ஒரு ஊரின் கதை

ஊர் கூடித் தேர் இழுப்பது என்று கூறுவர். தேரழுந்தூரில் 1950ல் ஊர்ப் பெயருக்குக் காரணமான தேர் எரிக்கப்பட்டது. புதிதாகத் துவக்கப்பட்ட ஒரு அரசியல் இயக்க சார்புடையவர்கள் இந்த மாபாதகச் செயலைச் செய்தார்கள் என்று பரவலாகப் பேசப்பட்டது.

எரித்தவர்கள் யார் என்று தெளிவாகத் தெரிந்தாலும் பெயருக்கு சிலர் கைது செய்யப்பட்டனர் என்று அறிகிறேன். அக்கால விபரம் அறிந்தவர்கள் தற்போது இல்லை.

ஆக தேர் எரிந்து போனது. மிஞ்சியது சில உருக்குலைந்த மரக் கட்டைகள் மற்றும் இரும்பு. பல நூறு ஆண்டு காலத் தேர் உருத்தெரியாமல் அழிந்து போனது.

வழக்கமாகத் தேர் நிற்கும் தேரடி ஆகிரமிப்புக்குள்ளானது. கோழி இறைச்சிக் கடை முதலியன தோன்றின. சில ஆண்டுகளில் அவை மின் இணைப்புப் பெற்ற கடைகளாக மாறின. இதனிடையில் மதமாற்றம் மற்றும் வீட்டு விற்பனைகள் மூலம் அக்ரஹாரம் இஸ்லாமியர் வசம் போனது. பார்ப்பனரின் பிழைப்பு கருதிய வெளி ஊர்க் குடி நுழைவு ஒரு முக்கிய காரணம்.

சன்னிதித் தெருவில் ஆமருவிப்பெருமாள் உற்சவ சமயங்களில் எழுந்தருளும்போது வரவேற்க இரண்டு மூன்று குடும்பங்களே இருந்தன.

அரசின் ஹிந்து சமய அறநிலையத் துறை கை விரித்ததால் உற்சவங்களும்   நின்று போயின.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருமங்கை ஆழ்வார் தேரழுந்துர் வந்த போது பெருமாள் கோவில் செல்ல முடியவில்லையாம். எங்கும் புகை மூட்டம். காரணம் “அந்தணர் தம் ஆகுதியின் புகை..” என்று அவரே சொல்கிறார்.

அந்தத் தேரழுந்தூரில் பெருமாளுக்கு உற்சவம் நின்று போனது 1980-களில். 40 வேலி நஞ்சை வயல் சொந்தக்காரரான ஆமருவிப்பெருமாள் அன்றாட உணவின்றித் தவித்தார். கோவில் ஊழியர்களுக்கு மாத வருமானம் அரசு வழங்கவில்லை. நிதிப் பற்றாக்குறை என்று கூறினர். அதே சமயம் ஆடம்பர விழாக்களுக்குப் பஞ்சமில்லை அரசாங்கத்தில்.

பெருமாளின் நிலை கண்டு அப்போது உருவானது தான் “கோசக பக்த சபா” – மூன்று பக்தர்களால் துவங்கப்பெற்றது. ஒரு ரூபாய், ஐம்பது பைசா என்று வசூல் செய்து தற்போது 30 ஆண்டுகளாய் வருடாந்திர உற்சவங்கள் நடத்தி வருகின்றனர். இவர்களின் சராசரி வயது 78. ( கோசகன் – ஆமருவி-யின் வடமொழி மூலம்)

இந்து சமய அற நிலையத் துறை தனது பொறுப்பைக் கை கழுவிவிட்டபின் கோவிலின் உற்சவங்கள் கோசக சபாவினால் தொடரப்பட்டன. பல நேரங்களில் கோவிலின் அன்றாட வேலைகள் கூட சபா செய்தது.

அப்படியாக ஆமருவியப்பனின் தேரையும் புதியதாகச் செய்ய ஒரு திட்டம் தீட்டியது சபா. ( அரசின் பங்களிப்பு ரூ.5 லட்சம். தேரின் 2004-ம் ஆண்டு செலவு ரூ.25 லட்சம் )

கொடையாளர் பணியாக (Donor Work) தேர் வேலைகள் தொடங்கின. கொடையாளர் சேர்க்கும் பணி தொடங்கியது. ஊரிலிருந்து வெளியெறி நல்ல நிலையில் இருக்கும் மக்களிடம் கொடை கோரப்பட்டது. பலர் ஆங்கிலம் பேசினர். நிர்வாகம் தொடர்பான வார்த்தைப் ப்ரயோகங்கள் , அறிவுரைகள் அள்ளி வீசப்பட்டன. ஒன்றும் கவைக்கு உதவவில்லை.

