியில் வந்தவர்கள் அழகிய சிங்கர்கள் என்றும் சடகோப ஜீயர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். ( அழகிய சிங்கம் என்பது நரசிம்மப் பெருமானைக் குறிக்கும் என்று அறியலாம் ).
இம்மடத்தின் ஆளுமையில் சில திருமால் கோவில்கள் உள்ளன. திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவில், ஆதனூர் புள்ளபூதங்குடி கோவில்கள், அஹோபில நரசிம்ஹர் கோவில் முதலியன சில. அவை தவிர மடத்தின் மூலம் பல வேத – ஆகம – பிரபந்த பாட சாலைகளும் நடத்தப்படுகின்றன. இதில் சேர்ந்து படிக்கக் கட்டணம் தேவை இல்லை.
கடந்த அறுநூறு ஆண்டுகளாக தொடர்ந்த குரு பரம்பரை வழியில் பல ஆயிரக்கணக்கான சீடர்கள் கொண்ட ஒரு வைணவ மடமாக அகோபில மடம் செயல்பட்டு வருகிறது. இதன் 44-வது ஜீயர் திருவரங்கம் ராஜகோபுரம் ஆசியாவிலேயே உயர்ந்ததாகக் கட்டினார். அவரால் பல வருடம் தேர்வு செய்யப்பட்ட வில்லிவலம் கிருஷணமாச்சாரியார் 45- வது ஜீயராக 1991 ம் ஆண்டு பொறுப்பேற்று நாராயண யதீந்திர மஹா தேசிகன் என்ற சந்நியாசப் பெயர் பெற்றார். அதற்கு முன் இவர் தமிழ்ப் பண்டிதராகவும் பாடசாலை ஆசிரியராகவும் பணியாற்றி வைணவம் சார்ந்த நூல்கள் எழுதியுள்ளார்.
மடத்தின் பொறுப்பேற்றபின் பல சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். அஹோபிலம், புள்ளபூதங்குடி, திருவள்ளூர் கோவில்களைச் செப்பனிட்டார். தண்ணீர் வசதிகள் ஏற்படுத்தினார்.
“தெய்வம் அல்லால் செல்ல வொண்ணாச் சிங்கவேள் குன்றம்” என்றும் , “சென்று காண்டற்கு அரிய கோவில்” என்று ஆழ்வார்கள் அகோபில மலையில் காட்டின் நடுவே உள்ள மாலோல நரசிம்மர் கோவிலைப் பற்றிப் பாடி இருந்தனர்.
எல்லாரும் சென்று பெருமாளைச் சேவிக்க வேண்டும், இறைஅருள் பெறவேண்டும் என்று கருதி அகோபிலத்தில் பக்தர்கள் எளிதில் சென்று சேவிக்கவும் தங்கி அருள் பெறவும் பெரும் பொருட்செலவில் பல வசதிகளைச் செய்தார் 45 ம் பட்டம் அழகியசிங்கர்.
எளிதில் அணுகக்கூடியவராகவும், வெளிப்படையாகப்பேசக்கூடியவராகவும், கடினமான வடமொழி காவியங்களையும் பக்தி இலக்கியங்களையும் பாமரர் அறியும் வண்ணம் எளிய தமிழில் உபன்யாசம் செய்யும் ஆற்றல் கொண்டதால் பக்தர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
இந்த அழகியசிங்கர் தனது 87 வது வயதில் இன்று அதிகாலை பரமபதம் அடைந்தார். ஸ்ரீரங்கத்தில் தனது ஆச்சாரியாரின் பிருந்தாவனத்தருகில் தானும் பிருந்தாவனம் கொள்கிறார்.