நாம் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறு ஒன்றாகவும் இருக்கும். பல முறை இப்படி நடந்து விட்டதால் எனக்கு இதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் இந்த முறை ஒரு வருத்தம் இருந்தது.
சிங்கப்பூர் தேசீயப் பல்கலையின் ஊடகவியல் ஆராய்ச்சித் துறையில் ஒரு ஆய்வு நடந்து கொண்டிருந்தது. சிங்கப்பூரின் சீன, மலாய், தமிழ் வலைஞர்கள் பற்றிய ஒரு ஆய்வு. அதற்கு அழைப்பு வந்திருந்தது. சி.தே.பல்கலையின் திரு.அருண் மகிழ்நன் அழைத்திருந்தார். ‘ஆ.. பக்கங்கள்’ குறித்துப் பேசக் கேட்டிருந்தார். உடனே ஒப்புக்கொண்டிருந்தேன்.
ஆனால் விதி விளையாடியது. நிகழ்வு துவங்கும் ஒரு வாரம் முன்னர் அலுவலகத்தில் உடனடியாக எம் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு அமெரிக்கா செல்லச் சொன்னார்கள். 20 நாட்கள் பயணம். ‘இப்படி ஆகிவிட்டதே’ என்று வருத்தத்துடன் சி.தே.பல்கலைக்குத் தெரிவித்தேன்.
இப்படி வருத்தத்துடன் துவங்கியது அமெரிக்கப் பயணம்.
சுமார் 10 முறைகள் அமெரிக்கா சென்றிருப்பேன். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அனுபவம். ஆனால் இந்த முறை இதுவரை பெற்ற அனுபங்கள் எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடும் வகையில் அமைந்துவிட்டது. முதல் இரண்டு வாரம் நியூ யார்க்கில் ஒரு கருத்தரங்கு நடத்தவேண்டும். பின்னர் டெக்ஸாஸில் ( டல்லாஸ்) எங்கள் அலுவலகத்தில் வங்கியின் இணையத் தொடர்புகள் தொடர்பான சில கட்டமைப்புக்களைச் செய்ய வேண்டும். இதுதான் வேலை.
வேலை பற்றியதல்ல இந்தப் பதிவு.
முதல் இரண்டு வாரங்களும் தந்த அனுபவங்கள் சொல்ல முடியாதவை.
மனித முயற்சியின் உச்ச பரிணாமத்தையும் கண்டேன்; மனிதனை மேம்படுத்த வந்த ஒரு மதத்தின் பெயரால் நிகழ்த்தப்பட்டிருந்த அகோரத்தின் இன்றைய நிலையையும் கண்டேன். மனிதனிடம் மனிதம் மேம்படச் செய்யவே மதங்கள் என்று பறைசாற்றப்பட்டிருந்தது. ஆனால் மனிதனிடமிருந்து மனிதத் தன்மையைக் கழற்றி, அவனை விலங்குகளின் பட்டியலில் கோரத்தின் அடிப்படையில் முதல் தரம் வகிக்கும் ஒரு விலங்காக உயர்த்திய ஒரு செயல் நிகழ்த்தப்பட்ட நகரம் தான் நியூ யார்க்.
ஒரு பக்கம் மனித முயற்சியின் உச்சத்தால் ஏற்பட்டுள்ள வளர்ச்சியும் இன்னொரு பக்கம் மதம் பிடித்ததால் எற்பட்ட மனிதத்தன்மையின் வீழ்ச்சியினையும் காண முடிந்தது.
ஒரு பக்கம் ‘எம்ப்பையர் ஸ்டேட் பில்டிங்’ ( Empire State building ) மனிதனின் உழைப்பின் உயர்வை உணர்த்துகிறது. சிறிது தூரம் தள்ளி, மதம் பிடித்த மனிதன் நிகழ்த்திய மானுட வீழ்ச்சியின் அடையாளமாக ‘கிரௌண்ட் ஜீரோ’ (Ground Zero) தெரிகிறது.

ஒரு பக்கம் எல்லீஸ் தீவில் ( Ellis Island) உள்ள சுதந்திர தேவியின் சிலை மனித விடுதலையையும் அதற்குக் காரணமான மனித முயற்சியையும் உணர்த்துகிறது. இந்தச் சிலை 1804-ல் எழுப்பப்பட்டுள்ளது. பிரான்ஸு நாட்டின் ஈஃபில் கோபுரத்தை வடிவமைத்த அதே ஈஃபில் தான் சுதந்திர தேவியின் உள்ளே அமைந்துள்ள உட்புறக் கட்டமைப்பையும் வடிவமைத்துள்ளார். தேவி நிற்கும் இடத்தின் அருகில் தான் பல நாடுகளில் இருந்து வந்த குடியேறிகள் புகலிடம் அளிக்கப்பட்டனர். அப்படிப் புகலிடம் பெற்றவர்கள் சேர்ந்து உருவாக்கிய நகரம் தான் நியூ யார்க். இது மனித ஆற்றலின் ஒரு உன்னத வெளிப்பாடாகத் திகழ்கிறது.
இன்னொரு பக்கம் இரட்டைக் கோபுரம் நின்ற இடம். கரிய நிறமான பளிங்கால் வடிவமைக்கப்பட்டுள்ளது. சதுர அமைப்பில் உள்ளது. சதுரக் குழியின் உள்ளே நீர் விழுவது போல் அமைத்துள்ளனர். அதன் கரையில் உள்ள கைப்பிடிச் சுவர்களில் அந்தக் கோர நிகழ்வின் போது உயிர் இழந்தவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மதத்தின் உந்துதலால் நிகழ்த்தப்பட்ட இந்தக் கொடுமையில் அதே மதத்தின் சில அப்பாவிகளும் இறந்தனர் என்பது அந்தப் பெயர்களில் இருந்து தெரிந்தது.


என் மனதில் அந்த நினைவுச் சின்னத்தின் அமைப்பு பற்றி ஒரு எண்ணம் தோன்றியது. அதை சதுர வடிவத்தில், அதுவும் கரிய நிறத்தில், கீழே குழி போல் அமைக்க வேண்டிய காரணம் என்ன ? அமெரிக்கர்கள் இதனால் உலகிற்கு அல்லது இந்தக் கோர நிழ்வை நிகழ்த்திய வெறியர்களுக்கும் அவர்களின் காரணிகளுக்கும் சொல்ல விரும்புவது என்ன ?

கரிய நிறத்தில், பூமியில் இருந்து எழுந்து நிற்கும் சதுர வடிவான ஒரு பெரிய கல் உணர்த்தும் ஒரு வாழ்க்கை வழிமுறை எங்கள் நாட்டில் அதே அமைப்பில் பூமியில் புதைக்கப் படுகிறது என்று இருக்கலாமோ ? அல்லது மேல் நோக்கி நிற்கும் அந்தக் கல் காலம் காலத்திற்கும் எங்களுக்கு நிகழ்த்திய இந்த மாபாதகம் உலகின் வரலாறுகளில் கீழ்மையான ஒரு சித்தாந்தம் என்று உணர்த்தப்பட வேண்டி இருக்குமோ ? (அமெரிக்கர்களின் செயல்களுக்குப் பின் காரணங்கள் இல்லாமல் இருக்காது. அது ஈராக் படை எடுப்பாக இருக்கட்டும் அல்லது வேறு ஏதாவது செயலாக இருக்கட்டும். அவர்களுக்கு ஒரு சாதகம் இல்லாமல் எந்தச் செயலையும் செய்ய மாட்டார்கள்.)
இப்படி எதுவாகவும் இருக்கலாம். அல்லது இவை என் ஊகங்களாகவும் இருக்கலாம். இது பற்றி உடன் பணியாற்றும் ஒரு அமெரிக்கரைக் கேட்டேன். ‘எம் மக்கள் இவ்வளவு யோசித்திருப்பார்களா என்பது சந்தேகமே’, என்று கூறினார்.
ஆனால் அதன் அருகிலேயே மீண்டும் இரட்டைக் கோபுரங்கள் எழுப்பப் படுகின்றன. அது மனதிற்கு நிறைவளித்தது.
எது எப்படி இருந்தாலும் ஒன்று நிச்சயம். ‘தன் வினை தன்னைச் சுடும்’ என்பதே அது.
இந்தக் ‘கிரௌண்ட் ஜீரோ’. இருக்கட்டும். இன்னொரு ‘கிரௌண்ட் ஜீரோ’ இருக்கிறது தெரியுமா ?
முதலாவது அமெரிக்காவிற்கு மட்டும் அழிவை ஏற்படுத்தியது. ஆனால் இரண்டாவது உலகிற்கே அழிவை ஏற்படுத்தியது.
ஆம். உலக வர்த்தகத்தின் ஆணி வேர் என்று போற்றப்படும் ‘வால் தெரு’ (Wall Street) தான் அது. பல நாடுகளிலும் தோன்றிய பாரம்பரிய பொருளாதார முறைகளை அடியோடு அழித்தொழித்த அமெரிக்க முதலாளித்துவத்தின் துவக்கம் கண்ட தெரு அது. உலகத்தின் பல நாடுகளின் வங்கிகளும் அங்கே அலுவலகங்கள் கொண்டுள்ளன. அமெரிக்கப் பெருமுதலாளிகளின் இருப்பிடம் அது.
எல்லாவற்றையும் விட சீனாவின் சில வங்கிகளும் உள்ளன. என் பொருளாதார சித்தாந்தத்தின் படி, சீனாவின் வளர்ச்சி உலகிற்கு உகந்தது இல்லை. அவர்களுக்கு ஜனநாயகம் கிடைக்கும் வரை சீனாவின் வளர்ச்சி நமக்கு நல்லதல்ல. அதைப்பற்றித் தனியான பதிவு எழுத வேண்டும் என்று நினைக்கிறேன்.
வால் தெருவுக்கு வருகிறேன்.

அந்த இடத்தில் நான் ஒரு காட்சி கண்டேன். ஜார்ஜ் வாஷிங்டன் பதவி ஏற்ற இடம் அது. அந்தச் சிலையின் அடியில் ஒரு பிச்சைக்காரர் குழல் ஊதியபடி அமர்ந்திருந்தார். அவருக்கு அருகில் சில காசுகள் கிடந்தன. ஆங்கிலத்தில் ‘Irony’ என்பார்கள். ஸ்ருதிபேதம் என்று அழைக்கலாம் என்று நினைக்கிறேன்.
இந்தப் பயணத்தில் அமெரிக்காவில் சில இடங்களுக்கு உள் நாட்டில் பயணம் செய்ய வேண்டி இருந்தது. எல்லாம் விமானப் பயணம் தான். ஒன்று மட்டும் நிச்சயம். எந்த அமெரிக்க விமானச் சேவையும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சேவைக்கு ஒப்பாகாது. சிங்கையில் இருந்து கிளம்பி அமெரிக்கா செல்லும் வரையிலும் பிறகு லாஸ் ஏஞ்ஜல்ஸில் இருந்து கிளம்பி சிங்கப்பூர் வரும் வரையிலும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தான். A-380 வகை விமானம். விமானமும் சரி, பணியாளர்களும் சரி வேறு ஒரு நாட்டிற்கும் இப்படி வாய்க்கவில்லை என்று நினைக்கிறேன். கேப்டன். கதிர், கேப்டன். சரவணன் என்று தமிழர்கள் தலைமை விமானிகளாக வந்தனர் என்பது மகிழ்ச்சி அளித்தது. எனது அமெரிக்காவின் உள் நாட்டுப் பயணம் அமெரிக்கன் ஏர்லைன்ஸ், டெல்டா முதலியவற்றில் நடந்தது. அவர்கள் சேவை சொல்லிக்கொள்ளும்படி இல்லை.
அமெரிக்காவின் விமான நிலையங்களில் பாதுகாப்புக் கட்டுப்படுகள் 5 ஆண்டுகள் முன்பு இருந்த படியே உள்ளது. எல்லா இடங்களிலும் ‘திரௌபதி உடை அவிழ்த்தல்’ போல் எல்லாவற்றையும் களைய வேண்டி உள்ளது. ஆனால் யாரும் மறுப்பதில்லை. ‘ நான் யாரு தெரியும்லே’ போன்ற வீர வசனங்கள் இல்லை.
சரவண பவன் பற்றிச் சொல்லியாக வேண்டும். நியூ யார்க் சரவண பவன் சிங்கப்பூரின் சரவண பவனை விட தேவலாம். ஆனால் டல்லாஸின் சரவண பவன் எல்லாவற்றையும் விட அருமை. சாத்வீகமான உணவு. நம் சிங்கப்பூரின் சரவண பவனும் முன்னேறினால் சரி. உணவின் விலை மட்டும் ஏற்றினால் போதாது. உணவின் தரமும் உயர வேண்டும். உயரும் என்று நம்புவோம்.
ஒரு விஷயம். நியூ யார்க் நகரில் லெக்ஸிங்டன் அவென்யூவில் நடந்துகொண்டிருந்த போது ஒபாமாவும் சென்றார். அவருக்காக சரியாக ஒன்றரை நிமிடம் போக்குவரத்தை நிறுத்தினார்கள்.

டல்லாஸில் டெக்ஸாஸ் பல்கலைக் கழகத்திற்குச் சென்றிருந்தேன். அதிக அளவில் தெலுங்கு பேசுகிறார்கள். UTT என்ற பல்கலையின் பெயரை ‘University of Telugu and Tamil’ என்று பெயர் மாற்றினால் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.
இவை தவிர எம் நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு யூதப் பெரியவருடன் ஒரு நாள் அவரது மதம், சம்பிரதாயம், கலாச்சாரம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். ஒரு புத்தகம் போட வேண்டிய அளவிற்குச் செய்திகள் சொன்னார் அவர். யூத சம்பிரதாயத்திற்கும் அத்வைதத்திற்கும் பிரும்மம் குறித்து சில ஒற்றுமைகள் இருப்பதாகப் படுகிறது. முடிந்தபோது அது பற்றியும் எழுதலாம் என்று இருக்கிறேன்.
பல பேதங்கள், பல ஒற்றுமைகள், சில ஆச்சர்யங்கள் என்று இந்த முறை அமெரிக்கப் பயணம் அமைந்தது.