தலைப்பு பார்த்து பதிவைப் படிக்காமல் ஓட வேண்டாம். இந்தமுறை ஒரு நல்ல விஷயத்தைப் பார்ப்போம்.
தமிழக சாதி அமைப்புக்களில் பறையர் என்ற பிரிவு மிகவும் ஒதுக்கப்பட்ட ஒன்றாக இருந்துள்ளது. அந்த வார்த்தையைப் பயன் படுத்தினாலே சிறை என்று ஒரு நண்பர் கூறினார். உண்மையா என்று தெரியவில்லை.
சமூக, பொருளாதார நிலையில் அடி மட்டத்தில் உள்ள இந்தப் பிரிவினர் தங்களது குலத் தொழிலாக பறை அடிப்பதைக் கொண்டுள்ளனர். அரசர் காலத்தில் பறை அறைந்து மன்னனின் ஆணைகளைத் தெரிவிப்பவர் என்றும் அறிகிறோம். ஆகவே இது ஒரு தொழில் தொடர்பானதாகவே தெரிகிறது.
பறை என்பது பசு மாட்டின் தோல் கொண்டு செய்யப்படும் ஒரு ஒலிக் கருவி. பசு மாடு தொடர்பிருப்பதால் “தீட்டு” முதலியன வந்து அதனால் அவர்கள் ஒதுக்கப்பட்டனரா என்று தெரியவில்லை. இது ஒரு ஊகம் தான்.
ஆனால் அரசனின் ஆணைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மதிப்பான செயலே. இன்னமும் அது ஒரு நம்பிக்கையான ஆட்களிடம் தான் இந்தப் பொறுப்பை ஒப்படைக்க முடியும்.எனவே மன்னரின் நன் மதிப்பைப் பெற்ற ஒரு சமூகமாகக் கருத வாய்ப்புண்டு.
ஆண்டாள் தன் பாசுரத்தில் ” பாடிப் பறை கொண்டு யாம் பெறு சம்மானம்” என்றும், “நாராயணனே நமக்கே பறை தருவான் ” என்று பறை என்ற வார்த்தையைப் பயன் படுத்துகிறாள்.
ஆதி நாட்களில் இந்து மதம் ஒரு அமைப்பாக உருப்பெறாத, சைவமும் வைணவமும் மட்டுமே தமிழ் நாட்டின் சமயங்களாக இருந்த நிலை திகழ்ந்த நாட்களில் பறையரே கோவில்களில் பூசாரிகளாக இருந்தனர் என்றும், அந்தணர்கள் கடந்த சில நூற்றாண்டுகளாகவே அந்த வேலையைச் செய்கிறார்கள் என்றும் சில ஆராய்ச்சிகளை மேற்கோள் காட்டி எழுத்தாளர் ஜெயமோகன் கூறுகிறார் . அந்த சமயங்களில் அந்தணர்கள் வேள்விகளும் கல்வி முதலிய தொழில்களும் செய்தனர் என்றும் கூறுகிறார். இது ஆராயப் பட வேண்டிய ஒன்று.
அரசியல் காரணங்களுக்க்காக அந்தணர்கள் தான் சாதி வேறுபாடு உருவாக்கினார்கள் என்று தற்போது பரவலாகப் பேசப்படுகிறது. அது ஆங்கிலேயக் கல்வியினால் நமக்கு ஏற்பட்ட ஒரு சரிவு.
அது இருக்கட்டும்.
திருவாரூரில் “மத்தியானப் பறையர்கள்” என்று ஒரு பிரிவினர் உள்ளனர். இவர்கள் உண்மையில் அந்தணர்கள். மதியம் ஒரு நாழிகை மட்டும் இவர்கள் பறையர்களாக ஆவதாகவும் பிறகு நீராடிப் பூசைகள் செய்து மறுபடியும் அந்தணர்களாக ஆவதாகவும் “அறியப்படாத தமிழகம்” நூலில் தொ.பரமசிவம் கூறுகிறார். இதற்கு ஒரு இதிஹாச ஆதாரத்தையும் காட்டுகிறார். அதில் சிவ பெருமான் ஒரு பறையர் உருவில் வந்ததாகவும், அது அறியாத சைவ அந்தணர்கள் அவரை வெளியேறச் சொன்னதாகவும் அதனால் ஏற்பட்ட ஒரு தண்டனை என்றும் கூறுகிறார்.
