
பல முறை யோசித்தது உண்டு. தெங்கலை, வடகலையார் இப்படி அடித்துக்கொள்கிறார்கள். அது ஏன் ? வைஷ்ணவம் என்பது வெறும் திருமண் வேறுபாடு மட்டுமா ? இல்லை அதற்கு மேலும் வேறுபாடுகள் உள்ளனவா ? வேறுபாடுகளின் தாத்பர்யம் என்ன ? இந்த வேறுபாடுகள் உண்மையில் பொருள் உள்ளவை தானா ? இதனால் யாருக்கு என்ன பயன் ?
சரி, வேறுபாடுகள் இருக்கின்றன என்று வைத்துக் கொண்டாலும் முன்னம் எப்போதாவது வேறுபாடுகள் இல்லாமல் இருந்துள்ளனவா ? அல்லது ஆரம்பம் முதலே இந்த வேறுபாடுகளுடனேயே தான் இந்த வைணவ மதம் உருவானதா ?
இப்படிப் பல கேள்விகள் என்னுள் இருந்தன.
பலமுறை பலருடன் பேசியதும், பல நூல்களில் படித்ததும், சில உபன்யாசங்களில் கேட்டதும் இவை எல்லாவற்றையும் வைத்து ஒரு முடிவுக்கு வர முயன்றேன்.
அந்த முடிவு இதுதான்.
எதுவும் தோன்றும் போது இரண்டாகத் தோன்றுவதில்லை. முதலில் ஒன்று தோன்றுகிறது. பிறகு இரண்டாகவோ அல்லது இன்னும் பலவாகவோ விரிவடைகிறது. கிறித்தவம் முதலில் ஒன்றகவே இருந்துள்ளது. பின்னர் கத்தோலிக்கம், புரொடஸ்டான்டு என்று இரண்டாகவும் இப்போது இன்னும் பல திருச் சபைகளும் என்று பிளவுபட்டு, விரியடைந்து உள்ளது. இஸ்லாமும் அப்படியே. அராபிய தேசத்தில் தோன்றியது ஒன்று; ஆனால் ஷியா, சன்னி என்று இரண்டாக விரிந்தது. இந்தியா வந்தவுடன் சூஃபி என்று ஒரு மரபும் தோன்றியது. இன்னும் பல பிரிவுகள் இருக்கலாம். பௌத்தமும் ஒன்றாகத் தோன்றி பின்னர், ஹீனயானம், மஹாயானம், தேராவாதம் என்று பலவாறாகப் பிரிந்து வளர்ந்துள்ளது.
அது போல் வைஷ்ணவமும் பிளவு பட்டிருக்க வேண்டும் என்று தோன்றியது.
அதற்கு முன், வைஷ்ணவத்தின் அடி நாதமான விஷிட்டாத்வைதம், அதன் ஆணி வேறான இராமானுசன் இவை பற்றி ஆராயலாமே என்று சில மாதங்கள் முன்பு ஒரு மார்க்சீய எழுத்தாளர் எழுதியதைப் படித்தபின் ஒரு உத்வேகம் பிறந்தது. அதைத் தொடர்ந்து, நான் அறிந்த அளவில், படித்த அளவில் வைஷ்ணவம் பற்றி சில மாதங்கள் எழுதியிருந்தேன். ஆனால் அதை ஒரு மூன்றாம் நபர் பார்வையில், ஒரு சமுதாய நோக்கில் மட்டுமே எழுதியிருந்தேன்.
முதலில் தோன்றிய வைஷ்ணவ தத்துவம் என்ன, பின்னர் எப்படியெல்லாம் விரிந்து தற்போது எப்படி உள்ளது என்பதை இராமானுசரே சொன்னால் எப்படி இருக்கும் என்று ஒரு எண்னம் தோன்றியது.(ரா.கி.ரங்கராஜனின் ‘நான் கிருஷ்ணதேவராயன்’ பாணியில் )
அதன் விளைவே இந்த ‘நான் இராமானுசன்’ தொடர். ஒரு கதை போல் எழுத முயன்றிருக்கிறேன். சில தவறுகள் இருக்கலாம்; சில விஷயங்களின் கால அளவுகளில் கூட பிழைகள் இருக்கலாம். இது ஒரு முயற்சியே. தகுந்த ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்கிறேன்.
எங்கள் ஊர் ஆமருவியப்பனின் அருளுடன் துவங்குகிறேன்.