வண்டி சீராக ஓடவில்லை. வளைவுகளில் ரொம்பவும் சிரமப்பட்டது. மாருதி வேனை ஆம்புலன்ஸ் என்று சொல்லி மாயவரத்தில் தொழில் செய்து வந்தார்கள். ஒவ்வொரு வளைவிலும் வேகம் இழந்து மெல்லத் திரும்பி மீண்டும் வேகம் எடுத்து மறுபடியும் குறைந்து திரும்பி கர்ப்பிணிப்பெண் போல் பெருமூச்சு விட்டுக்கொண்டே சென்றது.

உள்ளே இருந்த எனக்குத்தான் தலை சுற்றியது. படுத்திருந்த ஸாருக்கு எந்த பாதிப்பும் இல்லை. மூக்கில் செருகியிருந்த ஆக்ஸிஜன் சீராக காற்றை உள்ளே அனுப்பிக்கொண்டிருந்திருக்க வேண்டும்.

அது மட்டும் அல்ல. ஸாருக்கு நினைவில்லை. அவரை மாயவரத்திலிருந்து சென்னைக்கு அழைத்துச் சென்றுகொண்டிருந்தேன். அவருக்கு நினைவு தப்பிப் பல மணி நேரம் ஆகியிருந்தது.

காலை நான்கு மணி அளவில் சிறுநீர் கழிக்கச் சென்ற அவர் திரும்பவில்லை. படுக்கையில் காணவில்லையே என்று தேடிப்பார்த்ததில் அவர் பாத்ரூமில் நினைவில்லாமல் கிடந்திருக்கிறார். உடனே அருகில் இருந்த மருத்துவமனைக்குச் சென்றனர். டாக்டர் இல்லை. ஒரு பதின்ம வயது போல் தெரிந்த நர்ஸ் தூக்கக் கலக்கத்துடன் வந்து பல்ஸ் பார்த்தாள். பின்னர் யாருடனோ போனில் பேசினாள். மாயவரத்தின் பெரிய மருத்துவமனைக்குப் போகச் சொன்னாள்.

ஸாரின் மனைவிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எனக்கு போன் செய்தார்.

பெரிய மருத்துவமனையில் சாரை உள்ளே தூக்கிச் செல்லக் கூட ஆள் இல்லை. இரவுப் பணி முடிந்து பணியாளர் சென்றுவிட்டார். காலைப் பணியாளர் இன்னும் வரவில்லை என்றார்கள். இரண்டு பேராகத் தூக்கி ஸாரை ஒரு கட்டிலில் கிடத்தினோம். மூச்சு இருந்தது. ஆனால் நினைவில்லை.

‘இங்கெல்லாம் படுக்க வைக்கக் கூடாது, பெரிய டாக்டர் வந்தால் சத்தம் போடுவார்’, என்றபடி வயதான நர்ஸ் பல்ஸ் பார்த்தாள்.

‘டாக்டர் எப்ப வருவார்?’

”மேல வார்டுலே இருக்கார். அஞ்சு மணி தானே ஆவுது. ஏழு மணிக்கு வருவார். கொஞ்சம் இங்கேயே இருங்க’, என்றபடி நர்ஸ் சென்றுவிட்டாள்.

பின்னாலேயே ஓடி இருக்கிறார்கள். ‘ஏம்மா இப்பிடி ஓடறீங்க. இப்போ என்ன வேணும்?’, என்றாள் நர்ஸ்.

‘இல்லே, இவருக்கு என்ன ஆச்சு ? ஏன் மயக்கமாயிருக்கார் ?’, என்றிருக்கிறார் ஸாரின் மனைவி.

‘அதெல்லாம் டாக்டர் சொல்லுவார்’.

‘டாக்டர் எப்ப வருவார்?”

‘இதோ பாருங்கம்மா விடிகாலைலே டாக்டரெல்லாம் வர மாட்டாங்க. ஏழு மணியாவது ஆகும்’.

ஒரு வழியாக டாக்டர் வந்தார். 28 வயது இருக்கும்.

‘விஷயம் கொஞ்சம் சீரியஸ் போல இருக்கு. எதுக்கும் தஞ்சாவூர் கொண்டு போயிடுங்க’, என்று சொன்னார் டாகடர்.

ஒரு மணி நேர அலைச்சலுக்குப் பின் ஆம்புலன்ஸ் போல இருந்த ஒரு மாருதி வேன் கிடைத்தது. தஞ்சாவூர் போகாமல் கும்பகோணம் ஆஸ்பத்திரி போகலாம் என்று முடிவாயிற்று.

கும்பகோணத்தில் பிரபல மருத்துமனையில் கடிந்து கொண்டார்கள். உடனே சென்னை அல்லது பாண்டிச்சேரி கொண்டு செல்லவும் என்று சொன்னார்கள். அத்துடன் ஆக்ஸிஜன் மாஸ்க் ஒன்றையும் கொடுத்தார்கள்.

இப்படியாக ஸார் ஒரு நான்கு மணி நேரமாகப் பயணப்பட்டுக்கொண்டிருந்தார்.

ஸாரின் மனைவியும் என்னுடன் மாருதி வேனில் வந்துகொண்டிருந்தார். அவருக்கு வயது 65 இருக்கலாம். ஸாருக்கு இன்னமும் வயது அதிகம்.எனக்கு ஐந்து ஆண்டுகள் பாடம் நடத்தியவர் அவர். பள்ளி முடிந்து கல்லூரி சென்று இப்போது வேலையிலும் சேர்ந்து விட்டேன். ஆனாலும் ஒவ்வொரு முறை மாயவரம் செல்லும் போதும் அவரைச் சந்திப்பேன்.

முந்தின நாள் இரவு தான் சென்னையில் இருந்து வந்திருந்தேன். மறு நாள் அவரைச் சந்திப்பதாக இருந்தேன். ஆனால் அதற்குள் இப்படி அவரைச் சந்திப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை.

வேனின் ஆட்டத்திற்கு ஏற்ப அவரது தலையும் ஆடிக்கொண்டிருந்தது.

அவரது முகத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு சில சமயம் அவர் கண் திறந்து பார்ப்பது போல் இருக்கும். மூன்று முறை அப்படி ஆகி விட்டது.

அவரது பாதங்கள் சற்று வளைந்திருக்கும். பாதத்தின் அடியில் பல திட்டு அழுக்கு தென்பட்டது. நேற்று எங்கோ வெளியே போய்விட்டு வந்து சரியாகக் கால் அலம்பவில்லை போல் பட்டது. சற்று உற்றுப் பார்த்தேன். குதி கால் ரொம்பவும் தேய்ந்திருந்தது. இந்தப் பாதங்கள் இந்திய தேசம் முழுவதும் நடந்துள்ள தூரம் எவ்வளவு இருக்கும் என்று கணக்குப் போட முயன்றேன். எண்ணங்கள் வேறு எங்கோ சென்றன.

ஸார் எங்களுக்கு ஒரு ஆதர்ஸ சக்தி. அவரது மாணவர்கள் யாரும் அவரை அன்னியமாகப் பார்த்ததில்லை. அவர் பேசத் துவங்கினால் அமைதி உடனே எற்படும். மிகவும் அறுவையான பாடமாக இருந்தாலும் அவரது தமிழ் எங்களை உசுப்பிவிடும். கம்பன் அவரது விருப்பமான கவி. திருக்குறள் நடத்தும்போதும் ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது கம்பனில் இருந்து உதாராணம் காட்டாமல் இருக்க மாட்டார்.

ஒரு முறை நான் கேட்டே விட்டேன். திருக்குறள் நடத்தும்போது கம்பனும் ஆழ்வார்களும் எதற்கு என்று. அன்று அவர் சொன்ன பதில் நெஞ்சில் ஆணி அடித்தாற்போல் இருந்தது.

‘கேள்வி சரி தான். நீங்கள் திருக்குறள் மட்டும் படித்து பாஸ் பண்ணிவிட்டு பொறியியல் படிப்பில் சேர்ந்துவிடுவீர்கள். ஆனால் நாளை ஒரு காலம் வரும். நாற்பது வயது நெருங்கும்போது வாழ்வில் ஒரு வெறுமை வரும். அப்போது கம்பனும் ஆழ்வாரும் சிலம்பும் வாழ்வின் வெறுமையைப் போக்க உதவி செய்யும். மீண்டும் ஒரு முறை இவற்றுள் செல்லத் தோன்றும். அறிமுகம் இல்லை என்றால் உள்ளே நுழைய வழியே இல்லை.

அது மட்டும் அல்ல. நமது பாரம்பரியம் பெரியது. ஆழமானது. அது திருக்குறள் மட்டும் அல்ல. அதையும் தாண்டி இன்னும் பல ஆழங்களைத் தன்னுள் கொண்டிருப்பது. இவற்றின் நுனியையாவது நீ அறிந்துகொள்ள வேண்டும். இவை இல்லை என்றால் நமக்கு முகவரி இல்லை’, என்று கூறினார்.

பள்ளி விட்டவுடன் நேரே நூலகம் செல்வார். பல அரிய நூல்களில் இருந்து குறிப்புக்கள் எடுத்துக்கொண்டிருப்பார். வட்டாரத்தில் எந்தப் பட்டிமன்றம் என்றாலும் இவர்தான். பல கோவில்களிலும் இவரது பேச்சு இருக்கும். ஆனால் ரொம்ப நாட்களாக எனக்குப் புரியாதது என்னவென்றால் தமிழ் மொழிக்கான விழாக்களில் இவர் அழைக்கப்படுவதில்லை. அந்த நாளில் ஊரை விட்டு தூரத்தில் ஏதாவது ஒரு பழைய கோவில் உள்ள ஊரில் ஏதாவது சொற்பொழிவு இருக்கும் அவருக்கு.

சில வருடங்களாக ‘அறிவோம் ஆன்மீகம்’ என்ற ஒரு அமைப்பில் மிக உயிர்ப்புடன் சிறு பிள்ளைகளுக்குத் தமிழும் ஆன்மீகமும் சேர்த்துப் புகட்டினார். சனி, ஞாயிறு மாலை வேளைகளில் ஊரின் குளக்கரை மண்டபத்தில் ஒரு இருபது பிள்ளைகளுக்கு தேவாரம், பாசுரம் என்று பாடம் நடத்துவார். திருப்பாவை ஒப்பித்தல் போட்டிகள் தன் கைக்காசு செலவழித்துச் செய்வார். இவரது பள்ளி ஆசிரியர்கள் ‘தனி வகுப்பு’ என்று சொல்லி மாணவர்களிடம் பணம் வசூல் செய்துகொண்டிருக்கும் போது இவர் மண்டபத்தில் ‘சங்க இலக்கியத்தில் திருமால்’ என்று ஏதாவது வகுப்பு எடுத்துக்கொண்டிருப்பார்.

‘நம்ம நாட்டுலெ தமிழையும் ஆன்மீகத்தையும் பிரிச்சுட்டாங்க. செக்யூலர் என்ற போர்வையில் தமிழின் ஆன்மாவை அதனிடமிருந்து பிரித்துவிட்டார்கள். இதை எப்படியாவது ஒன்று சேர்க்க வேண்டும். இல்லாவிட்டால் மொழி அழிந்துவிடும்’, என்று பல முறை சொல்லக் கேட்டிருக்கிறேன்.

பக்தி இலக்கியம் இல்லை என்றால் தமிழ் இல்லை. லத்தீன் மொழி சட்டத்திற்காக அறியப்படுவது. ஜெர்மன் மொழி தத்துவத்திற்காக அறியப்படுவது. ஆங்கில மொழி வியாபாரத்திற்காக அறியப்படுவது. தமிழ் ஒன்று மட்டுமே பக்திக்காக அறியப்படுவது என்ற கருத்தில் ஆணித்தரமாக இருந்தார் ஸார்.

பதவி ஓய்வு பெறும் வருடத்தில் முனைவர் பட்டம் பெற்றார். பள்ளியில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் யாரும் இல்லை.

மாணவர்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் போதிக்கக் கூடாது என்பதில் ரொம்பவும் ஆணித்தரமாக இருந்தார் ஸார். பெண்கள் கல்வியில் அதிக அக்கரை செலுத்தினார். வகுப்பில் சரியாகப் படிக்காத சில பெண்களைத் தனியாக அழைத்து கல்வியின் தேவையை அவர்களுக்கு உணர்த்தினார். இதனால் பல பெண்கள் நன்மை அடைந்தனர் என்பதைக் கண் கூடாகப் பார்த்திருக்கிறேன்.

சென்னையின் பிரபல ஆஸ்பத்திரியில் சொல்லியாகி விட்டது. அவர்கள் தயாராக் இருந்தார்கள்.

ஒருவழியாகச் சென்னை வந்து சேர்ந்தோம். உடனேயே ஐ.சி.யூ.வில் சேர்த்து விட்டார்கள்.

வேலைகள் துரித கதியில் நடந்தன. எங்கள் யாரையும் உள்ளே விடவில்லை.

சரியாகப் பத்து நிமிடத்தில் சீனியர் டாக்டர் வந்தார். அரைமணி நேரம் உள்ளே சென்று பார்த்துவிட்டு வந்து சொன்னது இன்னும் நினைவில் இருக்கிறது.

‘ஸீரியஸ் ப்ரைன் ஹெமரேஜ் அண்ட் ஸ்ட்ரோக். வீ ஆர் அப்சர்விங் த சிசுவேஷன். நெக்ஸ்ட் 72 ஹவர்ஸ் ஆர் க்ரூஷியல்’

மூளையில் ரத்த நாளம் வெடித்துள்ளது. இதனால் இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது. பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. 72 மணி நேரம் கழித்துத் தான் எதுவும் சொல்ல முடியும். இது தான் முதல் செய்தி..

பின்னர் வந்தது தான் பேரிடி. உடனடியாக ஒரு லட்சம் கட்ட வேண்டும் என்று பில்லிங் செக்ஷனில் இருந்து சொல்லி அனுப்பினார்கள். ஸாரின் அட்டெண்டர் உடனடியாக பில்லிங் செக்ஷன் வரவும் என்று ஒலி பெருக்கியில் சொன்னார்கள்.

அப்படி இப்படி என்று இரண்டு மணி நேரத்தில் ஒரு லட்சம் புரட்டி விட்டேன். ஸாரின் மகன் அப்போதுதான் வேலைக்குச் சென்றிருந்தான். அவனிடம் அவ்வளவு பணம் இல்லை.

முதல் இரண்டு வாரம் ஸார் கண் திறக்க வில்லை. பின்னர் ஒருவாரு நினைவு வந்தது. ஆனால் பேரிடி ஒன்று வந்தது  அவருக்குப் பேச்சு வரவில்லை. வலது கையும் காலும் செயல்படவில்லை.

அவர் அபாயக் கட்டம் தாண்டி விட்டார் என்று ஒரு மாதம் கழித்து அறிவித்தார்கள். அதற்குள் பல முறை பில்லிங் செக்ஷன் சென்று வந்திருந்தேன்.

ஸார் ஆஸ்பத்திரியிலேயே இருந்தார். ஐ.சி.யூவிலிருந்து வார்டுக்கு மாற்றி விட்டர்கள். அவருக்குப் பேச்சுப் பயிற்சி அளிக்கவும், கை கால் பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

அன்று தொடங்கி சுமார் மூன்று மாதங்கள் அந்த ஆஸ்பத்திரியிலேயே கிடந்தோம். அவ்வப்போது ஸாரிடம் முன்னேற்றம் போல் தெரியும். அவரைப் பேசச் செய்யும் முயற்சி சற்று வெற்றி அடைவது போல் தெரியும். ஆனால் சற்று கூர்ந்து கவனித்தால் வெறும் காற்று மட்டுமே வருவது உணர முடியும். ‘இன்னும் கொஞ்சம் கத்திப் பேசுங்க ஸார்’ என்று இடைவிடாமல் கத்துவது தான் ரொம்பவும் கொடுமையான ஒன்று. உபன்யாச மேடைகளிலும், பட்டிமன்றங்களிலும் சிம்மம் போல் கர்ஜித்த அவரது குரல் வெறும் காற்றாய் வெளி வந்தது ஒத்துக்கொள்ள முடியவில்லை. ஆனால் விதியின் முன்னர் ஏதும் செய்ய இயலாத, கையறு தன்மை விஸ்வரூபம் எடுத்து நின்றது.

பேசுவதையும், எழுதுவதையும் நாம் எவ்வளவு இயல்பாக எடுத்துக்கொள்கிறோம் ! ஆனால் பேச்சும் எழுத்துமே மூலதனமாகக் கொண்ட ஒருவர், அதுவும் பல நூல்கள் எழுதிய ஆசிரியர் பேசவும் எழுதவுமே முடியாமல் போனால் ? இந்த நினைப்பு இதுவரை வந்ததில்லை. ஸாரைப் பார்த்ததும் மனித வாழ்வில் நமது ஆளுமை எவ்வளவு குறைவு என்பது புரியத் துவங்கியது. மனிதனின் கையாலாகாத தன்மை கன்னத்தில் அறைவது போல் இருந்தது.

பல முறை பில்லிங் செக்ஷன் சென்று வந்தேன் அல்லவா ? அவர்களிடம் பணம் கட்ட மேலும் அவகாசம் கேட்டிருந்தேன் பணம் கொஞ்சம் பெரியது. என்ன 10 லட்சம் ஆகியிருந்தது. நாளாக நாளாக அது வளர்ந்து வந்தது. ஆனால் ஸாரின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் தெரியவில்லை. பேச்சு அப்படியே தான் இருந்தது.

ஒரு வாரம் கழிந்தது. இந்த முறை கண்டிப்பாகச் சொல்லி விட்டார்கள். உடனடியாக 5 லட்சம் கட்டியாக வேண்டும் என்று. தெரிந்தவர்கள் எல்லாரிடமும் கேட்டோம். ஸாரின் மகனின் அலுவலகத்தில் 50,000 கொடுத்து மாதச் சம்பளத்தில் பிடித்துக்கொள்வதாகச் சொன்னார்கள். வந்தவரை லாபம் என்று வாங்கிக்கொண்டோம்.

இரண்டு வாரங்கள் கழித்துக் கடுமையான எச்சரிக்கை வந்தது. அந்த வாரத்திற்குள் 8 லட்சம் கட்டவேண்டும். இல்லாவிட்டால் மருத்துவமனை வேறுவிதமாகக் கையாளும் என்று சொன்னார்கள்.

ஸாரின் தம்பியும் நானும் தமிழ் மொழி தொடர்பான பலரிடம் ஸாரின் நிலை குறித்து உதவி கேட்டோம். பெயர் குறிப்பிட விரும்பவில்லை. பலரும் இன்று நல்ல நிலையில் தான் உள்ளனர். பெரும்பாலானவர்கள் தொலைபேசியை எடுப்பதைத் தவிர்த்தனர். சிலர் எடுத்து அனுதாபம் தெரிவித்தனர்.

இது தவிர யாரிடமும் சொல்லாமல் நான் ஒரு காரியம் செய்தேன். ஸாரின் பழைய மாணவர்களுக்கு ஒரு மின்-அஞ்சல் அனுப்பினேன். கணிசமான தொகை வந்தது. ஆனாலும் மருத்துவமனையின் யானைப் பசிக்கு சோளப்பொறி போல் இருந்தது அது. இந்த என் செய்கை ஸாரின் குடும்பத்தினரை சங்கடப்படுத்தியது. ‘ஸார் நினைவு பெற்று பேசினால் இந்த செயலை அங்கீகரிக்க மாட்டார்’, என்று ஆதங்கப்பட்டனர். உண்மை தான். ஆனால் ஸார் எழுந்து பேசவே இந்தப் பணம் தேவை இல்லையா என்று என் மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். வெளியில் பேசி அவர்கள் மனதை நோகடிக்க விருப்பமில்லை.

ஒரு பக்கம் ஸாரின் நிலை. இன்னொரு பக்கம் ஸாரின் மருத்துவச் செலவு. மூன்றாவது பக்கம் அவரது குடும்பம் படும் துன்பம். சமாளிக்கமுடியாமல் தனிமையில் அழுதேன். பல மாணவர்களை உருவாக்கிய ஒரு முன்னோடி, பலரது வாழ்வில் ஒளி ஏற்றி வைத்தவர் இப்படிப் படுத்துக்கிடக்கிறாரே என்று என்ன சொல்வது என்றே தெரியாமல் மனதிற்குள் புகைந்துகொண்டிருந்தேன்.

அவரது கால்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். ‘

நடந்த கால்கள் நொந்தவோ? நடுங்க ஞாலம் ஏனமாய்
இடந்த மெய் குலுங்கவோ? இலங்கு மால் வரைச் சுரம்
கடந்த கால் பரந்த காவிரிக் கரைக் குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு; வாழி, கேசனே!’

என்று அவர் தனது உபன்யாசங்களில் சொல்லும் கும்பகோணம் ஆராவமுதன் பற்றிய ஒரு ஆழ்வார் பாசுரப் பாடல் நினைவுக்கு வந்தது.

ஸாரின் நிலை பற்றி யோசிக்கும் போது கடவுள் பற்றிய எண்ணமும் வரும். அவர் பெயரையே பாடிய இந்த வாய் இப்படிப் பேச முடியாமல் கிடப்பது என்ன ஒரு நிலை ? கடவுள் என்பது உண்மையில் இருக்கிறதா ? என்றெல்லாம் எண்ணங்கள் ஓடின.

ஆனால் இப்படி நான் நினைப்பது ஸாருக்குத் தெரிந்தால் கோபிப்பார் என்று எனக்குத் தெரியும். ‘பூர்வ ஜென்ம கர்மான்னு ஒண்ணு இருக்கே, ப்ராரப்த கர்மான்னு சொல்லுவா. அதை அனுபவிச்சே தீரணும்’, என்று அவர் பேச்சில் சொல்வது போல் பட்டது. முன்னர் ஒருமுறை அவர் எப்போதோ சொல்லியிருக்கக் கூடும்.

‘உனக்கு வேணுங்கறத நீ போய் ஏன் அவங்கிட்டே கேட்கறே ? உன்னோட மனசு சின்னது. அவனோடது பெருசு. நீயா கேட்டா சின்னதா கேப்பே. அவனா குடுத்தா பெருசா குடுப்பான். அதோட அவங்கிட்டே உனக்கு என்ன செய்யணும்னு சொல்ல நீ யாரு?’, என்பது போல் முன்பு ஒரு முறை அவர் பேசியது நினைவிற்கு வந்தது.

அந்த முரணை நினைத்து சிரித்தேன். ஸாரைத் திரும்பிப் பார்த்தேன். ஆக்ஸிஜன் குமிழ் கீழ் இருந்த அவரது கண் ஓரத்தில் சிறிது கண்ணீர் தெரிந்தது. ஒருவேளை என் மனதில் உள்ளதை உணர்ந்திருப்பாரோ என்று எண்ணியது மனம்.

ஸாரின் ஓய்வூதியம் இருந்ததால் குடும்பம் ஒருவாறு ஓடிக்கொண்டிருந்தது. உண்மையில் ஆடிக்கொண்டிருந்தது என்று சொல்ல வேண்டும். பையனுக்கு வேறு ஊரில் வேலை. ஒரு வாரத்தில் இரண்டு நாள் வேலைக்குச் சென்றுவிட்டு மீத நாட்களில் சென்னை வந்து விடுவான். அவனது குடும்பம் ஊரில் தனியாக இருந்தது. ஸாரின் மனைவி சென்னையில் உறவினர் வீட்டில் இருந்தார். தினமும் காலையில் மருத்துவமனை வந்து இரவு கடைசிப்பேருந்தில் திரும்பிச் செல்வார். இரவு ஸாருடன்  நானோ, ஸாரின் தம்பியோ இருப்போம். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை எழுந்து அவருக்கு ஏதாவது வேண்டுமா என்று பார்த்துக்கொள்வோம்.

ஒரு முறை அவர் வந்து ஓய்வூதியப் படிவத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் அதன் பின்னர் தான் அவருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் ஒரு கடிதம் வந்தது. அவர் சென்னையில் இருக்கும் நிலையில், மயிலாடுதுறை சென்று கையெழுத்திட வேண்டுமாம். நிகழ் காலத்தின் இரக்கமற்ற நிலையைப் பார்த்தேன். அந்த அரசு அலுவலருக்கு நீண்ட ஒரு கடிதம் எழுதினோம்- அவரால் வர முடியாது, மருத்துவமனையில் இருக்கிறார் என்று சொல்லி எழுதி இருந்தோம். அவர்களிடமிருந்து ஒரு மாதம் கழித்து பதில் வந்தது. ‘அரசு சட்டத்தின் படி ஓய்வூதியக் காரர் இன்னனும் உயிருடனேயே உள்ளார் என்று எங்களுக்குத் தெரிய வேண்டும். ஆகவே அவர் வந்து தான் ஆக வேண்டும் …’ என்கிற ரீதியில் கடிதம் வந்தது.

