என்ன அக்கிரமம் ஸார் இது ? இந்த லோகத்தில் இப்படி எல்லாம் நடக்கிறதே ! நமக்கு உடம்பு சொஸ்தம் இல்லாமல் இருந்தால் தான் டாக்டரிடம் போகிறோம். அந்த டாக்டர் நம்மிடம் இப்படிப் பணம் பிடுங்கினால் என்ன செய்வது ?
கொஞ்சமா நஞ்சமா கேட்கிறார்கள் ? அதுவும் இந்த டாக்டர் இருக்கிறாரே ரொம்பவும் அக்கிரமம். ஏழை, இல்லாதவன் எல்லாரிடத்திலும் இப்படியா பணம் பிடுங்குவது ? கலி காலம் பொலிகிறது என்பது சரிதான் போல.
ஆமாம் ஸார். இவர் 79 வயதான டாக்டர். எல்லாரிடமும் ரூ.5 ( ரூபாய் ஐந்து மட்டும் ) வாங்குகிறார். ஐந்து ரூபாயில் ஒரு அரை டம்ளர் டீ கூட வாங்க முடியாத இந்தக் காலத்தில் இவர் ஒவ்வொரு நோயாளியிடமும் ஐந்து ரூபாய் வாங்குகிறார்.
இதில் என்ன அக்கிரமம் என்கிறீர்களா ? எனக்குத் தெரிந்து அவர் ரூ 2 ( இரண்டு ரூபாய் மட்டுமே ) வாங்கிக்கொண்டிருந்தார். பல சமயம் அதுவும் வாங்குவதில்லை. அவரிடம் செல்லும்போதெல்லாம் , ‘இதப்பாருடா, அம்மா கிட்டே சொல்லி நல்ல ரஸம் சாதம் சாப்பிடு. வெளிலெ எங்கெயும் சப்பிடாதே’ என்பார். இதுதான் அவர் எனக்குச் சொல்லியுள்ள மருந்து.
பல நேரங்களில் இவர் எழுதித்தரும் மருந்துகள் வெளி ஊர்களில் கிடைப்பதில்லை. ஏனெனில் அவை ரொம்பவும் விலை குறைவாக இருக்கும். மயிலாடுதுறையில் மட்டுமே கிடைக்கும். மிஞ்சிப்போனால் ரூ.10, 20 என்று ஆகும். இவ்வளவு விலை குறைவான மருந்துகளை வியாபாரம் செய்ய சென்னை மருந்துக்கடைகள் என்ன முட்டாள்களா ?
மாயவரம் ( இப்போது மயிலாடுதுறை ) பட்டமங்கலத் தெரு டாக்டர் ராமமூர்த்தி தான் இப்படி சென்னை மருந்துக் கடைகளின் வயிற்றில் அடிப்பவர். வெறும் வேட்டியும் வெள்ளை பனியனும் மட்டுமே அணிந்திருப்பார். டாக்டர் ஒருவர் அங்கு இருக்கிறார் என்று நம்புவது கடினம். அவர் கழுத்தில் ஸ்தெதஸ்கோப்பு இல்லாமல் இருந்தால் அவரை ஏதோ வயதான தாத்தா நிற்கிறார் என்று தான் எண்ண வேண்டி இருக்கும்.
மயிலாடுதுறையில் இப்படிப் பல பிரகிருதிகள் உண்டு. இக்கால முறைப்படிப் பார்த்தால் ‘பிழைக்கத் தெரியாதவர்கள்’ என்று சொல்லலாம்.
ஆனால் ராமமூர்த்தி டாக்டர் சொன்னால் வேத வாக்கு தான். மாயவரம் போகும் போதெல்லாம் ‘ஒரு தடவை ராமமூர்த்தி டாக்டரிடம் போயிட்டு வரேனே’ என்று சொல்லிக்கிளம்புவது எங்கள் குடும்பத்து வழக்கம். ஒரு ஐந்து நிமிடம் அவரிடம் பேசினால் வியாதிகள் குணம் அடைவது போல் தோன்றும்.
இவர்கள் இன்றும் நம்மிடையே இருக்கிறார்கள் என்பது நமது பாக்கியமே.
அவரைப்பற்றி இன்று ‘த ஹிந்து’ வில் வந்துள்ள செய்தி இது.