ஜைன துறவி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லத் துவங்கினேன். யஞ்ய மூர்த்தி ஸ்ரௌதிகள் கேள்வி கேட்கத் துவங்கி, அதனால் வளர்ந்து கொண்டிருந்த அந்த வாதம் குறித்து சற்று எண்ணிப் பார்த்தேன். பல மதஸ்தர்களும் வந்து கேட்பார்கள் என்று எண்ணியிருக்கவில்லை. நாம் நினைப்பது ஒன்று அவன் நினைப்பது இன்னொன்று என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும் என்று தோன்றியது.
ஜைன சன்யாசியின் இந்த அத்வைத சம்பிரதாயம் தொடர்பான கேள்வி என் காலத்து நாட்டின் நிலையை உணர்த்தியது. அறிவுத் தேடல் என்பது ஒரு சமயம் சார்ந்த ஆராய்ச்சி மட்டும் அல்ல. அறிவானது இந்தப் பிரபஞ்சம் முழுவதும் பரவியுள்ளது. எந்தத் திசையில் இருந்தும் அது நம்மை அடையும். ஆகவே நாம் நமது புலன்களைத் திறந்த படியே இருக்க வேண்டும். ஞானம் எங்கிருந்து வரும் என்பது தெரியாது. எனவே எந்தத் துவேஷமும் இன்றி அறிவுத் தேடலை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தத்துவ விசாரத்தில் அறிவாளிகள் ஈடுபட்டு வந்தனர்.
‘ஜைனரே, இதோ விளக்குகிறேன்’, என்று சொல்லித் தொடர்ந்தேன்.
‘பிரதி பிம்ப வாதம், ஏகான்ம வாதம் இரண்டும் ஒன்றே. இவை அத்வைதத்தின் ஒரு விளக்க நிலை.
சந்திரன் ஒளி வீசுகிறதே பார்க்கிறீரல்லவா ? இன்று பௌர்ணமி ஆதலால் நன்றாக சந்திரன் பிரகாசிக்கிறான். ஆனால் சந்திரனிடம் உள்ள ஒளி ஒன்று தானே ? அது இந்த உலகில் பல படிவங்களின் மீதும் விழுகிறது. அதனால் அது பல ஒளிகளாகத் தெரிகிறது. ஆற்றின் மீது விழும் ஒளி ஒரு மாதிரியும், கலங்கிய குட்டையின் மீது விழும் சந்திர ஒளி ஒரு மாதிரியும் தெரிகிறது. ஆனால் சந்திரன் ஒளி ஒன்றே.
அது போல் பிரும்மம் ஒன்று. அவித்யையினால் அது பலது போல் தெரிகிறது. நீரில் சந்திர ஒளி விழும் போது, நீர் அசைந்தால் சந்திர ஒளியும் அசையும். நீர் அசைவில்லாதிருந்தால் ஒளியும் அவ்வாறே இருக்கும். இதனால் இந்த இரண்டு ஒளியும் வேறு என்று ஆகுமோ ? ஒளி ஒன்று தானே ?
அது போல ஒவ்வொரு ஆன்மாவிலும் பற்றி இருக்கும் அவித்யையின் காரணமாக அவற்றின் இயல்புக்கு ஏற்ப ஆன்மாவின் இயல்பும் வேறுபடும். நீர் நிலைகள் அனைத்தும் அழிந்தால் சந்திரன் ஒன்றே என்று நாம் அறிந்துகொள்ளலாம். அவ்வாறே அவித்யை அழிந்தால் ஆன்மா ஒன்று என்பது நமக்குப் புலப்படும் இதுவே ஏகான்ம வாதம்.
‘சேதம்’ என்றால் பிரித்தல் என்பது பொருள். ஒரு பரமாத்மா பல ஜீவாத்மாக்களாகப் பிரிந்து காணப்படுகிறது. இதற்கு மாயை காரணம். இப்படி ‘சேதம்’ ஆனமாதிரி பரமான்மா தெரிவதால், பிளவு பட்டது போல் தெரிவதால் இதற்கு ‘அவச்சேத வாதம்’ என்று ஒரு பெயர் உண்டு.
ஒரு உதாரணம் சொல்லலாம். இதோ இந்த மண்டபத்தில் இருப்பது ஒரே வெளி தான். இங்கே இருக்கும் குடத்தின் உள்ளே இருப்பது இதே வெளி தான். குடத்தை மூடினாலும் அதனுள் இருக்கும் வெளியும் அதன் வெளியே உள்ள வெளியும் ஒன்று தான். குடம் இந்த ஒரே வெளியை இரண்டாகச் ‘சேத’ப் படுத்துகிறது. ஆனால் குடம் உடைந்தால் இரண்டு வெளியும் ஒன்றாகிறது. குடம் என்பது மாயை. இந்த மாயை விலகினால் மாயையால் சூழப்பட்ட வெளியும் புறத்தில் உள்ள வெளியும் ஒன்றாகும். இப்படி பிரும்மத்தை ‘சேத’ப்படுத்தி விளக்குவது அவச்சேத வாதம். இதுவும் அத்வைதமே’, என்று கூறினேன்.
ஜைன சன்யாசிகள் தெளிவு பெற்றது போல் தெரிந்தது.
‘இந்த விளக்கங்களில் தேவரீர் என்ன தவறு கண்டீர்? அத்வைதம் சரிதானே?’, என்று கேட்டார் ஸ்ரௌதிகள்.
‘ஸ்வாமி, தவறு இங்கே தான் துவங்குகிறது’, என்று சொல்லி நிறுத்தினேன்.
ஸ்ரௌதிகளும், ஜைனத் துறவியரும் மற்றவரும் ஆவலாக நோக்கினார்கள்.
கூட்டத்தில் இருந்த ஸார்வாகர்கள்* போன்றவர்கள் மேலும் முன்னேறி வந்து அமர்ந்தார்கள். வைதீக தத்துவங்களில் ஏதாவது குறை காண வழி கிடைத்தால் ஸார்வாகர்களுக்கு ரொம்பவும் சந்தோஷம் தான். ‘உலகாயதம்’ என்ற தத்துவத்தின் படி வாழ்ந்து வந்தவர்கள் அவர்கள். கண்களால் காணப்படுவதே மெய்; மற்றதெல்லாம் பொய் என்பதே அவர்களது வாதம்.
ஸார்வாகர்கள் இன்று நேற்று இருக்கவில்லை, திரௌபதியின் துகில் உரியப்பட்டதே ஹஸ்தினாபுர சபையில் ? அன்று அந்த சபையில் ஸார்வாகர்கள் இருந்தார்கள். இதைப்பற்றி திரௌபதியே மஹாபாரதத்தில் சொல்கிறாள்.
ஸார்வாகர்கள் ஏதோ கேள்வி கேட்க விரும்புவது போல் தோன்றியது. ஆனால் ஒன்றும் கேட்காமல் அப்படியே அமர்ந்தார்கள். நான் என்ன சொல்லப்போகிறேன் என்பதில் அவர்கள் குறியாக இருந்தார்கள் என்று தோன்றியது.
‘ஸ்ரௌதிகளே, ஜைனத் துறவியரே, அத்வைத்தத்தின் மூன்று வகைகளைச் சொன்னேன். ஆனால் தவறு இந்த மூன்றின் உள்ளேயே தான் உள்ளது.
இருப்பது ஒரு வெளி , அது இரண்டாகப் பிரிவது மாயை, அப்படிப்பிரிப்பது மாயை. இது அத்வைத சாரம்.
இருப்பது ஒரு ஒளி ஆனால் அது படும் இடம் பொறுத்து அதன் அளவும், பிரகாசமும் அமையும். அழுக்கான குளமானால் அழுக்கான ஒளியே பிரதி பிம்பமாகத் தெரியும். இதுவும் அத்வைத சாரம்.
நான் கேட்கிறேன். பிரும்மம் ஒன்று மட்டும் தானே உள்ளது ? அப்போது அறியாமை எங்கிருந்து வந்தது ? அவித்யை எங்கிருந்து வந்தது ? அறியாமையும் அவித்யையும் இருப்பதால் தானே ஜீவாத்மாக்கள் இருப்பது போலவும், ஜடப் பொருட்கள் இருப்பது போலவும் தோன்றுகிறது ?
ஆக, அவித்யையும், அறியாமையும் பிரும்மத்திடமே உள்ளனவா ? அப்படியென்றால் பிரும்மம் பரிபூரண ஞானம் என்பது பிதற்றலா ? பிரும்மம் அறியாமையின் நிலைக்களன் என்பது ஏற்கமுடியுமா ?
அறியாமை ஆத்மாக்களினால் உருவாகிறது என்பது தவறு இல்லையா ? அறியாமையால் தான் ஆத்மாக்கள் இருப்பது போல் தோன்றுகிறது என்பது தனே அத்வைதம் ? ஆக, அறியாமை தான் முன்னது, ஆத்மாக்கள் பிந்தையவை. அப்படித்தானே ஆகிறது ? அப்படியென்றால் பின்னர் தோன்றும் ஆத்மா ( ஜீவாத்மா ) அதற்கு முன்னரே தோன்றும் அறியாமையின் தங்குமிடம் என்பது பகுத்தறிவுக்கு உட்பட்டதாக இல்லையே ?’, என்று கேட்டேன்.
மக்கள் சற்று தெளிவில்லாதது போல் தென்பட்டது.
மேலும் விளக்கினேன்.
‘இப்போது இங்கே கூரத்தாழ்வார் இருக்கிறார். அவரது மகன் பராசரன் அதோ அமர்ந்திருக்கிறான். கூரத்தாழ்வார் காரணம். அவரால் இந்த உலகிற்கு வந்தவன் பராசரன். கூரன் முன்னவர். பராசரன் பின்னவர். அப்படி இருக்க, பராசரனே கூரனின் நிலைக்களன் என்று சொல்ல முடியுமா ? காரணம் முன்னது. காரியம் பின்னது. காரணத்தால் காரியம் சாத்தியமாகிறது. காரியம் காரணத்தின் இருப்பிடம் என்பது சரி இல்லையே.
கூரன் இருப்பது உண்மை ஆனால் பராசரன் இருப்பது பொய் என்பது ஒப்புக்கொள்ள முடியவில்லையே.
இது போல் தான் உள்ளது அத்வைதமும். ஞான ஸ்வரூபம் பிரும்மம்; அப்பழுக்கில்லாதது. ஜீவன், ஜடப் பொருள் எல்லாம் பிரும்மத்தின் பிம்பம். ஆனால் அவை அறியாமையால், மாயையால் வேறு ஒன்றாகத் தெரிகின்றன என்பது உண்மை என்றால் அந்த அறியாமை எங்கிருந்து வந்தது ? பிரும்மத்திடமிருந்தா? பிரும்மம் தான் பரிபூரண ஞான ஸ்வரூபமாயிற்றே ?
ஆகவே அறியாமை, மாயை முதலியன பிரும்மத்தின் குணங்கள் இல்லை என்று ஆகிறது.
சரி, அறியாமையால் ஜீவன், ஜடப் பொருள் முதலியன தெரிகின்றன என்றால் ஜீவாத்மாக்களும் ஜடப்பொருட்களும் அறியாமையின் இருப்பிடமா ? காரண காரிய சம்பந்தம் உடைபடுகிறதே ? இதனால் தான் இந்த சித்தாந்தம் சற்று திடம் இல்லாதது என்று கூறுகிறேன்’, என்றேன்.
ஜைனத் துறவியர் சற்று ஆழமாக மூச்சை இழுத்து விட்டனர். விஷயங்களை கிரஹித்துக்கொள்வது போல் தெரிந்தது.
ஒன்று சொல்கிறேன். சங்கரர் விவர்த்த வாதி. காரணமாகிய பிரும்மம் உண்மை ஆனல் காரியமாகிய ஜீவன்களும், ஜடப்பொருட்களும் பொய் என்பது விவர்த்த வாதம்* தவிர வேறென்ன ?
ஆனால் அடியேன் விவர்த்த வாதி அல்ல. நான் பரிணாம வாதி. காரணமும் உண்மை; காரியமும் உண்மை; பிரும்மமும் உண்மை; ஜீவன்களும் உண்மை; உலகமும் உண்மை. தத்துவ த்ரயம் ( மூன்று உண்மைகள்) என்பதே என் வாதம்’, என்று கூறி நிறுத்தினேன்.
கூட்டத்தில் பேரமைதி நிலவியது. ஸார்வாகர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்; ஸ்ரௌதிகள் மௌனமானார்.
ஸார்வாகர்களின் தலைவர் போல் இருந்த ஒருவர் எழுந்தார்.
‘ஆத்மா, ஜீவன், பரமாத்மா என்றெல்லாம் நேரத்தை வீணடிக்க வேண்டுமா ? இதனால் என்ன பயன் ? உலகமே பஞ்ச பூதங்களின் சேர்க்கையினால் எற்பட்டது என்று நாங்கள் கூறுகிறோம். எப்படி வெற்றிலை, சுண்ணாம்பு இரண்டும் சேர்ந்தால் அதுவரை இல்லாத சிவப்பு நிறம் உண்டாகிறதோ அது போல் பஞ்ச பூதங்கள் ஒரு விகிதத்தில் சேர்வதால் உயிர் உண்டாகிறது. சிவப்பு என்பது ஒன்று தனியாக இல்லை. சிவப்பு என்பது முக்கியமும் இல்லை.
அது போல் உயிர் என்பதும் முக்கியம் இல்லை. வெற்றிலையுடன் சேர்க்கை எற்படுவதால் சிவப்பு நிறம் உண்டாகிறது. சேர்க்கை முறிந்ததும் சிவப்பு இல்லை, பஞ்ச பூத வஸ்துக்களின்* சேர்க்கை விகிதம் முறிவதால் உயிர் இல்லாமல் ஆகிறது. அவ்வளவே வாழ்க்கை. இங்கு ஆத்மா எங்கு வந்தது ? பிரும்மம் எங்கே வந்தது?’, என்று சொல்லி வெற்றிக் களிப்புடன் கூட்டத்தைப் பார்த்தார்.
கூட்டத்தார் என்னை நோக்கினர்.
———————————————————————————————————————–
ஸார்வாகர் – ஒரு பிரிவினர். கடவுளை ஏற்காதவர்கள். தற்காலத்தில் இடது சாரிகள் போல் இருப்பவர்கள்.
விவர்த்த வாதம் – முன் பின் முரணான வாதம்.
வஸ்து – பொருள்
———————————————————————————————————————–