தீதும் நன்றும் ..

நலம் விரும்பிகளே,

“கொசுக்களின் பேரிரைச்சல் ”  என்னும் தலைப்பில் எனது கேள்வி பதில் வடிவில் சில அசடர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்திருந்தேன்.

அதனைக்கண்ட சில உறவினர்கள் மற்றும் வயது முதிர்ந்த நலம் விரும்பிகள் நிஜத்தில் பயந்து விட்டார்கள். சில அசடர்களின் வார்த்தை வன்முறை கண்டு இவர்கள் கவலைப்பட்டது சரியே. அவர்கள் எண்ணம் நல்லது தான்.

ஆனால் நலம் விரும்பிகள் சில விஷயங்களை மறக்க வேண்டாம்.

தமிழ் நாட்டில் உரையாடல் இந்த அளவு கீழ்த்தரமாக எப்போதுமே இருந்ததில்லை. கடந்த இரண்டு தலைமுறைகளில் தான் இந்த வீழ்ச்சி என்று நினைக்கிறேன். அதற்கான காரணங்களையும் கூறுகிறேன்.

தமிழக சட்டசபையில் ராஜாஜி முதலமைச்சராக இருந்த சமயம். கம்யுனிஸ்டுகளுக்கு எதிராக மிகத் தீவிரமாக செயல்பட்டுக்கொண்டிருந்த காலம். இடது சாரி இயக்கத்தின் சார்பாக ராமமூர்த்தி  சட்டசபையில்.  ராஜாஜியின் அரசைக் கிழி கிழி என்று தினமும் கிழித்துகொண்டிருந்தார். ஒவ்வொரு நிதி நிலை அறிக்கையும் ராமமூர்த்தியால் பகுதி பகுதியாக அலசப்பட்டு நார் நாராகக் கிழிக்கப்படும்.  ஆனால் பின்னர் ராஜாஜியும் அவரது நிதி அமைச்சர் சி.சுப்பிரமணியமும் தரும் பதில்கள் நாகரீகத்தின் உச்சமாக இருக்கும். ராமமூர்த்தியின் கேள்விகளும் அக்கினிக் கணைகளாக இருக்கும் ஆனால் கண்ணியம் தவறாமல் இருக்கும்.  இப்படியும் தமிழகம் இருந்திருக்கிறது.

தற்போது சட்டசபைகளில் நடப்பதை வைத்து எப்போதுமே இப்படித்தான் என்று நம்மால் எப்படி ஒரு தீர்மானத்திற்கு வர இயலாதோ அப்படித்தான் இந்த அசடர்களின் கேள்விகளும்.

வாசகர்கள் கேள்விகள்  எப்போதுமே இப்படி இருந்ததில்லை.

நமது பேச்சும் எழுத்தும் நமது அடையாளங்கள். நாம் அணியும் உடை போன்றவை. நம்மை வெளிக்காட்டுபவை.

மொழியின் மூலமாக நாம் நம்மை உலகிற்கு அடையாளம் காட்டுகிறோம். மொழி நமது முகவரி.

அதற்கும் மேல் மொழி நமது பண்பாட்டின் அடையாளம். அதில் வெறி இருந்தால் அது ஒரு வெறி பிடித்த பண்பாட்டின் அடையாளமே. வார்த்தை வன்முறை நாகரீகத்தின் தடுமாற்ற எல்லைக் கோடு. அதன்பின்னர் வன் செயல்கள்.

ஆக இந்த வார்த்தை வன்முறையாளர்கள் அடையாளப்படுத்துவது உடைப்பெடுத்து ஓடப் போகும் ஒரு சமுதாயத்தின் அறிவின்மையின் அளவை. அந்த அளவுக்கு இந்த சமுதாயத்தைக்  கழிவுநீர்க் கால்வாயில் கொண்டு விட்ட பெருமை 1967ற்குப் பிற்பட்ட ஒரு கல்வியையும் அதனை நடைமுறைப்படுத்திய அரசுகளையும் அவர்களால் வாழ்ந்த , வாழ்க்கைபெற்ற ஆசிரிய இலக்கிய சமூகத்தையே சாரும்.

இவர்கள் மட்டுமே பொறுப்பல்ல. அக்கால இளைஞர்கள், நடுத்தர வர்கத்தினர்  ( இக்காலப் பெரியவர்கள் ) இவர்களும் அந்த பாரத்தைச் சுமக்க வேண்டியுள்ளது.

கலை என்ற பெயரில் ஆபாசத்தையும், இலக்கியம் என்ற பெயரில் மஞ்சள் பத்திரிக்கைத்தனத்தையும் கை தட்டி வரவேற்று, நிழல் நாயகர்களை நிஜ நாயகர்களாய் விஸ்வரூபம் எடுக்கச் செய்த பெருமை தற்போதைய முதிய சமூகத்தையே சாரும்.  சோறு கண்டால் போதும் என்று சமூகப் பொறுப்பில்லாமல் விஷக் கிருமிகளைத் தமிழகத்தில் விதைத்தது தற்கால முதியவர்கள் தானே?

அரசியல் அதிகாரம் இல்லை, பண பலம் இல்லை என்று கூறித் தப்பலாம் இவர்கள்.  ஆனால் உங்களிடம் இந்த விஷக்கிருமிகளைக் கல்வி, சமூகம், அரசு, கலை என்று நீக்க என்ன முயற்சி இருந்தது? இதனை ஒரு அறப்போராட்டமாக நடத்தியிருக்க வேண்டாமா ? விடாமல் எழுதியும் பேசியும் உங்கள் கடமையை ஆற்றியிருக்க வேண்டாமா ? ஒரு துரும்பையாவது அசைத்திருக்க வேண்டாமா?

நீங்கள் தவறிவிட்டீர்கள். அதனால் இந்த விஷக்கிருமிகள் எல்லா இடங்களிலும் முளைத்துவிட்டன. அவர்களைக் களைவது கடினம் தான்.

அதனால் அதற்கான சிறிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் முயற்சியே என்னைப் போன்றவர்கள் செய்வது.

நாங்கள் எழுதுவதால் எதிர் வினைகள் வார்த்தை வன்முறையாக வருகின்றன என்றால் எங்கள் எழுத்து வீரியம் உள்ளது தான் என்று புரியவில்லையா? அதனால் பாதிக்கப்பட்டவர்கள் உண்மை உரைக்கப்பெற்றார்கள் என்றும் நீங்கள் அறியவில்லையா ?

இந்த விஷக்கிருமிகள் இருக்கட்டும். இவை பகுத்தறிவால் பாதிக்கப்பட்டவை.

முன்னேறியவரான வைணவ அந்தணர்க்குக் கோபம் வருவது ஏன்? தென்கலை வடகலை சம்பிரதாய பேதங்கள் பற்றி தர்க்கபூர்வமாக வாதித்தால் “செந்தண்மை பூண்டோழுகாதிருக்க ” வேண்டியவர்கள் கோபத்தில் கரைவதேன்?  உண்மை சுடுவதாலோ? அறிவார்ந்த சமூகம் என்று பறை சாற்றுபவர்கள் தத்தம் அறிவை அடகு வைத்து தெரு நாய்களின் ஓலம் போல் வழக்காடு மன்றங்களில் யானைக்கு நாமம் போடுவது பற்றி வழக்காடுவதேன்?  அவர்கள் தான் அறிவில் சிறந்தவராயிற்றே ? “வடமன்  முற்றி வைஷ்ணவன் ” என்று முழங்கும்போதும், கோவில்களில் விரைப்புடனும் பக்தி இன்றியும் உச்ச குரலில் அடுத்த கலையாரை உசுப்பேற்றிவிடும் விதமாகவும் ஆழ்வார் பாசுரங்களை ஒரு கட்சிக் கூட்ட முழக்கம் போல் கத்தும் போது எங்கே போயிற்று உங்கள் “முன்னேறிய அறிவு நிலை’ ?

இறைவன் நாமத்தில் கவனம் செலுத்தாமல் யானைக்கு இடும் நாமத்தை முன்னிறுத்துவோர் இன்னமும் குரங்குக ளிலிருந்து  பரிணாம வளர்ச்சி அடையவில்லை என்று குறிப்பிட்டால் தவறென்ன ?

திருமால் அடியார் என்போர் அவ்வடியாரை “கலை” மூலம்  வகைப்படுத்தி மாலவன் முன் பிரிவு காண்பதேன்? ராமானுசர் உரைத்ததோ?  இதைக்கேட்டால் ஒருமையில் ஏசுவதா? அது என்ன பண்பாட்டின் அடையாளமோ?

எனக்கு அடுத்த தலைமுறைக்கு ஒரு அறிவு பூர்வமான உலகை விட்டுச்செல்ல ஆசைப்படுகிறேன். வாசித்தலில் மோகமும், தர்க்க வாதத்தில் ஆளுமையும் அதற்கான அறிவும் பெற்ற ஒரு சமூகத்தை உருவாக்க விழைகிறேன்.

கடந்த இரண்டு தலைமுறைகளின் அக்கறையில்லாமையால் எங்கும் சுய நலமும் சுய விளம்பர மோகமும் “கண்டதே வாழ்க்கை கொண்டதே கோலம்” என்ற ஒரு மன நிலையம், எதையும் பணத்துடனே ஒப்பீடு செய்யும் ஒரு மனப்போக்கும் பரவி விட்டுள்ளதை உணர்கிறேன். அதனால் என்னால் முடிந்த அளவு அவற்றைக் களைய விழைகிறேன்.

சமூகப்பணி ஆற்ற விடுங்கள். முடிந்தால் வாழ்த்துங்கள், ஆசீர்வதியுங்கள். அவை எனக்குத் தேவை.

“தீதும் நன்றும் பிறர்  தர வாரா ” – இதனை உணர்ந்தால் போதும்.

Author: Amaruvi's Aphorisms

Banker by day, blogger by night and a reader throughout.

3 thoughts on “தீதும் நன்றும் ..”

  1. Excellent. Inspiring.We have two wine shops in a street but no library.That is the state of our state and neighbouring states also.Then how can we expect people to behave?.Adult movies,drinks and unparliamentary words are now the USP of Tamil youngsters.Need some social reformers to ignite reading habits which can refine people.Happy to see that you have already started the ignition.people have started to read your blogs ,that itself is a moral victory for your efforts.

    Like

  2. Excellent, Inspiring. We have two wine shops a street, but no library. Then how can we expect people to read, and behave. Drinks, unruly behavior are now the USP of our society. We need to have a social reform law, and make reading compulsory, or else , as you have mentioned, we would lose this society to false pride and ignorance. You have started the reform with success , as you have received comments , which means that people have started to read.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: