பழைய கணக்கு

இன்னிக்கி சாப்பாடு இல்லே, நீ வேற ஆத்துக்குப் போன்னு வக்கீலாத்துலே சொல்லிட்டா.

இன்னிக்கும் சாதம் இல்லை.  வேற யார் ஆத்துக்கும் போக முடியாது. சாயங்காலம் 9  மணிக்கு மேலத் தெருவாத்துலேயும் கதவு சாத்திடுவா. அம்மவாசையும் அதுவுமா இன்னிக்கிப் பூரா பட்னிதான். கார்த்தாலேர்ந்து ஒண்ணும் சாப்பிடலே. இப்பிடியே எவ்வளவு நாள் போகப்போறதோ.

வேற ரெண்டு அகம் இருக்கு. சந்நிதித் தெரு சாமிங்கார் இருக்கார். ஆனா அவருக்கே அவ்வாத்துலே சாப்பாடு இல்லே. எதோ திங்கள் கிழமை மட்டுமே என்னை வரச் சொல்லி இருக்கா.  பட்டவர்த்தி சர்மாவாத்துலே புதன் கிழமை, வடக்குத் தெரு நாராயண சாஸ்திரியாத்துலே வியாழன், ஹெட் மாஸ்டர் சேஷகிரி சார் ஆத்துலே வெள்ளின்னு இப்பிடி வாரம் ஓடிடும். சனி , ஞாயிறு ஊருக்கு நடந்தே போய்டுவேன். ஆனா இன்னிக்கி செவ்வாய். வக்கீலாத்துலதான் சாதம்.  ஆனா அவாளும் இல்லேன்னுட்டா.

சாப்பிடலேன்னாலும் பரவாயில்லை. ஆனா தேசிகர் கோவில்லே ராத்திரி படுத்துக்கறது தான் பயமா இருக்கு. வௌவால் வேற ராத்திரி பறந்து பறந்து பயம் காட்றது. ராத்திரி தான் வௌவால் வரணும்னு ஏன் பெருமாள் வெச்சிருக்காறோ ?  இந்த ஊர்லே ராத்திரி தங்கறதுக்கு வேற ஒரு இடம் கூட இல்லை. வேற எங்கே போனாலும் காசு கேக்கறா.  தேசிகர் கோவிலுக்கு காவல் மாதிரியும் ஆச்சு, எனக்கு தங்கறதுக்கு எடம் மாதிரியும் ஆச்சுன்னு அப்பா சொன்னார். ஒரு நாள் என்னோட தங்கிட்டு வேத பாராயணத்துக்கு வேதாரண்யம் போனார். போனவர் வரவே இல்லே. போய்ட்டார்னு ஒரு தந்தி மட்டும் வந்துது.

இன்னிக்கி பூராவுமே எனக்கு சரியாவே இல்லை. தமிழ் ஆசிரியர் தியாகராசன் ஐயா பல தடவை புஸ்தகம் கொண்டுவான்னு சொல்லிட்டார். இருந்தாத்தானே கொண்டு போறதுக்கு ? நான் தினமும் ஹெட் மாஸ்டர் சேஷகிரி சாரோட பொண்ணு பிரேமாவோட புஸ்தகத்தை தான் ராத்திரிக்கி மட்டும் இரவல் வாங்கிண்டு போய் படிப்பேன். இது தெரியாம இன்னிக்கி தமிழ் ஆசிரியர் நான் ஏதோ வேணும்னே புஸ்தகம் கொண்டு போகாத மாதிரி நெனைச்சுண்டு கன்னத்துலே ஓங்கி அறைஞ்சுட்டார். நான் கீழே விழுந்துட்டேன். அப்பறம் உடன் படிக்கற ஞானசுந்தரம் சொல்லித்தான் அவருக்கு எனக்கு அப்பா இல்லாததால புஸ்தகம் வாங்க முடியலேன்னு தெரிஞ்சுது. அப்புறம் அவரோட புஸ்தகத்தையே எனக்குக் கொடுத்துட்டார்.

அது போகட்டும். இப்போ தேசிகர் கோவிலுக்கு உள்ளே போகணுமே.

எழுநூறு வருஷத்துக்கு முன்னே தேசிகரே இந்தக் கோவிலைக் கட்டினார்னு அப்பா சொன்னார். அதுக்கப்பறம் யாருமே இதப் பெருக்கக்கூட இல்லே போலே. ஒரே வௌவால் புழுக்கை. ராத்திரி சிம்னி வெளிச்சத்துலே அண்ணாந்து பாரத்தா எதோ உருவம் எல்லாம் போற மாதிரி இருக்கும். கண்ணையே தெறக்க மாட்டேன். இறுக்க மூடிண்டுடுவேன்.

கோவில் இருக்கட்டும். இப்போ ராத்திரி சாப்பாட்டுக்கு என்ன பண்றது ? காளியாகுடி ஹோட்டல் அம்பி மாமா ஆத்துக்குப் போகலாம். ஆனா இன்னிக்கி அமாவாசை. அவாத்துலேயும் ராத்திரி பலகாரமெல்லாம் ஆகி இருக்கும். இன்னிக்கி  ராத்திரி வயத்துக்கு குளத்து தீர்த்தம் தான்.

வக்கீல் ஆத்துலே சாதம் இல்லைன்னு சொன்னாக் கூடப் பரவாயில்லை. ஆனா அவாத்து சமையல் மாமி சொன்னதுதான் ரொம்ப வலிச்சுது. “கண்ட நேரத்துலே வந்து நிக்க வேண்டியது, பத்துப்பாத்திரம் எல்லாம் தேச்சாச்சு. அவசியம் சாதம் வேணும்னா கோவில்லே போய் மடப்பள்ளிலே கேட்டுப்பாரு”, அப்பிடின்னு சொன்னா.

“என்ன மாமி, இப்பிடி சொல்றேளே, இன்னிக்கி இந்தாத்துலேதானே எனக்கு சாப்பாடு?” அப்பிடின்னு கேட்டு வெச்சேன்.

அப்போ வக்கீலாத்து மாமி வந்தா.  அவாகிட்டே கேக்கலாம்னு கேட்டேன். மாமியாலே ஒண்ணும் சொல்ல முடியலே. மென்னு முழுங்கினா. எனக்கோ மயக்கம் வர மாதிரி இருந்தது. கார்தாலேர்ந்து ஒண்ணும் சாப்பிடலே.

அப்போ வக்கீல் மாமா வந்தார். நிலைமையைப் புரிஞ்சுண்டா மாதிரி தெரிஞ்சுது. சரி நமக்கு சாப்பாடு கிடைக்கும்னு நெனைச்சேன்.

“மாமா, அம்மாவாசை தர்ப்பணம் பண்ணிட்டு இப்போ வரைக்கும் ஒண்ணும் சாப்பிடலே. இன்னிக்கி உங்காத்துலேதான் சாப்பாடு. சமையல் மாமி இல்லேங்கறா. நான் சீக்கரம் சாப்டுட்டு தேசிகர் கோவில் போகணும். ராத்திரி கொஞ்சம் படிச்சுட்டு நாளைக்கிக் கார்த்தாலே ஆறாவது பார்ம் பரீட்சை எழுதணும் ..” அப்பிடின்னு மென்னு முழுங்கி சொன்னேன்.

யாரோ பெரிய உலக்கையாலே தலைலே அடிச்ச மாதிரி இருந்துது. மாமா தான் பேசினார் : ” வாரா வாரம் உன் எழவு பெரும் எழவாப் போச்சு. கொட்டிக்கறதுன்னா கொஞ்சம் சீக்கரமே வந்திருக்க வேண்டியது தானே. எட்டு மணிக்கு வந்தா ஒண்ணும் இல்லையோ என்னவோ”.

நான் ரொம்ப பயந்து போயிட்டேன். அவர் அதுக்கு அப்பறம் சொன்னது தான் ரொம்ப கஷ்டமாயிடுத்து. அழ ஆரம்பிச்சுட்டேன்.

“மடிசிஞ்சி பிராம்மணன் உன் அப்பன் உன்னை விட்டுட்டுப் போயே போய்ட்டான். ஏதோ பண்ணிவைக்கற வாத்தியாரா லட்சணமா இருந்து உனக்கும் உபாத்யாயம் சொல்லி வெச்சிருக்கலாம். இங்கிலீஷ் படிப்பு ஒரு கேடா?  வேத பாராயணம் பண்ண வேதாரண்யம் போவானேன்; அப்பிடியே போயச்சேருவானேன் ? இப்போ உனக்கு தினம் ஒரு ஆத்துலே சாதம். ஒண்ணு பண்ணு. இன்னிக்கி எங்காத்துலே சாதம் இல்லே. கோவில் வாசல்லே உக்காந்துண்டு சஹஸ்ரநாமம் சொல்லு. போறவா வரவா யாராவது நாலு காசு கொடுப்பா.அத வெச்சுண்டு ஏதாவது ஹோட்டல்ல போய் கொட்டிக்கோ”, அப்பிடின்னு சொல்லிட்டு கதவை அறைஞ்சு சாத்திட்டா.

திடீரென்று “சார், Are you okay ?“, என்ற குரல் கேட்டு சுய நினைவுக்கு வந்தேன். நேர் காணலுக்கு வந்திருந்த பையன் என்னையே பார்த்துகொண்டிருந்தான்.

“உன் தாத்தா தான் வக்கீல் கிருஷ்ணசாமி ஐயங்காரா? அப்போ உன் அப்பா ரகுநந்தன் எப்படி இருக்கார் ?” என்றேன் சுய நினைவு திரும்பியவனாய்.

“இல்லே சார். அவர் ஒரு கார் விபத்துலே போய்ட்டார். குடும்பம் ரொம்ப கஷ்டப்படறது. அதான் உங்க கம்பெனிலே ஒரு ப்ரோக்ராமர் வேலைக்கான தேவை தெரிஞ்சுது”.

“இப்போ எங்கே தங்கி இருக்கே? ஹோட்டல் ஏதாவது..?”

“இல்லே சார், அந்த அளவுக்கெல்லாம் வசதி இல்லே. அதுனாலே எம்.ஜி.ரோடு பின்னாடி இருக்கற தேசிகர் மடத்துலே ராத்திரி படுத்துக்கறேன். இப்போ ஒரு சரியான வேலை கிடைக்கணும். அப்பறம் வேற இடம் பார்க்கணும்”.

“சாப்பாடு எல்லாம் எங்கே”.

“கார்த்தாலே ஒரு வேளை மடத்துலே. சஹஸ்ரநாம பாராயணம் பண்ணின உடனே பொங்கல் குடுப்பா. இன்னொரு வேளை ரெண்டு வாழைப்பழம். அவ்ளோதான்”.

“ஒண்ணு பண்ணு. வாரா வாரம் செவ்வாக்கிழமை இந்த கப்பன் பார்க் அட்ரெஸ்ல உனக்கு சாப்பாடு”.

“ரொம்ப தேங்க்ஸ் சார். என்ன காரணம் சார்?”

“அது அம்பது வருஷம் பழைய கணக்கு” என்று கூறி அவனை அனுப்பி வைத்தேன்.

4 thoughts on “பழைய கணக்கு

Leave a comment