
இந்த முறை தேரழுந்தூர் சென்ற போது கவனிப்பாரற்ற பழைய சிலை ஏதாவது கிடைக்கிறதா என்று சற்று கண்களை அகல விரித்துக்கொண்டு பார்த்தேன்.
நல்ல பௌர்ணமி இரவு அது. கோவிலில் என்னையும் என் தம்பியையும் தவிர ஓரிருவரே இருந்தனர். அவனும் என்னைப்போல் ஒரு வரலாற்றுக் கிறுக்கன். பொழுது போகாவிட்டால் பழையாறை சென்று ஏதாவது சோழர்காலப் பள்ளிப்படை இருக்கிறதா என்று பார்த்து வருவான்.
பெருமாள் சன்னிதியில் இருந்து தாயார் சன்னிதிக்குச் செல்லும் வழியில் ஒரு படி இறக்கத்தில் உள்ள பழைய கல் தூணில் இந்த மானுடனின் வடிவம் தென்பட்டது. நேராகப் பார்ர்க முடியாமல் ஒரு கோணத்தில் இருந்து பார்த்தால் மட்டுமே தெரியும் விதமாக உள்ளது. தூணின் மிக அருகில் கைப்பிடிச் சுவர் ஒன்று கட்டியுள்ளதால் இந்தச் சிலை இருப்பது அதுவரை தெரியவில்லை.
முன்னம் பல முறை, அதே இடத்தில் அமர்ந்து ஆமருவியப்பன் கோவிலின் கட்டடக் கலையை வியந்து பேசியதுண்டு. ஆனால் அப்போதெல்லாம் மிக அருகில் இருந்த இந்தத் தூண் சிற்பம் கண்களில் படவில்லை.
கண்கள் மூடியிருப்பது போலும், கைகள் கூப்பி இருப்பது போலவும் தெரிகிறது இந்த வடிவத்தைப் பார்த்தால். உடலில் ஆபரணங்கள் அதிகம் இல்லை. ஆனால் முகத்தில் ஒரு பெரிய அமைதி தெரிகிறது. ஏதோ எல்லாவற்றையும் அறிந்து அதனால் வேறு எதுவும் வேண்டாம், இறை அனுபவம் மட்டுமே போதும் என்பது போன்ற ஒரு பேரமைதி இந்த ஆடவரது முகத்தில் தெரிகிறது.
இவர் யார் என்று விசாரித்தேன். அப்படி ஒரு தூண் சிற்பம் இருப்பதே பலருக்கும் தெரியவில்லை.
அவரது கைகளில் ஆயுதம் இல்லை. உடலின் மேல் பாகத்தில் ஆடை இல்லை. அதிக ஆபரணங்கள் இல்லை. இடையிலும் பெரிய ஆடைகள் எல்லாம் இல்லை. ஒரு துண்டு போல் ஏதோ ஒன்றை அணிந்துள்ளார். கால் பாதங்கள் தெரியவில்லை. எனவே தண்டை முதலியன அணிந்துள்ளாரா என்பதும் தெரியவில்லை.
யாராக இருக்கலாம் இவர் ?
ஆமருவியப்பன் கோவில் கட்டிய யாராவது மன்னனாக இருக்கலாமா ? முதலாம் பராந்தக சோழன் கட்டியது என்று அறிகிறேன். ஆனால் அரசனுக்கு உரிய எந்த அலங்காரமும் இல்லை.
அரசன் ஏதாவது போரில் வெற்றி பெற உதவிய போர் வீரனாக இருக்கலாமோ ? ஆனால் ஆயுதங்கள் எதுவும் இல்லை.
அல்லது கோவிலை அன்னிய ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து காக்கும் வேலையில் தன் உயிர் இழந்த வீரனாக இருக்கலாமோ ?
அல்லது கோவிலை நல்ல முறையில் கட்டிய ஸ்தபதியாக இருக்கலாமோ ?
கவிச் சக்கரவர்த்தி கம்பர் இந்த ஊர்க்காரர் தான்.
கம்பர் இந்தக் கோவிலில் இருந்து தான் கம்ப இராமாயணம் எழுதியுள்ளார். எனவே அவனது உருவமாக இருக்குமோ ? இருக்கலாம். ஆனால் சற்று இளமையாகத் தெரிகிறது. ஆகவே இருக்க வாய்ப்பு குறைவு. அத்துடன் அவ்ருக்கும் அவரது மனைவிக்கும் தனியாக சன்னிதி உள்ளது. எனவே அவராக இருக்க முடியாது.
ஒருவேளை கம்பனின் மகன் அம்பிகாபதியாக இருக்கலாமோ ? சோழ மன்னனின் மகள் அமராவதியைக் காதலித்த அம்பிகாபதியாக இருக்கலாமோ ? ஆனால் அவனது உருவத்தை இந்தக் கோவிலில் வடிக்க வேண்டிய காரணமென்ன ?
ஒருவேளை அருகில் உள்ள பழையாறையில் இருந்த குந்தவை நாச்சியாரின் அபிமானம் பெற்ற சிற்ப வேலைக்காரராக இருக்கலாமோ ? குந்தவை தான் பல கோவில்களையும் கற்றளிகளாக மாற்றினாள். அவளது ஆசியுடன் இந்தக் கோவிலுக்குத் திருப்பணி செய்த சேனாதிபதி அல்லது ஊழியராக இருக்குமோ ?
இப்படிப் பலவாறு எண்ணிக்கொண்டிருந்தேன்.
அந்த இரவு அமைதியாக இருந்தது. நான் கல் தூண் சிலை முன் அமைதியாக நின்றுகொண்டிருந்தேன்.
எத்தனை ஆயிரம் தலைமுறைகள் இவர் கண் முன்னால் கடந்து சென்றிருக்கும் ?
எத்தனை செறுக்கு மாந்தர்கள் அழிவை இவர் பார்த்தபடி நின்றிருந்திருப்பார் ?
என்னைப் போல் இந்த ஆயிரம் வருடங்களில் எத்துணை பேர் இவரைப் பார்த்தும் பார்க்காமலும் சென்றிருப்பர் ?
இவர் செய்த தியாகம் என்னவோ ? கோவிலுக்கும் கலைக்கும் இவரது பங்களிப்பு என்னவோ ?
எந்த ஒரு பதிலும் பேசாமல் மௌனியாக இதுவரை கடந்து சென்றுள்ள வரலாறுகளுக்கும் வர இருக்கின்ற நிகழ்வுகளுக்கும் சாட்சியாக இவர் நின்றுகொண்டிருக்கிறார்.
எத்தனை நேரம் அவர் முன் நின்றிருப்பேன் என்று தெரியவில்லை.
‘இந்த ஆயிரம் ஆண்டுகளில் ஏதோ நீயாவது என்னைப் பற்றி நினைத்தாயே’, என்று அவர் நினைப்பது போல் உணர்ந்தேன்.
வெகு அருகில் யாரோ நன்றியுடன் பெருமூச்சு விடுவது போல் பட்டது.
திடீரென்று என் உடம்பு சில்லிட்டது போல் உணர்ந்தேன்.
சுற்றும் பார்த்தேன். யாரும் இல்லை. ஒரு வௌவால் மட்டும் பறந்து சென்றது.
வானில் நிலா மட்டும் காய்ந்துகொண்டிருந்தது. நிலா வெளியில் நானும் இந்தப் பெயர் தெரியாப் பெருமகனும் ஒரு மௌன சம்பாஷணை நிகழ்த்திக்கொண்டிருந்தோம்.
என் மனதிற்குள் வேண்டிக்கொண்டேன்.
‘நீங்கள் யாரோ எவரோ. இத்தனை ஆண்டுகள் இந்தக் கோவில் எனும் கலைப் பொக்கிஷத்தைக் காவல் காத்தபடி நின்றுகொண்டிருக்கிறீர்கள். நீரே காவல் வீரர் ஆகுக. நீரே இதன் சிற்பி ஆகுக. நீரே இந்தப் பரந்த சோழ ராஜ்ஜியத்தின் காவலன் ஆகுக.
இத்தனை ஆண்டுகள் பத்திரமாகக் காத்திருந்து, காவல் இருந்து இந்த வரலாற்றுத் தொன்மத்தை எங்கள் தலைமுறை வரை காத்து வந்துள்ள உமக்கு எனது நன்றிகள்’.
யாராக இருக்கலாம் இவர்? என்ற சந்தேகம் வந்ததில் பெரு மகிழ்ச்சி! தொடர்ந்து எத்தனை சரித்திர புருஷர்கள் உங்கள் எண்ண மாளிகையில் சோழ நடை போடுகிறார்கள்? தேரழந்தூரை – கோவிலை- பார்க்கும் ஆவலைத் தூண்டிய அருமையான சிறு கட்டுரை! -ஏ.பி.ராமன்.
LikeLike
Thanks sir. Your constant encouragement is definitely a great source of
strength.
LikeLike
சுஜாதாவின் ஸ்ரீரங்கத்தில்….
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உன் தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது;
– ஆண்டாள் அருளிய திருப்பாவை( 28 )
இந்த வரிகளுக்கு எளிய விளக்கம்:
“எந்தக் குறையும் இல்லாத கோவிந்தா;
நமக்குள் உண்டான உறவு, உன்னாலோ, எங்களாலோ ஒழிக்க முடியாதது.”
