நான் அப்பவே சொன்னேன், இந்த காங்கிரசை நம்பாதீங்கன்னு.அவங்களுக்குக் கொள்கை, கத்திரிக்காய் ஒரு மண்ணும் கிடையாது, காலை வாரி விட்டவங்க கிட்ட போய் நிப்பாங்க, அடிக்கடி உளறுவாங்க அப்பிடின்னு.
நண்பர் நம்பலே. இல்லை. அப்படி எல்லாம் இல்லை, அவர்களுக்கு கொள்கை பிடிப்பு உண்டுன்னு சொன்னார். தி.மு.க.வும் அப்படித்தான், அவங்களுக்கும் கொள்கைப் பிடிப்பு உண்டுன்னு சொன்னார்.
எனக்குப் பகுத்தறிவு பத்தலை. அதனாலே புரியலை.
இப்போதான் புரியுது. கனிமொழி ராஜ்ய சபா பதவிக்கு காங்கிரஸ் ஆதரவு ஏன்னு.
காங்கிரஸ் ஒரே ஒரு கண்டிஷன் தான் போட்டது. அதாவது 2G விவகாரத்துலே ராஜா வாயைத் திறக்கக் கூடாது. பார்லிமெண்டரி கமிட்டி முன்னாடி வந்து பேசுவேன்னு சொல்லக்கூடாது. அது சரின்னா கனிமொழிக்கு ஆதரவு. எப்பூடீ ?
கலைஞர் விவரம் தெரிந்தவர். ஸ்டாலின் பதவிலே இருக்கார். எம்.எல்.ஏ. பதவி. அழகிரி எம்.பி. பதவி. இப்போ ஊசல்லே இருக்கறது கனி தான். சரி என்ன செய்யலாம்? யோசிச்சார்.
பெரியார் கை பிடித்து நடந்தவர் ஆச்சே. இது கூடவா தெரியாது?
சின்ன மீனப் போட்டுதான் பெரியமீன எடுக்கணும்.
இப்போ சின்ன மீன் ராஜா. பெரிய மீன் கனி.
கனி இருப்பக் காய் கவர்ந்தற்றுன்னு வள்ளுவர் தெரியாமலா சொன்னார்?
போட்டாரே ஒரு போடு கலைஞர். பள்ளிகளில் ஆங்கிலம் கூடாதுன்னு பத்திரிகைகளுக்கு ஒரு தீனி போட்டுக்கொண்டே ஜெயந்தி நடராஜனை வரவழைத்துப் பேசினார்.
பேரம் முடிந்தது. கனி ( பழம் ) நழுவிப் பாலில் விழுந்தது.
அப்போது அவ்வையார் பாடிகொண்டே வந்தார் :
“பெரிது பெரிது தி.மு.க. பெரிது
அதனினும் பெரிது அதனது ஊழல்
தலைவருக்கு வீட்டுப் பிரச்சினை
எல்லாவற்றையுவிட ஆகப் பெரிது
அதனினும் பெரிது மகளின் எதிர்காலம்
மகளின் பெருமை சொல்லவும் அரிதே”
“சே, காலங்கார்த்தாலே என்ன தூக்கம்? எழுந்து வேலைக்குப் போங்க”, என்று மனைவியின் கத்தலில் கனவு கலைந்து பல் தேய்க்க ஓடினேன்.