அத்வைத மதஸ்தர் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தேன் அல்லவா ? அவர் பெயர் யஞ்ய மூர்த்தி ஸ்ரௌதிகள்.
அவரிடம் நான் பேசியது இது தான் :
பாரதம் என்ற பெருவெளியை எடுத்துக்கொண்டால் வைஷ்ணவம் என்பது பல ரூபங்களிலும் இருந்துள்ளது. சாதவாஹனர்கள், சாளுக்கியர்கள் என்று பலரும் மஹா விஷ்ணுவையே கொண்டாடியிருக்கின்றனர். எனவே விஷ்ணு வழிபாடு தொன்மையானதே. அதுவும் நீங்கள் ருத்ரன் உசந்தவன் என்று சொன்னதால் இதைக் கூறினேன்.
நமது திராவிடப் பிரதேசத்தில் ‘சங்க காலம்’ என்று ஒரு அளவு உள்ளது. அது ரொம்பவும் ப்ராசீனமானது ( தொன்மையானது) என்று தமிழ் நூல் வல்லார் கூறுவர். இது நம் காலத்திற்கு 1500 வருஷம் முந்தையது என்றும் கூறுகின்றனர். அப்போது மக்கள் முழுமையாக தத்துவங்களில் ஈடுபட்டவர்கள் அல்லர். அப்போது அவர்கள் பல இனக் குழுக்களாகப் பிரிந்து வாழ்ந்து வந்தனர். ஒவ்வொரு இனமும் ஒவ்வொரு இடத்தில் இருந்தது – மலைப்பிரதேசம், பாலை நிலம், முல்லை நிலம் என்று இந்த மாதிரியான பாகுபாடுகளை ‘திணை’ என்று தமிழ் மக்கள் வழங்கி வந்தனர்.
அப்போதும் அவர்களுக்குத் தெய்வ வழிபாடு இருந்தது. நம்மை மீறிய சக்தி உள்ளது என்ற அளவில் அவர்கள் வாழ்ந்து வந்தனர். அந்தந்த இடங்களுக்கு ஏற்ப தெய்வங்கள் உருவாயின. சிலர் இயற்கையை ஸேவித்தனர். ஒரு ராஜா நெல்லிக்கனியை பெண் புலவருக்குக் கொடுத்தான் என்று கேள்விப்பட்டுள்ளீர்கள் தானே ? அவனது இனத்தில் நெல்லி அவனுக்குப் பரம்பொருள். அது போல இன்னொருவன் மயில் ஆடுவதை அது குளிரால் வாடுகிறது என்று நினைத்துப் போர்வை வழங்கினான். அவனது குலக் குறி மயில். அதைப்போல் இன்னொருவனுக்கு முல்லை மலர்.
இவ்வாறு இருக்கையில் காடு சார்ந்த இடத்தின் கடவுளாக ‘மாயோன்’ என்று ஒரு ஸ்வாமியை ஸேவித்துள்ளனர். அக்காலத்தில் ‘மாயோன் மேயக் காடுறை உலகம்’ என்று ஒரு பாடல் வரி வருகிறது. இந்த மாயோன் சாக்ஷாத் விஷ்ணு என்று ஒரு நம்பிக்கை இருக்கிறது. ஆக விஷ்ணு வழிபாடு நம் திராவிட தேசத்திலும் ரொம்பவும் தொன்மையானது என்று தெரிகிறது.
இயற்கைக்கும் கடவுளுக்கும் இடையே வித்யாசம் இல்லாமல் வாழ்ந்து வந்தனர் மக்கள்.
இந்தக் காலத்தில் ஏற்பட்ட சங்க இலக்கியங்கள் அகநானூறு, புறநானூறு போன்றவை ‘மால்’ என்ற விஷ்ணு வழிபாட்டைக் குறிக்கின்றன.
தொல்காப்பியம் என்றொரு சங்க இலக்கிய நூல் இருந்ததை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள் தானே ? அதில் ஒரு சூத்திரம் வருகிறது பருங்கள் :
‘நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங்காலை அந்தணர்க் குரிய’.
முப்புரி நூலும், மூன்று கோல்கலும் உடைய சமய அந்தணர்கள் என்று குறிக்கிறார் தொல்காப்பியர். மூன்று கோல்கள் என்பது ‘த்ரி தண்டம்’ என்று வைணவத் துறவியர் கொண்டிருப்பர் என்பது நீர் அறிந்தது தானே ?
பின்னர் சமூக மாற்றங்கள் ஏற்பட்டு அதனால் இனக்குழுக்கள் அரசு அமைப்பில் ஈடுபட்டன. அந்த அரசுகள் தங்கள் குலக்குறியினைக் கடவுளாக்கி வழிபட்டனர். இது வரலாறு காட்டுவது.
பின்னர் வந்த பௌத்த ஜைன மதங்கள், அவற்றின் ஆளுமை, இதெல்லாம் பற்றி ஒரு புஸ்தகமே எழுதலாம் என்று தோன்றுகிறது.
யஞ்ய மூர்த்தி ஸ்ரௌதிகள் விடவில்லை.
‘அப்படியென்றால் எங்கள் ஆதி சங்கரர் எப்போழுது அவதாரம் செய்தார் ? அவரது கொள்கை இவ்வளவு ஸ்திரப்படக் காரணம் என்ன? அப்போது உங்கள் விஸிஷ்டாத்வைதக் கொள்கை உண்டாகவே இல்லை அல்லவா? ஆகவே எங்கள் சங்கர அத்வைதமே உசத்தியானது என்பதில் சந்தேகம் உண்டோ?’ என்று கேட்டார்.
ஓரிரு வரிகளில் தெளிவு படுத்திவிடலாம் என்று நினைத்த நான் இப்போது இந்த வாதம் ஆழமாகச் செல்வதை உணர்ந்தேன். கூரத்தாழ்வாரைப் பார்த்தேன்.
‘ஸ்வாமி, தேவரீர் இன்று மிக நுட்பமான காலட்சேப உபன்யாஸம் ஆற்ற வேண்டும் என்று அரங்கன் திருவுள்ளம் போல. எங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது. தேவரீர் அடியோங்களுக்குப் புரிகிற மாதிரி சௌலப்யமான வார்த்தை அலங்காரங்களுடன் உபன்யாஸம் சாதிக்கப் ப்ரார்த்திக்கிறேன்’ என்று சொன்னார்.
அது நாள் வரை அடியேன் சாதித்த உபன்யாசங்களும், சித்தாந்த ரீதியான விஸ்தீரணங்களும் ஒரு சேர அன்று அமையப்போகிறது என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. அதனை அப்படியே ‘விஸிஷ்டாத்வைத ஸாரம்’ என்ற பெயருடன் கூரத்தாழ்வான் எழுதிவிட்டார்.
மடத்திற்கு வெறுமனே என்னை ஸேவிக்க வந்திருந்தவர்களும் வந்து அமர்ந்துகொண்டனர். அதுவரை சப்தம் செய்துகொண்டிருந்த காக்கைகளும் குருவிகளும் கூட அமைதியானது போல் தோன்றியது.
‘ஸ்ரௌதிகளே, தேவரீர் நல்ல ஒரு விஞ்ஞபனம் செய்துள்ளீர். இது குறித்து விரிவாக உரைக்க எனக்கு தேகத்தில் பலம் அளிக்க அரங்கனை வேண்டுகிறேன்’ என்று சொல்லி விடை அளிக்கத் துவங்கினேன்.
‘இனக்குழுக்களிலிருந்து மன்னர், அரசாட்சி என்று பயணம் செய்த சங்க கால மனிதன் அரசாங்கம் என்று அமைந்ததும் மற்ற இனக்குழுக்களுடன் போரிடத் துவங்கினான். அதுவரை எல்லாம் யாவர்க்கும் பொது என்பது போல் இருந்த இயற்கை வளங்கள் தங்களுடையன என்று சொந்தம் கொண்டாடத் துவங்கினான்.
நிலம், பசு மாடுகள், ஆடு வகைகள் என்று கவரத் துவங்கினான். ஆநிரைகள் சொத்துக்கள் என்பது அப்போது தான் துவங்கியது. இப்படி யுத்தம் செய்யத் துவங்கிய மனிதன் தனது கடவுளையும் திணிக்கக்த் துவங்கினான். போர் என்பது சொத்துக்களுக்காக இருந்த போதிலும் அதன் உள்ளீடாக ஆதிக்கம் செலுத்தும் இனக்குழுவின் இறைவனும் பரப்பப்பட்டார். இப்படியாகப் போர்களில் இறைவன் வந்து சேர்ந்தார்.
போர்களுக்கு முக்கிய காரணம் விளை நிலங்கள். அந்த நேரத்தில் தான் மனிதன் விவசாயம், சாகுபடி என்று விளை நிலங்களின் பயனையும், நிலங்களை ஆளும் முறைகளையும் அறிந்திருந்தான். விளைச்சல் பெருக ஆற்று நீர் தேவை என்பதை அறிந்தான். ஆனால் ஆறு எல்லா இடங்களிலும் இருக்க முடியாது என்பதை அறிந்து ஆற்றிலிருந்து கால்வாய், வாய்க்கால் என்று வெட்டி, ஆற்றின் நீரை மற்ற பகுதிகளுக்கும் கொண்டு வந்தான். நீரைத்த் தேக்கும் விதமாக அணைகள் அமைத்தான்.
அப்போது ஸ்ரௌதிகள் ஆட்சேபித்தார்.
‘ தேவரீர் விஸிஷ்டாத்வதம் உரைப்பீர் என்று எதிர் பார்த்தால் லௌகீக விஷயங்கள் ஸாதிப்பது கொஞ்சம் ஆச்சர்யமாயிருக்கிறது. இது தான் உங்கள் தத்துவமா ?’, என்று கொஞ்சம் இளக்காரத்துடன் பேசினார்.
இது தான் தத்துவங்களின் வீழ்ச்சிக்குக் காரணம். சமுதாயத்துடன் ஒட்டாமலும், சமுதாயத்தின் பல கூறுகளையும் இணைக்காமலும் வெறும் தத்துவம் மட்டுமே பேசுவதாலும், பெருவாரியான மக்களை ஒருங்கிணைக்காமல் இயங்குவதாலும் அந்தத் தத்துவங்களும் அதன் தோற்றுவாய்களும் அழிகின்றன. இது பலருக்கும் புரிவதில்லை.
‘ஸ்ரௌதிகளே, உங்களது அத்வைதம், அதற்கு முன்னர் இருந்த ஜைனம், பௌத்தம் முதலியன பற்றித் தெரிந்துகொள்ள கொஞ்சம் சமூக அமைப்பையும் தேவரீர் அறிந்துகொள்ள வேண்டியுள்ளது. சமூகத்துடன் ஒட்டாமல் இருக்கும் தத்துவம் ரொம்ப நாள் நிலைக்காது. அந்த நிலை அத்வைதத்திற்கும் ஏற்பட்டது பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள கொஞ்சம் சமூகப் பார்வை தேவை. வயிற்றுக்குச் சோறு இல்லாதவன் இறைவன் பற்றிக் கவலை கொள்ள மாட்டான். எனவே சற்று பொறுமை தேவை’ என்று சொல்லி மேலும் தொடர்ந்தேன்.
நான் இராமானுசன் – ஒரு துவக்கம்