சின்ன வயதில் அப்பாவுடன் ஸ்ரீரங்கம் கோயிலுக்குப் போகும்பொழுது, கோயில் தூண்களை அப்பா தொட்டுப்பார்த்துக்கொண்டே வருவார். ஒரு நாள் அவரிடம் அதுபற்றிக் கேட்டபோது “இந்தத் தூண்களை திருமங்கையாழ்வார் தொட்டுப் பார்த்திருப்
பார்; அவர் தொட்ட தூண்களை நானும் தொடுகிறேன். நீயும் தொட்டுப் பார்” என்பார்.
அதே போல் ஆயிரங்கால் மண்டத்துக்குப் போகும்வழியில் இருக்கும் மணல் மீது, பொசுக்கும் மத்தியான வெயிலையும் பொருட்படுத்தாது சிலசமயம் நடந்து செல்வார். ” ஏம்ப்பா வெயில்ல போற?” என்று கேட்டால், “யாருக்குத் தெரியும்? இந்த இடத்தில எத்தனையோ ஆழ்வார்கள் நடந்து போயிருப்பா. அவா போன பாதைல நாம போறோம்கறதே பெரிய விஷயம் இல்லையா?” என்பார்.
அப்பா கைபிடித்துக்கொண்டு போன அந்த வயதில், அவர் சொன்னது பெரிய விஷயமாகப் படவில்லை, அல்லது அதில் பொதிந்துள்ள அர்த்தத்தை என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை.
அவர் ஆசார்யன் திருவடிகளை அடைந்து சில நாட்கள் கழித்து, அவரது தம்பி எனக்கு ஒரு மெயில் அனுப்பியிருந்தார். நான் மேட்டு அழகியசிங்கர் கோயிலுக்குச் சென்றபோது அவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள் என்பதன் விபரம் அதில் இருந்தது.
”
….. ஸ்ரீரங்கமும், ஸ்ரீரங்கம் பெரிய பெருமாளாகிய நம்பெருமாளை சேவிக்கும் போதும், நம்மை ஒருவித பரவசமான மனநிலைக்கு ஏன் ஆட்படுத்துகின்றன என்று அந்த உணர்வுக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க பல சமயம் நினைததுண்டு. மற்ற திவ்யதேசங்களில் இல்லாமல், ஏன் ஸ்ரீரங்கத்தில் மட்டும் இத்தகைய உணர்வு வருகிறது என்று நானும் என் சகோதரனும் (ரங்கராஜன்) அன்று பேசிக்கொண்டோம். யாதும் ஊரே என்றாலும், சொந்த ஊர் ஏன் நம்மை நெகிழவைக்கிறது? பிறப்பணுவிலேயே(Genes) சொந்த ஊர், மொழி உணர்வு எல்லாம் வந்துவிடுகிறதோ ?
அதற்கான காரணம் ‘இந்தப் பெருமாளை சேவிக்கும்போது, நம் தாய் தந்தையர், பாட்டனார், முப்பாட்டனார்களை இந்தப் பொருமாளின் மூலம் பார்க்கிறோம்’ என்பதை அன்று உணர்ந்தோம். அவர்கள் பலப் பல வருடங்களாக இந்தப் பெருமாளின் முக விலாசத்தைப் பார்த்துப் பார்த்து இவனையே சிந்தித்து வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் இவனுள்ளேயே வாழ்கிறார்கள்; இவன் பாதங்களையே சென்றடைந்திருக்கிறார்கள்; நம் வாழ்வுகளுக்கு ஓர் இடைவெளியற்ற தொடர்பை இவனே ஏற்படுத்திக் கொடுக்கிறான். கோயில் தூண்கள் சிலவற்றைத் தொட்டுக்கொண்டு, நம் முன்னோர்கள் கால்வைத்து ஏறியபடிகள் மீது நடந்துகொண்டு நாங்கள் இவரும் இந்தக் கருத்தைப் பரிமாறிக்கொண்டோம். அப்போது எங்கள் முன்னோர்கள் தங்களின் குழந்தைகளைப் பார்ப்பது மாதிரி உணர்ந்தோம். பெருமாளை நன்றாக சேவிக்கும்போது அந்த திவ்யமங்கள ரூபத்தில் எங்கள் தாய் தந்தையரை பார்க்கும்படியும் ரங்கராஜனிடம் சொன்னேன். அவனும் ‘ஆம், அது தான் உண்மை’ என்று ஆமோதித்தான். அந்த உண்மையை தான் அறிந்ததால்தான் இங்கு வந்து பெற்றோருடன் நெருக்கமாக இருக்கும் ஆர்வம் மேலோங்கியதாகச் சொன்னான்.
அவன் உயிருடன் இருக்கும்வரை அந்த ஆசையைப் பூர்த்திசெய்துகொள்ள இயலவில்லை; ஆனால் தற்பொழுது அவனது ஆத்மாவும் ரங்கநாதனுடன் ஐக்கியமாகிவிட்டது….”
http://sujathadesikan.blogspot.co.uk/2010/02/blog-post_19.html
LikeLike