சில நேரங்களில் சில விஷயங்கள் தவிர்க்க முடியாததாகி விடுகின்றன. இன்று அது தான் நடந்தது.
மேற்கத்திய நாட்டவரான என் தறையின் தலைவர் மாற்றலாகி தாய் நாடு செல்கிறார். அதனால் பிரிவுபசார விழா ஏற்பாடு செய்திருந்தார்கள்.
சில பெரியவர்கள் ஒரு மேற்கத்திய பாணி கேளிக்கை இடத்தைத் தேர்வு செய்திருந்தார்கள். பெயர் கேட்ட மாதிரி இல்லாததாலும் இந்த மாதிரி “உபசாரங்களில்” நம்பிக்கை இல்லாததாலும் முதலில் மறுத்துவிட்டேன். பின்னர் நல்ல எண்ணம் உள்ள நண்பர்கள் சிலரின் தூண்டுதலால் சென்றேன்.
“குடி” மகன்களுக்கான விடுதி அது. “தண்ணீர்” ஆறாகப் பாய்ந்தது. எங்கள் மூன்று பேர் தவிர மற்றவர் நீந்திக் கரை ஏற வேண்டிய அளவிற்கு மூழ்கி இருந்தார்கள். மூன்று அசட்டு அம்மாஞ்சிகளும் டூட்டி புரூட்டி என்ற பழச்சாறு பருகினோம்.
“இரும்பு அடிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலை ?” என்பது போல் உணர்ந்தாலும் கலந்துகொள்ள வேண்டிய நிர்பந்தம்.
சரி உணவு வரும் என்று மோட்டு வளையைப் பார்த்தபடி இருந்தால் மெக்சிகோ நாட்டு சிப்ஸ் வகைகள் வந்தன. அது தான் உணவாம். ஒரு கையில் மதுவும் மறு கையில் “ஜலபினோ” என்ற மெக்சிகோ நாட்டு சோள வறுவல் வகையறாவும் கொண்டு நண்பர்கள் “நட” மாடிக் கொண்டிருந்தார்கள். இடையே சில ஆயுள் முடிந்த கோழிகளும் பொறிபட்டு தட்டுகளை அலங்கரித்தன.
இதுவரை ஓரளவு சரிதான். மேசை ஓரத்தில் ஒரு பக்கமாக அமர்ந்து கொண்டு சோள வறுவல்களை சாப்பிடவா வேண்டாமா என்று சிலவற்றைக் காலி செய்தேன்.
பிரிவுபசாரங்கள், சம்பிரதாய வார்த்தைகள் முடிந்த பின்,” சரி கிளம்பலாம்” என்று எழுகையில் சில நிமிடங்கள் இருக்கவும் என்று சமிஞை செய்தார் துறையின் துணைத் தலைவர்.
அது வரையிலும் சில பதினெட்டு முதல் இருபத்து நான்கு வயது வரை உள்ள இடுப்பிலிருந்து இரண்டு அங்குலம் அளவு கீழ் வரையும் மூன்றாம் வகுப்பு மாணவனது கையில்லாத பனியனும் அணிந்த பிலிப்பினோ பெண்கள் உணவும் தீர்த்த வகைகளும் பரிமாறிக்கொண்டிருந்தார்கள்.
சில விளக்குகள் மாறி ஒளிர்ந்தன. திடீரென்று ஒரு மேடை தோன்றியது. அதில் இந்தப் பெண்கள் தோன்றினார்கள். வேகமான இசைக்கு ஏற்ப உடல் அசைவுகள் அதிலும் வட்டமான் ஒரு மூங்கிலாலான வளையத்தைத் தங்கள் உடலில் பரவ சுற்றியபடியே அங்கங்களை அசைத்தார்கள். ஒருவர் இருவர் என்றும் ஒரு வளையம் பல வளையம் என்றும் ஆட்டம் நகர்ந்தது. வளையங்கள் மேலிருந்து கீழும் கீழிருந்து மேலும் சென்றன.
வந்திருந்த கூட்டம் இதற்காகவே போல் நாற்காலிகளை இழுத்துப் போட்டு அருகில் அமர்ந்து வேடிக்கை பார்த்தது.கை தட்டி உற்சாகம் செய்தது. சத்தியமாக அவர்கள் அந்த வளையங்களைப் பார்க்கவில்லை என்பது அவர்கள் முகங்களில் தெரிந்தது.
ஒன்று புரியவில்லை. உலகில் நாகரீகத்தின் வளர்ச்சி என்று மார் தட்டுகிற உயரிய சமூகங்களில், வளரும் நாடுகளைச் சார்ந்த உடை வறுமைப் பெண்கள் இப்படிப் பொருட்களாய்ப் பயன்படுத்தப் படுவது எந்த விதத்தில் முன்னேற்றத்தின் அறிகுறி ?
இந்த ஆட்டத்தைப் பார்த்த முக்கால்வாசிப் பேர்களுக்கு ஒரு ஆறு ஏழு வயதில் குழந்தைகள் உண்டு. ஒரு சிலருக்குப் பெண் குழந்தைகளும் இருக்கலாம். இவர்களால் இதை எப்படிப் பார்க்க முடிகிறது ?
இந்தக் கூட்டத்தில் பல நாட்டைச் சேர்ந்த பெண்களும் உண்டு. அவர்கள் எதைப் பார்க்கிறார்கள் ? எதை ரசிக்கிறார்கள் ?
முதலாளித்துவ நாடுகளில் மட்டுமே இப்படி நிகழ்வதில்லை. எல்லா நாடுகளிலும் உள்ளது தான் என்று என் நண்பர் கூறினார். இருந்தாலும் மனித உரிமைகள், ஜீவ காருண்யம், மனித நேயம், அடிப்படை சமூக நாகரீகம் இவை எல்லாம் என்ன ஆயின ?
தமிழகத்தில் “தேவரடியார்கள்” என்ற ஒரு கணிகையர் குளம் ஒன்று இருந்தது. அவர்கள் இறைவனுக்க
ு நடனமாடினார்கள். சில காலம் கழித்து சமூக அவலங்களில் ஒன்றாக மாறினார்கள்.
வளரும் நாடுகளில் பெண்கள் கொடுமைப் படுத்தப் படுகிறார்கள் என்று பறை சாற்றும் வளர்ந்த நாடுகள் தங்கள் நாடுகளில் கேளிக்கை என்று முத்திரை குத்தி இப்படி நடப்பதை எப்படி அனுமதிக்கின்றன?
வளர்ந்த நாடுகளிலேயே இப்படி என்றால், வளரும் அல்லது பின் தங்கிய ஆணாதிக்க சமூகங்களில் நடப்பது பற்றி நினைக்கவே முடியவில்லை.
அந்த இடத்தில் அமெரிக்க போர்க் கப்பல்களின் மாலுமிகள் பலமுறை வந்து அவர்கள் “மகிழ்ச்சி”யைத் தெரிவிக்கும் விதமான பதாகைகள் இருந்தன.
பிழைப்பிற்காகத் தங்கள் மானம் விற்கத் தயங்காத ஒரு சமூகம் குறித்த பயம் மனதில் தோன்றியது.
துறைத் தலைவர் மாற்றலால் வருத்தமோ இல்லையோ இந்த நிகழ்வுகளால் மன வருத்தம் அடைந்தது உண்மை.
வரும் வழியில் என் தமிழாசிரியார் சொன்ன அவ்வைப் பாட்டியின் வரிகள் நினைவுக்கு வந்தன. இது தான் அது :
“மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் புரிதல் வேண்டும் அம்மா”.
இந்த வரிகள் காலாவதியாகிவிட்டதை உணர்ந்தேன்.