RSS

Monthly Archives: August 2013

பா.ஜ.க.வின் பரிணாம வீழ்ச்சி

உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ரூபாயின் வீழ்சசி பற்றிப் பேசும் காலத்தில் பா.ஜ.க.வின் வீழ்ச்சி பற்றிப் பேசுவதா? அதுவும் “பகுத்தறிவு” இல்லாத இந்த அம்மாஞ்சியா என்று நீங்கள் நினைக்கலாம்.

நேரில் நடப்பதைக் கண்டும் காணாமலும் போக நான் ஒன்றும் பகுத்தறிவுவாதி அல்லவே. மனதில் பட்டதைப் பேசும் ஒரு யதார்த்தவாதி என்ற பில்டப் இருக்கிறதே.. காப்பாற்ற வேண்டாமா ?

விஷயத்திற்கு வருவோம்.

பாராளுமன்றத்தில் “பிரதமர் திருடர்” என்ற கோஷம் எழுப்பப்பட்டுள்ளது. அதனால் களேபரம் ஏற்பட்டுள்ளது. எழுப்பியவர்கள் ப.ஜ.க. மற்றும் எதிர்க்கட்சியினர்.

பிரதமர் என்பது ஒரு மனிதக் குறிப்பு அல்ல. இந்திய ஜனநாயகத்தின் ஒரு குறியீடு. அந்தக் குறியீட்டை இப்படி சாலையில் நின்று கத்தும் கோஷ்டியினர் போல் தாக்கிப் பேசுவது அநாகரீகம் மட்டும் அல்ல இந்தியா என்னும் மாபெரும் ஒரு மக்கள் சக்தியின் மீது தொடுக்கப்பட்டுள்ள ஒரு அவச் சொல்.

மனமோகன் சிங் தவறான முடிவுகள் எடுத்தார் என்று சொல்வது சரி தான். ஆனால் பிரதமர் திருடர் என்று கூறுவது எந்த விதத்திலும் சரி இல்லை. பிரதமர் தனியாக முடிவு எடுப்பது இல்லை. கேபினட் என்ற அமைப்பு சேர்ந்து செய்யும் முடிவுக்குப் பிரதமர் தலை அசைத்தார் என்று சொல்லலாம். முடிவு தவறாக இருக்கலாம். ஆனால் தவறு என்பது கோர்ட்டுகளில் நிரூபணமாகாதவரை “திருடர்” என்ற பதம் அதுவும் பாராளுமன்றத்தில் சொல்லப்படுவது மன்ற அங்கத்தினர்களின் ஒழுக்க வீழ்ச்சி. ஆகவே நமது ஒழுக்க வீழ்ச்சியும் கூட.

இடது சாரி, சமாஜ்வாடி, லாலு கட்சி முதலான “முற்போக்கு” அங்கத்தினர்கள் கத்துவது அவர்கள் வாடிக்கை. அது அவர்களது “சமூக நீதி”. தமிழ் நாட்டில் சட்ட சபையில் ஜெயலலிதாவின் புடவையைப் பிடித்து இழுப்பது தி.மு.க.வின் “தமிழ்ப் பண்பாடு”. பெரியார் வழியில் நடந்து வந்தவர்கள் அவர்கள். ஆனால் பா.ஜ.க. அங்கத்தினர்கள் இந்தக் கத்தலில் ஈடுபடுவது ஏற்க முடியாதது. கட்சித் தலைமை உறுதியுடன் செயல்பட்டு அந்த அங்கத்தினர்களைக் கண்டிக்க வேண்டும்.

பிரதமர் தவறு செய்யவில்லையா, ஊழல் நடக்கவில்லையா, அவர் வாய் மூடி மௌனியாக இருக்கவில்லையா என்றெல்லாம் கேட்கப்படலாம்?

இதெல்லாம் சரி தான். ஆனால் அவர் என் பிரதமர். என் நாட்டின் இறையாண்மையின் பிரதிநிதி. அவரைக் கண்ணியக்குறைவாகப் பேசுவது என்னைப் பேசுவதாகும். என்னைப்போன்ற சாதாரண குடிமக்களைப் பேசுவதாகும். கண்ணியமான விமர்சனங்களும், வாதங்களும் செய்யுங்கள். மதுபானம் அருந்திய சமூக விரோதிகளைப்போல் கத்தவேண்டுமேன்றால், தில்லிக்குச் செல்வானென்? சென்னையில் அரசே கடை திறந்துள்ளது. அங்கு “உற்சாக பானம்” அருந்தி வீதிகளில் கத்துங்கள்.

நேருவும், சியாமா பிரசாத் முகர்ஜியும், சாஸ்திரியும், ராஜாஜியும், அண்ணாதுரையும், சமீபத்தில் வாஜ்பாயும், அருண் ஷோரியும் பேசியுள்ள அரங்கத்தை  உங்கள் அழுச்சாட்டியங்களுக்குப் பயன்படுத்தாதீர்கள்.

காங்கிரஸ் கத்தவில்லையா என்று கேட்கலாம். மணி ஷங்கர் ஐயர் கத்துவதில்லையா என்று கேட்கலாம். ஆனால் அவர்கள் ஆர்.எஸ்.எஸ்.என்ற ஆளுமையின் வழி நடப்பவர்கள் அல்ல. பாக்கிஸ்தானியர்களுக்கு இந்திய நாடாளுமன்றத்தின் மாட்சிமை பற்றி என்ன கவலை? அவர்கள் அப்படித்தான். தங்கள் கட்சியின் முன்னாள் நிதி அமைச்சரும் இந்நாள் ஜனாதிபதியுமான பிரணாப் முகர்ஜியையே குறை கூறும் வல்லமை கொண்ட, நாகரீகம் அறிந்த, தமிழ் நாட்டின் “அறிவாளி” நிதியமைச்சர் அந்தக் கட்சியில் உள்ளார்.  அவர்களுக்கு ஜனாதிபதியின் மாட்சிமை குறித்து கூட அக்கறை இல்லை. முன்னாள் ஜனாதிபதியின் தேர்வே இதைப் புரியவைக்கவில்லையா? எனவே அவர்கள் அப்படித்தான் கத்துவார்கள்.

ஆனால் நீங்கள் வாஜ்பாயின் கட்சினர் அல்லவா? சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கண்ணியத்தின், கருத்தின், கவித்துவத்தின் உருவாக விளங்கிய வாஜ்பாய் எங்கே, காட்டுக்கத்தல் கத்தும் நீங்கள் எங்கே? அறிவே உருவாக தர்க்கவாதம் புரிந்த அருண் ஷோரி எங்கே,  மறை கழன்றவர்கள் போல் கத்தும் நீங்கள் எங்கே?

உங்களுக்கு என்று ஒரு பொறுப்பு இருக்கிறது என்பதை உணருங்கள்.

“தனித்துவமான” கட்சி என்று பறை சாற்றிய நீங்கள் இப்படியே போனால் இந்திய மக்களால் தனித்து விடப்படுவீர்கள். எச்சரிக்கை !

 
Leave a comment

Posted by on August 31, 2013 in Writers

 

Tags: , , ,

தொல்காப்பியம் ஒரு இந்துத்வ நூல் ?

thol

சில நேரங்களில் நம்மையும் அறியாமல் சில நல்லது நடந்துவிடுகிறது. அது போல் நடந்தது தான் “தொல்காப்பியத் தமிழர்” என்ற நூல் என் கண்ணில் பட்டது. வாழ்க சிங்கை தேசிய நூலக மலிவு விலைப் பிரிவு.

ஈ.வே.ரா.வின் சீடர்களில் ஒருவர் அவரிடமிருந்து பிரிந்து சென்று நல்ல வழிக்குத் திரும்பினார்களா என்று சில காலமாகவே ஆராய்ந்து கொண்டிருந்தேன். சிங்கை தேசிய நூலகத்தில் அறிஞர் அண்ணாவின் “சரிந்த சாம்ராஜ்யம்”,”வருத்தப்பட வைத்த சம்பவங்கள்” முதலிய சில நூல்கள் எனக்கு வரப் பிரசாதமாய் அமைந்தன. அதைப்போல் அமைந்தது தான் இந்த சாமி.சிதம்பரனாரின் நூல்.

சாமி.சிதம்பரனார் பெரியார் கொள்கையில் ஊறியவர். அவருடன் மலேயா முதலான இடங்களுக்குச் சென்றவர்.ஆனால் மிகச் சிறந்த தமிழறிஞர். எங்கள் ஊர் மயிலாடுதுறைக்கு அருகில் கடகத்தில் பிறந்தவர்.  பெரியாரின் சரிதையை “தமிழர் தலைவர்” என்ற பெயரில் எழுதியவர். பின்னர் அவரது கொள்கைகள் பிடிக்காததால் வெளியேறி கம்யுனிஸ்ட் கட்சியில் இணைந்தார் என்று நினைக்கிறேன்.

இப்படிப்பட்ட ஒரு தமிழ் அறிஞர் பெரியார் கட்சியினர் “ஆரியரும் திராவிடரும் வேறானவர்” என்று கூறியதை ஏற்கவில்லை. திருக்குறள் முதலியவற்றைப் பெரியார் கட்சியினர் கேலி பேசியதை விரும்பவில்லை. அதனால் அவர்களிடமிருந்து வெளியேறிப் பல நூல்கள் எழுதினார். அதனாலோ என்னவோ தமிழகத்தில் “மறக்கடிக்கப்பட்ட” ஒரு நூல் “தொல்காப்பியத் தமிழர்” என்னும் நூல்.

இந்த நூலின் முன்னுரையை அவரே எழுதியுள்ளார். இப்போதுள்ள “பகுத்தறிவாளருக்கு” ஒவ்வொரு வரியும் சாட்டையடி.

“ஆரியர்” படை எடுப்பு என்று கூறி காலட்சேபம் செய்து வந்துள்ள தமிழ்த் தலைவர்களுக்கும் இந்த நூல் ஒரு சரியான பதிலடி. வேறு யாராவது எழுதி இருந்தால் “பார்ப்பனக் கைக்கூலி ” என்றும் “மவுண்ட் ரோடு மகா விஷ்ணு” என்றும் சொல்லித் தப்பிக்கலாம். ஆனால் பெரியாருடனேயே இருந்து அவரைப்பற்றிய புத்தகங்கள் எழுதி, கொள்கை வேறுபாட்டால் வெளியேறிய ஒரு தமிழ் அறிஞர் எழுதியதைப் புறந்தள்ள முடியாதே !

இந்திய மக்களுக்கு ஒரே பண்பாடு இருந்தது, மொழியால் வேறுபாடு இருந்ததே ஒழிய, கலையால், கலாச்சாரத்தால் ஒன்றாகவே இருந்தார்கள் என்று கூறுகிறார். நான் கூறினால் இந்துத்துவவாதி என்று திட்டலாம். சாமி.சிதம்பரனார் அப்படி இல்லையே. பகுத்தறிவுப் பாசறையிலிருந்து வந்தவரே !

பண்பாட்டால் ஒன்றுபட்டது இந்தியா என்கிறார்.அதற்கு தொல்காப்பியத்தை உதவிக்கு அழைக்கிறார். தற்போதைய “அறிவாளிகளுக்கு” இது வேப்பங்காய். “தமிழ் இனம்” என்று இவர்கள் போடும் கூப்பாடு காது கிழிகிறது.

அவர் முன்னுரையில் என்ன சொல்கிறார் என்று பாருங்கள். முன்னுரையை மட்டுமே ஒரு புத்தகமாகப் போடலாம் என்று தோன்றுகிறது. பல ஆண்டுகள் கழிந்தாலும் அவருடைய சொற்கள் இன்றைய தமிழகத்திற்கு அப்படியே பொருந்துகின்றன. ( நூலை முழுவதும் படிக்க வில்லை. அதற்குள் இன்னொரு நண்பர் கடன் வாங்கிச் சென்றுவிட்டார். படித்தபின் விரிவாக எழுதுகிறேன்).

—————–

“தமிழர்களைப் பற்றித் தமிழ் இலக்கிய உண்மைகளை உணராதவர்களால் எழுதப்பட்ட வரலாறுகளே இன்று மலிந்து கிடக்கின்றன. தமிழர் வரலாற்றைப் பற்றி வெளிநாட்டினர் பலவாறு கூறுகின்றனர். பழந்தமிழ் இலக்கியங்களிலே பயிற்சியில்லாத சரித்திரக்காரர்கள் என்னென்னவோ சொல்கின்றனர்..

“தமிழகத்திலே இன்று இனவெறுப்பு தலைவிரித்தாடுகிறது. மொழிவெறுப்பு முறுக்கேறி நிற்கின்றது. நாகரிக வெறுப்பு நடனமாடுகின்றது. வரலாறு, நாகரிகம், பண்பாடு என்ற பெயர்களைச் சொல்லித் தமிழ்மக்களிடையே கலகத்தீயை மூட்டிவிடுகின்றனர் சிலர். இத்தகைய வெறுப்புத்தீ அணைக்கப்பட வேண்டும்.    

“…பண்டைய மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைகள் சிலவற்றை மூடநம்பிக்கைகள் என்று மொழிகின்றோம். விஞ்ஞான அறிவுக்கு ஒத்துவராத சில பழக்கங்களும் நம்பிக்கைகளும் பண்டைக்கால மக்களிடம் இருந்தன. நாகரிகம் பெற்ற எல்லா இனத்தினரிடமும் இவைகள் இருந்தன. தமிழர்களிடமும் இத்தகைய பழக்கங்களும், நம்பிக்கைகளும் இருந்தன என்பதில் வியப்பில்லை.

‘தமிழர்களிடம் எவ்விதமான பொருந்தாப் பழக்கமும் இருந்ததில்லை. எந்தக் குருட்டு நம்பிக்கையும் இருந்ததில்லை. இன்றைய விஞ்ஞான அறிவுபெற்ற பகுத்தறிவாளர்களைப் போலவே அன்றும் வாழ்ந்தனர். ஆரியர்கள்தாம் பொருந்தாப் பழக்கவழக்கங்களையும் மூடநம்பிக்கைகளையும் தமிழரிடையே புகுத்தினர் என்பது உண்மையன்று.

“… இவர்கள் கூற்று வெறுப்பையே அடிப்படையாகக் கொண்டது. இவர்கள் வடமொழியில் கொண்டிருக்கும் வெறுப்பும் இதற்கொரு காரணம்.  தமிழ் இலக்கியங்கள் நன்றாகக் கற்றவர்களுக்கு இவ்வுண்மை தெரியும். இவ்வுண்மையை உணர்ந்த புலவர்களில் கூடச் சிலர் இதை மறைக்கின்றனர். 

“…. அந்த நாகரிகம் ஆரியருக்கும், தமிழருக்கும் ஒத்த நாகரிகமாகத்தான் காணப்படுகின்றது. தொல்காப்பியத்தில் ஆரியர் என்ற பெயரோ, திராவிடர் என்ற பெயரோ காணப்படவில்லை.”

 “இந்தியமக்கள் வணங்கும் தெய்வங்கள், பிறப்பு, இறப்பு பற்றிய நம்பிக்கைகள், நீதி, அநீதி இவைகளைப் பற்றிய முடிவுகள், பாவபுண்ணியம், மோட்சம், நரகம் பற்றிய கொள்கைகள் இவைகள் எல்லாம் ஒன்றாகவே இருக்கின்றன. இந்திய மக்கள் அனைவருக்கும் இவைகளைப் பற்றிய கருத்து ஒன்றுதான். இவைகள்தாம் பண்பாட்டுக்கு அடிப்படையானவை. அவரவர்கள் வாழும் இடத்தைப் பொறுத்து நடை, உடை, பாவனைகளும், மொழிகளும் வேறுபட்டிருக்கலாம். இதனால் இந்தியமக்களின் பண்பாடு வெவ்வேறு என்று சொல்லிவிட முடியாது ‘ என்பதே இச்சரித்திராசிரியர்களின் கொள்கை. இந்தக் கொள்கைக்குத் தொல்காப்பியம் ஆதரவளிக்கிறது.”

—————

இந்தியா, பண்பாடு, கலாச்சாரம் என்று கூறுவதாலும், அதற்கு தொல்காப்பியத்தை உதாராணம் காட்டுவதாலும் ஒன்று தொல்காப்பியம் இந்துத்துவ நூலாக இருக்க வேண்டும், அல்லது சாமி.சிதம்பரனார் ஆர்.எஸ்.எஸ். காரராக இருக்க வேண்டும். இப்படி நம்புவதுதான் தற்காலத்திய பகுத்தறிவு.

 

Tags: , , ,

பதினைஞ்சு ரூபா ..

எதுக்குப் படிக்கணும் ? எதுக்கு வேலைக்குப் போகணும் ? எதுக்கு வேலை செய்யற எடத்துலே கண்ட “அறிவாளிகள்” கிட்ட பேச்சு வாங்கணும்?  எல்லாம் இந்த கால் வயித்துப் பொழைப்புக்குத்த் தானே?

அப்பிடியே ஓடினாலும் கால் வயிறு நிறையுதா? அதுக்குள்ள இன்கம் டாக்ஸ், ரோடு டாக்ஸ். வாட்டர் டாக்ஸ், சர்வீஸ் சார்ஜ், லேட் பேமென்ட் பீஸ், வட்டி, அதுக்கு ஒரு சார்ஜ் .. இப்படி பல ரூபங்கள்ளே காசு பிடுங்குறதுக்குன்னே ஹார்வர்ட்லே படிச்ச மேதாவிங்கல்லாம் ரூம் போட்டு யோசிச்சு ஒரு நாளைக்கு 32 ரூபா போதும்னு சொல்லிட்டாங்க.

அதுக்கும் மேலே இருக்கவே இருக்கு இலவச அரிசி. சரி அதுவும் இல்லேன்னா ஒரு ரூபா அரிசி, விலை இல்லா கிரைண்டர், விலை இல்லா மிக்சி. இதுலே சமைச்சு சாப்பிட முடியாதா ?

சரி அதுவும் வாணாம். அஞ்சு ரூபாலே அம்மா உணவகம்லே இட்லி, சாம்பார் சாதம், தயிர் சாதம்.

அதுவும் இல்லீன்னா ?  இருக்கவே இருக்கே மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டம். அந்த சட்டம் எழுதின பேப்பரை தின்னலாமே.. சாப்ட மாதிரி இருக்குமே.

சர் சாப்பாடு எல்லாம் ஓகே. பசங்க படிப்பு?

அட என்னாப்பா? விவரம் புரியாதா ஆளா இருக்கியே? கல்வி உரிமை சட்டம் இருக்கே! சட்டம் இருக்க சொல்ல பள்ளிக்கூடம் எதுக்கு? படிச்ச மாதிரி ஆயிடுமே !

அது சரி, இதெல்லாம் வேணுமனா எனக்கு ரேஷன் கார்டு வேணுமே ? இல்லையே.

இது ஒரு விஷயமா? ரேஷன் கார்டு வேணும்னா ஆதார் கார்டு காமி. உடனே ரேஷன் கார்டு குடுப்பாங்க.

அடப் போப்பா.. ஆதார் கார்டு இருந்தாக்கா நானே ரேஷன் கார்டு வாங்கி இருக்க மாட்டேனா ?

ஆதார் கார்டு இல்லியா? சரி அப்போ ஒரு மனு குடுக்க வேண்டியது தானே?

அதாம்பா .. ஆதார் கார்டு வேணும்னா பாஸ்போர்ட் வேணுமாமே.

பாஸ்போர்ட் எதுக்கு ?

அப்பாலே எப்டி என்னோட அட்ரெஸ் தெரியும்?

இன்னாபா வெகுளியா இருக்கியே  ! உனக்கு ஏதுப்பா அட்ரஸ் ? உனக்கு தான் வீடே இல்லியே ..

ஓஹோ.. அட்ரெஸ் வேணும்னா வீடு வேணுமா ? அதுக்கு என்ன செய்யுறது?

அதுக்கு ஒரு வழி இருக்கு.. ஒரு மனு எழுதி குடு. அத்தோட உன்னோட ரேசன் கார்டு காபி ஒண்ணு குடு ..

யோவ், ரேசன் கார்டு தான் இல்லியே.

சரி அப்படின்னா ஆதார் கார்டு குடு .

அதுதான் இல்லியே பா. அதானே கஷ்டம்.

சரி வாணாம், அப்டின்னா பாஸ்போர்ட் குடு. அட்ரஸ் இருக்கும்.

யோவ், நீ நெதானத்துலே தான் இருக்கியா? பாஸ்போர்ட் தான் இல்லியே ..

சரியான கஸ்மாலம் பா நீ. அப்டின்னா அட்ரஸ் எப்படிக் கிடைக்கும்?

எதுக்கு அட்ரஸ் ?

அட்ரஸ் இருந்தாத்தானே ஆதார் கார்டு கிடைக்கும்.

சரி, அதுக்கு வீடு வேணுமே.

அடப்போப்பா, வேலை செய்யாமலே ஊரக வேலை திட்டத்துலே நூறு ரூபா குடுக்கறாங்க. வீடு இல்லாம அட்ரஸ் குடுக்க மாட்டாங்களா ?

அது போகட்டும், உன்கிட்டே ட்ரைவிங் லைசென்ஸ் இருக்கா?

வண்டியே கிடையாது எப்படி ட்ரைவிங் லைசென்ஸ் இருக்கும்?

இல்லப்பா, அட்ரஸ் ப்ரூப் வேணும்னா ட்ரைவிங் லைசென்ஸ் போதுமேன்னு பார்த்தேன்.

இது எதுவுமே இல்லை. இதெல்லாம் எனக்குக் கிடைக்குமான்னு தெரிஞ்சுக்க முடியுமா?

ஆங். அது முடியும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் இருக்கே..

அப்ப சரி. அதுக்கு என்ன செய்யணும் ?

ஒரு மனு எழுதி ஒரு பதினைஞ்சு ரூபா மணி ஆர்டர் வாங்கி ….

அடப்போப்பா, பதினைஞ்சு ரூபா இருந்தா நானே டாஸ்மார்க் போயிருக்க மாட்டேனா? உன்கிட்டே மாட்டி இருப்பேன்?

 
2 Comments

Posted by on August 28, 2013 in Writers

 

Tags: , ,

"நாளும் பொழுதும் "- ஜெயமோகன் – ஒரு பார்வை

Naalum

சமீபத்தில் எழுத்தாளர் ஜெயமோகனின் ‘நாளும் பொழுதும்’ வாசித்தேன்.   சமூகம், சினிமா, நான் என்று மூன்று பிரிவுகளில் அமைந்துள்ள இந்த நூலில் பல கட்டுரைகள், அவர் வாழ்வில் நடந்த சில நிகழ்வுகள் முதலியன உள்ளன.

“பந்தி” என்ற கட்டுரை நெஞ்சைத் தொட்டது. குமரி மாவட்டத்தில் திருமணம் முதலிய விழாக்களில் விருந்தினர்களை எப்படி பந்தி உபசரிப்பது என்று அருமையாக விவரித்துள்ளார். அம்முறையில் உள்ள வழக்கங்கள், ஒவ்வொரு வழக்கத்தின் பின்புலம், அதன் தேவை என்று அழகாக இருந்தது. ஒவ்வொரு சமூகத்தவரின் பந்தி உபசரிப்புக்களும் அப்படியே. ஆனால் தற்போது எப்படி உள்ளது என்பதையும் சொல்லியுள்ளார். நாம் தினமும் காணும் ஒன்று தான். இருந்தாலும் படிக்கும் போது வலிக்கிறது.

எல்லாக் கட்டுரைகளையும் விட என்னை மிகவும் பாதித்த ஒன்று தற்கால இளைஞர்களைப் பற்றியது. “யூத்து” (Youth) என்பது பெயர். எனது கருத்துக்கு ஒத்துப் போவதாக அமைந்துள்ளதால் கவரப்பட்டேன் என்பது உண்மை என்றாலும், அவரது சில எண்ணங்கள் மிகவும் உண்மை.

யூத் என்ற போர்வையில் பொறுப்பற்ற ஒரு கூட்டம் செயல்படுவதையும், அவர்களுக்கு எப்படிக் கலைகள் பற்றியும் வாசிப்பு பற்றியும் ஒரு அறிமுகமே இல்லாமல் இருப்பது பற்றியும் மிகவும் கவலை கொண்டு எழுதியுள்ளார். இந்த சில கருத்துக்கள் என் ஒரு கட்டுரையில் முன்னமே சொல்லிருந்தேன்.

http://ammanji.wordpress.com/2013/07/20/futureindia/ )

சுய தம்பட்டம் இருக்கட்டும். ஜெயமோகனுக்கு வருவோம்.

“யானை டாக்டர்” என்று முன்னம் எழுதிய கதையில் இளைஞர்கள் காடுகளில் பீர் பாட்டில்களை உடைத்து வீசுவதால் யானைகள் எப்படி உயிர் இழக்கின்றன என்று எழுதி இருந்தார். அதிலிருந்து தொடங்குகிறார். ஒரு மலை உச்சியில் இளைஞர்கள் சட்டையைக் கழற்றி ஆடியபடி, குடித்தபடி, கத்தியபடி இருந்திருக்கிறார்கள். அதைப்பற்றிக் கூறுகிறார் :

“அந்த இளைஞர்களுக்கு அந்த இடத்தின் அழகும் முக்கியத்துவமும் உண்மையிலேயே தெரியவில்லை. அங்கே எப்படி மகிழ்ச்சியாக இருப்பது என்று அவர்களுக்குப் புரியவில்லை. அதைப்போன்ற விஷயங்கள் அவர்களுக்குப் பழக்கமே இல்லை. அது தான் பிரச்சினை. இவர்கள் அறிந்தது தமிழ் சினிமா.அதில் என்ன செய்கிறார்களோ அதைச் செய்கிறார்கள்.”ஜாலியாக” இருப்பதாக நினைத்துக் கொள்கிறார்கள்.

நம்முடைய இளைஞர்கள் வளர்ப்பு இதற்கு முக்கியமான காரணம். ரசனை, அழகுணர்வு, குடிமைப்பண்பு, அறிவார்ந்த நோக்கு ஆகியவை குடும்பம், கல்வி நிலையம் என்னும் இரு அமைப்புகள் வழியாக வர வேண்டும்.

நம்முடைய குடும்பங்கள் பெரும்பாலும் சேர்ந்து சமைத்துத் தின்று, உறங்குகிற இடங்கள் மட்டுமே.. நம் குடும்பங்கள் அதன் பிள்ளைகளுக்குப் பணம் சம்பாதிப்பதற்கான உந்துதலை மட்டுமே உருவாக்குகின்றன.கல்வி அப்படி பணம் சம்பாதிப்பதற்கான ஒரு வழிமுறையாகவே முன்வைக்கப்படுகிறது.

பல குடும்பங்களில் பண்பாடு என்று நாம் நம்பும் எதனுடைய அடையாளமும் இருக்காது.ஒரு சில சாமிப் படங்கள், பாட புத்தகங்கள், ஒரு டி.வி.-அவ்வளவுதான். அவர்களுக்கு எந்த ஒரு பண்பாட்டுப் பயிற்ச்சியும் இருப்பதில்லை.

நாம் மரபாகக் கொண்டிருந்த எல்லா பண்பாட்டுக்கூறுகளும் “வாழ்க்கை வளர்ச்சிக்கு” உதவாதவை எனத் தூக்கி வீசப்பட்டு விட்டன. யோசித்துப் பாருங்கள், நம்முடைய சராசரி இளைஞனுக்கு ஏதாவது ஒரு ஊடகத்திடமாவது தொடர்புள்ளதா என்று? அவனுக்கு இசை, ஓவியம் என்று எந்த ஒரு நுண் கலையிலும் அறிமுகமில்லை. அவனால் ஒரு நூலை வாசித்துப் புரி ந்துகொள்ள முடியாது.    அவனுக்குச் சின்ன வயது முதலே தெரிந்த ஒரே ஊடகம் தமிழ் சினிமாவும் அந்தச் சினிமாவிலேயே மொண்டு சமைத்த டி.வி.யும்…”

ஒரு பொது இடத்தல் நாலைந்து “யூத்து” வந்துவிட்டால் கிட்டத்தட்ட ஒரு குரங்குக் கூட்டம் வந்து விட்டது போலத்தான். இங்கே “யூத்து” என்றால் எதிலும் நிலையான ஆர்வமில்லாத, எந்த அடிப்படைப் பயிற்சியும் இல்லாத, மேலோட்டமான ஆசாமி என்று தான் அர்த்தம்.

என் தரிசனம் : பள்ளியோ கல்லூரியோ சென்று வந்த பிறகு என்ன செய்வதென்றே நம் இளைஞர்களுக்குப் புரிவதில்லை. கும்பலாகச் சேர்ந்து நக்கல் அடிப்பதும், சினிமாப் படங்களைப் பார்த்து அதன் வசனங்கள் பேசி மகிழ்வதுமே அவர்கள் பொழுதுபோக்கு. வீட்டிற்கு அருகில் நூலகங்கள் இருந்தால் அங்கே சென்று என்ன இருக்கிறதென்று பார்க்கவாவது பார்ப்பான். ஆனால் வீதிக்கொரு கள்ளுக் கடை இருந்தால்? அதையும் அரசே செய்தால்?

Facebook, Twitter முதலிய சில தளங்களில் தமிழ் மக்கள் உரையாடுவது அவர்களின் தரத்தை மேலும் பறைசாற்றுகிறது. எங்கும் ஒரு வரி விமரிசனங்கள். அதுவும் அரசியல் மற்றும் சினிமா பற்றி மட்டுமே. பல நேரங்களில் வசை மொழிகள். மிகப் பல நேரங்களில் சாதி சொல்லி வைவது. சாதியை ஒழித்துவிட்டதாக மார் தட்டிக்கொள்ளும் ஒரு சமூகத்தில் சாதியை இழுக்காமல் யாராலும் பேச முடியவில்லை. புத்தகங்களைப் பற்றி யாரும் பேசுவதில்லை. படித்தால்தானே பேசுவதற்கு?

சில மாதம் முன்பு பெரியார் தமிழ் பற்றியும், சிலப்பதிகாரம் பற்றியும் சொல்லிருந்ததைப்பற்றி  பற்றி எழுதி இருந்தேன். இணையத்தில் ஒரே வசை மொழி. வேறு ஒரு பதிவின் போது அவர்களுக்கு ஒரு பதில் அனுப்பினேன் – ” இவை என் கருத்துக்கள் அல்ல. அறிஞர் அண்ணா “சரிந்த சாம்ராஜ்யம்”, “மனதை வருத்திய சம்பவங்கள்” என்று இரண்டு நூல்களில் சொல்லியுள்ளவை”, என்று ஆதாரம் காண்பித்தேன். ஒரு பயலும் பேசவில்லை.

ஜெயமோகனின் வார்த்தைகள் நம் தமிழ் சமுதாயத்தின் மீது சொடுக்கப்பட்ட சாட்டை வீச்சுக்கள். இந்த வீச்சுக்களால் புண்பட்டு அதனால் நம் வாழ்வில் ஒரு மாற்றம் ஏற்படுமானால் நல்லது தான்.

ஆனால் இந்த சாட்டை வீச்சும் நம்மை ஒன்றும் செய்யாமல் நமது தோல் அவ்வளவு தடிமனானதாக இருந்தால் இந்த தமிழ்ச் சமுதாயம் போகும் பாதை அதல பாதாளம் என்பது புரிய பெரிய பகுத்தறிவெல்லாம் தேவையில்லை.

பி.கு: – ஒரு ஆறுதல்:  தமிழ் நாட்டிலிருந்து சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவில் குடியேறியுள்ள பல தமிழர்கள், தமிழ் நாட்டின் ஊடக ஆக்கிரமிப்பிலிருந்து மீண்டு தங்கள் பிள்ளைகளை நல்ல முறையில் வளர்க்கிறார்கள். சிங்கையில் தமிழ் நுண் கலைகள் அமைப்புகள் பல உள்ளன. தமிழ்க் குடும்பங்கள் தங்கள் பிள்ளைகளை அவ்விடங்களுக்கு அனுப்புகிறார்கள். இலங்கைத் தமிழர் கோவில்களிலும் செட்டியார் சமூகத்தவர் நடத்தும் கோவில்களிலும் தமிழ்த் திருமுறை வகுப்புகள்  நடத்தப் படுகின்றன. பிள்ளைகளுக்குத் திருமுறைகளில் போட்டிகள் வைத்துப் பரிசுகள் வழங்குகிறார்கள்.

 

Tags: , , , , ,

ஏமாந்த சோணகிரி

தலைப்பைப் பார்த்த உடனே உங்களுக்குப் புரிந்திருக்குமே, இந்த முறை தன்னைப்பற்றித்தான் பேசப்போகிறான் என்று. உங்கள் ஊகம் சரிதான். ஆனாலும் முடிவில் தெரியும் என்னையும் சேர்த்து யார் எல்லாம் ஏமாந்த சோணகிரி என்று.

இன்று எப்படி யாரை ஏமாற்றலாம் என்று ஒரு குழு அலைந்துகொண்டே இருக்கிறது என்று நமக்குத் தெரியும் . உதாரணாமாக  அரசியல் தலைவர்கள். எப்படி ஏமாற்றலாம் என்று ரூம் போட்டு யோசிப்பது என்பது இவர்களுக்குப் பொழுதுபோக்கு.

ஏமாற்றுபவர்கள் ஒரு புறம் இருக்கட்டும். ஏமாறுபவர்கள் பற்றி என்னசொல்வது?

காலை எழுந்ததில் இருந்து இன்று எப்படி ஏமாறுவது, யார் யாரிடம் எல்லாம் ஏமாறலாம் என்று ஒரு பட்டியல் போட்டுக்கொண்டு  தினமும் ஏமாறுவதையே ஒரு வேலையாகக் கொண்டுள்ளவர்கள் இவர்கள்.

இன்று எப்படியாவது யாரிடமாவது ஏமாநதே தீருவது என்பது ஒரு கொள்கையாகிப் போனவர்கள் எப்படியெல்லாம்  ஏமாறுகிறார்கள் ?

முதலில் காலை எழுந்தவுடன் டி.வி.யில் ஜோசியம்.  இந்த மாதம் உங்கள் நிலை போய், வாரம் போய் இப்போது இந்த நாள் உங்களுக்கு  எப்படி இருக்கும் என்று ஆரம்பிக்கும் பொய்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். இதை விரும்பிப் பார்த்து ஏமாந்து போகும் திறமை சாலிகள் முதல் தரம்.

கல்யாணம் செய்துகொண்டு வேண்டுமென்றே ஏமாறுபவர்கள் அனேகம்பேர் என்பதால் அவர்களைப் பற்றிப் பேச வேண்டாம் (வீட்டில் அடுத்தவேளை சோறு கிடைக்காது என்பதும் ஒரு காரணம். வெளியில் சொல்ல வேண்டாம்)

முதல் முறை ஏமாந்த பிறகு, அலுவலகத்தில் “திறனாய்வு” – அப்ரைசல் என்று ஏமாற்றுவார்கள். அப்ரைசல் என்றாலே கையில் கப்பரை என்று தெரிந்தும் ஏமாறுவது இது. ஏமாற்றுகிறோம் என்று அவர்களுக்கும் தெரியும். ஏமாறுகிறோம் என்று இவர்களுக்கும் தெரியும்.  இருவருக்குமே தெரியும் என்று மனித வளத்துறைக்குத் தெரியும். இருந்தாலும் இந்த சம்பிரதாய ஏமாறல்களும் ஏமாற்றுதல்களும் வருடாவருடம் நடக்கும் ஒன்று.

ஆடித் தள்ளுபடி மாதிரி அன்றாடத் தள்ளுபடி விற்பனை அமோகமாக இருக்கும் மால்களில் உள்ள படித்த முட்டாள்கள் மூன்றாவது. உடனடியாக ஒரு ஐ-பேட் வாங்கினால் ஒரு கைப்பை  இலவசம் என்றால் உடனே ஓடிச் சென்று வரிசையில் நிற்கும் கூட்டம் இது. சில நாட்களுக்கு முன்பு மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்தின் முன் விடியற்காலையில் ஒரே அடி தடி. போலீசெல்லாம் வந்தது. என்னவென்று பார்த்தால் முதல் இருபது பேருக்கு ஐந்து டாலர் சலுகை விலையில் ஒரு பூனை பொம்மை தருகிறார்களாம். கிட்டி என்று பெயர். பூனைக்கும் பர்கருக்கும் என்ன தொடர்பு என்று பகுத்தறிவெல்லாம் கேட்கக்கூடாது. மெக்டோனல்ட்ஸ் ஓர் அமெரிக்க சாப்பாட்டுக் கம்பெனி. அது செய்தால் சரியாகத்தான் இருக்கும். ஒரு வேளை ” இந்தப் பூனையும் பர்கர் சாப்பிடுமா?” என்று எண்ணியிருப்பார்கள் போலே. இந்த மக்களை என்னவென்று சொல்வது?

நாளிதழைப் புரட்டினால் பக்கம் பக்கமாக விளம்பரம். ஒரு வாளி வாங்கினால் ஒரு கிண்ணம் இலவசம் என்று. கடையின் முன் முண்டி அடித்துக் கூட்டம். வாளி நமக்குத் தேவையா அதனுடன் ஒரு கிண்ணம் எதற்கு என்ற யோசனை எதுவும் இல்லாமல் கூட்டம் அலைபாயும். இப்படி ஏமாந்தவர்களை என்ன வகையில் சேர்ப்பது ?

தேர்தலில் ஓட்டுப் போட்டு ஏமாந்து போவது காலம் காலமாக நடந்து வருகிறது. அதனை யாரும் ஏமாற்றம் என்று கருதுவதில்லை. அதனை இன்னொரு பெயர் சொல்லி அழைக்கிறார்கள். அது தான் ஜனநாயகம்.

அடுத்தபடியாகத் தங்கம் வாங்கியே ஏமாறுவது என்று ஒரு குழு அலைந்துகொண்டிருக்கிறது. செய் கூலி இல்லை, சேதாரம் இல்லை என்று விளம்பரம் பார்த்த உடனே படை எடுக்க வேண்டியது. தேவையோ தேவை இல்லையோ வாஙகிப் போட்டுக்கொண்டே இருப்பது. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த நகைகளைப் போட்டுக்கொண்டு தெருவில் நடமாட முடியாது. வாங்கி வந்து வங்கிப் பெட்டகத்தில் பாதுகாக்க வேண்டும். அதற்கு வருடா வருடம் கட்டணம் அழ வேண்டும். இப்படி ஏமாறுகிறோம் என்று தெரியாமலே ஏமாறுவது இது.

எல்லாவற்றையும் விட பெரிய ஏமாற்று வேலை – கை பேசிகள் (Cell Phone). பேசுவதைத் தவிர எல்லாம் செய்ய உதவும் ஒரு கருவி. விளம்பரங்களில் அதைத் தண்ணீர்த் தொட்டிக்குள் போடுகிறார்கள். விதம் விதமாகப் படம் எடுக்கிறார்கள். தொலைகாட்சி பார்க்கிறார்கள். ஆனால் பேசுவது மட்டும் இல்லை. இதற்கு வருடாவருடம் போய் இப்போதெல்லாம் மாதாமாதம் அடுத்தடுத்த மாடல்கள். இவற்றை விற்கும் தொலைத் தொடர்புக் கம்பெனிகள் அளிக்கும் அதிகப்படியான வசதிகள் என்ற பெயரில் ஏமாற்றும் வித்தை இருக்கிறதே – அப்பப்பா- ஆ.ராசாவிற்குக் கூட தெரியாது அவ்வளவு வித்தை. இவை எல்லாம் ஏமாற்று என்று தெரியாமலே நம்மவர் அதில் இரண்டு வருட ஒப்பந்தம் என்று மாட்டிக்கொள்வது தான் விதியின் விளையாட்டு என்பது.

நான்கு வருடம் முன்பு எங்கள் அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்ய ஒரு ஊழியர் ஊரிலிருந்து வந்திருந்தார். அவரது நிறுவனத்தில் நல்ல நிலையில் உள்ளவர். ஏனோ தெரியவில்லை அன்று ஊருக்குச் செல்லும் முன் முஸ்தபா சென்றுள்ளார். யார் பார்க்கப் போகிறார்கள் என்று ஒரு கை பேசியை சட்டைப் பையில் சொருகிக்கொண்டு வெளியேறப் பார்த்தார். பிடிபட்டார். இன்று சிறையில். பத்து  வருட கணினிப் பொறியாளர். வெறும் இரு நூறு வெள்ளி மதிப்புள்ள ஒரு கை பேசியைத் திருடினார். இதைப் போதாத காலம் என்பதா? அவர் அன்று காலை பார்த்த தொலைக்காட்சி ஜோசியத்தில் “அதிருஷ்டம் இன்று உங்கள் பக்கம்” என்று கூறியிருந்தார்கள் என்றார் அவரது இன்னொரு நண்பர். ஜோசியத்தை நம்பி ஏமாந்துபோன கதை இங்கே.

