வாசகர் கடிதம் – ஒரு விளக்கம்

பொதுவாக வாசகர் கடிதங்களை நான் வெளியிடுவது இல்லை. ஆனால் இம்முறை கிருஷ்ணகுமார் என்ற கற்றறிந்த ஒரு வாசகரின் கடிதம் அந்த விலக்கு பெறுகிறது. “குரங்குகள் சண்டையிடுவதில்லை” என்னும் எனது முந்தைய ( தென்கலை வடகலை பற்றிய) பதிவைப்பற்றியது. அக்கடிதமும் அதற்கு என் பதிலும் :

திரு.கிருஷ்ணகுமாரின் கடிதம்:

அன்பார்ந்த ஸ்ரீமான். உ.வே……அவர்களுக்கு.

நான் சிறு வயதில் முதலில் கேட்ட காலக்ஷேபம் உ.வே.ஸ்ரீ.முக்கூர் லக்ஷ்மி ந்ருஸ்ம்ஹாசார்ய ஸ்வாமி அவர்களுடையது. நான் ஸ்ரீ வைஷ்ணவன் அல்லன். ஆனால் ஸ்ரீ வைஷ்ணவத்திலும் ஸ்ரீவைஷ்ணவர்கள் பாலும் மிகவும் மதிப்புடையவன்.

வைஷ்ணவம் என்றாலே என் நினைவுக்கு வரும் விஷயம்.

கொக்கைப் போல் இருப்பான் கோழியைப் போல் இருப்பான் உப்பைப் போல் இருப்பான் உம்மைப் போல் இருப்பான் என்று முக்கூர் ஸ்வாமி சொல்லியது. வ்ருத்தாந்தம் நினைவில் உள்ளது. ஆனால் யாரைப் பற்றி என்று நினைவில் இல்லை.

வடகலை தென் கலையார் தங்கள் தங்கள் சித்தாந்த வித்யாசங்களைப் பேணுவதில் ஹாஸ்யமான விஷயம் ஏதுமில்லை என்பது சிறியேனின் அபிப்ராயம். சித்தாந்த வித்யாசங்கள் இருக்கின்றன தானே.

ஆம். நீங்கள் சொல்லும் விஷயங்களை வாசிக்கையில்…. யானைக்கு எந்த நாமம் போடுவது…..ப்ரபந்தங்களை அடுத்தவர் காதில் தெளிவாக விழாத படிக்கு ஒருவரை ஒருவர் முந்தி உரக்கச் சொல்ல முயற்சித்தல்…..இத்யாதிகள் நான் வைஷ்ணவம் என்று மிக உயர்வாக மதிக்கும் விஷயத்திலிருந்து வித்யாசமாகவே தெரிகிறது. பின்னும் ஹரிபக்தர்கள் பால் தோஷாரோபணம் செய்ய மனம் மறுக்கிறது.

ஒருக்கால் எங்கள் வள்ளல் அருணகிரிப் பெருமானின் திருப்புகழில் (ஓதுவித்தவர் கூலிகொடாதவர்)

ஈசர் விஷ்ணுவை சேவைசெய்வோர் தமை இகழ்வோர்கள்

நரகுழல்வாரே

என்று இடித்துறைத்தமை ஹேதுவாக இருக்கலாம்.

தோஷங்கள் மட்டிலும் தென்பட்டால் குணங்கள் தென்படாதே.

குணங்களைப் போஷித்து தோஷங்களைச் சான்றோர்கள் வெளிப்படையாக உணர்த்தாது குறிப்பாலுணர்த்திப் பாமரர்களை உத்தாரணம் செய்வர் என்று கேட்டிருக்கிறேன். தேவரீர் வடகலை தென் கலையார் தோஷங்களைப் பெரிசாகச் சொல்லி குணங்களை சொல்லாது விட்டீர்கள் என்று சிறியேனுக்குத் தோன்றுகிறது.

இருவரிடமும் உள்ள போற்றத் தகுந்த குணங்களைத் தேவரீர் தனியொரு வ்யாசமாக சமர்ப்பித்தால் வைஷ்ணவத்தின் மீது மதிப்புடைய சிறியேன் போன்றோர் உகப்புடன் வாசித்து எங்கள் வைஷ்ணவ அபிமானத்தை அபிவ்ருத்தி செய்து கொள்ளலாமே.

ஆழ்வார் திருவடிகளே சரணம். அடியேன் சரணம்.

————————————————-

திரு.கிருஷ்ணகுமார், உங்கள் கடிதத்திற்கு நன்றி.

தென்கலை வடகலை சம்பிரதாய வித்யாசங்கள் பற்றி ஒரு அறிமுகமாக அடியேன் இன்னொரு பதிவு செய்திருந்தேன். அதையும் பார்க்கவும். “வடகலைக் குரங்கும் தென்கலைப் பூனையும்” என்பது தலைப்பு.

http://ammanji.wordpress.com/2013/06/15/catandmonkey/

மிக உயர்ந்த வேதாந்த விசாரங்களில் தேர்ந்தவர்களான வைணவப் பெரியவர்கள் தங்கள் நிலை தாழ்ந்து வெறும் புறவயமான வேறுபாடுகளை மேலோங்கச்செய்வதிலும் அது தொடர்பான வீண் வாதங்களிலும் ஈடுபடுவதை நேரில் பல முறை கண்டு மனம் நொந்து, அப்படி என்னதான் இருக்கிறது இந்த வித்தியாசங்களில் என்று ஆராயத் தொடங்கினேன். காலஞ்சென்ற முனைவர்.ராமபத்ராச்சாரியார் அவர்களின் உபன்யாசங்களில் இவை பற்றி அவர் பல முறை குறிப்பிட்டுள்ளார். வேறுபாடுகள் இல்லை. உயர்வு தாழ்வு இல்லை. Philosophical Differences – சம்பிரதாய வேற்றுமைகள் அந்தந்த ஆச்சாரியார்களின் விசிட்டாத்வைத அணுகுமுறைகளில் இருந்தது. ஆனால் அடிப்படை ஒன்றே. பரத்துவம் ஒன்றே. சேஷன் ஒருவனேசேஷிகள் அனேகம்பேர் இருந்தாலும் உள்ளே உள்ள ஆத்மாவில் வேறுபாடு இல்லை. எனவே இந்த சம்பிரதாய அலங்கார வேற்றுமைகளினால் ஒரு பயனும் இல்லை. ஆண்டாள்  “கூடி இருந்துக் குளிர்ந்து” என்று கூறுவதுபோல் ஒன்றாக ஆத்ம விசாரம் செய்வோம் என்ற நோக்கில் அவரது உபன்யாசங்கள் இருந்தன. அவை என்னை ஆற்றுப்படுத்தின.

இன்னும் பிற பெரியவர்களின் நூல்களில் சில காலம் நுழைந்ததன் விளைவாக, “அடடா, நாம் எவ்வளவு ஒரு மகோன்னதமான சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்கள் ?” என்ற வியப்பு ஏற்பட்டது.

ஐரோப்பிய நாடுகள் நாகரீகம் இன்றி ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டிருந்த எட்டு, ஒன்பதாம் நூற்றாண்டுகளில் நமது முன்னோர் ஆத்மாவின் ஒருமைப்பாடு பற்றியும், அன்னமய கோசம், பிராணமாயகோசம் என்று அறிவுரீதியான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருந்தனர். வேதம் சொல்வதைப் போலே,

“ஜன்மனா ஜாயதே சூத்திர: சம்ச்காரேர் த்விஜ உச்சதே”

( பிறப்பால் அனைவரும் சூத்திரர்களே. சம்ஸ்காரங்களைச் செய்வதினால் அவன் பிராம்மண நிலை அடைகிறான்) போன்ற உயர்ந்த அறிவு நிலையில் இருந்துகொண்டு, அது தொடர்பான விசாரணையில் ஆழ்ந்து உலகம் உய்ய வேண்டிப் பல நல்ல செயல்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஒரு சமூகம்,

“நாலு கால் பிராணிகள் நலமாக இருக்கட்டும்; இரண்டு கால் பிராணிகள் நன்றாக இருக்கட்டும்; செடி கொடிகள் நன்றாக வளரட்டும்..” என்கிற ரீதியில் தன் மந்திரங்களினால் தினமும் வேண்டிக்கொள்ளும் ஒரு சமூகம்,

இராமானுசர் என்ற ஒரு சமய / சமூகப் புரட்சியாளர் வழி நடப்பதாகக் கூறிக்கொள்ளும் ஒரு சமூகம்,

அவரது வழியையே இரு பிரிவாகப் பிரித்து, அதை மேலும் பல உட்பிரிவுகளாக ஆக்கி, மேலும் மேலும் தங்கள் பார்வையைச் சுருக்கிக் கொண்டு கடைசியில் இரு பிரிவினருக்குமுள்ள வித்தியாசங்களைத் தீர்க்க 1795ல், இந்த மாதிரியான ஆத்தும விசாரங்களில் கொஞ்சம் கூட ஊற்றம் இல்லாத வெள்ளைக்கார அரசாங்கத்திடம் முறையிட்டு நின்ற நிலை என்னை மிகவும் பாதித்தது.  அன்றிலிருந்து அடிப்படையில் ஒன்றேயான ஒரு சிந்தனையும் முற்போக்கான கருத்துக்களை உள்ளடக்கிய ஒரு சமூகம், கடந்த மூன்று நூற்றாண்டுகளுக்கு மேல் தாங்களே உருவாக்கிக்கொண்ட வேறுபாடுகளை மேலும் விஸ்தரித்து அது விஷயமாக வழக்கு மன்றங்களில் நேரத்தைச் செலவழிப்பதைப் பார்க்கும்போது என் மனம் கூசியது.

அனைவரும் சமம், எல்லாரும் ஒன்றாக நாராயணன்பால் பக்தி செய்வோம் என்று திருக்கோஷ்டியூரில் சமூக, பக்திப் புரட்சி செய்து, நமது கலாச்சாரத்தைக் காத்த மகானின் வழி நடப்பதாகக் கூறிக்கொள்பவர்கள் தங்களுக்குள்ளேயே வேற்றுமை பாராட்டிப் பொன்னான நேரத்தையும், மனித வளத்தையும் வீணடித்ததைக் கண்டு பேசாமல் இருக்க முடியவில்லை.

முந்நூறு ஆண்டுகள் ! இத்தனை ஆண்டுகள் சம்பிரதாய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தால் இன்னொரு இராமானுசரோ, வேதாந்த தேசிகரோ, மணவாள மாமுநிகளோ கூட வெளிப்பட்டிருப்பார்கள்.

நினைவில் கொள்ள வேண்டும்: கடந்த முந்நூறு ஆண்டுகளில்  உலகையே மாற்றிப்போட்ட நிகழ்வுகள் பல நடந்துவிட்டன. சமூகப் பொருளாதார மாற்றங்கள் நினைக்கவேமுடியாதபடி நடந்துவிட்டன.

ஆனால் வைணவ அன்பர்கள் செய்தது என்ன?  வீண் சண்டைகள், வெற்று அலங்காரங்கள், அர்த்தமில்லாத கோஷங்கள், பல நேரங்களில் கை கலப்புக்கள் கூட.  மனதளவில் முன்னேறிய ஒரு சமூகம் செய்யும் செயலா இவை ?

தேசிகனும், மாமுனியும் என்ன கூறினார்கள்  என்பது முக்கியமாகப்படவில்லை. அவர்களது நெற்றியே முக்கியமாகப்பட்டது. “பாதுகா சஹாஸ்ரம்” விடுத்து அதை எழுதிய தேசிகனுக்கு அவரது பிறந்த நாளில் திருவரங்கத்தில் மரியாதை கூடாது என்றோம். எனெனில் திருவரங்கம் தென்கலையார் கோவில்.

திருவஹீந்திரபுரத்தில் மாமுனிகளின் சந்நிதிக்குமுன் திரை போட்டபடி சென்றோம். காரணம் திருவஹீந்திரபுரம் தேவநாதப் பெருமாள் வடகலையாம்.

காஞ்சிபுரத்தில் தென்கலை சம்பிரதாயம் ஆடும் ஆட்டம் ஊர் அறிந்தது.

இதில் எங்காவது பக்தி உள்ளதா? அல்லது இப்படிச்செய்யும் அன்பர்கள் தேசிகனும் மாமுனியும் இறைவனை அடையும் வழியில் எந்த வழியில் வேறுபடுகிறார்கள் என்று அறிந்துள்ளார்களா? அதைப்பற்றிய எந்த ஒரு சிந்தனையாவது உள்ளதா? படிப்பு உள்ளதா ?

ஆழ்வார்களில் யார் எந்தக் கலை என்று யாருக்காவது தெரியுமா? அவர்கள் காலத்தில் இந்த வேறுபாடே இல்லை. ஏன், ஆழ்வார்கள் காலத்தில் இராமானுசரே இல்லை. ஆக, இராமானுசருக்குப் பல நூற்றாடுகள் கழித்துத்தோன்றிய இந்த வித்யாசங்களினால் என்ன பயன்? வழிபடும் முறை வேறா என்றால் அதுவும் இல்லை. பாடும் பாசுரங்களில் வேறுபாடு இல்லை. ஆனால் ராகத்தில் வேறுபாடு.

நாராயணன் ஒருவனே பரதெய்வம் என்பதில் ஒருமைப்பாடு. ஆனால் அவனைத் துதிப்பதில் வேறுபாடு. அதில் என்ன துவேஷம்? ( “நாராயணனே நமக்கே பறை தருவான் ” என்று ஆண்டாள் கூறியுள்ளது நோக்கத்தகாது  ).

மகாலக்ஷ்மியை வடகலையார் ஒரு ஆச்சாரியனாகக் கருதுகிறார்கள்.  “இன்னமுதத் திருமகள் என்றிவரை முன்னிட்டு எம்பெருமான் திருவடிகள் அடைகின்றேனே..” என்பது பாடல். தென்கலையார் திருமகளை ஆச்சாரியனாக ஒப்புக்கொள்வதில்லை. எழுந்தருளியிருந்த பல ஆச்சாரியார்களில் திருமகள் ஒருவர் என்று கொள்வது என்ன அவ்வளவு பெரிய தவறா? அத்துடன்,  சண்டையிடும் அளவுக்கு இந்த விஷயம் ஒரு பொருட்டா?

இது எந்த அளவுக்குச் சென்றுள்ளது என்றால், கோவில்களில் வடகலை திருமண் இருந்தால் அதனைச் சிதைத்துத் தென்கலைத் திருமண் ஆக்குவது என்னும் அளவிற்கு உள்ளது. வடகலை ஆச்சாரியார்கள் ஒரு தென்கலையார் கோவிலுக்கு மங்களாசாசனம் செய்யச் சென்றால் அவமரியாதைக்கு ஆளாகும்படி நேரிடுகிறது.

இப்படி ஒன்றுமில்லாத ஒரு வேறுபாட்டை இவ்வளவு தூரம் எடுத்துச் சென்று மேலும் மேலும் துவேஷம் வளர்ப்பது, முந்நூறு ஆண்டுகளாகத் தொடர்ந்து இந்த நூற்றாண்டிலும் நடப்பது  வேதனையானது. இவற்றைக் களைய வைணவப் பெரியோர்கள் முன்வரவேண்டும் என்ற ஆதங்கமே மேலோங்கியுள்ளது அடியேனுக்கு.

ஒரு சிறிய செப்புக்காசு அளவு கூட மதிப்பில்லாத இந்த வித்தியாசங்களைப் பெரிதுபடுத்துவது, மிருகங்கள் மீது திருமண் வேறுபாடுகளைத் திணிப்பது, முன்னோடிகளான ஆச்சாரியார்களைப் பழிக்கும் அளவுக்குச் செல்வதையும் பொறுக்க முடியாததே என்னை இவற்றை சற்றே நையாண்டி செய்யச் செய்தது.

தற்போது கம்பன் பற்றிய தொடர் எழுதிக்கொண்டிருப்பதால் சம்பிரதாயம் பற்றி இன்னும் விரிவாக சிறிது காலம் கழித்து எழுதுகிறேன்.

தொடர்ந்து படித்து ஆற்றுப்படுத்துங்கள்.

Author: Amaruvi's Aphorisms

Banker by day, blogger by night and a reader throughout.

3 thoughts on “வாசகர் கடிதம் – ஒரு விளக்கம்”

  1. Dear Ravi, I hv read yr  views on thengalai vadagalai lissue. It is fine. A.Devanathan

    ________________________________

    Like

  2. உங்களுடைய வ்யாசங்கள் முழுதும் வாசிக்கக் காத்திருக்கிறேன். கம்யூனிஸம் சம்பந்தமான விஷயம் என் வரையில் முக்யத்துவம் இல்லாதது. ஆனால் தாங்கள் பல கோணத்திலிருந்து எழுதுவதால் அதுவும் அவசியமாக இருக்கலாம். ஸ்ரீ வைஷ்ணவர்களில் சண்டை போடுபவர்கள் இருக்கலாம். அதையெல்லாம் மீறி தொண்டாற்றிய பெரியோர் பெருமைகளையும் சேர்த்து எழுத முயற்சிக்கவும்.

    எனக்கு ஸ்ரீ வைஷ்ணவம் பற்றி முதலில் அறிமுகமளித்த திருநாடேகிய பூஜ்ய உ.வே.முக்கூர் லக்ஷ்மி ந்ருஸிம்ஹாசார்ய ஸ்வாமி

    கோவிலொழுகு சமைத்த ஸ்ரீ க்ருஷ்ணமாசார்ய ஸ்வாமி—

    ஒரு நாள் இரு நாள் என்றிறாது கிட்டத்தட்ட இரு தசாப்தங்கள் தனது மாணவனான ஜோஸஃப் அவர்களுக்கு ஸ்ரீ வைஷ்ணவம் போதித்து — ஸ்ரீ வைஷ்ணவர்களே அந்த மாணாக்கனை பின்னாட்களில் வைணவச்சுடராழி மற்றும் ஜோஸஃப் ஐயங்கார் ஸ்வாமி என்று அழைக்கும் வண்ணம் உழைத்த பெருந்தகை – ஸ்ரீமான் வீரராகவ ஐயங்கார் ஸ்வாமி

    ஸ்வயம் வைணவச் சுடராழி அவர்கள் ஸ்ரீ வைஷ்ணவத்துக்கும் ஹிந்து தர்மத்துக்கும் ஆற்றி வரும் தொண்டையும் மிக உகப்புடன் நினைவு கூர்கிறேன்.

    இவர்கள் போன்றோர் என் நினைவில் வருகின்றனர். இன்னும் சான்றோர்கள் பலரையும் தாங்கள் நினைவு கூற வேண்டும் என விக்ஞாபித்துக்கொள்கிறேன்.

    தங்கள் நற்பணி தொடர கண்ணனெம்பெருமான் அருள் கூடுவதாக.

    ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் அடியேன் சரணம்.

    Like

Leave a Reply to Amaruvi devanathan Cancel reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: