உங்களுக்கு ரத்த அழுத்தம், மன நோய், இதய வலி, தூக்கமின்மை முதலியன உள்ளதா ? அப்படியானால் நீங்கள் தவிர்க்க வேண்டியது இந்தத் தனியார் தொலைக்காட்சிகளை. அவற்றைப் பார்த்தால் ஒன்று உங்களுக்கு மேல் சொன்ன ஒன்றோ அல்லது பலவோ இருக்கலாம்.
இந்தத் தொல்லைக்காட்சிகளில் நீங்கள் பெறப்போவது மருமகளை எப்படி கொடுமைப் படுத்துவது, அடுத்த வீட்டு ஆண் / பெண்ணுடன் எப்படித் தவறான முறையில் பழகுவது, கொலை செய்ய புதிய வழிகள், கொலை செய்யப்பட நவீன உத்திகள் முதலியனவே.
உதாரணத்திற்கு ஒரு அரை மணி ஒளிவழி நீச்சல் ( Channel Surfing ) செய்தேன்.
அதில் கிடைத்த முத்துக்கள் :
ஒளிவழி 1 : கணவன் மீது சந்தேகப்படும் மனைவி தனது பால்ய ஆண் நண்பனுடன் கணவன் எதிரில் சல்லாபம். கணவனுக்கு ஆத்திரமூட்டுகிறாளாம். கணவன் தன் மனைவியின் நண்பரின் தங்கையைப் பின் தொடர்கிறார் – பழி வாங்குகிறாராம். இடையே ஆத்திரமூட்டும் பேச்சுக்கள். மனித நாகரீகத்தின் எல்லை மீறிய ஏச்சுக்கள்.
ஒளிவழி 2 : பள்ளி செல்லும் மாணவர் படிப்பு என்ற பேச்சுக்கே இடமிலாமல் ஊர் சுற்றுவதையே வாடிக்கையாகக் கொள்கிறார். பாடம் பற்றி ஒரு பேச்சும் இல்லை. பேசுவதெல்லாம் சக மாணவியர் பற்றியும் அவரது அங்க அடையாளங்கள் பற்றியுமே. இடையில் இரு மாணவர் குழுக்களிடையே போட்டி – பெண் விஷயம் தான். அடி தடி , வன் பேச்சுக்கள் இத்யாதி. பேசும் பாஷை காது கொடுத்து கேட்க முடியவில்லை.
ஒளிவழி 3 : மாமியார் தன் கள்ளக் காதலனுடன் சேர்ந்து தனது மகளின் வாழ்க்கையை நாசமாக்க முயல்கிறார். ஒரே வன்முறைப் பேச்சு, சூழ்ச்சிகள். மனித இயல்புகளே தெரியத ஒரு அலட்டல்.
ஒளிவழி 4 : பின் மண்டையிலிருந்து மூக்கு நுனி வரை 10 செ.மீ. தடிமனான நாமம் தரித்த ஒரு அலட்டல் பெரியவர், சோதிடம் என்ற பெயரில் செம கடுப்பேத்துகிறார். இதில் தப்பும் தவறுமாக ப்ராமண பாஷை வேறு. இரண்டு முறை பார்த்தால் மேஷ ராசிக்கும் கன்னி ராசிக்கும் ஒரே பலன், ரிஷப ராசிக்கும் துலா ராசிக்கும், ஒரே பலன் என்று கண்டுபிடிக்கலாம். நமக்கு நல்ல காலம் இருந்தால் இந்த நிகழ்ச்சியைப் பார்க்காமல் தப்பிக்கலாம்.
ஒளிவழி 5 : செய்தி விமர்சனம் என்ற பெயரில் நான்கு பேர் சேர்ந்துகொண்டு காட்டுக்கத்தல் கத்துகிறார்கள் அதுவும் ஒரே சமயத்தில். என்ன பலன் கிடைக்கும் என்று தெரியவில்லை. ஒரு வேளை பார்லிமென்ட் டி.வி. பார்க்கிறோமோ என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த நிகழ்ச்சி எந்த மொழி என்று ஆராயத் தேவை இல்லை. கத்துவதற்கு மொழியறிவு வேண்டாம்.
