இந்நேரம் மணி கிளம்பியிருப்பான்.
விமான நிலையம் வரை கொண்டு விட்டு வந்தேன்.
வெள்ளி என்றாலே கொண்டாட்டம் தான். மாலையில் பாட்மிண்டன் விளையாடுவோம். சரியாக ஆறரை முதல் எட்டரை வரை எங்கள் ஆட்டம் உண்டு. கடந்த 8 ஆண்டுகளாக அப்படித்தான். திருமணம் ஆகாமல் இருந்த போதிருந்து எங்களுக்கு இந்தப் பழக்கம் உண்டு. பின்னரும் தொடர்ந்தது.
ஆனால் இனிமேல் இந்த ஆட்டம் தேவை இல்லை. ஆட முடியாது.
ஏனென்றால் மணி ஊருக்குப் போகிறான்.
சொல்ல மறந்து விட்டேன். நேற்று அவன் அலுவலகம் வரும் வழியில் மழையில் வண்டி வழுக்கி சாலையில் விழுந்து அடிபட்டது.
எனவே ஊருக்குப் போகிறான்.
விமான நிலையம் வரை கொண்டு விட்டு வந்தேன் என்றா கூறினேன் ?
சிறிய தவறு நடந்துவிட்டது. மன்னிக்கவும்.
விமானத்தில் ஏற்றி விட்டு வந்தேன்.
அவன் படுத்திருந்த பெட்டியை.