“ஆவுரித்துத் தின்றுலையும் புலையரேனும்அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே ” என்றும் சைவம் அவர்களைக் கடவுளாகவே உயர்த்துகிறது.
சாதி வேற்றுமைகளை நாங்கள் தான் போக்கினோம் என்று மார் தட்டும் பகுத்தறிவாளர்கள் இந்த தொண்டரடிப்பொடி ஆழ்வார் பாசுரத்தைப் பார்க்கக் கடவது.
“அமரவோ ரங்க மாறும் வேதமோர் நான்கு மோதி
தமர்களில் தலைவ ராய சாதியந் தணர்க ளேலும்
நுமர்களைப் பழிப்ப ராகில் நொடிப்பதோ ரளவில்ஆங்கே
அவர்கள்தாம் புலையர் போலும் அரங்கமா நகரு ளானே“.
அரங்கப் பெருமானே, நான்கு வேதங்களான ரிக் , யஜூஸ், ஸாமம், அதர்வணம், அதனுடன் ஆறு வேதாங்கங்களான சீக்ஷை, வியாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜியோதிஷம், கல்பம் முதலிய அனைத்தையும் அறிந்தவர்களாக இருந்தாலும், இந்த அறிவு எதுவும் இல்லாத, ஆனால் இறைவன் பால் பக்தி கொண்ட ஒரு தாழ்ந்த புலையர் சாதியைச் சார்ந்த ஒரு வைணவனைப்ப் பழித்தால், அந்த நொடியே இந்த அந்தணர்கள் அந்த தாழ்ந்த சாதியை அடைவர் என்று பாடுகிறார். வைணவத்தில் மறையன் பறையன் ஆவது இங்கு.
சாதியில் உயர்ந்தவராக இருந்தாலும், கல்விகளில் சிறந்தவராக இருந்தாலும், பக்தி மட்டுமே உடைய ஒரு எளியாரை இகழ்ந்தால் அவர் அந்த நொடியிலேயே தம் சிறப்பிழப்பார் என்று சமூக நீதியப் பறை சாற்றியவர் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார். பின்னர் வந்த ராமானுசர் “திருக்குலத்தார்” என்று அழைத்த அதே தீண்டப்படாத மக்கள் தான் பறையர் என்றும் ஒருவாறு ஊகிக்க முடிகிறது. இங்கு பறையன் மறையன் ஆனது காண்கிறோம்.
ஒருவேளை அதனால் தான் “இறைவனின் குழந்தைகள்” என்ற அர்த்தம் வரும்படி, காந்திஜி இவர்களை “ஹரிஜன்” என்று அழைத்தார் போலே.
ஆனால் ஒன்று. நமது சமூகத்தின் அடித்தட்டுக்களில் இன்னமும் உள்ள இவர்களின் நிலையை உயர்த்தாமல் நாம் மத மாற்றுக்காரர்களைச் சாடுவது நமது கடமையைச் செய்யாமல் ஓடி ஒளிவது என்று நினைக்கிறேன்.
பி.கு.: வசவுகள் தொடரலாம்.
வேங்கடசுப்பிரமணியன்
October 16, 2013 at 11:18 am
ஆதி சைவர் என்னும் சாதி பிராம்மணர்கள் தான் சைவ பூசாரிகள். இவர்கள் குருக்கள் எனவும் சிவாச்சாரியார் என்றும் அழைக்கப் படுகின்றனர். இவர்கள் தான் ஆகமங்களை எழுதியவர்கள்.
ஸ்மார்த்தர் மட்டுமே வேத கர்மாக்களை செய்தனர்.
