விஜய வருஷம், மாசி மாதம் 24-ம் நாள், ஆங்கில வருஷம் 2014, மார்ச் மாதம் 8-ம் நாள், சப்தமி திதியில் ரோகிணி நக்ஷத்திரமும், அமிர்த யோகமும் சித்த யோகமும் நிறைந்த ஒரு நல்ல சனிக்கிழமையான மேல் நோக்கு நாளில் திருப்பரங்குன்றம் விநாயகர் உற்சவம் நடக்கிறதோ இல்லையோ ‘உலக மகளிர் தினம்’ என்னும் மகா அதிசய நாள் பிறந்துள்ளது.
பூமி தோன்றி, அதாவாது ஆதாம் ஏவாள் காலம் தொட்டு இன்று வரை இப்படிப்பட்ட ஒரு சுப தினம் ஏற்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அப்பேற்பட்ட மகா உசத்தியான இந்த நல்ல நாளில் முக நூலில் வாழ்த்து தெரிவித்துத் தமிழர்கள் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். இதுவும் வரலாற்று நிகழ்வே.
ராஜ ராஜன் காலத்தில் கூட தமிழர்கள் இப்படியும், இந்தியர்கள் இதை விட மேலாகவும் கொண்டாடியதில்லை என்று சோமபானபுரக் கல்வெட்டு கூறுகிறது.
இந்தப் புனிதமான நன்னாளில் நாம் உமா மகேஸ்வரிகளையும், நிர்பயாக்களையும் புறந்தள்ளிவிட்டு வாழ்த்துச் சொல்லிக் கொண்டாடுவோம்..
முக்கியமான விஷயம் – இந்த நாளில் ஜாய் ஆலூக்காஸ், முஸ்தபா, உம்முடி பங்காரு, ஜி,ஆர்.டி என்னும் கோவில்களுக்குச் சென்று சொர்ண லக்ஷ்மியை ரூபாய் / டாலர் அர்ச்சனை செய்து வழிபட்டால் அந்தக் கோவில்களின் முதலாளிகள் பயன் பெறுவர்.
நாளை இன்னொரு நாள். அப்போது என்ன கொண்டாடுவது என்று பின்னர் பார்க்கலாம்.
பி.கு.: இந்த நாள், வீட்டு வேலை செய்யும் பணிப் பெண்கள், சத்துணவுக்கூடப் பெண் தொழிலாளர்கள், வயல் வேலை செய்யும் பெண் கூலித் தொழிலாளர்கள், டாஸ்மாக் அரக்கனுக்குப் பலியாக தன் கணவர்களை அனுப்ப வேண்டிய கடமை உள்ள பெண் தொழிலாளர்கள் முதலிய இவர்களுக்குப் பொருந்தாது.