பாயா லேபார் (paya lebar ) ரயில் நிறுத்தத்தில் டிக்கெட் கொடுக்கும் இடத்தில் சங்கர் மேலே பார்த்தபடி நின்றிருந்தார். எவ்வளவு நேரமாக அவர் அப்படி நின்றிருந்தார் என்று அவருக்கு நினைவில்லை.
கையில் மேப்புடன் (Map ) வந்த ஒரு வெள்ளைக்காரர் ஏதோ கேட்க சங்கர் அவர் என்ன கேட்கிறார் என்று தெரியாமல் அவரை வெற்றுப் பார்வை பார்த்தார்.
வெள்ளைக்காரர் சற்று பின்வாங்கி ‘ஓ ஐ ஆம் சாரி’ என்று சொல்லிச் சென்றார்.
காரணம் சங்கரின் கண்கள் கலங்கியிருந்தன.
சிங்கப்பூரின் ஒரு ரயில் நிலயத்தில் நெருக்கடியான, மக்கள் புழக்கம் அதிகம் உள்ள நேரத்தில்,;ஒருவர் டிக்கெட் கொடுக்கும் இடத்தில் கண்கள் கலங்கியபடி நின்றிருந்தால் யாருக்குத் தான் பாவமாகத் தோன்றாது ? அவருக்கு என்ன சோகமோ என்று யாருக்கும் அனுதாபம் வருவது இயற்கைதானே ?
சங்கரின் கண்ணீருக்கும் அவர் அப்படியே மாலை 7:30 மணிக்குப் பாயா லெபார் ரயில் நிலையத்தில் சுமார் அரை மணி நேரம் நின்றதற்கும் யார் காரணம் ? அவரிடம் கையில் என்ன இருந்தது ? என்றெல்லாம் நீங்கள் கேட்பது புரிகிறது.
சங்கரின் கண்ணீருக்கான காரணங்கள் இரண்டு. ஒன்று அவர் கையில் இருந்த புத்தகம். இரண்டாவது அதில் இருந்த முதல் கதை.
இவை தவிர மூன்றாவது காரணமும் உண்டு. அது அந்த புத்தகத்தை எழுதிய எழுத்தாளர் ஜெயமோகன்.
கதை : அறம்.
முதல் கதையைப் படித்தவுடன் தான் சங்கர் பாயா லெபாரில் அழுதபடி நின்றிருந்தார்.அவர் இன்னும் ‘அறம்’ தொகுப்பில் உள்ள ‘யானை டாக்டர்’, ‘நூறு நாற்காலிகள்’ முதலியன படிக்கவில்லை.
இந்த நிகழ்வு சென்ற வியாழக்கிழமை நடந்தது. சங்கர் என் நண்பர்.
‘அறம்’ படித்து கண் கலங்காத மனிதர்கள் மன நல மருத்துவ்ரை நாடுவது நல்லது.