சிறிது தூரல் கூட இல்லை என்று தெரிந்தது. ஆனால் வானம் மேக மூட்டமாகவே இருக்கிறது. திடீரென்று எழுந்துகொள்ளும் மைனாக்கள் எதையோ பார்த்துவிட்டு அலறுகின்றன. அதை ஆமோதிப்பது போல் காக்கைகள் கூடச் சேர்ந்து கத்துகின்றன. அவை மழை விட்ட மகிழ்ச்சியில் கத்துவதாகத் தோன்றவில்லை. எதிர்காலம் குறித்து மக்களுக்கு ஏதோ உணர்த்துவது போல் தெரிகிறது.
மாலை ஆராதனத்துக்குத் தேவையான சாமக்கிரியைகள் மடத்தில் வந்து இறங்கிக்கொண்டு இருக்கின்றன. விளக்கு காண்பித்துக்கொண்டிருந்த உறங்காவில்லி கூட தற்போது பூக்களைக் கட்டத் துவங்கி விட்டான்.
எனக்கு அவனைப்போல் இருக்க வேண்டும் என்று ஆசை. பல வேலைகளை ஒன்றாகச் செய்ய விருப்பம். ஆனால் உடல் இடம் கொடுப்பதில்லை. நான் ஏதாவது செய்யத் துவங்கினால் கூட ,’ஸ்வாமி, தேவரீர் ஏள்ளியிருக்கணும்’ , என்று பணிவாகக் கூறுகின்றனர் சிஷ்யர்கள்.
பெருமாளுக்குப் பூ தொடுப்பது என்றால் உறங்காவில்லிக்கு ரொம்பவும் ஆசை. அதுவே அவனுக்கு விருப்பமான் கைங்கர்யம். தான் தொடுத்த பூவை அரங்கன் சூடுவது அவனுக்கு ரொம்ப திருப்தியாயிருக்க வேண்டும். ‘பெருமாளுக்கு யார் பூ தொடுப்பது?’ என்பதில் அவனுக்கும் அவன் மனைவி பொன்னாச்சிக்கும் இடையே போட்டி உண்டு. அரங்கனுக்கு யார் அதிகம் சேவை செய்கிறார்கள் என்பதில் அவர்களுக்குள் ஒரு போட்டி.
இவர்களைப் பற்றியெல்லாம் எழுத வேண்டும் என்று நினைக்கிறேன்.
ஏனென்றால் வருங்காலத்தில் வரலாற்றில் இவர்களுக்கு முக்கியத்துவம் இல்லாமல் போகப் போகிறது என்பது எனக்குத் தெரிகிறது. நீங்கள் படிக்கும் காலத்திலோ, அதற்கு முன்னாலேயோ இவர்கள் மறக்கடிக்கப்படுவர். இந்தப் பிறழ்வுகள் நிகழப்போவது உறுதி. இவற்றைத் தடுக்க எனக்குச் சக்தியில்லை. என்னால் ஆனது இவர்களைப் பற்றியெல்லம் எழுதிவைப்பது மட்டுமே.
இவர்களைப் பற்றி மட்டுமா மாற்றிப் பேசப் போகிறார்கள் ? விஸிஷ்டாத்வைதம் பற்றியுமே பலவிதமாகப் பேசப் போகிறார்கள். அதில் என் பிரியமான சிஷ்யர்கள் உறங்காவில்லி, கூரன், அனந்தன் இவர்கள் எல்லாம் அவர்களுக்கு உரிய முக்கியத்துவம் இல்லாமல் இருப்பார்கள் என்று தான் தோன்றுகிறது. எனவே என் எழுத்தில் இவர்களைப் பற்றியும் இவர்களது சேவை, தொண்டு பற்றியும் பதிவு பண்ண வேண்டியது என் கடமை என்று உணர்கிறேன்.
என் சிஷ்யர்களைப் பற்றி மட்டும் அல்ல. எனக்கு, என் முன்னோர்கள், என்னுடன் பெருமாளுக்கு சேவை செய்தவர்கள்- இவர்கள் பற்றியும், விஸிஷ்டாத்வைத சித்தாந்தம், இந்த சித்தாந்தம் பற்றிய என் உண்மையான எண்ணங்கள் என்ன என்று எழுதிவைக்க வேண்டியது தேவை என்று உணர்கிறேன்.
விஸிஷ்டாத்வைதம் என்று உங்களுக்கு விளக்கிக் கூறியவர்கள் நிஜமாகவே அரங்கன் அருளால் நான் உணர்ந்து சொன்னதையே தான் சொன்னார்களா அல்லது அவர்கள் மனப்படி சொன்னார்களா என்று நீங்கள் அறிய வேண்டும் அல்லவா ? எனவே அவற்றைச் சீர் தூக்கிப் பார்ப்பதற்காகவே நான் எனது உண்மையான எண்ணங்களை எழுதி வைக்கிறேன். ப்ராப்தம் இருந்து நீங்கள் இதைப் படிக்க அரங்கன் உங்களுக்கு அருள் புரிந்தால் நீங்கள் இதனைப் படிப்பீர்கள். இதனைப் படிக்கிறீர்கள் என்பதாலேயே அவன் அருள் உங்களுக்கு உள்ளதை நான் உணர்கிறேன்.
சித்தாந்தத்திற்குள் போகும் முன் உங்களிடம் ஒன்று சொல்கிறேன்.
இந்த சித்தாந்தம் நான் அறிந்தவரையே.
நான் எப்படி அறிந்தேன் ?
பலரிடம் கேட்டு அறிந்தேன். சிலரிடம் வாதிட்டு அறிந்தேன். பல நூல்கள் வாசித்து அறிந்தேன். புற சமயவாதிகளிடம் வாதம் செய்து தெரிந்துகொண்டேன். எல்லாவற்றிற்கும் மேல் அரங்கன் திருவருள்.
புற சமயத்தினரிடம் வாதிட்டு நான் வெற்றி பெற்றேன் என்று என்னைப் பற்றிப் பலர் கூறுகின்றனர். நீங்களும் அவை பற்றிப் படித்திருக்கலாம்.
என்னைப் பொருத்தவரை வாத விவாதங்கள் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் கருவிகள் அல்ல.
வாதத்தில் வெற்றி என்பது என்ன ? அது என்ன கொண்டாடப்பட வேண்டிய ஒன்றா ?
அவரவர் தத்தமது ஆத்ம விசாரத்தாலும் அனுபவத்தாலும் குருவருளாலும் உணர்ந்த உண்மைகளை வேளிப்படுத்துதல் என்பதே வாதம் என்பது. அவற்றில் அன்றைய நிலையில் எது சரியெனப் படுகிறதோ அது வெற்றி என்று கொள்வர்.
ஆனால் வாதங்கள் எப்போதும் முடிவதில்லை. மனித மனங்கள் இருக்கும் வரையிலும் வாதங்கள் தொடரும். வாதப் பிரதிவாதங்கள் இல்லாமல் இருப்பது உயிரற்ற ஜடப் பொருட்கள் தான்.
நமது தேசத்தில் ‘கருத்தியல்’ ஒன்று உள்ளது. அது தத்துவ ரீதியானது. உலகம் ஒரு தத்துவத்தால் இயங்குகிறது என்ற அனுமானத்தில் அமைவது இந்த கருத்தியல் வாதம். இதனை, இன்னும் சில காலங்கள் கழித்து வரும் சில பொதுமை வாதிகள், ‘கருத்து முதல் வாதம்’ என்று அழைப்பர். அவர்களைப் பொருத்த வரை கருத்து முதல் வாதம் என்பது பிழையானது. பொருள் முதல் வாதம் தான் சரி. அதாவது, உலகம் காட்சிப் பொருட்களால் அமைந்தது. எது இருக்கிறதோ அது தெரிய வேண்டும். தெரியாமல் இருப்பது உண்மையில் இல்லை. இது ஒன்றும் புதிய கொள்கை அல்ல. இதனை நம் தேசத்தில் பல வருஷங்களாகவே ‘சார்வாகம்’ என்னும் ஒரு பிரிவு சொல்லி வருகிறது.
இந்தக் கொள்கைகள் ஒரு பக்கம் இருக்கட்டும். பின்னர் இவை பற்றிப் பார்ப்போம்.
இந்த தேசத்தில் எந்தக் கொள்கையையும், தத்துவத்தையும் கொண்டிருக்க முடியும். அது குறித்து வாதிட முடியும். எனவே, இந்த நேரத்தில் என்னால் புத்தனின் கொள்கைகளையும், மஹா வீரரின் கொள்கைகளையும், சங்கரரின் அத்வைத தத்துவத்தையும் சுலபமாக எதிர்த்துப் பேச முடியும். அறிவு பூரவமான ஒரு சம்பிரதாயம் நமது தேசத்தில் உள்ளது.
நாளை வேறு ஒரு தத்துவம் வரும். அது மிலேச்ச தத்துவம். தற்போது பாரசீகம் தாண்டி வலிமை வாய்ந்த குதிரைகளில் வந்து நமது கோவில்களைக் கொள்ளை இடுகின்றனரே, இந்த மிலேச்சர்களின் இன்னொரு பரிணாம வாதிகள் அவர்கள். அவர்களது கொள்கைப்படி அவர்களது சித்தாந்தம் மாறாதது. அதனுடன் வாதிட முடியாது. வாதிடுவது தவறு. தெய்வக்குற்றம். வாதிடுவோர் அழிக்கப்படுவர்.
‘என் ஸ்வாமியே உயர்ந்தவர்; என் ஸ்வாமியையே ஸேவிக்க வேண்டும்; என் ஸ்வாமியை நீவீர் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் நீவீர் உயிர் வாழ உரிமை இல்லை’ என்னும் ஒரு சித்தாந்தம் அது. இப்படி ஒரு காலம் வருவது தெரிகிறது.
ஆனால் அதற்கு இன்னும் சில காலம் உள்ளது.
தற்போதைய காலத்திற்கு வருகிறேன்.
ஒரு வாதத்தில் என் பக்கம் நியாயம் இருப்பது போல் தோன்றுவது அக்காலத்தின் இயல்புகளையும், அக்கால மக்களின் சிந்தனையையும் பொறுத்தது. ஆனால் அதுவே இறுதி உண்மையா என்றால் இல்லை. வாதங்கள் தொடரும். புதிய உண்மைகள் புலனாகும். பிறகு சில காலம் கழித்து அந்த உண்மைகள் தவறானவைகளாகத் தோன்றும். பிறிதொரு உண்மை தெளியும். இதுவே காலத்தின் சுழற்சி.
ஆகவே இறுதியான உண்மை என்பது ‘ப்ரும்மம்’ ஒன்று தான். மற்றவை அனைத்தும் காலத்தால் மாறக்கூடியவையே. என் வாதங்கள் உட்பட.
ஆக என் வாதத்தை மறுப்பவர்கள் மீது எனக்குக் கோபம் இல்லை; நான் அவர்களை தூஷிப்பதில்லை; அது என் வேலை இல்லை. எனக்கு அரங்கன் என்ன உணர்த்தினானோ அதைப்போல் அவர்களுக்கு அவர்களது பரம்பொருள் உணர்த்தியிருப்பான் என்பதே என் எண்ணம். இது ஒரு மாதிரியான நபும்சஹத்தனமான வாதம் என்று சங்கர மதஸ்தர்களும் பௌத்தர்களும் சொல்லலாம்; பின்னால் வரப்போகும் மிலேச்ச மதஸ்தர்களும் அப்படியே பேசலாம். ஆனால் நான் நம்மாழ்வார் சொன்னபடி பார்ப்பவன். அவர் சொல்கிறார்,
“அவரவர் தம தமது அறிவு அறி வகைவகை
அவரவர் இறையவர் என அடி உடையவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர்” .
மக்களுக்கு அவரவரது அறிவின் படி கடவுள் அமைகிறார் என்று நம்மாழ்வார் கூறுகிறார். இதில் பெரிய கடவுள் சிறிய கடவுள் என்றோ இல்லை. இதுவே என் கொள்கையும் நம்பிக்கையும் கூட.
இந்த நம்பிக்கையின் அடிப்படையில் நான் சொல்வது இது தான். என் வாதங்களை யாரும் எதிர்க்கலாம். ஆனால் திரிக்காதீர்கள் என்பதே என் வேண்டுகோள். தர்க்கவாதத்தின் அடிப்படையில் எதிர்ப்பதும், வாதங்களை முன் வைப்பதும் நமது கலாச்சாரம். இந்த தர்க்கவாதம் விரைவில் அழியப்போவதை உணர்கிறேன்.