‘நான் இன்னமும் உயிருடன் தான் இருக்கிறேன். ஒருவேளை போய்விட்டால் மகன் சொல்லியனுப்புவான்..’ என்கிற ரீதியில் பதில் போட்டுவிடலாமா என்று பற்றிக்கொண்டு வந்தது. ஸாரின் குடும்பம் இருக்கும் நிலையில் அவரது ஓய்வூதியம் மிகவும் அவசியமானதாக இருந்தது. அதனால் ‘கெத்து காட்டுவது’ முதலானவை வேண்டாம் என்று மனதை அமைத்திப்படுத்திக் கொண்டேன். நிதர்சனம் பல்வரிசை அனைத்தும் காட்டி நின்றது.

ஒரு நீதிபதியிடம் கையெழுத்து வாங்கி ஒருவாறு ஓய்வூதிய பிரச்சினை தீர்ந்தது.

மருத்துவமனை பயமுறுத்தியது.  ஒரு வாரம் கெடு கொடுத்தது.

உதவி கேட்டுப் படையெடுப்பு துவக்கினோம். எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் இருந்த ஒரு பெரிய அமைச்சர் ஒருவரிடம் இந்தக் கடிதம் கொடுத்தோம். மீண்டும் அழைப்பதாகக் கூறினார். பதில் இல்லை. சொல்லாமலேயே அவர் வீட்டுக்குச் சென்றோம். வாசலிலேயே தடுத்து வைக்கப்பட்டோம். பிறகு பார்ப்பதாகக் கூறி அனுப்பினார் அவர். இன்று வரை பதில் இல்லை.

மருத்துவமனை இருந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஒரு முன்னாள் நடிகர். அவரைச் சென்று சந்தித்தோம். மன்னிக்கவும். சந்திக்க முயற்சி செய்தோம். பல அலைக்கழிப்புகளுக்குப் பின் அவர் ஒரு நாள் காலை ‘நடைப் பயிற்சி’ செய்ய வீட்டை விட்டு வெளியே வரும் போது ஓடிச்சென்று பேசினோம். சரியாக ஒரு நிமிடம் பேசினார். ‘ இதப் பாருங்க, நான் ஒன்று செய்ய முடியும். முதல்வருக்கு ஒரு கடிதம் கொடுக்க முடியும். ஆனால் பயன் ஒன்றும் இல்லை. ஒரு வாரம் கழித்து வந்து வாங்கிக்கொள்ளுங்கள்’, என்று வேகமாகச் சொல்லி காரில் ஏறிச் சென்று விட்டார். 67 வயதான ஸாரின் தம்பியும் நானும் விதியையும் எங்கள் நிலையையும் கண்டு மயிலாப்பூர் வீதியில், சொல்லப்போனால் நடுத்தெருவில், கையாலாகத் நிலையில் நின்றுகொண்டிருந்தோம். ஸாரின் தம்பி ஒரு அரசு நிறுவனத்தில் பணி ஓய்வு பெற்றவர். சுதந்திர இந்தியாவில், தமிழ் மொழியை வாழ வைக்கவே பிறப்பெடுத்த தமிழகத்தில், தமிழ்ப் புலவர் ஒருவர் மருத்துவமனையில் கேட்பாரற்று கிடந்தார். நாங்கள் ஒன்றும் செய்ய முடியாமல் தெருவில் நின்றோம்.

ஒரு சில வருடங்களுக்கு முன்பு ஸார் அதே மயிலாப்பூரில் ஒரு கோவிலில் ‘நாராயணீயம்’ உபன்யாஸம் செய்தார். கோவிலில் ஒரே கூட்டம். பாராட்டு எல்லாம் கிடைத்தது. அதே சாலை வழியாக அவரைக் காரில் அழைத்து வந்து கொண்டு விட்டார்கள். ஆனால் அதே தெருவில் நாங்கள் செய்வதறியாது நின்றுகொண்டிருந்தோம்.

அடுத்த அஸ்திரம் தயாரித்தார் ஸாரின் தம்பி. ஒரு சமயத் தலைவரிடம் சென்று அவர் மூலமாக ஒரு முன்னாள் அரசு அதிகாரியைப் பிடித்து, அவரது மூலமாக அந்த மருத்துவமனையின் தலைவருக்கு ஒரு வேண்டுகோள் வைத்தார். ‘உங்கள் மருத்துவமனையில் இருக்கும் ஸார் ஒரு நல்லாசிரியர் விருது பெற்றவர். 18 தமிழ் நூல்கள் எழுதியுள்ளார். பல பல்கலைக்கழகங்களில் பேருரை ஆற்றியுள்ளார். ஆகவே அவரது மருத்துவச் செலவை சற்றுக் குறைத்துக் கொள்ளவும்’, என்ற ரீதியில் பல சான்றுகள் இணைத்து மனு போல் எழுதிக் கொண்டு சென்றார். மருத்துவமனையின் தலைவரின் மகளின் உதவியாளருக்கு வேண்டியவரின் மனைவி மூலமும் சொல்லப்பட்டது. மருத்துவத்தின் செலவு ஒரு லட்சம் இறங்கியது. ஆனாலும் 18 லட்சத்திற்கு எங்கே போவது ? ஸாரும் குணம் அடையவில்லை. ஆனால் பணமோ கட்டியாக வேண்டும்.

‘நீங்கள்ளாம் படிச்சவங்க. இந்த பேஷன்ட் இப்படியே தான் இருப்பார். இங்கே இருந்து அழைத்துக்கொண்டு போகவும் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். நீங்களாகவே முடிவு செய்து கொள்ள வேண்டியது தான். இது நீங்கள் படும் கஷ்டம் பார்த்து நானாகச் சொல்கிறேன்’, என்று பீகாரைச் சேர்ந்த ஒரு மருத்துவர் சொன்னார். ஸாரைப் பார்த்துக்கொண்ட நரம்பியல் துறைத் தலைமை மருத்துவர்,’எனக்கு ஃபீஸ் ஒன்றும் வேண்டாம். என்னால் இப்படித்தான் உதவ முடியும்’, என்று தனது ஊதியம் சுமார் 1 லட்சத்தை விட்டுக்கொடுத்தார்.

இப்படியாக மொத்த செலவு 16 லட்சமாகக் குறைந்தது. இதுவும் எட்டாக் கனியே. ஆனால் 18 ஐக் காட்டிலும்  குறைவுதான். இருந்தது போனது என்று பலதையும் விற்று, கடனும் வாங்கி அவரது மகன் மருத்துவமனைப் பணம் பங்கீடு செய்தான்.

ஆனது ஆகட்டும் என்று ஸாரை மருத்துவமனையில் இருந்து வெளியே கொண்டு வந்து விட்டோம்.

வீட்டிலேயே வைத்து வைத்தியம் செய்தார்கள்.

மூன்று ஆண்டுகள் படிக்கையிலேயே இருந்தார் ஸார். பேச்சும் வரவில்லை. அவரது பழைய பேருரைகளை அவர் காதுகளில் விழும்படி பெரிய சத்தத்தில் ஒலி பெருக்கியில் வைத்துக்கொண்டே இருந்தார்கள். அவர் எதையும் கண்டுகொள்ளவில்லை போல் வேறு எங்கோ பார்த்துக்கொண்டிருந்தார். பல முறை என்னவெல்லாமோ சொல்ல வந்தார். ஆனால் எங்களுக்குப் புரியவில்லை.

பின்னர் ஸார் மூன்று வருடங்கள் கழித்து 2010-ல் இறைவனடி சேர்ந்தார் என்று கேள்விப்பட்டேன்.

சென்று பார்க்கத் திராணி இல்லாததால் நான் போகவே இல்லை.

அதன் பிறகு நான் மாயவரத்திற்குச் செல்லவில்லை.

ஸாருடன் நடந்தபடி பாடம் கேட்ட தெருக்களிலும், அவர் நடந்த புழுதிகளிலும் நான் மட்டும் தனியாக நடக்க எனக்குத் தைரியம் இல்லை.

Advertisements

2 thoughts on “மாயவரம்

  1. சாரின் சாவு சோகத்தின் சாறு! அதை அனுபவிக்க அவருடைய மாணவனாக இருக்க வேண்டிய அவசியமேயில்லை. நல்ல நடை!

    Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s