முதலில் ஜெயமோகன் ஒரு விஷயத்துக்காக என்னை மன்னிப்பாராக. இப்பதிவில் தமிழ் அல்லாத சொல் இருப்பதால் என்னை மன்னிப்பாராக.
‘ஜாஜ்வல்யம்’ – இந்த சொல் கொஞ்சம் பழைய வாசகர்களுக்குப் புரியலாம். சுஜாதா இதனைச் சில முறைகள் பயன்படுத்தியிருப்பார். அதற்கு முன்னர் மறைந்த எழுத்தாளர் தேவன் கதைகளில் இந்தச் சொல் அடிக்கடி இடம்பெறும்.
‘ஜாஜ்வல்யம்’ என்பது ‘பேரொளி’ என்று கொள்ளலாம் என்று நினைக்கிறேன். ‘மாலதியின் முக ஜாஜ்வல்யத்தில் சந்துரு பிரக்ஞை இல்லாமல் இருந்தான்’ என்பது போன்ற வாக்கியங்கள் தேவனின் படைப்புகளில் இடம் பெறும்.
அது போகட்டும். தேவனே போய் ரொம்ப வருஷங்கள் ஆகி விட்டன. மன அழுத்தம் ஏற்படும் சில தருணங்களில் அவரது எழுத்துக்களைப் படிப்பது என் வழக்கம். போவது தெரியாமல் என்னை 1930களுக்குக் கொண்டு சென்றுவிடுவார் அவர்.
விஷயத்திற்கு வருகிறேன்.
சமீபத்தில் ஜெயமோகன் பெண் எழுத்தாளர்கள் பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தார். அவர்கள் கொண்டாடப்படும் அளவுக்கு அவர்களது எழுத்துக்களில் ஆழம் இல்லை என்று சொல்லியிருந்தார். அவர் சொல்வதில் நியாயம் இருக்கிறது என்பது என் கருத்து. ஜெயமோகன் பெரிய எழுத்தாளர் என்பதாலோ, என் ஆதர்ஸ எழுத்தாளர் என்பதாலோ அல்ல. என் சொந்தக் கருத்தும் அது தான்.
உதாரணமாகக் கனிமொழியை எடுத்துக்கொள்வோம். அவரது இலக்கியப் படைப்பு என்ன ? ‘காடு’, ‘விஷ்ணுபுரம்’,’பின் தொடரும் நிழலின் குரல்’ போன்று இல்லாவிட்டாலும் அவற்றில் பாதி அளவு பாதிப்பை, வேண்டாம் ஸார். நூறில் ஒரு பங்கு பாதிப்பை ஏற்படுத்தும் புனைவுகள் கனிமொழி எழுதியுள்ளாரா ? ஒன்றுமே செய்யாததற்கு ‘கவிஞர்’ என்று பட்டம் வேறு.அவரது தந்தையின் மகள் என்பது தவிர அவரது தகுதி என்ன?
இப்போது அம்பை, குட்டி ரேவதி முதலானவர்கள் ஜெயமோகனுக்கு எதிராகக் கிளம்பியுள்ளார்கள். அனல் பறக்கும் அறிக்கைகள். விவாதங்கள். இவற்றில் பாதியாவது எழுத்தில் காட்டியிருக்கலாமே அம்மா.
இத்தனைக்கும் அந்தக் கட்டுரையில் தவறான எந்த ஒரு சொல்லும் இல்லை. ஆணாதிக்க எண்ணங்கள் சொட்டுகிறது என்று வசை பாடுபவர்கள் கண்களில் விளக்கெண்னை விட்டுக்கொண்டு படிக்கலாம் என்று தோன்றுகிறது.
ஜெயமோகனின் ஜாஜ்வல்யத்திற்கு வருகிறேன். அவருக்கு ஒரு தந்திரம் உண்டு. மக்கள் கவனம் தன் மீது திரும்ப அவர் செய்யும் உத்தி இது என்று நான் நினைக்கிறேன். சில காலம் முன்னர் ‘தமிழ் எழுத்துரு’ பற்றி ‘தமிழ் ஹிந்து’வில் ஒரு கட்டுரை எழுதினார். உடனே கிளம்பியது ‘முற்போக்கு’ கூட்டம். தமிழகத்தின் மோத்த கவனமும் அவர் பக்கம் திரும்பியது. வசைகள், தூற்றல்கள் என்று ஒரு மாதம் தொடர்ந்தது. ஆனால் அதே கருத்துக்களைப் பெரியார், பேரா.குழந்தைசாமி முதலானோர் சொன்னபோது யாரும் வாய் திறக்கவில்லை.இது பற்றி நான் அப்போது ஒரு கட்டுரை எழுதியிருந்தேன்.
இன்னொரு விஷயம். தமிழில் மூன்று விஷயங்கள் பற்றி எழுதவே கூடாது. எழுதினால் நீங்கள் பிற்போக்குவாதி, சனாதனி, ஹிந்துத்துவ வெறியர் என்று ‘போற்றப்படுவீர்’. அந்த மூன்றும் பின்வருவன : பெரியார், தமிழ், பெண் உரிமை.
என் கருத்து இது தான். ஜெயமோகன் போன்ற செறிவான தமிழில் ஆழமான கருத்துக்கள் வெளிவர எழுதும் தமிழ் எழுத்தாளர்கள் தற்சமயம் இல்லை. வம்பாளர்களும், வசையாளர்களும், துவேஷம் வளர்ப்பவர்களும் எழுத்தாளர்கள் என்று நடை போடுகிறார்கள்.அப்படி இருக்க, ‘முற்போக்கு’ வியாதிகளின் தாக்கம் இல்லாமல் அவற்றிலிருந்து விலகிப் பாரத பண்பாட்டின் ஆழத்தைத் தன் எழுத்துக்களால் சாமானிய மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஜெயமோகன், மக்கள் கவனத்தைத் தன் பக்கம் திரும்பச் செய்துள்ள இந்த முயற்சி பாராட்டுக்குரியதே. இன்று ஆங்கில ‘த ஹிந்து‘ படித்தவர்கள் ஜெயமோகனை அறிந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
இப்போது பெண்கள் பற்றிய இந்தக் கட்டுரை. மீண்டும் ஒரு பேரலை போன்ற கவனத்திருப்பம்.
ஆக வெற்றி அடைந்தது ஜெயமோகன் தான் என்பதில் சந்தேகமென்ன ?
நேர்படப் பேசுதல் – இது தான் ஜெயமோகனின் ‘ஜாஜ்வல்யம்’ என்று நினைக்கிறேன்.