ஜாதகம் பார்த்தே ஜோலி முடிந்து போன மனிதர்கள் பலர். செவ்வாய் தோஷம் முதல் இன்சாட்- 1 A தோஷம், ஜலதோஷம் என்று இவர்கள் தோஷம் பார்த்துப் பார்த்துக் கல்யாணம் செய்யும் முன்னர் இவரது பெண்கள் நொந்து நூலாகி விடுவார்கள். “சோதிடம் தனை இகழ் “என்று பாரதி பாடினான். நம்மவர்கள் பாரதியார் பாடலையே இளையராஜா இசையில் வைரமுத்து எழுதியதாகவே கருதுபவர்கள். பாரதியாவது ஒன்றாவது ?

அது இருக்கட்டும். நான் ஏமாந்த கதை பல உண்டு. அதில் ஒன்று.

பொறியியல் படித்தபின் சென்னையில் வேலை தேடி வெயிலில் வெந்து அலைந்த 90களின் துவக்க காலத்தில் ஒரு மின்னியல் வடிவமைப்புக் கம்பெனியில் ( Electrical Design Company ), பல முறை நேர் காணலுக்கு அழைத்து  விதம் விதமாக Transformer களை வடிவமைத்து வரையச் சொன்னார்கள். நானும் ஒரு ஆர்வக் கோளாறில் பணம் ஊதியம் இல்லாமல் கணினியில் Auto Cad  என்னும் மென் பொருளில் வடிவமைபுப் படங்கள் போட்டுக் கொடுத்தேன். ஒரு இரண்டு வாரம் கைச் செலவு செய்து கொண்டு வேலை பார்ப்பது போல் அவர்களுக்குப் படம் போட்டுக் கொண்டிருந்தேன். எப்படியும் வேலை கிடைத்து விடம் என்பதால் ஒரு பட வரையாளர் ( Draughtsman ) செய்ய வேண்டிய வேலையை முழு மூச்சாகச் செய்துகொண்டிருந்தேன். அடுத்த வாரம் அந்த அலுவலகம் சென்றால் அந்தக் கணினியில் வேறொருவர் படம் வரைந்து கொண்டிருந்தார். அவர்தான் அந்தக் கம்பெனியின் பட வரையாளராம். இரண்டு வாரம் லீவில் சென்றிருந்தாரம்.அந்த வேலையை என்னிடம் வாங்கியிருந்தார்கள். சம்பளம் என்று ஒன்றும் தரவில்லை. பொறியாளர் வேலையிடம் காலியானவுடன் சொல்லி அனுப்புவதாகக் கூறிவிட்டார்கள். வெளியில் சொல்வது வெட்கக்கேடு என்பதால் ஏதோ காரணம் சொல்லி உறவினர்களிடம் சமாளித்தேன்.

ஆக எல்லாருமே ஏமாந்த சோணகிரி தான். என்ன, ஏமாறும் அளவு தான் வித்தியாசப்படும். மற்றபடி எல்லாரும் ஒரே தரம் தான்.

 
2 Comments

Posted by on August 22, 2013 in Writers

 

Tags: , ,

காதில் விழுந்தவை..

காதில் விழுந்தவை..

“பிரும்மச் சாரிகள் இந்தப் பக்கம ஒரு வரிசையா உக்காண்டுக்கோங்கோ “.

“தீர்த்தம், பஞ்ச பாத்தரம் எல்லாம் இருக்கா?”

“ஆசமனம் பண்ணியாச்சா?”

“Dude, where do I get some water from?”

“மாமா, தீர்த்தம் வேணுமா?”

“என்னடா, உத்திருணி இல்லையா? ஓ நீ ஐயங்காரா?”

“yes, am in NUS for my doctorate in Bio-Inforrmat

ics”

“ஓம் பூ ஹூ பண்ணுங்கோ ”

“யாருக்கெல்லாம் அய்யர் பூணல் வேணும்? ஒண்ணா ரெண்டா? ”

“மாமா இங்கே மூணு பூணல். ”

“அப்பா, why is his பூணல் so thick?”

“உஷ், he seems to be an ஐயங்கார். That’s why”.

“இன்னிக்கி Scott Bruce Lecture 9 மணிக்கு. அதுக்குள்ளே ஆயிடுமா?”

“முன்னை போகணும்னா First batch 5:30க் கே வந்திருக்கணும் மாம்ஸ்”.

“Ph.D Thesis Sumbit பண்ணின உடனே ஜகா வாங்கிடணும் டா. இல்லே P.R. குடுத்துடுவான்”.

“ஸ்ரீ பகவ தாஞியா .. பரமேசுவரப் ப்ரீர்த்தியர்த்தம்…”

“பாவமே, வாத்தியார் ஐயர் சாஸ்திரிகள். நாராய

ணப் பிரீர்த்தியர்த்தம்  சொல்லுங்கோ ..”

“மாத்வாளுக்கும் இந்த சங்கல்ப மந்த்ரம் உண்டா?”

“ஐங்கார் எல்லாம் ஸ்ரீமன் நாராயணப் ப்ரீர்த்தியர்த்தம் னு சொல்லுங்கோ”

“நாளைக்கி NTU லே Yale Ph.D. பத்தி Road Show இருக்கு, நீ வர்றியா டா?”

“Google Internship முடிஞ்சதும் VC யோட meeting இருக்கு”.

“V.C.- யாரு? Blackrock Capital தானே? அவன் ஒரு fraud டா. Ideas சுட்டுடுவான்”.

“மாமா, இங்கே அட்சதை குடுங்கோ”.

“தீர்த்தம் ஆயிடுத்து. கொஞ்சம் விடுங்கோ “.

“இப்போ காண்டரிஷி தர்ப்பணம். சொல்லுங்கோ – சாம வேதம் தர்ப்பயாமி..”

“U.C. Berkeley லே ஏண்டா Research Associate வேண்டான்னுட்டே. அப்பா ரொம்ப வருத்தப்பட்டார்”.

“இல்ல ராமு, NUS-லே Scholarshipலே Ph.D குடுக்கறான். U.C.ல Aid  கிடைக்கலே. இது betterனு தோணித்து”.

“யக்நோபவீத தாரணம் கரிஷ்யே ..எல்லாரும் ஆசமனம் பண்ணுங்கோ “.

“என்ன இருந்தாலும் Pilani Dual Degreeக்கு NUS M.S. better இல்லே?”

“நேத்திக்கி DC லே Conference. இன்னிக்கி ஆவணி அவிட்டத்துக்கு வருவேன்னே நினைக்கலே”.

“இப்போ வேத பாடம் ஆரம்பம். கை கூப்பிககோங்கோ . சொல்றபடியே திருப்பிச் சொல்லுங்கோ”

“மாமா காயத்ரி ஜெபம் எப்போ? நாளைக்கி தானே? நீங்க Los Angeles Presentationக்குப் போறேளோல்லியோ?”

“ஆமாம். நல்ல வேளை. பவித்ரம் வாங்கிக்கணும். நாளைக்கு SQ – Airbus A-380ல் காயத்ரி ஜெபம். ஆமாம், போன வாரம் Raghuram Rajan போன் பண்ணினாரா?”

“வேத பாடம் ஆயிடுத்து. வரிசைலே நின்னு நமஸ்காரம் பண்ணுங்கோ. எல்லாரும் தீர்காயுசா இருக்கணும் “.

“சார் நீங்க …. SMUல Design Professor தானே? நான் போன மாசம் உங்க TED Talk பார்த்தேன்”.

“ஓ அது நான் இல்லையாக்கும். என்னோட அண்ணா. நான் Barclays ல SVPயா இருக்கேன்”.

“ஒ ஐ ஸீ ”

avani sing

செட்டியார் கோவில் சிங்கப்பூர்

“Why so many Indian coming with white robe today to Tank Road Chettiyaar Temple lah?”

“Today Indian religious festival lah”.

“So what is the symbol on forehead lah ? sorry just to know”

“Ok. Let me begin. Once upon a time there lived a sage called Vyas”.

“Sorry ya, where you want to go already ?”

“Changi Biz Park”.

“Ok lah, another Little India aleady!”

” ”

“So all Indian come out of India. What happen to economy?”

“All Indian stay in India, so what happen to world economy?”

“You tell Indian story lah, that is better already “

 

Tags: , , , ,

ஆண்டவரே ஸ்தோத்ரம் ..

Image

தொடங்கி விட்டார்கள். விடாது கருப்பு போல்  விடாது சுவிசேஷம். சென்னையில் தான் சுவிசேஷம், நற்செய்திக் கூட்டம் என்று அலட்டல் தாங்க முடியவில்லை என்றால் இப்போது சிங்கையிலும் வந்து விட்டார்கள்.  இதில் தமிழ்க் கூட்டம் கொஞ்சம் அதிகப்படி. படத்தைப் பாருங்கள். ஒரு மருத்துவமனை முன்னர் வியாதிகளை சொஸ்தம் ஆக்குகிறார்கள். பேசாமல் மருத்துவமனயை மாற்றி மைதானமாக ஆக்கலாம். சுவிசேஷக் கூட்டங்களுக்கு இடமாவது கிடைக்கும். ( கே.கே. மருத்துவமனை – உஷார். உங்கள் பிழைப்பில் மண் தயார் ).

சில மாதங்களுக்கு முன்பு சில மத மாற்றுக்காரர்கள் வீடு தேடி வந்திருந்தார்கள். சீன ஆணும், பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண்ணும் வந்திருந்து கிறித்தவப் பெருமை பேசினார்கள். அந்த சந்திப்பைப் பற்றி இந்த இரண்டு  தளங்களில் அளித்திருந்தேன்.( முதல் சந்திப்பு, இரண்டாம் சந்திப்பு ).

அந்த சந்திப்புக்களில் பல நீண்ட வாக்குவாதங்கள் பிறகு அவர்கள் தங்களது தலைமைப் பாதிரியாரை அழைத்து வருவதாகக் கூறிச் சென்றார்கள். காத்திருப்பு தொடர்கிறது.