சபா களத்தில் இறங்கியது. அரசுடன் பல முறை பேச்சு வார்த்தை, கொடையாளருடன் ஒருங்கிணைப்பு என்று ஒரு புறம், மர வேலை செய்பவர், தேர் கட்டும் தொழிலில் இருப்பவர் என்று இவர்களுடன் ஒரு புறம், இலுப்பை மரம் விளையும் காடுகளைத் தேடி ஒரு புறம் என்று பல முனைகளில் வேலை.  சபாவின் உழைப்பின் பலனாகப் பல நல்ல உள்ளங்கள் கொடையாளர்களாக உறுவெடுத்தன ( ஒரு சில நெகிழ வைக்கும் சம்பவங்கள் பின்னர் ).

மரம் கோரி ஒப்பந்தப்புள்ளி (Tender ) வெளியீடு. அதை யாருமே எடுக்கவில்லை. எனவே ஒரு மரம் அறுப்பவர் காலில் விழுந்து அவரை எடுக்க வைத்தது, அவர் மரம் தராததல் தாமே மரம் வெட்டி அதை அவர் மரம் அறுக்கும் ஆலையில் தாமே அறுத்து தேர்த் தச்சனிடம் கொண்டு சேர்த்தது என்று சபாவிற்குப் பல வேலைகள் ( மரம் அளிக்காவிட்டலும் அவர் அளித்ததாக கணக்கு காட்ட வேண்டி இருந்தது வேறு கதை).

இரண்டு ஆண்டுகள் போராட்டம். பின்னர் தேரோட்டம். இடையில் ஆக்கிரமிப்புகள் அகற்றுவது பற்றி எழுதினால் அது ஒரு “சிங்கம்” திரைப்படம் போல் 3 மணி ஓடும்.

அதன்பின்னர் 2006-ம் ஆண்டு கோவில் செப்பனிடும் பணி துவங்கியது சபா. அதுவும் கொடையாளர் பணி என்று அரசு தெரிவித்தது. எனவே சபா கொடையாளரைத் தேடி மீண்டும் பயணம்.

ஐந்து ஆண்டுகள் தீவிர வேலை. அற நிலையத் துறை, தீயணைப்புத் துறை, காவல் துறை, பொதுப்பணித் துறை, வனத் துறை என்று அரசின் பல துறைகளுடனும் சேர்ந்து உழைத்ததன் பலன் – குடமுழுக்கு 2010ல் நடைபெற்றது.

சில பாடங்ள் :

கோவிலின் கொடி மரத்திற்குத் தேக்கு மரம் தேவைப்படும். கோவில் நந்தவனத்தில் இருக்கும் மரத்தைத் தர அற நிலையத்துறை தயங்கும். வெளியில் இருந்து கொண்டு வர வேண்டி காவல், வனத்துறை, அறம் என்று பலரது தயவு தேவை. வனத்துறை அனுமதி அவ்வளவு எளிது அல்ல.

அறநிலையத் துறை ஒப்புதல்கள் ஊர்ப்புறங்களில் இருந்து அவர்களது சென்னை அலுவலகலம் செல்ல பல நாட்கள் ஆகும். எனவே நாம் கூரியர் வேலையும் செய்ய வேண்டி இருக்கும, பலமுறை.

அறநிலையத் துறையில் ஒரு கோப்பு ( File) மேசை விட்டு மேசை நகர “சம்பாவனை” தேவை. அல்லது ஒருமையில் பேச்சு கேட்க வேண்டி வரும். அவ்விடத்தில் “நான் யார் தெரியுமா ? என்ன வேலை செய்தேன் தெரியுமா?” போன்ற வெட்டி வீரம் பயன் அளிக்காது. மேலும் தாமதம் உண்டாக்கும்.

அறநிலையத் துறையில் சில மிக நேர்மையான அதிகாரிகள் உள்ளனர். அவர்கள் தங்கள் வாகனத்திற்குத் தாங்களே பெட்ரோல் போட்டுக் கொள்கிறார்கள்.

பஞ்சாயத்து, ஊராட்சி, “அண்ணன்-தம்பி”  என்று பல பரிவார / எல்லைக் காவல் தேவதைகளுக்கும் அவ்வப்போது பரிகாரம் செய்ய வேண்டியது அவசியம்.

இவை எல்லாவற்றையும் விட சமாளிக்க முடியாதது வைஷ்ணவத்தில் உள்ள “உள் குத்துக்கள்”. ராமானுசரே இன்னொறு முறை அவதரித்தாலும் கோபுரம் மேலேறித் தற்கொலை செய்துகொள்வார். சம்பிரதாயம் பற்றிய சிறு புரிதல் கூட இல்லாமல் திருமண்ணின் ( நாமம் ) அமைப்பையும் அதன் வடிவத்தையும் மட்டுமே அறிந்து, சிறிதளவேனும் கூட தத்துவ அறிவு இல்லாத வறட்டு ஜாம்பவான்களின் பிடியில் சிக்கியுள்ளது வைஷ்ணவ சம்பிரதாயம் என்பதால் இந்த “உள் குத்தினால்” விளையும் கேடு ரொம்பவும் பெரியது. இந்தப் போலி வித்யாசங்களினால் பாதிக்கப்படுவது பெருமாள் கைங்கர்யம் என்று கூட எண்ணாமல் இருப்பவர் ஆன்மிகவாதி என்று ஒத்துக்கொள்ள முடியவில்லை.

உதாரணம் : திவ்யப்ப்ரபந்தத்தில் எந்தப் பாசுரம் பாடுவது, நான்கு வீதிகளில் எந்த இடத்தில் எந்தப் பாசுரம் பாடுவது, யார் முதலில் தொடங்குவது, முதல் தீர்த்தம் யாருக்கு எந்த வரிசையில் அளிக்கப்பட வேண்டும், பாசுரத்தை எந்தத் தொனியில் , அளவில் பாடுவது  – இப்படி நாட்டுக்குத் தேவையான பல சண்டைகள் மனதை ரொம்பவும் பாதிக்கும். அதனால் கையில் ரத்த அழுத்த மாத்திரை வைத்துக்கொள்வது ரொம்பவும் அவசியம்.

தமிழரின் ஆதி சமயங்களில் ஒன்றான வைணவத்தையும் வைணவக் கோவில்களையும் அழிக்க திராவிடக் கட்சிகள் தேவை இல்லை. இந்தப் போலிப் “பெரியவர்”களே போதும். ( இந்த வைஷ்ணவ மோதல்கள் எல்லா ஊர்களிலும் உள்ளது ).

இந்த அனைத்து ரக இன்னல்களையும் கடந்து ஆமருவிப்பெருமாள் அருளால் தேரழுந்துர் நிமிர்ந்து நிற்கத் தொடங்கியுள்ளது.

இந்தத் தேர்த்திருப்பணியிலும், கோவில் திருப்பணியிலும் ஊர் மக்கள் காட்டியுள்ள ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பு சாதி மதங்களைக் கடந்தது. தேர் வெள்ளோட்டத்தில் இஸ்லாமியர் தண்ணீர்ப் பந்தல் அமைத்தார்கள்.

பாராட்டப்பட வேண்டியவர்கள் :

அற நிலையத் துறை- இத் துறையில் ஆள் பற்றாக்குறை உள்ளது. ஒரு அலுவலர் / அதிகாரி பல கோவில்களுக்கும் பொறுப்பு. கோவில்கள் பல மைல்கள் தொலைவில் அமைந்துள்ளன.

காவல் :  தேரின் போது இவர்கள் சேவை தேவை.

மின்சாரம் : இது இல்லை என்றாலும், தேர் ஓடும்போது மின் கம்பிகளைக் கழற்றி மாட்ட வேண்டும்.

தீயணைப்பு : தேரின் போது இவர்கள் அவசியம்.

ஊர் மக்கள் : சாதி மத பேதம் இன்றி தேர் இழுக்கும் சாதாரண மக்கள்.

மேலும் தேரழுந்துர் பற்றி அவ்வப்போது பேசுவோம்.

பி.கு: இந்தக் கருத்துக்கள் எனது சொந்தக் கருத்துக்கள். இவற்றுக்கும் கோவிலார்கும், கோசக சபாவிற்கும் தொடர்பில்லை. ஒரு வெளியிருப்புக் கண்காணிப்பாளன் / பார்வையாளன் ( onlooker ) என்ற முறையில் பதிவு செய்திருக்கிறேன்.

Author: Amaruvi's Aphorisms

Banker by day, blogger by night and a reader throughout.

6 thoughts on “ஒரு ஊரின் கதை”

    1. நன்றி திருமதி.சுபா. வலைத்தளத்தில் மேலும் படியுங்கள். நண்பர் வட்டதில் பகிருங்கள்.

      Like

  1. Wow!!! I feel that I have already seen “Singam” Movie starring Amaruviappan after reading this article. So many hurdles, issues, problems, etc……..Unbelievable effort from 3 people sabha and others involved just to bring the temple and it’s activities back to it’s original condition.

    Like

  2. தேரழுந்தூரில் தேர் எரிக்கப்பட்டதை உங்கள் கட்டுரை மூலமே அறிகிறேன். உங்கள் பதிவு எனது மனதை பாதித்துவிட்டது. தேரழந்தூர் ஏற்றத்துக்கு நானும், மயிலாடுதுறை முன்னால் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஜெகவீரபாண்டியன் அவர்க்களும் இனி தனிகவனம் செலுத்தி உதவிட இக்கட்டுரை ஆட்படுத்தி உள்ளது…..அப்பர்சுந்தரம் சமூக ஆர்வலர்,மயிலாடுதுறை

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: