சிங்கைக் கம்பன் விழா-2014

Kamban Vizhaaதேரழுந்தூரில் பிறந்த கம்பனுக்குச் சிங்கையில் விழா எடுத்தார்கள். சிங்கப்பூரின் முதல் கம்பன் விழா அதன் எழுத்தாளர் கழகத்தின் ஆதரவில் நடைபெற்றது. ஒரு நாள் முழுக்கக் கம்பச் சுவை பருக வாய்ப்பு. ஏறக்குறைய 25 ஆண்டுகள் கழித்துக் கம்பன் விழா அனுபவம்.

அந்நாட்களில் தேரழுந்தூரில் ‘கம்பர் விழா’ நடக்கும் ( ‘ர்’ – காண்க ). .மு.இஸ்மாயில், சொ.சத்தியசீலன், புலவர். கீரன், செல்வகணபதி, முனைவர். இராமபத்திரன் ( என் பெரியப்பா ) முதலானோர் பல தலைப்புக்களில் பேசுவர். இளமையில் கல். அது என் இளமையின் மைல்-கல்.

ஒரு முறை சாலமன் பாப்பையா ( அப்போது அவர் மதுரைக் கல்லூரிப் பேராசிரியர் ) சீதை குறித்து ஏதோ ஒரு வார்த்தை சொல்லிவிட்டார். ஆனால் அவரோ விருந்தினர், நடுவர். மேடையில் எதுவும் கூற முடியாது. பட்டிமன்றம் முடிந்து
அவரை என் பெரியப்பா எங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தார். அதன் பின்னர் இருவரும், அவர்களுடன் வேறு சில அறிஞர்களும் சுமார் 2 மணி நேரம் சீதை பற்றிப் பேசினர். ஆழ்வார்கள், கம்பன், துளசிதாசர், வால்மீகி என்று பலரும்
சீதை பற்றிச் சொன்ன கருத்துக்கள் எல்லாம் பேசினர். அந்த வயதில் முற்றிலும் உள் வாங்கிக் கொள்ளும் ஆற்றல் இல்லை. ஆனால் இந்த விஷயங்கள் குறித்துப் பேசினர் என்பது புரிந்தது.

அது போலவே சிங்கையிலும் நடந்தது. ‘பாத்திரங்கள் பேசினால்’ என்னும் தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. இராம.வைரவன் இந்திரசித்தாகக் கவி பாடினார். ஆனால் மேடையில் ‘வீடணன்’ உருவில் அமர்ந்திருந்த வெண்பா வேந்தர் ஆ.கி.வரதராசனாரை ‘எட்டப்பன்’ என்று சாடிவிட்டார். ‘ஆகா வென்றழுந்தது பார் யுகப்புரட்சி’ என்று பாரதி சொன்னது போல வீடணர் பொங்கி எழுந்தார். நிமிடத்தில் வெண்பா இயற்றி இந்திரசித்தரை மறுத்தார். அருமையான பல கவிதைகள் கூனி, சூர்ப்பனகை, மண்டோதரி, சுக்ரீவன், வாலி முதலான பாத்திரங்கள் மூலம் பேசின.

பிச்சினிக்காடு இளங்கோ அவர்களின் ‘தேன்’ என்னும் சீரில் முடிந்த கவிதை வரிகள் நிற்காமல் கொட்டிக்கொண்டே இருந்தன. சமீபத்தில் கலைஞரிடம் பரிசு பெற்றவர் இவர்.

பட்டி மன்றங்கள் என்றால் தொலைக்காட்சிகளின் மூலம் நாம் அறிந்துகொண்டுள்ளது ‘பட்டி’ ( மலையாளப் பொருள் கொள்க ) களின் அணிவகுப்பு என்பதைத்தான். ஆனால் கம்பன் விழாப் பட்டி மன்றம், தன் நிலையில் இருந்து விழா மன்றமாக் இருந்தது. காரணம் பங்கேற்றவர்களும் நடுவரும். பங்கேற்ற நால்வரில் மூவர் முனைவர்கள். நடுவரோ உலகறிந்த தமிழறிஞர் கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் அவர்கள். ‘தம்பியருள் சிறந்தவன் பரதனா, இலக்குவனா’ என்பது தலைப்பு. தீவிர சொற்போருக்குப் பின் ‘பரதனே’ என்று தீர்ப்பளித்தார் ஜெயராஜ்.

முன்னதாகக் காலையில் மலேசிய அமைச்சர் சரவணன், சிங்கை நாடாளுமன்ற உறுப்பினர் தினகரன், சிங்கைத் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் ஆண்டியப்பன், தவிர பேரா. சொ.சொ.மீ மற்றும் ஜெயராஜ் பேசினர். விழாத் தலைவராக முனைவர்.சுப.திண்ணப்பர் சிறப்புரை ஆற்றினார்.

‘மும்முறை பொலிந்தான்’ என்னும் தலைப்பில் இராவணன் பற்றீப் பேரா.சொ.சொ.மீ.யும், ‘கம்பன் கண்ட மானுடம்’ என்ற தலைப்பில் இலங்கை ஜெயராஜ் அவர்களும் பேசினர்.

செவிக்கு உணவு இல்லாத ஒரு அரை மணி நேரத்தில், வயிற்றுக்கும் ஈயப்பட்டது ஆனந்த பவன் சார்பில்.

என் கை வண்ணம் எதுவும் இன்றி, கண்ட வண்ணம் நிகழ்ந்த வண்ணம் எழுதியிருக்கிறேன் இந்தத் தேரழுந்தூர்க் கட்டுத்தறி. தவறுகள் கட்டுத்தறியினுடையவை என்பதறிக.

விழாவின் உணர்ச்சிப்பிரவாகப் பெருக்கால் நானும் ஒரு மரபுக் கவிதை எழுதலுற்றேன். என்ன ‘பா’ என்றெல்லாம் கேட்காதீர்கள். தெரியாது.

ஆழிசூழ் உலகுக
கெல்லாம் அஞ்சுவை தந்த கம்பன்
ஆமருவிக்கும் தன் கவிச்சுவை தெரியத் தந்தான்
ஆசுகவிப் புலவர் யாரும் பாங்குடனே பாடக் கேட்டேன்
ஆவெனவே திறந்த வாய் பிளந்த வாறு.

‘மும்முறை பொலிந்தான்’ என்ற தலைப்பில் பேரா.சொ.சொ.மீ. பேச்சு :

‘கம்பன் கண்ட மானுடம்’ என்ற தலைப்பில் இலங்கை ஜெயராஜ் பேச்சு :

‘தம்பியரின் சிறந்தவன் இலக்குவனா பரதனா ? பட்டிமன்றம்- இலங்கை ஜெயஆஜ் பேச்சு :

Author: Amaruvi's Aphorisms

Banker by day, blogger by night and a reader throughout.

One thought on “சிங்கைக் கம்பன் விழா-2014”

  1. நல்ல பதிவு ஆமருவி சார். கம்பன் விழாவில் உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. ஜெயமோகனைப் படிக்காதீர்கள் என்ற உங்கள் கட்டுரைத் தலைப்பை பார்த்தவுடன் கோபம் வந்தது ஏன் என்றால் ஜெயமோகன் அவர்களை நினைத்து எபோழுதும் வியப்பன் நான் மற்றும் அறம் புத்தகத்தில் ‘அறம்’ கதையை படித்து என்னை அறியாமல்கண்ணீர் வடித்து இருக்கின்றேன், ஆனால் உங்கள் முழு பதிவையும் படித்தப் பிறகுத்தான் உணர்ந்தேன் நீங்கள் என்னைவிட ஆயிரம் மடங்கு அதிகமாக அவர் எழுத்தை ரசிப்பவர் போல!! நன்றி சார்..

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: