கடந்த 2 வாரங்களாகத் தமிழ் நாட்டில் சுற்றியதில் நான் கற்றதும் பெற்றதும் :
ஸ்ரீரங்கம்:
அங்கு காவிரி இல்லை. அல்லது அங்கு இருப்பது காவிரி ஆறு இல்லை. ஏனெனில் அதில் சொட்டு கூட தண்ணிர் இல்லை.
கோவிலில் வழக்கம் போல் வரிசை தான். தினமும் விஸ்வரூப தரிசனத்துக்கு ஒரு வருடத்திற்கு ரூ.20,000 கட்ட வேண்டும். கடவுள் விற்பனை அமோகமாக நடக்கிறது.
கல்லூரிப் பெண்கள் ஆண்களுடன் கை கோர்த்துக்கொண்டு கொளுத்தும் வெயிலில் சுற்றுகிறார்கள். துப்பட்டாவால் தலையையும் முகத்தையும் மூடிக்கொள்ளும் வழக்கம் சென்னையில் உள்ளது போல் இங்கு இல்லை.
ஆட்டோ ஓட்டுனர்கள் ஆளைப்பார்த்ததுமே வண்டியை எடுக்கிறார்கள். நாம் போக வேண்டிய இடத்தையும் அவர்களே முடிவு செய்து விடுகிறார்கள் ( அசட்டு அம்மஞ்சி என்று நெற்றியில் ஒட்டியுள்ளது போலே) . சென்னையின் பாதிப்பால் பேச்சில் கொஞ்சம் மரியாதை குறைகிறது.
வீடுகளில் தண்ணீர்ப் பற்றாக்குறை நன்றாகவே தெரிகிறது. ஒரு டம்ளர் தண்ணீர் அதிகம் தர யோசிக்கிறார்கள்.
மயிலாடுதுறை :
காவிரி ஒரு குப்பைக் கிடங்காகியுள்ளது.
மக்கள் தண்ணீர் தருகிறார்கள்.
பொவென்டொ ( Bovento ) குளிர் பானம் அமோஹ விற்பனை. பெப்சி, கோலா அவ்வளவு இல்லை.
ஆட்டோ ஓட்டுனர்கள் கொஞ்சம் மரியாதை பாக்கி இருக்கிறது.
பூ விற்போர் மல்லிகைப் பூவை இலையில் கட்டித் தருகிறார்கள் ( தமிழ் நாட்டில் வேறு எங்கும் பிளாஸ்டிக் பை தான் ).
பள்ளிகளில் ஆங்கிலம் தரம் ரொம்பவும் பின்தங்கி உள்ளது.
மின்சாரம் என்ற ஒரு வஸ்து இருப்பதை மக்கள் மறந்துவிட்டார்கள்.
இணையம் ( Internet ) கிலோ என்ன விலை ரகம் தான்.
ரயில் நிலையத்தில் எப்போதும் தேர்தல் – வருடம் முழுதும்.
தேரழுந்துர் :
மின்சாரம், இணையம், தொலைபேசி, நாளிதழ் என்று எந்தக் கவலையுமே இல்லை.
மின்சாரம் இல்லாததால் தொலைக்காட்சி இல்லை. அதனால் அழுமூஞ்சி நாடகங்கள் இல்லை. மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
வெட்டிப் பொழுது போக்காமல் மக்க்ள் ஒருவரோடு ஒருவர் பேசுகிறார்கள். கோவிலுக்குப் போகிறார்கள்.
கோவிலில் கட்டணம் என்ற பெயரில் கொள்ளை அடிப்பதில்லை. நிம்மதியாகப் பெருமாளை சேவிக்கலாம்.
பாண்டிச்சேரி :
மின்சாரம் இருப்பதைக் கண்டேன். இணையமும் வேலை செய்தது.
மக்கள் தொகையை விட நாய்கள் தொகை அதிகம்.
சாலை விதிகள் என்றால் கிலோ என்ன விலை என்கிறார்கள்.
