அங்கலேஷ்வர். அங்குதான் இறங்க வேண்டும். ஆமதாபத் வரை ரயிலில் வெந்து தணிந்து ஆடி எல்லா வகையான அசைவுகளையும் அனுபவித்து ஒருவாறு வந்து சேர்ந்தேன். நான் ஒரு பக்கம் நடந்தால் உடம்பு இன்னொரு பக்கம் சென்றுகொண்டிருந்தது. அங்கலேஷ்வர் வரையில் பஸ் பயணம். சுமாரான ரோடு தான்.
இரயிலின் ஆட்டம் தேவலாம் என்னும்படியாக இருந்தது பஸ் பயணம். ரோடு என்று ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை.
அங்கு சென்று ஒரு சி.டி. பெற்றுக்கொண்டு ஆனந்த் செல்ல வேண்டும். ஆனந்தில் எட்டு மாதம் வேலை. இந்தியாவின் பசுமைப் புரட்சியின் நாயகர்களின் கை வண்ணத்தில் உருவான மாபெரும் பால் மற்றும் பால் சாந்த பொருட்கள் உற்பத்தி மையம் ஆனந்த். ‘அமுல்’ என்ற பெயரை நீங்கள் கேட்டிருக்கலாம்.
ஆனந்தில் தான் எனக்கு மென்பொருள் வேலை. பால் பொருட்கள் உற்பத்தி நிலையத்தில் மிகப் பெரிய அளவில் மென்பொருளாக்கம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. இரண்டு மாதங்களுக்கு முன்னர் பதவி ஏற்ற புதிய மேலாளர் நேரிடையாக இந்த கணினிமயமாக்கலை கவனித்து வந்ததாக எங்கள் நிறுவனத்தில் கூறினர். எனவே ரொம்பவும் ஜாக்கிரதையாக நிறைவுத் தேதிகள் அனுசரிக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தேன்.
ரோடுகளே இல்லாத இந்த ஊரில் பால் தயாரிக்க எதற்கு கணினி என்று என் மனதில் கேள்வி இருந்தது. ஆனால் ஆனந்தில் உள்ள ‘அமுல்’ நிலையத்தின் உள்ளே சென்றவுடன் முன் ஒருமுறை இந்திய விண்வெளிக் கழக நகர்ப்புறம் சென்றது போன்று தோன்றியது. ஆனந்தில் உள்ள அமுல் தொழிற்கூடம் ஒரு தனி ஊரமைப்பு. டௌன்ஷிப் என்று சொல்வார்கள். எல்லா வசதிகளும் கொண்டது. பாதுகாக்கப்பட்ட பகுதி. வேலை செய்யும் இடமும் வசிக்கும் வீடுகளும் ஒரே இடத்தில் இருக்கும். படித்த நடுத்தர மக்கள் வேலை செய்து குடியிருக்கும் பகுதி அது. அந்த இடத்தில் எனக்கு ஒரு கெஸ்ட் ஹவுஸ் கொடுத்தார்கள்.
ஏழு மாதம் வரை இரவு பகல் வேலை. டௌன்ஷிப்பை விட்டு வெளியே செல்லவேண்டிய தேவையே இல்லாமல் அல்லது அதற்கு நேரமே இல்லாமல் பணி ரொம்பவும் கடினமாக இருந்தது. புதிய மேலாளர் எங்களை சாறு பிழிந்துகொண்டிருந்தார். எங்கள் கணினி நிறுவனத்தின் மேலிடமும் இந்த ஒப்பந்தப்புள்ளி ரொம்பவும் முக்கியம் எனவும் இந்த ப்ராஜக்டின் வெற்றியைக் கொண்டு குஜராத் அரசிடம் பல புதிய ப்ராஜக்டுகள் பெற வேண்டும் என்றும் அதனால் மேலும் அழுத்தம் கொடுத்து வேலை வாங்கினார்கள்.
ஆனாலும் டௌன்ஷிப்பை விட்டு வாரம் ஒருமுறை வெளியே செல்வது போல் அமைந்தது. டௌன்ஷிப்பிற்குள் சைவ உணவு மட்டுமே அனுமதி. கேண்டீன்களும் சைவமே. நானோ வங்காளி. எனக்கு சோற்றில் மீன் இல்லாமல் உணவே இறங்காது. அத்துடன் இந்த வேலை அழுத்தம் வேறு.
அந்த நேரத்தில் தான் அமீன் பாய் அறிமுகம் ஆனார். டௌன்ஷிப்பை விட்டு வெளியில் மெயின் ரோடு தாண்டி ஒரு அசைவ விடுதி நடத்தி வந்தார். அவருக்கு 60 வயது இருக்கலாம். அவருக்கு உதவியாக அவரது இரண்டு சகோதரர்களும் பணி புரிந்து வந்தனர். அவர்கள் கடையில் சமைத்த ஆடு எனக்கு மிகவும் பிடிக்கத் துவங்கியது. குஜராத்திய முறையில் அவர் சமைத்துத் தருவார். நான் வங்காளி என்று தெரிந்து எனக்காக மீன் சமையல் செய்தும் தந்து வந்தார்.
வெள்ளிக்கிழமை அவரது கடையில் விசேஷ உணவு உண்டு. ஆனால் நான் வெள்ளி அன்று அசைவம் உண்ண மாட்டேன் என்று அறிந்து அவர் எனக்காக சைவ சமையல் தனியாகச் செய்யச் சொல்வார்.
என் அறிமுகத்தால் அவருக்கு என்னுடன் பணியாற்றிய வேறு சில வங்காளிகள் வாடிக்கையாளர்கள் ஆனார்கள். எனவே எனக்கு சிறப்பு உபசரிப்புகள் செய்வார் அமீன். நான் அவரை ‘பாய்’ என்றுதான் அழைப்பது வழக்கம்.
பேச்சு வாக்கில் என் தந்தையின் இடது சாரி சிந்தனைகள் பற்றிச் சொல்லியிருக்கிறேன். அவர் பல ஆண்டுகள் சிறையில் இருந்த நிகழ்வுகள், நக்சல்பாரி இயக்கத்தில் அவரது பங்கு என்று பலவற்றையும் பேசியிருக்கிறேன். கடவுள் மறுப்பு பற்றி அவரிடம் பேச மனம் வரவில்லை. வெள்ளி அன்று தொழுகை செய்யும் அவரிடம் அது பற்றிப் பேசாமல் இருப்பதே மேல் என்று நினைத்து விட்டுவிட்டேன். அவர் என்னை கடவுள் நம்பிக்கை உள்ள இந்து என்று நினைத்துக்கொண்டிருந்தார்.
என்னைப் பொருத்தவரை கடவுள் என்று ஒன்று இருக்கலாம். ஆனால் அது பற்றிய பேச்சுக்களும், ஆராதனைகளும் தேவை இல்லை என்று நினைப்பவன். இது பற்றியும் அவரிடம் பேசியுள்ளேன்.
இப்படிப் பேசும் போது அவரது சகோதரர்களும் எங்களுடன் வந்து அமர்ந்து விடுவர். ஒரு முறை அவரிடம்,’இஸ்லாத்தின் இறைவன் மட்டுமே உண்மை என்றும், அவரை நம்பாதவர்கள் காஃபிர்கள் என்பதால் அவர்கள் அழிக்கப்பட வேண்டும் என்றும் கூறுகிறீர்களே, நான் கடவுளே தேவை இல்லை என்று கூறுபவன். ஆதலால் என்னையும் அழிக்கவேண்டும் என்று உங்கள் மதம் கூறுகிறதா?’, என்கிற ரீதியில் கேட்டுவிட்டேன்.
கேட்ட பிறகு தான் ஒரு வேளை கேட்டது தவறோ என்று நினைத்தேன். எங்கள் வங்காளத்தில் எதையும் வெளிப்படையாகப் பேசியே வழக்கம். என் தந்தையும் தாயும் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இருந்ததால் இப்படியெல்லாம் பேசுவது சகஜம்.
அமீன் பாய் ஒன்றும் கூறவில்லை. மௌனமானார். அவரது சகோதரர்கள் விருட்டென்று எழுந்து கொண்டார்கள். அமீனிடம் குஜராத்தியில் என்னவோ கோபமாகப் பேசினார்கள். ‘என் கதை முடிந்தது’, என்று நினைத்தேன்.
அமீன் பாய் அவர்களைக் கையமர்த்தினார். எனக்குப் புரிய வேண்டும் என்று ஹிந்தியில் பேசினார்.
‘இவர் நம் கடையின் வாடிக்கையாளர். நெடு நாள் வாடிக்கையாளர். அவரது கொள்கை வேறு. இவர் சார்ந்துள்ள இடது சாரி இயக்கங்கள் அப்படி இவரைக் கொண்டு சென்றுள்ளன. இவரை மாற்ற முடிந்தால் மாற்றுவோம். இல்லை என்றால் அல்லாவிடம் விட்டு விடுவோம்’, என்கிற ரீதியில் தன் தம்பியரிடம் சொன்னார். அவர்கள் சமாதானம் அடைந்ததாகத் தெரியவில்லை.
இந்த நிகழ்ச்சி நடந்த பின்னும் அவர் கடைக்குச் சென்றுகொண்டிருந்தேன். அவரது சேவையில் ஒரு குறைவும் இல்லை.
ஆனால் உண்மையான மத நம்பிக்கை உள்ள ஒரு பெரியவரிடம் துடுக்குத் தனமாகப் பேசிவிட்டேன் என்ற குற்ற உணர்ச்சி மேலிட்டது உண்மை.
திடீரென்று அமீன்,’ இன்றிலிருந்து 9 நாட்களுக்கு உங்களுக்கு சைவ சாப்பாடு தான்’, என்றார். அன்றிலிருந்து துர்கா பூஜா தொடங்குவது அவருக்குத் தெரிந்திருந்தது.
அசைவம் ஒன்றையே தொழிலாகக் கொண்ட ஒரு வியாபாரி, ஒரே ஒரு வங்காள வாடிக்கையாளருக்காக 9 நாட்கள் சைவ உணவு கொடுக்கிறேன் என்று சொன்னது எனக்கு ஆச்சரியம் அளித்தது. துர்கா பூஜா கிழக்கு மாநிலமான வங்காளத்தின் ஒரு நிகழ்வு. ஆயிரம் மைல் தொலைவில் மேற்கில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரே ஒரு வாடிக்கையாளருக்காக அசைவ வியாபாரி முனைந்து சைவம் சமைக்கிறார். அதுவும் நான் கேட்காமலே. இந்த நாட்டின் பண்பாடு மீது என் இடது சாரிச் சிந்தனை அளித்திருந்த அவநம்பிக்கை அடிபட்டு வீழ்ந்தது.
இப்படியாக இன்னொரு நான்கு மாதங்கள் கழிந்தன.
அன்று பிப்ரவரி 27. அந்த மாதம் முடிய இரண்டு நாட்களே இருந்தன. இரண்டு நாட்களுக்குள் இந்த மென்பொருள் கட்டமைப்பு வேலையை முடித்தாக வேண்டும். இரவு பகல் வேலை. அலுவலகத்திலேயே உணவு அளித்தார்கள். வெளியே வர வேண்டிய வேலையே இல்லை. சுமார் ஒரு வாரமாக இப்படித்தான் வேலை செய்துகொண்டிருந்தோம்.
முந்தின நாள் இரவு வெகு நேரமாகிவிட்டதால் அன்று காலை 5 மணிக்குத்தான் கெஸ்ட் ஹவுஸ் வந்தேன். அசதியில் தூங்கி விட்டேன். உடன் பணியாற்றும் நண்பர் மாலை 7 மணிக்கு வந்து எழுப்பினார். மூன்று நாட்கள் தூங்காததால் நேரம் காலம் தெரியாமல் தூங்கிவிட்டிருந்தேன். பசி என்னும் உணர்ச்சி மட்டுமே மேலோங்கி இருந்தது. வயிற்றுக்குள் அமிலம் கனன்று எரிந்தது போல் உணர்ந்தேன்.
அமீன் கடைக்குச் செல்லலாம் என்று முடிவானது. மெதுவாக எழுந்து தயாராகி அமீன் கடை செல்ல இரவு 9 மணி ஆகி விட்டது.
வழக்கத்திற்கு மாறாக சாலையில் போக்குவரத்து அதிகம் இல்லை. அமீன் கடையில் நாங்கள் தான் ஒரே வாடிக்கையாளர். அமீன் ஏதோ கவலையில் உள்ளது போல் பட்டது.
கடந்த மூன்று நாட்களின் அலுவலக நிகழ்வுகள் பற்றிக் கேலியும் கிண்டலுமாகப் பேசியபடி நாங்கள் உண்டுகொண்டிருந்தோம். வழக்கமாக ஓடிக்கொண்டிருக்கும் தொலைக்காட்சிப் பெட்டி ஓட வில்லை. அது சற்று வித்யாசமாக இருந்தது.
திடீரென்று எங்கிருந்தோ இரண்டு டாடா சுமோக்கள் வேகமாக வந்து நின்றன.
உள்ளிருந்து சுமார் இருபது இஸ்லாமிய இளைஞ்ர்கள் வேகமாக இறங்கினார்கள். அவர்கள் அனைவரும் தலையில் தொப்பி அணிந்திருந்தனர். பலரின் கைகளில் இரும்புக் கடப்பாரைகளும், கத்திகளும் இருந்தன. நான் இதனை முதலில் கவனிக்க வில்லை. நண்பன் தான் வங்காளத்தில் சொன்னான்,’ ஏதோ பிரச்சினை போல் தெரிகிறது’, என்று அடிக்குரலில் சொன்னான்.
அந்த இளைஞர்கள் ஆக்ரோஷமாகப் பேசிக்கொண்டிருந்தனர். சில டேபிள்களை வேகமாக இழுத்துப் போட்டனர். தலைவன் போல் தெரிந்த ஒருவன் குஜராத்தியில் கோபத்துடன் பேசிக்கொண்டிருந்தான். ஏதோ வன்முறை பற்றிப் பேசுகிறான் என்று தெரிந்தது.
திடீரென்று அந்தக் கும்பலில் ஒரு இளைஞன் எங்கள் பக்கம் திரும்பி ஏதோ சொன்னான். கூட்டம் அப்படியே எங்கள் பக்கம் திரும்பிப் பார்த்தது. நிலைமையின் தீவிரத்தன்மை எனக்கு உறைக்கத் துவங்கியது.
அவர்கள் எங்களை ‘ஹிந்துக்கள்’ என்று கண்டு கொண்டார்கள் என்பது புரிந்தது. ஒரு தீவிர இளைஞன் எங்களை நோக்கி ஒரு கைத்தடியை நீட்டி ஏதோ சொன்னான். உடன் இரண்டு இளைஞர்கள் எழுந்து வரத் துவங்கினார்கள்.
‘நம் கதை முடிந்தது’ என்று எங்களுக்குத் தோன்றியது. அதுவரை உண்ட அனைத்தும் ஒரு சேர மேலெழும்பி வருவது போல் பட்டது.
அப்போது ஒரு பேரதிர்வு ஏற்பட்டது. அமீன் பாய் ஒரு நாற்காலியைத் தூக்கித் தரையின் மீது ஓங்கி அறைந்தார். இளைஞர்கள் திடுக்கிட்டு நின்றனர்.
குஜராத்தியும், உருதுவும் கலந்த ஒரு மொழியில் உரத்த குரலில் பேசத் துவங்கினார்.
‘இவர்கள் என் வாடிக்கையாளர்கள். இவர்கள் என் நிழலில் இருக்கும் வரை என் பாதுகாப்பில் இருப்பவர்கள். அல்லாஹ்-ன் மீது ஆணை. ஒரு அடி எடுத்து வைத்தாலும் அமீன் சும்மா இருக்க மாட்டான். அமீன் ரத்தம் சிந்தாமல் இவர்கள் இரத்தம் நீங்கள் பார்க்க முடியாது’.
வெறி பிடித்தவர் போல் கத்தினார் அமீன். பாரசீகத்திலிருந்து வந்துள்ள ஒரு போர் வீரன் போல் தோன்றியது எனக்கு.
தொடர்ந்து அவரது தம்பிகளுக்கு ஏதோ சொன்னார். அவர்கள் உடனே நாங்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்த பண்டங்களை ஒரு பெரிய பையில் போட்டு என்னிடம் கொடுத்தனர். நடப்பது புரியாமல் நானும் வாங்கிக் கொண்டேன்.
வேகமாக என் கையைப் பிடித்து எழுத்தவாறு கடையைவிட்டு வெளியறினார் அமீன். இழுத்துச் சென்றார் என்பதே சரி. நண்பர்களும் உடன் வந்தனர்.
கையில் ஆயுதம் ஏந்திய அந்த இளைஞர்கள் கடை வாசல் வரை பின் தொடர்ந்தனர்.
அமீன் சிங்கம் போல் உருமினார். அவர்களை நோக்கி ஏதோ கத்தினார். சன்னதம் கொண்டவர் போல் காணப்பட்டார். ‘குதா கி கசம்’ – இறைவன் மீது ஆணை’ என்று முடித்தது மட்டும் புரிந்தது.
மூன்று நாட்கள் தூங்காததால் எனக்கும் தலை சுற்றுவது போல் வந்தது.
விறு விறுவென்று ‘அமுல்’ நிறுவனத்தின் வாசல் வரை கொண்டு விட்டார்.
‘ஓடுங்கள். வெளியே வராதீர்கள். மீண்டும் சந்திப்போம்’ என்று சொல்லி உள்ளே பிடித்துத் தள்ளி விட்டார்.
சில அடிகள் சென்றிருப்பேன்.
‘பங்காலி பாபூ’, என்று அவர் எப்போதும் அழைக்கும் குரல் கேட்டுத் திரும்பினேன்.
என்னை நோக்கி ஓடி வந்த அவர் கட்டிப் பிடித்துக் கொண்டார். அவர் அழுவது தெரிந்தது.
அடுத்த இரண்டு மாதம் எங்களுக்கு வேலை எதுவும் இல்லை. கெஸ்ட் ஹவுஸ் விட்டு வெளியே வர வேண்டாம் என்று எங்களுக்கு உத்தரவு. குஜராத்தை விட்டு வெளியேறுவதற்கும் வழி இல்லை. ஆடுகள் போல் வீட்டிற்குள்ளேயே அடை பட்டுக் கிடந்தோம்.
நாங்களும் அந்தக் குடியிருப்பில் வசித்த மற்ற குடும்பங்களும் கொதிக்கும் வெந்நீரைப் பெரிய பாத்திரத்தில் எப்போது தயாரக வைத்திருந்தோம். எந்நேரமும் யாரும் வரலாம் என்பதால் தொடர்ந்த விழிப்பு நிலையிலேயே இருந்தோம்.
தினமும் தொலைக்காட்சி பார்ப்பது, பலருடன் கூடிப் பேசி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது என்று தினமும் இதே வேலையாக இருந்தது.
மார்ச் மாத இறுதியில் சகஜ நிலை திரும்பியது என்றார்கள். நாங்கள் வெளி உலகம் பார்க்கக் கிளம்பினோம்.
முதலில் நான் பார்க்க விரும்பியது அமீன் பாயை. அவருக்கு நன்றி சொல்லிவரச் சென்றேன்.
அவரது கடை இருந்த இடத்தில் கரிய நிறத்தில் நிலம் மட்டும் இருந்தது.
———————————————————————————————————
இது உண்மைச் சம்பவம், தற்போது என் உடன் பணியாற்றும் சுமன் குமார் தாஸ் என்னும் மென் பொறியாளரின் நேரடி அனுபவம் இது.
கதைக் களம்,மனக் களம் இரண்டுமே கரை தட்டாமல் செல்கின்றன.
LikeLike