தமிழை வளர்க்கிறோம் என்ற போர்வையில் ஊரை அடித்து உலையில் போட்டு தத்தமது வங்கிக் கணக்குகளை வீங்கச் செய்த தமிழ்த் “தொண்டர்”களைக் கண்டே பழகிப்பபோன நமக்கு அவர்கள் அலட்சியத்தால் விளைந்துள்ள கேட்டின் ஒரு பரிணாமமே இப்போது நாம் பார்க்க இருப்பது.
தமிழ் வளர்ப்பதாகவும் வரலாறு காப்பதாகவும் மார் தட்டிக்கொள்ளும் நமது அரசுகளும் அதன் அமைச்சுகளும் எந்த லட்சணத்தில் தமிழையும் வரலாற்றையும் காக்கின்றன என்று சற்று ஆராய்வோம். அதற்குத் தேரழுந்தூர் என்னும் வைணவ திவ்யதேசத்தில் அமைந்துள்ள சில வரலாற்றுப் பொக்கிஷங்களைக் கண்டு வருவோம்.
நாம் அறியாதது – கம்பன் வாழ்ந்த ஊரும் தேரழுந்துர் தான். அவன் கம்ப ராமாயணம் இயற்றியதும் இங்குதான்.
இதற்குச் சான்றுகள் பல.
- வால்மீகி ராமாயணத்தில் இல்லாத “இரணிய வதைப் படலம்” கம்ப ராமயணத்தில் உள்ளது. ராமாயணத்தில் இரணியன் எங்கிருந்து வந்தான்? அதற்கு விடை ஆமருவியப்பனின் சன்னிதியில் உள்ளது. அவனது கருவறையில் அவனுடன் சேர்ந்து ப்ரகலாதனும் எழுந்தருளியுள்ளான். இது வேறு எந்த திவ்யதேசத்திலும் இல்லை.
- கம்பர் நரசிம்ம பக்தர். கம்பத்திலிருந்து வந்ததால் நரசிம்மனை கம்பன் என்றும் அழைப்பர். எனவே தனது இயற்பெயரையும் மாற்றி தன்னைக் கம்பன் என்றே அழைத்துக்கொண்டார். அவரது இயற்பெயர் என்னவென்று தெரியவில்லை.
- கம்பர் மற்றும் அவரது மனைவிக்கு ஆமருவியப்பனின் கோவிலுள் தனி சன்னிதி உள்ளது.
- கம்பர் வழிபட்ட காளி கோவில் உள்ளது தேரழுந்துரில். அவ்வன்னையின் பெயர் “கம்பர் காளி” என்பதாகும்.
- “கம்பன் பிறந்த ஊர் காவேரி தங்கும் ஊர் கும்பமுனி சாபம் தொலைந்த ஊர்” என்று ஒரு பழைய பாடல் தேரழுந்தூரப் பற்றி உள்ளது.
- கம்பர் வாழ்ந்த இடம் “கம்பர் மேடு” என்று அழைக்கப்படுகிறது.
இந்தக் கம்பர் மேட்டைப் பற்றித்தான் தற்போது காணப்போகிறோம்.
வெள்ளையர் ஆட்சியில் இந்தக் கம்பர் மேட்டுப் பகுதியில் பல அரிய பொக்கிஷங்கள் கிடைத்ததாகவும் அவற்றை அவர்கள் கொண்டு சென்று விட்டதாகவும் சில பெரியவர்கள் தெரிவிக்கின்றனர். அது போகட்டும். அவர் இருந்த இடத்தை விட்டுச் சென்றனர் அல்லவா ? அது இப்போது இருக்கும் நிலை என்ன ?
தற்போது இந்த இடம் தொல்லியல் ஆய்வுத் துறையின் கீழ் உள்ளது.
தொல்லியல் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது “ஆழும் பாழும்” தானே ?
ஆம் உங்கள் ஊகம் சரிதான்.
கம்பன் இருந்த இடம் சுவடு தெரியாமல் மண் மேடாக உள்ளது. மக்கள் நில ஆக்கிரமிப்புச் செய்துள்ளனர். இந்த இடம் ஊரின் குப்பை போடும் இடமாகவும் பயன்படுகிறது.
கம்பன் காவியத்தில் கற்பின் மாட்சி வலியுறுத்தப்படுகிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயரிய கருத்தும் பேசப்படுகிறது. தெய்வம் மனிதனாக வாழ்ந்துகட்டிய உயரிய வாழ்க்கை நெறி சுட்டப்படுகிறது. எல்லாவற்றையும்விட “பிறன் மனை நோக்காப் பேராண்மை” என்ற வள்ளுவன் கூற்றுக்கும் இலக்கணம் கம்ப ராமாயணம்.
ஒருவேளை இவை எல்லாம் தற்போதைய தமிழகத்திற்குத் தேவை இல்லை என்பதாலோ என்னவோ இக்காவியத்தைப் பாடிய கம்பனின் இடமும் பாழ்பட்டுக் கிடக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
ஆம். மாநில அரசு கள் விற்கிறது. மத்திய அரசு சாதி மத வேற்றுமை வளர்த்து ஓட்டு வங்கி அரசியல் செய்கிறது. இவர்கள் கம்பனையும் ராமாயணத்தையும் பற்றியுமா கவலைப்படப் போகிறார்கள் ?
தொல்லியல் துறை தனது ஆண்மையின்மையை பலகை வைத்துப் பறை சாற்றி வருகிறது. அதுவும் தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் – கம்பர் மேடு அவர்களின் ஆளுமையில் இருப்பதாக. இவ்வளவு கீழ்த்தரமாக ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க இடத்தைப் பாதுகாக்கிறார்கள். அதற்கு அதிகார பூர்வமான பலகைகள் அதுவும் மூன்று மொழிகளில். என்ன ஒரு பரிதாபம்? அத்துறையின் செயலற்ற தன்மை இப்பலகைகளால் பறை சாற்றப்படுகிறது.
இவை கூட மன்னிக்கப்படலாம். ஆனால் அருகிலேயே இடத்தை ஆக்கிரமித்து வீடுகள். அதற்கும் மேல் அந்த இடம் ஒரு திறந்தவெளிக் கழிப்பறை / குப்பை கொட்டும் இடமாக இருப்பது தூக்கு தண்டனை தரப்படவேண்டிய ஒரு குற்றம்.





இவற்றிற்குக் காரணியான தொல்லியல் துறைக்கு யார் தண்டனை கொடுப்பது ?
நிலைமை இவ்வாறிருக்க “கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழ்க் குடி” என்று பெருமை வாய் கிழிவதுதான் பொறுக்க முடியவில்லை.
அதனினும் கொடுமை தமிழ்த் தாய்க்குச் சிலை 100 கோடி செலவில்.
சூதாட்ட கேளிக்கை விளையாட்டுக்கள் மக்கள் மனதைக் கொள்ளை கொண்டுவிட்ட இந்த சூழலில், திரை உலக நாயகர்கள் கடவுளர்களாய் பவனி வரும் சமயத்தில், கேடு கெட்ட அரசுகள் சுரணை அற்ற சமூகத்தை ஆளும் இன்றைய நிலையில் கம்பரைப் பற்றியும் அவரது இடம் பற்றியும் கவலை கொள்வது சில அசட்டு அம்மஞ்சிகளின் பொழுதுபோக்கு என்று புறந்தள்ளி உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ஏதாவது ஒரு உடல் குலுக்கல் திரைப்படத்தைப் பார்த்து நாம் தமிழ் வளர்ப்போம்.