இது போக அந்தந்த ஜாதியினர் தங்கள் குல தெய்வ வழிபாடுகளை தாமே செய்தனர். அவர்களே பூசாரிகள்.
பறையர் ஜாதி மக்கள் சில இடங்களில் பூசாரிகளாயிருக்கலாம். பெரும்பான்மை அப்படி இருக்க வாய்ப்பு இல்லை. அவர்களுக்கு பௌத்த பூர்வீகம் வேறு இருப்பதால் அதில் மேலும் சந்தேகம் வலுப் பெறுகிறது.
ஜெயமோகனின் வாதங்களில் உள்ள பொதுப் படுத்தலால் வந்த வினை இது. தன்னை எல்லா சாதிக்கும் பொதுவாகக் காண்பிக்கும் ஜோரில் இது போன்ற வீச்சு வாசகங்கள் வீசி விடுகின்றனர் சிலர். இது மிகவும் துரதிருஷ்டவசமானது.
வேங்கடசுப்பிரமணியன்
LikeLike
Right Off Center
October 16, 2013 at 2:02 pm
நன்றி. திரு.வேங்கட சுப்ரமணியம். தொடர்ந்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து ஆற்றுப்படுத்துங்கள்.
LikeLike
naagarvamsam/ நாகர்வம்சம்
February 6, 2015 at 2:10 am
பரையர்களுக்கு பௌத்த தொடர்பு இருந்தால் என்னவாம் ?
இந்துத்துவம் என்பதை அகழ்ந்தால் உள்ளே இருப்பது பறையியல்
பரையர்களின் அறிவைத் திருடியவர்களே வந்தேறிகள்
பரையர்களை கோவிலுக்கு விட மறுத்தது தீட்டு என்பதற்க்கா ?
அறிவ உள்ள யாரேனும் ஏற்க்க முடியுமா ?
எங்கே பரையர்கள் உள்ளே வந்து மீண்டும் அவர்கள் கோவிலையும் ஆரியர் செய்யும் பூஜைகளையும் பறித்து விரட்டி விடுவார்களோ என்கிற அச்சத்தினாலே
தீட்டு என்கிற கதையை பரப்பி விட்டார்கள்
அறிவு மயங்கிய பிற தமிழ்க் குடிகள் அதே உண்மை என்று நம்பியதால் வந்த பெருங்கேடே இன்று வரை தமிழர் அடிமை நிலையில் இருப்பது
தெண்டரடிப்பொடி ஆழ்வார் பாடலுக்கு நீங்கள் கொடுத்து இருக்கும் விளக்கமும் உமது பார்வையும் தவறு
LikeLiked by 1 person
nanmaran
September 6, 2016 at 3:23 pm
வைணவர்கள் பாடல்களின் விளக்கத்தை தங்களுக்கு ஏற்றவாறு மாற்றி வைணவமே சிறந்தது என்று மகிழ்ச்சி அடைகிறார்கள். பின்வரும் பாடலை பார்ப்போம்.
அமரவோ ரங்க மாறும் வேதமோர் நான்கு மோதி
தமர்களில் தலைவ ராய சாதியந் தணர்க ளேலும்
நுமர்களைப் பழிப்ப ராகில் நொடிப்பதோ ரளவில்ஆங்கே
அவர்கள்தாம் புலையர் போலும் அரங்கமா நகரு ளானே
இதில் நுமர் என்பது இந்த இடத்தில் ரங்கனுடைய பக்தர்களையே மட்டும் குறிப்பதோடல்லாமல் புலையர்களை குறிக்கவில்லை. ரங்கனுடைய பக்தர்களை பழிப்பவர்களே புலையர் என்றே பாடலின் பொருள் வருகிறது.
LikeLike
Amaruvi Devanathan
September 7, 2016 at 11:22 pm
நல்ல பொருளைக் கொள்வது நல்லது தானே ஐயா? அடியேனின் ‘நான் இராமானுசன்’ நூல் வைணவ சமன்வயப் பார்வையையே முன்வைக்கிறது. படித்துப்பாருங்கள். நன்றி.
LikeLike