சென்னை :
நுழந்தவுடனே ஆட்டோ ஓட்டுனர் மூலம் “நல்ல” வரவேற்பு கிடைக்கிறது.
தேசியப் பறவை ( கொசு ) தனது இருப்பை உணர்த்துகிறது.
ஹெல்மெட் பாதுகாப்பாக இரு சக்கர வண்டியின் முன்புறம் உள்ளது.
எல்லாத் திசைகளிலும் அம்மா, தாத்தா, பிள்ளை, பேரன், பேத்தி, தளபதி என்று பலகைகளில் இருந்து ஆசீர்வாதம் செய்கிறார்கள். அதே அளவு பொறியியல் கல்லூரிகள் – பார்க்கும் திசை எல்லாம். இனி ஒரு அம்மன் பெயர் பாக்கி இல்லை. அவ்வளவு பெயரிலும் கல்லூரிகள்.
எல்லாருமே வருங்கால முதலமைச்சர்களாக ஆசைப்படுகிறார்கள்.
ஒரு மந்திரி அல்லது சட்டமன்ற உறுப்பினரின் உறவாக இருப்பதையே அனைவரும் விரும்புகிறார்கள். அப்படியே தெரிவிக்கிறார்கள்.
தமிழ் டி.வி. சானல்களில் பெண் செய்தியாளர்கள் விளையாட்டு வீரர் போல் உடை அணிந்து செய்தி வாசிக்கிறார்கள். புதிய தலைமுறை டி.வி.யின் பனி மலர் என்ற தமிழ்ப் பெண் செய்தி வாசிக்கும்போது செய்தியில் நமது கவனம் செல்வது அரிது. காரணம் – வேறென்ன ? உடை தான். ( பனி மலர் என்பதால் வெறும் பனி-யன் அணிகிறாரோ ? ).
சிங்கப்பூரின் வசந்தம் ஒளிவழி செய்தி வாசிப்பாளர் பவழகாந்தம் அழகர்சாமி, ராதா கௌஷிக், கீதா முதலானவர்கள் புதிய தலைமுறை பார்த்தால் செய்தி வாசிக்கும் வேலையை விட்டு விடுவார்கள்.
தேசீயத் தொலைக் காட்சிகள் என்.டி.டி.வி, ஐ.பி.என் முதலானவை முன்னைவிட அதிகம் கத்துகின்றன. சரக்கு ஒன்றும் இல்லை. விவாத நிழகழ்ச்சிகள் வந்தால் அணைத்து விடுவது நன்று. இல்லை என்றால் ரத்தக் கொதிப்பு வரும். காது கேளாமலும் போகலாம்.
விடாமல் இந்தியத் தொலைகாட்சிகள் பார்ப்பவர்களுக்கு காப்பீடு ( Insurance ) நிறுவனங்கள் பாலிசி வழங்குவது சிரமம் தான். அந்த அளவுக்கு எரிச்சல் ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன.
டி.வி. விளம்பரங்களினால் பல ஞானோதயங்கள் ஏற்பட்டன :
POOMEX பனியன் அணிந்தால் தெருவில் போகும் முற்போக்குப் பெண்ணைக் காப்பாற்ற முடியும். அவள் நம் மீது சாய்வாள்.
ராமராஜ் பனியன் அணிந்தால் குறி தவறாமல் அம்பு விட முடியும். அனைவரும் சல்யூட் அடிப்பார்கள்.
பாலிமெர் டி.வி.யில் அருணாசலக் கவிராயர் பற்றிப் பேசும் பெண் உடல் இறுக்கமான மேற்கத்திய உடை அணிந்து தமிழ் பேசுகிறார். காரணம் புரியவில்லை.
இந்தியத் தொலைக்கட்சிகளில் இருந்து நம்மைக் காக்க பகவான் கொடுத்துள்ள வரப்பிரசாதம் ஒன்று உள்ளது. அது தான் ரிமோட் (Remote Control).