இன்று இந்த சுவிசேஷ அழைப்பைப் பார்த்தேன்.  சில எண்ணங்கள்.

திரை கடல் ஓடியும் திரவியம் தேடுதல் என்பது இது தான் போல். சொந்த ஊரில் ஆள் பிடித்தது போதாது என்று நாடு கடந்து வந்துள்ளார்கள். முன்பெல்லாம் வெள்ளைக்காரர்கள் செய்த செயலை நம்மவரே செய்வது நல்ல வேடிக்கை.

எனக்கு சின்ன வயதில் பேசும்போது கொஞ்சம் திக்கும். இப்போதும் அப்படித்தான். அதனை சரி செய்கிறேன் பேர்விழி என்று அப்பாவின் அலுவலக நண்பர் ஒருவர் என்னை ஒரு எட்டு வயதாக இருக்கும் போது இம்மாதிரி ஒரு கூட்டத்திற்கு அழைத்துச் சென்றார். கடைசி வரை என்ன பேசினார்கள் என்று புரியவே இல்லை. தேவன் இறங்குகிறார், பாருங்கள் என்று மேடையில் இருந்த அனைவரும் அழுதார்கள். நானும் பயத்தில் அழுதேன். பின்னர் மேடையில் சிலர் நடந்து வந்து தங்களுக்குக் குணமாகி விட்டது, பிறவி நொண்டிகள் கால் நடக்க வந்து விட்டது என்று சொன்னார்கள். பின்னர் எல்லாரும் ஒரே குரலில் “ஆண்டவரே ஸ்தோத்திரம் ” என்று பல முறை அழுதபடியே பாடினார்கள். ஒரு மண்ணும் புரியாமல் நான் பேந்தப் பேந்த முழித்துக்கொண்டிருந்தேன்.

சொந்தக் கதை இருக்கட்டும்.

ஆங்கிலம் பேசும் அந்நிய நாட்டவர் மத மாற்று வேலையில் ஈடுபட்டால் ஓரளவு வாதம் செய்ய முடிகிறது. ஆனால் நம்மவரோ வாதம் என்று தொடங்கினாலே நான் ஏதோ பாபம் செய்து நரகத்தில் சேரப்போவது பற்றியே பேசுகிறார்கள். பல நேரங்களில் பைபிளில் உள்ளதே தெரிவதில்லை. அவர்களின் பாதிரியார்கள் சொன்னதையே ஒப்பிக்கிறார்கள். வேதத்தில் உள்ளது என்று அரற்றுகிறார்கள். சிலே நிமிஷங்களுக்குப் பிறகு அவர்களைப் பார்த்தாலே பாவமாக இருக்கிறது. வெகு சில அடிப்படைக் கேள்விகளே அவர்களுக்குப் போதுமானது. நம்மவரிடம் ஒரே ஒற்றுமை என்னவென்றால் அவர் சமீபத்தில் மாறியிருப்பார்.

ஒருமுறை ஒரு மத மாற்றுக்காரர் ஒரு கேள்விக்குமே பதில் சொல்ல வில்லை. கடைசியில்,” நீங்க பிராமின்ஸ் எப்படியும் மாற மாட்டீங்க. ஆனா கேள்வி மட்டும் கேட்டுக்கிட்டே இருப்பீங்க”, என்று கூறினார். அது சரியும் கூட. ஏனென்றால் இந்து உபநிஷதம் வெறும் கேள்வி பதில் தானே? நாத்திகனும் இந்துவாக இருக்க முடியுமே ! இந்துவாக இருக்க ஒரு கடவுளையும் நம்ப வேண்டாமே என்றால் அவர் புரிந்து கொள்ள வில்லை.

இதில் அந்தணர்கள் மட்டுமே கேள்வி கேட்கிறார்கள் என்று இல்லை. சில சைவ இந்துக்கள் மிகத் தீவிரமானவர்கள். இவர்களிடமும் இந்த மத மாற்றுக்காரர்கள் செல்வதில்லை. இவர்கள் நோக்கம் தலித் மக்கள். நல்ல அறுவடை அங்கு நடக்கும் என்று நம்புகிறார்கள்.

ஒரே இடத்தில் இருந்து தோன்றினாலும் இஸ்லாம் இம்மாதிரி மத மாற்றம் செய்வதில்லை. முகலாய காலங்களில் இருந்திருக்கலாம். ஆனால் இப்போது இந்த அளவு அவர்கள் கீழிறங்கி கடவுளை விற்பனை செய்வதில்லை.

திரு சுவிசேஷக்காரரே, உங்களுக்கு சில கேள்விகள் …

 1. இறைவனால் ( உங்களைப் பொறுத்தவரை ஏசுவின் தந்தையால் ) படைக்கப்பட்ட எல்லா உயரினங்களும் ஒன்று தானே? அதில் சாத்தானும் அடக்கம் தானே? சாத்தானைப் படைத்ததும் ஏசுவின் தந்தை தானே? ஆக கடவுளே தன்னை எதிர்க்க சாத்தானைப் படைத்தாரா? சாத்தான் ஒரு வீழ்ந்த தேவதை என்று கூறும் நீங்கள் சாத்தானுக்கு ஏன் அஞ்ச வேண்டும் ?
 2. தனது பக்தர்களை, தானே படைத்த சாத்தான் கவர்ந்து செல்வதைக் கடவுளால் ஏன் தடுக்க முடியாது? ஆக கடவுளை விட சாத்தான் உயர்ந்தவனா?
 3. சாத்தான் உட்பட எல்லாரும் கடவுளால் படைக்கப்பட்டால், அனைவருமே நல்லவராக இருக்க வேண்டுமே? அது இல்லையே ஏன் ?
 4. இறைவனே சாத்தானையும் படைத்ததால் சாத்தானும் நல்லவனாகவே இருந்திருக்க வேண்டியவன் தானே? அவன் கடவுளை வீழத்த வேண்டும் என்று ஆசைப்பட வேண்டிய காரணம் என்ன? அப்படித் தூண்டுவது வேறு ஒரு கடவுளா ?
 5. இறைவன் படைத்த ஆப்பிளை ஆதாம் உண்டது என்ன தவறு? அப்பிள் இறைவனின் பிரசாதம் தானே? இறைவனே ஆப்பிளையும் படைத்து அதை உண்ணக்கூடாது என்று ஆதாமிடம் சொல்வது பகுத்தறிவா?
 6. கத்தோலிக்க இயேசுவின் தந்தையும், ப்ரோடேஸ்தாண்ட் இயேசுவின் தந்தையும் ஒருவரா?  ஜெஹோவாவின் சாட்சிகள் வழிபடும் இயேசுவின் தந்தை வேறா? ஒருவர் என்றால் வேறுபாடு ஏன் ?
 7. பாவத்தின் சம்பளம் மரணம் என்றால் போப் ஆண்டவர் முதலியவர்கள் இறப்பது என்ன பாவத்தால்? அவர்கள் பாவம் செய்தார்கள் என்றால் அவர்களை ஏன் நாம் பின் பற்ற வேண்டும்?
 8. தமிழ் நாட்டில் மதம் மாறிய கிறித்தவர்கள் புனித மேரிக்குத் தேர்த் திருவிழாவெல்லாம் செய்கிறார்கள். தேர்த் திருவிழா பற்றி உங்கள் நூலில் எந்த இடத்தில் வருகிறது. அலசிப் பார்த்து விட்டேன். கிடைக்கவில்லை. எனவே, நூலில் உள்ளபடியாவது இருங்களேன். ஏன் மற்ற மதங்களைப் பார்த்து “காப்பி” அடிக்கிறீர்கள்?
 9. நீதி நாள் என்று நீங்கள் கூறும் நாள் பல முறை வந்து சென்று விட்டதே..
 10. உங்களால் மதம் மாற்றப்படும் தலித் கிறித்துவர்கள் ஏன் சென்னை முதலிய நகரங்களின் பேராயர்களாக ஆவதில்லை ?
 11. “அவனருளாலே அவன் தாள் வணங்கி” என்று இறைவனைத் தொழுவதற்கே அவன் அருள் வேண்டும் என்று நம்பும் தமிழர்கள் மத்தியில் கூவி அழைத்துக் கடவுள் வியாபாரம் செய்வதும் மலிவு விலையில் பண்டங்கள் விற்கும் ஒரு வியாபாரி கூவி அழைப்பதும்  என்ன விதத்தில் வேறு? விற்கும் பண்டங்கள் தான் மாறுபடுகிறதே ஒழிய விஷயம் ஒன்று தானே?
 12.  நான் மதம் மாற வேண்டுமென்றால் அதனை நீங்கள் ஏன் என்னிடம் வந்து வலியுறுத்த வேண்டும்? கடவுளே என் மனதில் தோன்றச் செய்திருக்கலாமே ! கடவுளுக்கு என் மனதை மாற்ற ஒரு தூதுவன் தேவையா?
 13. என்னை மதம் மாற்றினால் தான் கடவுள் அருள் கிடைக்கும் என்றால், உங்கள கடவுள் கருணை இல்லாதவரா?
 14. மதம் மாறினால் இந்த சலுகை தருகிறோம் என்று சொல்லி வியாபாரம் செய்யும் நீங்கள் உங்கள் கடவுளைக் சிறுமைப்படுத்துகிறோம் என்று உணரவில்லையா?
 15. “தென்னாடுடைய  சிவனே போற்றி, எநநாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்பது தமிழ் மறை. தமிழர்கள் எல்லாத் தெய்வங்களையும் ஒப்புக்கொள்கின்றனர். ஆனால் அவை எல்லாவற்றுக்கும்மேல் சிவ பெருமானை எல்லா நாட்டவர்க்கும் தலைவனே என்று வைத்துப் போற்றுகின்றனர். இந்த உலகளாவிய ஒருங்கிணைக்கும் பார்வை உங்களுக்கு  இல்லையே ஏன்? நூலின் பிழையா அல்லது மார்கத்தின் புரிதலின்மையா?
 16. “சாணிலும் உளன் ஓர் தன்மைஅணுவினைச்
  சத கூறு இட்டகோணினும் உளன்
  மாமேருக் குன்றினும் உளன் இந் நின்ற
  தூணினும் உளன் நீ சொன்ன சொல்லினும் உளன்”   என்பார் கம்பர். அணுவைப் பிளப்பது பற்றியும், அதன் நூற்றில் ஒரு பங்கான ஒரு பகுதியை “கோண்” என்றும் கூறுகிறார். அதனிலும் உளன் அரி. மேலும் நீ சொன்ன சொல்லிலும் உளன் இறைவன் என்று கம்பர் கூறுகிறார். இறைவனை சொல் வடிவமாகவும் காணும் பழக்கம் தமிழர் மதமான வைணவம். இந்த நிலையில் உள்ளவர்களிடம் நீங்கள் ஒரு பொட்டுக்கடலை வியாபாரம் செய்வது போல் கடவுளை விற்கிறீர்களே .. கொஞ்சம் சிந்திக்க வேண்டாமா? தமிழ் இந்துக்கள் என்ன மாங்காய் மடையர்களா ?
 17. கம்பர் போகட்டும். இன்னொரு ஆழ்வார் கூறுகிறார்:” உளன் எனில் உளன் அவன் உருவம் இவ் வுருவுகள்உளன் அலன் எனில் அவன் அருவம் இவ் வருவுகள் ” – கடவுள் உண்டு என்றால் அவனது உருவமே இவ்வுலகமும் அதன் ஜீவ ராசிகளும். கடவுள் இல்லை என்றாலும் கூட இறைவனது உருவமின்மையே இவ்வுருவங்கள். ஆக கடவுள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ( நம்ப வேண்டும் என்ற அவசியம் இல்லை ), அனைத்துமே அவனது வடிவங்களே என்று கூறுகிறார். இவ்வளவு பொதுவான தன்மையும் சகிப்புத்த் தன்மையும் கொண்ட தமிழ் இந்துக்களை மதம் மாற்றும் வேலை செய்யும் நீங்கள் அவர்களது அறிவுப் பசிக்கு என்ன தரப் போகிறீர்கள்? கேள்விகள் கேட்பது இந்து மதக் கோட்பாடு. சைவமும் வைணவமும் கேள்விகளால் நிரம்பியவை.
 18.  “வசுதைவ குடும்பகம்” – உலகம் வாசுதேவனின் ஒரே குடும்பம் என்று கருதுவது எங்கள் வழி. இதில் இந்தக் கடவுளை கும்பிடாவிட்டால் உனக்கு நரகம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இப்படிப்பட்ட மக்களிடம் நீங்கள் எப்படி சமாளிக்கப் போகிறீர்கள்?
 19. புருஷ சூக்தம் என்று வேதத்தின் ஒரு பகுதி வருகிறது.” மனித சமூகத்திற்கு நன்மை பயக்கட்டும்; செடி கொடிகள் மேலோங்கி வளரட்டும்; இரு கால் பிராணிகளிடம் மங்களம் உண்டாகட்டும்; நான்கு கால் பிராணிகளிடம் மங்களம் உண்டாகட்டும்” என்று வேண்டிக் கொள்கிறோம் நாங்கள். எனக்கு வேண்டும் என்று வேண்டுவதில்லை.

