எல்லாத்துக்கும் ஒரு அளவு வேண்டாம் ? என்ன கொடுமை சார் இது ?
ஒரு ஆஸ்பத்திரி என்றால் ஒரு பந்தா வேண்டாம் ? நுனி நாக்கில் ஆங்கிலம் மட்டுமே ( மலையாள வாடையுடன் ) பேசும் வரவேற்பாளினிகள் வேண்டாம் ? புடவை கண்ணில் படாமல் ‘சிக்’கெனப் பிடி-சுடி-உடை-சடை அணிந்த தொழிலாளினிகள் வேண்டாம் ? நுழந்தவுடனேயே காசு பிடுங்கும் சாமர்த்தியம் வேண்டாம் ? டாக்டரைப் பார்க்கவே திருப்பதிக்கு வேண்டிக்கொள்ள வேண்டிய அவசியம் வேண்டாம் ? இது எதுவுமே இல்லாமல் இதை ஒரு ஆஸ்பத்திரி என்று எப்படி ஒத்துக்கொள்வது ?
சிரித்துப் பேசும் ஊழியர்கள், கனிவாய்ப்பேசும் ஆண் / பெண் செவிலியர்கள், மலர்ந்த முகத்துடன் நலம் விசாரிக்கும் டாக்டர்கள் – இப்படி எல்லாம் இருந்தால் அது ஆஸ்பத்திரி என்று எப்படிக் கூறுவது ?
ஆம். சென்னை அண்ணா நகரில் உள்ள சுந்தரம் பவுண்டேஷன் ஆஸ்பத்திரி இப்படித்தான் உள்ளது.
பல வருடங்களுக்குப் பிறகு டாக்டர். சத்யஜித்தைப் பார்க்கிறேன். என் பெயரை நினைவில் வைத்து நலன் விசாரிக்கிறார். “என்னப்பா, ஆமருவி – கோபாலோட தமிழ் version தானே?” என்று அசத்துகிறார். அவரிடம் நான் என் பெயர் விளக்கம் சொன்னது 2002-ல். ரொம்ப நாள் கழித்துப் பார்க்கும் ஒரு உறவினர் போல், வெகு நாட்கள் பழகியவர் போல், அலட்டிக்கொள்ளாமல் ஜோக் அடிக்கிறார். இவரிடம் போனால் அறுவை சிகிச்சை இல்லாமலேயே இதய நோய் குணமாகும்.
அவர் தான் போகட்டும் டாக்டர். அவரது உதவியாளப் பெண்மணிகள் சாந்தமே உருவாக, அதிர்ந்து பேசினால் ஏதோ கொலைக் குற்றம் செய்வது போல் பாவித்து, “சௌம்யமாகப்” பேசும் பெண் ஊழியர்கள். இவர்களைப் பல வருடங்களாகப் பார்க்கிறேன் சுந்தரத்தில். சுந்தரம் என்றால் அழகு என்று சம்ஸ்க்ருதத்தில் அர்த்தம். மிக அழகாக வேலை செய்கிறார்கள்.
முகத்தை ஏறிட்டுப் பார்க்கவே பல ஆயிரங்கள் பேரம் பேசும் இந்த நவீன காலத்தில், இப்படியும் ஒரு நிறுவனமா என்று ஆச்சரியப்பட வைத்தது சுந்தரம்.
End-to-End என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள் – தமிழில் அடியிலிருந்து முடி வரை என்று கொள்ளலாம். End to End சௌம்யமான ஒரு மருத்துவமனை சுந்தரம் மெடிகல் பவுண்டேஷன்.
சுந்தரம் போங்கள் , சௌக்கியமாகி வாருங்கள்.
பி.கு:- இந்த ஆஸ்பத்திரியை நடத்துபவர்கள் T.V.S. நிறுவனத்தினர்.