ஒளிவழி 6 : மச்சினனுடன் ஓடத் திட்டமிடும் அண்ணி. தந்தையைப் பழித்துப் பேசும் பிள்ளைகள். சம்பந்தமில்லாமல் வந்து செல்லும் காவல் துறை அதிகாரி. அவர் காவல் அதிகாரியா அல்லது வில்லனா என்பதும் புரியவில்லை. என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.
ஒளிவழி 7 : நடனப் போட்டி என்ற பெயரில் அரங்கேறும் ஆபாச அசைவுகள். அவற்றை அலசித் தீர்ப்பு வழங்கும் சந்தை மதிப்பிழந்த நடிகைகள். அனைத்திலும் போலித் தனம் வெளிப்படை.
ஒளிவழி 8 : Landing Note, Fabulous, Voice Open ஆயிடுத்து – இப்படி ஏதாவது உங்கள் காதுகளில் ரீங்காரமிட்டால் நீங்கள் பார்ப்பது ஏதாவது பாட்டுப் போட்டியாக இருக்கக் கூடும். அடிக்கடி இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பதால் தனியாகப் பேசி / பாடும் பழக்கம் கை கூடும். நாலு பேர் கூடும் இடங்களில் உங்களை ஒரு மாதிரியாகப் பார்ப்பார்கள்.
மேலே சொன்ன 8 வகைகளிலும் அடங்காதது தூர் தர்ஷன்.
யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாத செய்தி வாசிப்பு. அணு குண்டு அபாயம் பற்றியே ஆனாலும் அலட்டிக்கொள்ளாமல் “பசு மாடு கன்று போட்டது” கணக்கில் செய்தி வாசிக்கும் திறமை. ஒரு உபன்யாசம் அளவிற்கு செய்தி வாசிப்பை அளிக்கும் எதற்கும் அசராத ஒரு சேனல். மற்ற சேனல்கள் ராக்கெட் வேகத்தில் அள்ளித் தெளிக்கும் செய்திகளை தூர்தர்ஷன் இரண்டு நாட்கள் கழித்துத் தருகிறது. செய்தி முழுவதும் கிரிகெட் சூதாட்டம் பற்றியே இருப்பதால் பாதகம் ஒன்றும் இல்லை.
மற்ற சேனல்களில் ஷில்பா ஷெட்டியின் தற்போதைய கணவருக்கு என்ன ஆகும் என்று அனல் பறக்க விவாதிக்கும் போது, தூர்தர்ஷனில் “அஸ்ஸாமில் வேளாண்மை பெருக்குவது எப்படி?” என்ற கணக்கில் நான்கு வயதான பெரியவர்கள் அமர்ந்து வாதிக்கிறார்கள். சில நேரங்களில் ஒட்டகத்தின் பால் வளம் அதிகமாக்குவது சாத்தியமா என்றும் பேசிகொள்கிறார்கள். தமிழ் நாட்டில் ஒட்டகம் எங்கே வந்தது ?
ஆனால் ஒன்று. இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பதால் தூக்கம் வாராதவர்களுக்குத் தூக்கம் வரும், மலச் சிக்கல் நீங்கும், புத்திர பாக்கியம் கிட்டும், அறுவை தங்காமல் சொறிந்துகொள்வதால் சரும நோய்கள் அண்டாது, வாழ்வில் எதையும் தாங்கும் இதயம் கிடைக்கும்.
இந்தச் சேனல்களில் ஏதாவது ஒன்றைத் தவறாமல் பார்க்கும் பழக்கம் உங்களுக்கு இருந்தால் உடன் ஏர்வாடி அல்லது குணசீலம் ஒருமுறை சென்று வரவும். கூடிய சீக்கிரம் அடிக்கடி சென்று வரவேண்டி வரும்.