நிஜமாகவே உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், நீங்கள் மத மாற்றம் செய்ய வேண்டியது அந்தணர்களை, சைவ மடங்களில் ஊற்றம் கொண்ட பண்டிதர்களை, உங்களிடம் வாதம் புரிய ஆயுதங்கள் மற்றும் ஆற்றல் கொண்ட படித்தவர்களை.

இவர்களை விடுத்து நீங்கள் தலித் மக்களையும், மீனவ உழைப்பாளர்களையும், கல்வி கற்க வழியில்லாத பாமரர்களையும் இன்னமும் பின் தொடர்ந்தால், உங்கள் மார்க்கத்தின் பலத்தில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று நான் நம்ப வேண்டியதுதான்.

ஆண்டவரே ஸ்தோத்ரம்.

பி.கு: இப்பதிவின் நோக்கம் ஒரு மார்க்கத்தை இழிவு படுத்துவது அல்ல. உங்களின் இந்த மத மாற்றுச் செயல்களால் சமூக நல் இணக்கம் கெடுகிறது. பல இடங்களில் தேவை இல்லாத சச்சரவுகள் தோன்றுகின்றன. பொருளாதார சீரழிவு, இயற்கை சீற்றம் முதலிய தொல்லைகலால் துன்பப்படும் சாதாரண மக்கள் சமூக சீர் கேடும் ஏற்பட்டால் இன்னமும் பாதிக்கப் படுவர். அரசாங்கங்களும் அதிக நேரத்தை இவற்றில் செலவழிக்க வேண்டி இருக்கும். இவற்றைத் தவிர்க்கலாம்.

 
Leave a comment

Posted by on August 18, 2013 in Writers

 

Tags: , , ,

குழந்தையும் தென்னை மரமும்

நண்பரின் ஏழு வயதுப் பெண் குழந்தை அழுதுகொண்டே வந்தது. “மிஸ் தப்பு போட்டுட்டாங்க “, என்று கேவிக் கேவி அழுதபடி தன் விடைத்தாளைக் காட்டியது. “தென்னை மரத்தின் பாகங்களின் பயன் என்ன?” என்பது கேள்வி. அதற்குக் குழந்தை எழுதிய பதில் தவறு என்று ஆசிரியர் போட்டிருந்தார்.

சரி குழந்தை என்ன எழுதி இருக்கிறாள் என்று பார்த்தேன். நான் எதிர் பார்த்தது – தென்னை ஈர்க்குச்சி துடைப்பம் செய்யவும், ஓலை கூரை வேயவும், தேங்காய் உணவுக்கும், தேங்காய் எண்ணை எடுக்கவும் பயன் படும் என்று எதிர்பார்த்திருந்தேன்.

குழந்தை அதை எழுதவில்லை. அவள் எழுதிய விடை இதுதான்:

“தென்னை மரத்தில் இனிப்பான இளநீர் இருக்கும். அது கெடாமல் இருக்க அதைச் சுற்றி ஓடு இருக்கும். அதன் பேர் கொட்டாங்குச்சி தேங்காய். தேங்காய் எல்லாம் கனமாக இருக்கும். அதை பிடித்துக்கொள்ள மட்டைகளும் ஓலைகளும் இருக்கும். இது எல்லாம் ரொம்ப கனமாக இருப்பதால் அதைத்தாங்க ஒரு பெரிய மரம் இருக்கும். அந்த மரம் விழாமல் இருக்க தடிமனான் வேர்கள் இருக்கும். மட்டைகளுக்கு  மேல் குருவி கூடு கட்டுவதால் நிழல் அளிக்க ஓலைகள் இருக்கும். இதுதான் தென்னை மரத்தின் பாகங்களின் பயன்கள்”.

அரண்டு போனேன் நான். இயற்கையை இயற்கையாகவே பார்க்க என்ன ஒரு கள்ளம் கபடம் இல்லாத உள்ளம் வேண்டும் ! வயதான பின் மனிதன் இயற்கை தந்துள்ள எல்லாம் அவனுக்காகவே படைக்கப்பட்டுள்ளது என்று எண்ணுகிறான். ஆனால் குழந்தை அதனை இயற்கையாகவே பார்க்கிறது. எதையும் தனக்கானதாக நினைக்க மறுக்கிறது.

குழந்தை எழுதியது அதனது பார்வையில் சரிதானே ! இதை ஆசிரியர் எப்படி உணர்ந்துகொள்வாரோ?

வாழ்க்கை அனுபவமே வாழ்க்கையின் லட்சியம் என்று அறியானால் ஏதோ ஒன்றின் பின்னே ஓடும் மனிதன் தான் வாழ்வை வாழ்வதில்லை. இலக்கை அடையும் போது “அடச்சீ இவ்வளவு தானா இது? இதற்காகவா இத்தனை அவதிப்பட்டேன்?” என்று எண்ணுகிறான்.

இப்படியெல்லாம் நினைக்காமல் ஒரு குழந்தை ஒவ்வொரு நொடியும் வாழ்கிறது. ஒவ்வொரு கணமும் அதற்கு ஒரு புதிய அனுபவம் ஏற்படுகிறது. அதை அனுபவிக்கிறது. அதனாலேயே குழந்தை எதையும் அனுபவித்துச் செய்கிறது போலே.

இன்னொரு அனுபவம் ஏற்பட்டது வேறொரு குழந்தையுடன். மகனின் பள்ளிக்குச் சென்றிருந்தேன். ஆசிரியரின் சின்ன மகளும் அவருடன் வந்திருந்தது. ஒரு ஐந்து வயது இருக்கும். சில காகித படங்களை வைத்து விளையாடிக்கொண்டிருந்தது. என்னைப் பாரத்து சிரித்தது. பின் அருகில் வந்து,” Do you want this?”, என்று மலையாள வாசனையுடன் கேட்டது. அதன் கையில் பல சின்னச் சின்ன பூக்களின் படங்கள். நான்,”நீயே வைத்துக்கொள், விளையாடு”, என்றேன். அதற்கு அவள்,“Don’t worry. I have so many stickers like this. You take one. What will I do with many stickers ? I will not cry if you take one“, என்று அதே மழலையுடன் கூறி என் கையில் ஒரு படத்தைத் திணித்தது. இன்றுமட்டும் அதைக் கைப்பேசியின் உள் அட்டையில் ஒட்டி வைத்துள்ளேன். ஒவ்வொருமுறை அந்தப்படத்தைப் பார்க்கும்போதும் அந்தக்குழந்தையின் மன ஏற்றமும் நமது தாழ்வும் உணர்வேன்.

வாயடைத்து நின்றேன் நான். எல்லாமே நமக்கே வேண்டும் என்று என்னும் பெரியவர்கள் உலகத்தில், என்னிடம் நிறைய உள்ளது, இவ்வளவும் வைத்துக்கொண்டு நான் என்ன செய்வேன்? நீ ஒன்று வைத்துக்கொள், நான் அழமாட்டேன் என்று சொல்ல என்ன ஒரு பெருந்தன்மை வேண்டும் ?

குழந்தையாகவே இருந்திருக்கலாம் போல் இருந்தது.

( முதல் நிகழ்வு நண்பர் ஒருவரின் முகநூல் செய்தியைக் கருவாகக் கொண்டு எழுதப்பட்டது)

 
Leave a comment

Posted by on August 12, 2013 in Writers

 

Tags: , ,

அர்த்தமுள்ள மெளனம்

/ *கனமான விஷயங்களை எளிய சொற்களில் பரவலாகப் புரியும் வண்ணம் எழுத முடியாது என்றும் அப்படி எழுதினால் அது இலக்கியமல்ல என்றும் அபத்தமான இலக்கியக் கோட்பாடு வைத்திருப்பவர்களுக்கு ஓட்டலில் தோசை ஆர்டர் சொல்வதைத்தவிர வேறு எதையும் புரிகிற மாதிரி எங்கேயும் பேச வராது. சினிமாகாரர்களிடம் குழையப் பெரிய பேச்சாற்றல் தேவை இல்லை போலும் ! பாடி லேங்வேஜே போதுமானதாயிருக்கலாம் ! */

https://www.facebook.com/gnani.sankaran?hc_location=timeline

மேலே சொன்னது எழுத்தாளர் ஞாநி தனது முக நூலில் கூறியுள்ளது. இவர் எழுத்தாளர் ஜெயமொஹனைப் பற்றிக் கூறுகிறார் என்று அறிந்துகொள்ள பெரிய பகுத்தறிவெல்லாம் தேவையில்லை. ஜெயமோகன் தனது தளத்தில் இப்படிக் கூறியிருந்தார்.

/* என் இதுவரையிலான அனுபவத்தில் நான் பேசிய ஏழெட்டு தேசத்து அரங்குகளில் மிகமிகக் உதாசீனமான அரங்கு ஈரோட்டில் சந்தித்ததுதான். அவர்களை குஷிப்படுத்த என்னால் முடியவில்லை. அவர்கள் தங்களைக் குஷிப்படுத்தாத எதையும் கேட்கத் தயாராகவும் இல்லை. உண்மையில் ஈரோட்டில் நான் அவமதிக்கப்பட்டேன். எனக்கு அத்தகைய அவமதிப்பு அதுவே முதல்முறை. */

http://www.jeyamohan.in/?p=38510

தமிழ் எழுத்தாளர்கள் அடித்துக்கொள்வது அவர்கள் ரத்தத்தில் உள்ளது.

இதில் வேடிக்கை என்னவென்றால் தற்போது ஞாநி ஐரோப்பாவில் இருக்கிறார். சென்ற வாரம் சென்னையில் இஸ்லாமிய அமெரிக்கப் பெண்ணியலாளர் பேசுவதற்கு சென்னைப் பல்கலையில் அனுமதி மறுக்கப்பட்டதைப் பற்றி எந்த ஞாநவான்களும் பேசவில்லை.

ஜெயமோகன் இலக்கியவாதி. அவர் இதுபற்றிப்  பேசாதது ஆச்சரியம் இல்லை. ஆனால் எழுத்துப்போராளி ஞாநி, சாதிய மறுப்பாளர், இந்துத்துவாவிடமிருந்து தமிழகத்தைக் காக்க எழுதித் தள்ளுபவர், இளவரசன் கொலை வழக்கில் வெகுண்டெழுந்து முதல்வருக்குக் கடிதமெல்லாம் எழுதியவர், கூடங்குளப் போராளி — இப்படிப் பல போராட்டங்களுக்கு அடையாளம் அளித்தவர் சென்னைப் பல்கலை பற்றிப் பேசாதது வருத்தம் தான்.

இஸ்லாமியரைப் பகைத்துக்கொள்வது வேண்டாம் என்று கலைஞர் மௌனியாக இருப்பது ஊர் அறிந்ததே. அது தான் பகுத்தறிவு. ஆனால் முற்போக்குச் சிந்தனையாளர் பலர் மத்தியில் கள் எதிர்ப்பு முதலிய நல்ல விஷயங்களுக்குக் குரல் கொடுக்கும் ஞாநி பேசாதது எனக்கு வருத்தமே.

 
Leave a comment

Posted by on August 11, 2013 in Writers

 

Tags: ,

T.N = தாலிபான் நாடு ?

அமீனா வதூத்- இந்த அம்மையார் ஒரு ஹிந்திப்பட நாயகி அல்ல. அதனால் நமக்குத் தெரிந்திருக்க நியாயம் இல்லை. அது நேற்றைய கதை.

இவர் ஒரு அமெரிக்கர்.இஸ்லாமிய பெண்ணியல் அமைப்பாளர். பேராசிரியர். சென்னைப் பல்கலைக்கழகம் அவரை அழைத்திருந்தது.’இஸ்லாமில் பெண்களின் நிலை’என்பது போன்ற ஒரு தலைப்பு. இது கடைசி நிமிடத்தில் போலீசாரால் நடக்க அனுமதி மறுக்கப்பட்டது.

ஒரு பல்கலைக்கழக நிகழ்ச்சிக்கு போலீசார் தடை விதிப்பது நம்ப முடியவில்லையா? இது தமிழ் நாடு. எதுவும் நடக்கும்.

சில வருடம் முன்பு ஔரங்கசீப் அழித்த கலைப் பொக்கிஷங்கள் என்ற தலைப்பில் தில்லியில் ஒரு கண்காட்சி நடத்தப் பட்டது. ஆவணங்கள் அரசு அருங்காட்சியகத்திலிருந்து பெறப்பட்டன. பல மாநிலங்களில் நடந்தது. ஆனால் சென்னையில் நடந்தபோது ஆற்காட்டு இளவரசர் எதிர்ப்பு தெரிவித்ததால் அனுமதி மறுக்கப்பட்டது. அத்துடன் சில வன்முறையாளர்களும் வந்திருந்து விழாவைச் சிறப்பித்தனர். கண்காட்சி கைவிடப்பட்டது. அல்லது போலீசாரால் அனுமதி மறுக்கப்பட்டது.

ஆனால் திராவிடர் கழகம் மற்றும் சில “பகுத்தறிவு” இயக்கங்கள் இந்து மத எதிர்ப்பு என்ற பெயரில் பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கு போலீஸ் அனுமதி உண்டு. இலங்கை விஷயத்தில் போராட்டம் என்ற பெயரில் இந்திய எதிர்ப்புக் கூட்டங்களுக்கு அனுமதி கிடைக்கிறது.

அமீனா வதூத் விஷயத்திற்கு வருவோம். அனுமதி மறுக்கப்பட்டதா ? அது பற்றி ஒரு “முற்போக்கு” எழுத்தாளரும் எழுதவில்லை. எதிர்ப்பு தெரிவிக்க வில்லை. சில மாதங்கள் முன்பு “மீண்டெழும் பாண்டியர் வரலாறு” என்ற நூல் தடை என்றவுடம் கொதித்தெழுந்த இந்த பண்டிதர்கள், தற்போது மௌனிகளாக இருப்பதன் ரகசியம் ஊர் அறிந்தது.

இத்தனைக்கும் இந்த அம்மையார் ஒரு பேராசிரியர். அதுவும் இஸ்லாமியர். அவர் தனது மதத்தில் உள்ள பெண்கள் நிலை பற்றி ஒரு பல்கலையில் பேச ஜனநாயகம் பற்றியும், பெண் உரிமை பற்றியும் வாய் கிழியும் ஒரு நாட்டில் ஒரு உரிமையாளரும் வாய் திறக்கவில்லை. இந்த நேரத்தில் வாய் திறக்காதே என்பது ஈரோட்டுப் பல்கலையில் பயின்ற அறிவாளிகள் நிலையோ என்னவோ ! பகுத்தறிவின் வீச்சை யாரே அறிவார் !

பகுத்தறிவு போகட்டும். இடது சாரியாளர் மெளனம் காத்தனர். ஏன் ? அமெரிக்க எதிர்ப்பா? அல்லது கார்ல் மார்க்ஸ் ஜன்மதின மௌன விரதமா? அருந்ததி ராய் பேச அனுமதி மறுக்கப்பட்டால் கொதித்தெழும் இடது நிலையாளர் இப்போது மெளனம் காப்பது “லெனின் அஷ்டமி” அன்று மெளன விரதம் காப்பது சாலச் சிறந்தது என்று “ஸ்டாலின் பஞ்சாங்கம்” கூறுகிறதோ என்னவோ !

அது போகட்டும். இதை எதிர்த்துக் குரல் கொடுத்த ஒரே பத்திரிகை ஹிந்து நாளிதழ் என்று நினைக்கிறேன். துக்ளக் இந்த வாரத்தில் எழுதுவார்கள் என்று  நம்பலாம்.

ஆனால் ஒன்று. “அம்மாவின் அட்டவணை” வெகு அருமை. விஸ்வரூபம் விஷயத்தில் “சாதுர்ய”த்துடன் காய் நகர்த்தி இஸ்லாமிய ஓட்டுகள் தான் பக்கம் நிறுத்தினார். இப்போது அதை மேலும் உறுதிப் படுத்திக்கொண்டுள்ளார்.

ஆனால் இப்படி அடிப்படைவாதத்திற்கு அடி பணிவது நாட்டிற்கு நல்லதல்ல.

இந்நேரத்தில் சிங்கப்பூரின் தந்தை திரு.லீ குவான் யூ அவர்களின் சுய சரிதை நினைவிற்கு வருகிறது. நாடு விடுதலை  அடைந்த உடன் சீன மொழியே தேசிய மொழியாக வேண்டும் என்று பெரும்பான்மை பலம் கொண்ட சீன அமைப்பினர் திரு. லீயிடம்  கேட்டுள்ளனர். சீனரான அவர் மொழி அடிப்படைவாதத்திற்கு அடிபணியாமல் ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் – இவை  நான்கும் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள். ஆங்கிலம் அரசாங்க மொழி. இதில் மாற்றம் ஏதும் இல்லை என்று தெளிவுபடக் கூறினார். அதனால் இன ஒற்றுமை காக்கப்பட்டது.

எதற்குச் சொல்கிறேன் என்றால் ஒரு தலைவர் நாட்டு ஒருமைப்பாட்டை, அனைத்து இன, மொழியினரும் சமம் என்ற உணர்வு ஏற்படும் வகையில் செயல் பட வேண்டும். அதைச் செய்யத்தவறினால் நாடு கெடும்.

தமிழ் நாடு தாலிபான் நாடாவது வெகு தூரத்தில் இல்லை.

 
Leave a comment

Posted by on August 3, 2013 in Writers

 

Tags: , , ,

 
%d bloggers like this: