RSS

தூங்காத கண்கள்

03 Mar

Imageஅமெரிக்காவின் ‘பேங்க் ஆஃப் அமெரிக்கா’ வங்கியில் ஒரு பணியாளர் 72 மணி நேரம் உறங்காமல் வேலை செய்ததால் மரணம் அடைந்துள்ளார். அதை அடுத்து வேலை நேரத்தைக் கண்காணிக்க அந்த வங்கி துவங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து ஜெ.பி.மார்கன் சேஸ் என்ற வங்கியும் வேலை நேரத்தை சீரமைக்கவிருப்பதாக அறிவித்துள்ளது.

அதாவது இப்படி ஊழியர்கள் தூங்காமல் வேலை செய்வது அந்த நிறுவனங்களுக்குத் தெரியாது. அதை நீங்கள் நம்ப வேண்டும்.

‘எங்கள் நிறுவனம் தூங்குவதில்லை’ என்று மார் தட்டிக்கொள்ளும் ஒரு நிறுவனமும் நடவடிக்கை எடுப்பதாக அறிவித்துள்ளது. இதையும் நீங்கள் நம்ப வேண்டும். அது உங்கள் தலை எழுத்து.

இதில் விசேஷம் என்னவென்றால் தூங்காமல் இறந்த அந்த ஊழியர் ஆரம்ப நிலைப் பணியாளர் ( Intern) என்று அழைக்கப்படுபவர்.

ஒரு வாரம் 40 மணி நேரமே வேலை செய்ய வேண்டும் என்று ஒரு விதிமுறை உள்ளது. இந்த அப்பாவி 72 மணி நேரம் வேலை செய்து பிராணவியூகம் செய்துள்ளார். அந்த வங்கி இவருக்கு சிலை வைக்கலாம்.

இந்தப் பைத்தியக்காரத் தனங்களின் பின்னணி என்ன ? ஏன் தூங்காமல் வேலை செய்கிறார்கள் ? நிறுவனங்கள் அப்படி வேலை செய்ய வேண்டும் என்று வெளிப்படையாக சொல்வதில்லை. ஆனால் ஒரு நாளில் 48 மணி நேரம் வேலை செய்தாலும் அடைய முடியாத இலக்கை நிர்ணயிக்கின்றன. இதில் பெருமையும் கொள்கின்றன. இதற்கு ‘Aggressive’ என்று பெயர் வேறு சூட்டுவார்கள்.
இதில் மாட்டிக்கொள்ளும் நுழைவு நிலைப் பணியாளர்கள் பலியாகிறார்கள் என்பதே நிதர்ஸனம்.

இத்தனை வேகம் தேவையா ? 72 மணி நேரம் ஒரு நுழைவுப் பணியாளர் உழைத்தால் தான் ஒரு இலக்கை அடைய முடியும் என்றால் அந்த இலக்கு மனிதப் பண்புகளுக்கு எதிரானது என்பது கூடவா தெரியாமல் M.B.A. படித்த மேதாவிகள் இருக்கிறார்கள் ? இந்த விலை கொடுத்துத் தான் இந்த நிறுவனங்கள் பெரும் பொருள் ஈட்ட வேண்டும் என்றால் முன்னாள் சோவியத் யூனியனின் ‘அடிமைப் பண்ணை’களுக்கும் இவற்றுக்கும் வேறுபாடு என்ன ? அடிமைப்பண்ணை நடத்த பல்கலைக்கழகப் படிப்பு எதற்கு ?

இப்படி பன்னாட்டு வங்கிகளிலும் மென்பொருள் நிறுவனங்களிலும் தூங்காமல் வேலை செய்யும் நிலை ஏன் ஏற்பட்டது ?

இதைத் துவங்கி வைத்தவர் பில் கேட்ஸ் என்று அறிகிறேன். அவர் தொழில் துவங்கியவுடன் அவரது ‘மைரோஸாஃப்ட் நிறுவனத்தில் அவரது கார் மட்டும் அலுவலகத்தில் நிற்குமாம். மற்றவர்கள் எல்லாரும் தங்கள் கார்களில் தினமும் வந்து வந்து செல்வார்களாம். கேட்ஸின் கார் மட்டும் அதே இடத்தில் இருந்ததால் அந்த இடம் மட்டும் சுத்தம் செய்யப்படாமல் இருக்குமாம். மற்ற இடங்கள் எல்லாம்
சுத்தமாக இருக்கும் என்று படித்திருக்கிறேன். அவர் எப்போது வருகிறார் எப்போது போகிறார் என்று தெரியாமல் பல நாட்கள் அலுவலகத்திலேயே இருப்பார். அதன் மூலம் அவர் அடைந்த வெற்றி மற்ற அனைவருக்கும் ஒரு முன் மாதிரியாக இருந்துவிட்டது. அவர் அடைந்த பெரும் பணமும் புகழும் ஒரு இலக்காக இருந்து அவரைத் தொடர்ந்து அனைவரும் அப்படியே வேலை செய்யத் துவங்கிவிட்டனர். இப்போது அதுவே ஒரு வியாதியாகி விட்டது.

என் பணிக்காலத்தின் துவக்கமும் இப்படியே அமைந்தது. இரவு, பகல் என்று எப்போதும் வேலை. இந்தியாவில் மென்பொருள் துறையின் ஆரம்பகாலத்தில் இது ஒரு பெரும் சுமை. ஆனால் கிடைத்த வேலையை விட முடியாது; கீழ் மத்தியதரக் குடும்பத்திலிருந்து சற்று உயர இதை விட்டால் வேறு வழி கிடையாது என்பதால் பல நாட்கள் வீடு திரும்பாமல் வேலை செய்துள்ளேன். ஆனால் விரைவில் உடல் நலன் குன்றி என்னை அறியாமலே இரத்த அழுத்தம் வந்தது.

இளம் வயதில் பல நோய்கள் வர இந்த மென்பொருள் துற
காரணமானது உண்மை. உடன் பணி புரிந்தவர்கள் பலருக்கும் குறைந்தது நீரழிவு நோயாவது இருக்கும். இருவர் அகால மரணம் அடைந்தனர். இவை என் கண்ணைத் திறந்தன. பிறகு இந்தியாவில் இருந்துகொண்டு மேலை நாடுகளுக்கும் கீழை நாடுகளுக்கும் மென்பொருள் எழுதினால் விரைவில் சமாதி தான் என்ற உணர்வு மேலோங்க வெளியறிவிட்டேன்.

ஊழியர்கள் இடைவிடாது வேலை செய்கிறார்கள் என்பதை உணர்ந்த ஜெர்மனி ஒரு சட்டம் கொண்டுவந்துள்ளது. மாலை 7 மணிக்கு மேல் ஊழியர்களுக்கு வரும் மின்-அஞ்சல்கள் அவர்களுக்கு அனுப்பபடாமல் ‘சர்வர்’ என்னும் பெரிய கணிணியிலேயே தங்கிவிடும். மறு நாள் காலை 8 மணி அளவிலேயே அவர்களைச் சென்றடைய வேண்டும் என்று வழிமுறைகள் கொண்டுவந்துள்ளது. விடுமுறை நாட்களில் ஊழியர்களை அவசரம் என்றால் ஒழிய அழைக்கக் கூடாது என்பதும் ஒரு உப-விதி.

சிங்கப்பூரில் அரசு வங்கிகளான டி.பி.எஸ். வங்கி, ஒ.ஸி.பி.ஸி. வங்கி முதலியன சில புதிய முறைகளைக் கொண்டுவந்துள்ளன. டி.பி.எஸ்.ல் மாலை 7 மணிக்கு விளக்குகள் தானாகவே அணைந்துவிடும். ஓ.ஸி.பி.ஸி.ல் வெள்ளீக்கிழமை ஒரு மணி நேரம் முன்னரே வீடு செல்லலாம்.

எது எப்படியோ. ஆனால் சிங்கப்பூரில் தான் வங்கித் தொழிலாளர்கள் விடுமுறை நாட்களிலும் வேலை செய்வது அதிகம் என்று ஒரு சமீபத்திய கருத்துக்கணிப்பு கூறுகிறது. அப்புறம் கல்யாணம் ஏது ? பிள்ளைகள் ஏது ? இது நல்லதுக்கில்லை என்பது என் எண்ணம்.

அது சரி. நேரமாகிவிட்டது. தூக்கம் வருகிறது. மீண்டும் சந்திப்போம்.

 
Leave a comment

Posted by on March 3, 2014 in Writers

 

Tags: , , , , , , ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

 
%d bloggers like this: