ஸ்ரௌதிகள் சற்று மௌனமானார். நான் மேலே தொடர்ந்தேன்.
அரசுகளும் ராஜ்ஜியங்களும் தோன்றின. அவற்றிற்கு உழைக்க ஆட்கள் தேவைப்பட்டனர். ஒரே வேலையைத் திரும்பத் திரும்ப செய்வதால் நல்ல பலன் கிடைத்து வந்தது. வாய்க்கால் வெட்டுபவன் அதே தொழில் செய்தான். பானை செய்பவன் அதில் மேலும் புதுமைகள் செய்தான் ; குறைந்த நேரத்தில் நிறைய பானைகள் செய்யக் கற்றுக்கொண்டான். அவனது தொழிலை வாரிசுகளுக்குப் புகட்டினான். இதே நிலை தான் இரும்புக் கொல்லர், தங்க வேலை செய்பவர், வயல் வேலை செய்பவர் என்று. பிரிவுகள் இப்படி உண்டாயின.
இந்தப் பிரிவுகள் அரசனுக்கு உதவின. விவசாயம் பெருக ஒரு தொழில் செய்பவர் மேலும் சிறப்பாகச் செய்தால் நல்லது என்று உண்டானது. தொழில் ரீதியிலான பிரிவு விரிவடைந்தது.
இதுவரை உற்பத்தி பற்றி மட்டுமே பார்த்தோம். இந்த உற்பத்தியாளர்கள் மேலும் மேலும் அதிக அளவில் உழைக்கத் துவங்கினர். பல புதிய அணைகள் கட்டப்பட்டன. மேலும் உற்பத்தி பெருகியது.
ஆனால் உற்பத்தி செய்பவர்கள் செழிக்கவில்லை. இவர்களிடம் பொருட்கள் வாங்கி வேறு இடங்களில் விற்பனை செய்பவர்கள் நல்ல பலன் அடைந்தனர். அந்தக் குழுவினர் வியாபாரத் துறையில் அசைக்க முடியாதவர்களாக இருந்தனர்.
ஊற்பத்தி செய்பவர்கள் கிராமங்களில் ரொம்பவும் கஷ்டப்பட்டு உழைத்தனர்; ஆனால் பலிதம் அவ்வளவாக இல்லை. ஆனால் வியாபரம் செய்வோர், வணிகர், நகரங்களில் அதிக சிரமங்கள் இல்லாமல் வாழ்ந்தனர். வசதியாகவும் இருந்தனர்.
இந்த வேறுபாடு நாளாக நாளாகப் பெரிதானது. இது இந்த இரு கோஷ்டிகளுக்குள்ளும் மோதலை உருவாக்கியது.
ஆனால் மோதல் பெரிதாகாமல் இருக்க அரசன் ஒரு சமன்பாட்டுக் கருவியாக இருந்தான்.
இந்தச் சமுதாய அமைப்பில் உற்பத்தி விவசாயிகள், உடல் உழைப்பாளர்கள் வசம் இருந்ததால் இவர்கள் பக்கம் அரசன் இருந்தான். ஆனால் இவர்கள் அரசனுக்கு அடங்கி இருக்க வேண்டி இருந்ததால் அவர்கள் மீது ‘பாதுகாப்பு’ என்ற போர்வையில் அதிகமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. புதிய அரசாணைகள் உருவாயின. அரசனும் தெய்வமும் ஒன்று என்னும்படியான கருத்துக்கள் பரப்பப்பட்டன. சோழப் பேரரசுகள் இவ்வகையிலானவை.
இந்த அமைப்புக்கு ஒரு சகல சக்தி வாய்ந்த பரம்பொருள் தேவைப்பட்டார். அவர் சிவன் என்ற பெயருடன் ஸேவிக்கப்பட்டார். ஒரே பிரும்மம் என்னும் வாதம் நிலைக்க இந்த ‘அரசனும் இறைவனும் ஒன்று’ என்ற தத்துவம் உதவியது. பிரும்மம் ஒன்று; அது மட்டுமே உண்மை. மற்ற அனைத்தும் பிரும்மத்தின் பிரதிபலிப்பே. அது போல் அரசனும் ஒருவனே; சர்வ வல்லமை பொருந்தியவன்; மக்கள் அவனால் வாழ்பவர்கள். இந்தக் கருத்து வலுப்பெற்றது. இதனை முன் நிறுத்தியவர் ஆதி சங்கரர்.
ஆதி சங்கரர் வலுவடையும் முன்னரே திராவிடப் பிரதேசத்தில் சைவ சமயம் வேறூன்றி இருந்தது. ஆதி சங்கரர் தனது ஆளுமையால் சைவத்தைத் தனது ஷண்-மதங்களில் ஒன்றாக்கினார்.
ஆனால் வணிகர்கள் வாழ்ந்த இடங்களில், நகரங்களில், சோழனின் அரசு அவ்வளவாக செல்லுபடியாக வில்லை. அவர்கள் அரசனுக்கு எதிராக வேலை செய்தனர். இவர்கள் அரசனின் ஆளுமையை அவ்வளவாக விரும்பவில்லை. இவர்களது தத்துவத்தின் அடிப்படையில் சகல சக்திகளும் பொருந்திய ஒரு சக்தி அல்லது பிரும்மம் இல்லை; பௌத்தமும் அதையே சொல்லவும், அது வைதீக சங்கர மதத்திற்கு எதிராக இருந்ததாலும் வணிகர்கள் அதனை ஆதரித்தனர். வணிகர் மதமாக பௌத்தமும் சமணமும் அமைந்தன. அவர்களது கால நூல்களான மணிமேகலையும், சிலப்பதிகாரமும் வணிகர்களை உயர்த்தியும் அரசனைத் தாழ்த்தியும் பேசின. இதுவும் தாங்கள் அறிந்ததே’ என்று சொல்லி சற்று நிறுத்தினேன்.
ஸ்ரௌதிகள் பேசினார்,’ஸ்வாமி, தேவரீர் லௌகீக விஷயங்களை சங்கர மதத்துடன் இணைத்துப் பேசுவதில் சமர்த்தர் போல. ஆனால் இந்த நிகழ்வில் விஸிஷ்டாத்வைதம் வரவில்லையே, அது எங்ஙனம் ?’ என்று ஆக்ஷேபம் செய்தார்.
நான் இதை எதிர்பார்த்தேன். ஸ்ரௌதிகள் சிருங்கேரி, பூரி முதலிய அத்வைத மடங்களில் நல்ல பயிற்சி பெற்றவர். அங்கிருந்துதான் வருகிறார் என்று தெரியும். நல்ல சமர்த்த ஸ்மார்த்தராக இருப்பார் என்று நான் நினைத்தது சரி தான் என்று தெரிந்தது.
மேலும் சொன்னேன் :
‘சோழர் மற்றும் பிற்சங்க கால மன்னர் ஆட்சியில் மன்னனும் விவசாயிகளும் சைவ மதஸ்தர்களாகவே இருந்தனர். இந்த ஒரு பரம்பொருள், மற்றது அனைத்தும் பிம்பம் என்ற சங்கர தத்துவம் உட்புக இது ஏதுவாக இருந்தது. மன்னனும் இதனை ஆதரித்தான். மன்னனது ஆட்சி ஸ்திரப்பட்டது. அத்துடன் கூடவே அத்வைத சம்பிரதாயமும் வளர்ந்தது.
அத்வைத சம்பிரதாயத்திற்கு முன்னர் சைவம் இருந்தது என்று சொன்னேன் இல்லையா ? அந்த நேரத்தில் தான் வணிகர்கள் ஜைன பௌத்த மதங்களை ஆதரித்தனர். இவர்களுக்குள் போட்டி இருந்தது.
ஆனால் ஜைனமும் பௌத்தமும் கடுமையான விரதங்களை போதித்தன. ஜைனம் பல உபவாசங்களைக் கட்டாயப் படுத்தியது. தங்கள் தலை முடியைத் தாங்களே பிடுங்கிக் கொள்ள வேண்டும்; சமணப் பள்ளிகளில் பல காலம் தங்கிப் பயில வேண்டும் என்று கட்டாயப்படுத்தின. உற்பத்திக்கு இது தடையானது. யாவரும் துறவு கொண்டால் யார் வேலை செய்வது ?
சைவம் இருந்த காலத்தில் சாதிக் கட்டுக்கள் அவ்வளவாக இல்லை. 500 வருஷங்களுக்கு முன்பு ( 6-ம் நூற்றாண்டு ) நாயன்மார்கள் தோன்றினார்கள். அவர்கள் சைவத்தை மேலெடுத்துச் சென்றனர். அக்காலத்தில் தான் சைவத்திற்கும் ஜைன-பௌத்த சமயங்களுக்கும் இடையே போராட்டம் நடந்தது.
ஆதி சங்கரரின் ஆளுமையாலும் அவரது ‘ஏக-பிரும்ம’ தத்துவத்தின் அரச அங்கீகரிப்பாலும் ஸ்மார்த்த அத்வைத சித்தாந்தம் வேறூன்றியது. ஜைன-பௌத்த மதங்கள் அழிந்தன.
ஆனால் அத்வைத ஸம்பிரதாயத்தில் ஒரு பெரும் குறை இருந்தது. அது உற்பத்தி செய்யும் விவசாயிகள், கைத்தொழில் விற்பன்னர்கள் முதலியோரை அரவணைத்துச் செல்லவில்லை. ‘ஏக-பிரும்ம’ தத்துவத்தின்படி அரசன் பெரும் வலிமை கொண்டவனாக இருந்தான். ஆனால் உற்பத்தியாளர்கள் அல்லல் பட்டனர். அதிக வரி வசூல் என்று இருந்ததால் இவர்களிடையே கசப்புணர்வு தோன்றியது.
அது மட்டும் அல்ல. சங்கரரது தத்துவத்தில் பிராம்மணன் மட்டுமே மோட்சம் அடைவான் என்று இருந்தது. மற்ற வர்க்கத்தினர் பல பிறவிகள் எடுத்துப் பின்னர் பிராம்மண ஜென்மத்தில் தான் மோட்சம் என்று இருந்தது பெருவாரியான மக்களுக்கு எதிராக இருந்தது. ‘வடமன் முற்றி வைஷ்ணவன்’ என்ற கோட்பாடு இருந்த காலம் அது. பல நிலைகளையும் கடந்து பின்னர் ஒரு பிறவியில் வடமன் என்ற ஸ்மார்த்தப் பிறவி அடைகிறான். அந்தப் பிறவி முடிந்ததும் வைஷ்ணவப் பிறவி பெறுகிறான். இதன் பின்னரே அவன் மோட்சம் அடைகிறான் என்ற கோட்பாடு மக்களுக்கு ஏற்புடையதாக இல்லை.
அதன் பின்னர் ஆழ்வார்களின் காலம். அவர்கள் அது நாள் வரை இருந்த ஆன்மீக சிந்தனையையே புரட்டிப்போட்டனர்.
அதன் பின் நாத முனிகள் என்ற வைஷ்ணவ ஸ்வாமி தோன்றினார். அவரும் அவரது பின்னவரான ஆளவந்தாரும் எடுத்துரைத்த தத்துவம் எனது ‘விஸிஷ்டாத்வைத’ தத்துவத்திற்கு அடிப்படையானது.
ஆளவந்தாரின் அருளால் அடியேன் ஆச்சாரிய பீடம் ஏற்றேன்.
வெகுஜன மக்களுக்கு ஆன்மீகம் போய்ச் சேர வேண்டுமானால் அது அவர்களுக்குப் புரியும்படி இருக்க வேண்டும். அனைவரையும் அரவணைத்தபடி இருக்க வேண்டும். இது என் முதல் செய்தி.
இரண்டாவது நான் ஆழ்வார்கள் பற்றித் தெரிந்துகொண்டது. அவர்கள் வாழ்ந்த காலமும் நாயன்மார்கள் காலமும் ஒன்றே. அத்வைத சித்தாந்தத்தை சங்கரர் பரப்பிக் காலூன்றிய நேரத்தில் ஆழ்வார்கள் இல்லை. பின்னர் வந்த அவர்கள் பிரும்மத்தை அடைய குலமோ, கடமைகளோ, குடிப்பிறப்போ தேவையில்லை என்றும், ஆழ்ந்த ஆசார அனுஷ்டானங்கள் தேவை இல்லை என்றும், பக்தி மட்டுமே போதும் என்றும் நிலை நிறுத்தினார்கள்.
எனது விஸிஷ்டாத்வைதமும் இதை அடியொற்றியதே.
பாமரர், கூலி வேலை செய்பவர், பஞ்சமர், புலையர், அந்தணர், அரசர், மண் பாண்டம் செய்பவர், பெண்கள் – இபப்டி அனைவரும் ஒரு தரமே. இவர்களுக்குள் வேறுபாடு இல்லை. இவர்கள் அனைவரும் ‘ பிரபத்தி ‘ என்ற சரணாகதி செய்வதன் மூலமே மோக்ஷம் அடைய முடியும்.
இப்படி ஒரு சம தர்ம சிந்தனையை நிறுவியதன் பலன் – மக்கள் அனைவரையும் நான் வைஷ்ணவனாக்கினேன். மக்களை ஒற்றுமைப்படுத்தினேன்.
‘அது எப்படி முடியும்? அனைவரும் ஒன்று என்பது எப்படி சாத்தியம்? வைஷ்ணவனாக்கினேன் என்றால் மத மாற்றம் செய்தீர் என்று கொள்ளலாமா?’, என்றார் ஸ்ரௌதிகள். அவர் முகத்தில் குழப்பம் தெரிந்தது.
‘அங்கு தான் தத்துவம் வருகிறது ஸ்ரௌதிகளே. இதுவரை நாம் லௌகீகமாக ஆராய்ந்தோம். தேவரீர் கூட ஆட்சேபித்தீர். இப்போது தான் கருத்தியல் என்னும் தத்துவத்தின் உள்ளே புக வேண்டியுள்ளது’, என்று நான் தொடர்ந்தேன்.
நான் இராமானுசன் – ஒரு துவக்கம்