இது பற்றி எழுத வேண்டாம் என்று தான் இருந்தேன். கம்பன், இராமானுசன் என்று இலக்கியமும், தத்துவமும் பேசும் இந்தத் தளத்தில் மிருக உணர்ச்சிக்கும் கீழான ஒரு விஷயம் பற்றிப் பேச விரும்பவில்லை. எனவே தவிர்த்தேன். ஆனாலும் நடந்துள்ள நிகழ்வு மிகவும் ஆவேசம் கொள்ள வைப்பதாக இருக்கிறது.
“இது பொறுப்பதில்லை தம்பி, எரிதழல் கொண்டு வா,.. அண்ணன் கையை எரித்திடுவோம்” என்று பாரதி கொப்பளித்த மாதிரி ஒரு வேகம் எழுந்தது. ஆனாலும் ஒரு மங்கலமான ஆடி வெள்ளிக்கிழமை அன்று இப்படி எழுத வேண்டுமா என்ற எண்ணமும் கூடவே எழுந்தது.
எப்படிச் சொல்வது இதை ? கற்பழிப்பு ? பாலியல் கொடுமை ? பலாத்காரம் ? எதுவுமே சரியான சொல்லாக அமையவில்லை. ஏன் ? அதற்கான வயதே இல்லையே. குழந்தை அல்லவா அது! ஆறு வயதுப் பெண் குழந்தை என்று பெயர்ச்சொல்லில் துவங்கி, மேலே சொன்ன எந்த வினைச் சொல்லாலும் நிரப்ப முடியவில்லை. வானவில்லின் பெயர் கொண்ட அந்தப் பெங்களூர்ப் பள்ளியில் நடந்துள்ள செயலை என்னவென்று சொல்வது ? அதைப் பற்றி எப்படித்தான் எழுதுவது ?
உள்ளே கனன்று எரிந்த கோபம் ஆக்ரோஷமாய்த் தீச்சுவாலை விட்டு எழுந்து ‘கொலை வாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே‘ என்று பாரதிதாசன் சொன்னது போல் ஒரு வாளினை எடுத்துச் ‘சோலி முடித்து’விடலாம் என்று தான் தோன்றியது. ஆனல் எழுத மட்டும் திராணி வரவில்லை.
சீரழிப்பு என்பது சரியாக இருக்குமோ ? பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை,அரிவை, தெரிவை, பேரிளம் பெண் என்ற பெண் பருவங்களில் முதல் பருவமான பேதை ( ஏதும் அறியாதவள் ) என்ற பருவத்தில் இருந்த அந்தக் குழந்தையை ‘சீரழித்தான்’ என்று சொல்லவும் மனம் வரவில்லை.
எப்படி நடந்தது இது ?
மிகச் சில ஆண்டுகள் வரை நவராத்திரி சமயத்தில் ‘கன்யா பூஜை’ என்று பருவம் அடையாப் பெண் குழந்தைகளை அமர்த்தி அவர்கள் பாதங்களுக்குப் பாத பூஜை செய்யும் வழக்கம் நமது நாட்டில் இருந்து வந்துள்ளது. அச்சிறுமிகளை தேவியின் மறுவடிவங்கள் என்றே நமது பண்பாட்டில் கண்டுள்ளோம்.
‘ஓம் தேவி பராசக்தி ஆணை உரைப்பேன்..’ என்று எங்கும் இறையைப் பெண்வடிவாகவே கண்டான் பாரதி. அவன் வழி வந்த நாம் இப்போது எப்படி மிருகத்தனமான சமூகமாக ஆனோம் ? மிருகங்கள் கர்ப்பமான் தங்கள் பெண்பாலிடம் அணுகாது என்று படித்துள்ளேன். ஆக மிருகத்துக்கும் கீழே சென்று வீட்டோமா நாம் ?
கம்ப ராமாயணத்தில் கும்பகருணன் இராவணனிடம் இப்படிப் பேசுவான்,
‘அண்ணா, எப்படிப்பட்ட பரம்பரை நமது ? எப்பேர்ப்பட்ட ஆட்சி செய்கிறோம் நாம் ? வெளியில் மானம் என்று சொல்லிக்கொண்டு உள்ளே காமத்துடன் மாற்றான் மனை விழைந்துள்ளோமே’ என்பதை ‘பேசுவது மானம் இடைப் பேணுவது காமம்‘ என்று வஞ்சப் புகழ்ச்சி அணியில் கூறுவான். ஆக, உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசும் ஒரு சமூகமாகவே தான் அன்னாளிலிருந்தே இருந்துள்ளோமா ?
வள்ளுவர் கூட ‘பிறன் மனை நோக்காப் பேராண்மை’ என்றே சொல்கிறாரே ஒழிய ‘பிறன் குழந்தை நோக்காப் பேராண்மை’ என்று சொல்லவில்லை. அவர் காலத்தில் இந்த அளவு வீழ்ச்சி இல்லை போல. இந்த அளவு கழிசடைகள் இல்லை போல.
இந்த மாபாதகத்தைச் செய்தது யார் ? ஒழுக்கத்தைக் கற்பிக்கவேண்டிய ஆசிரியன். இவனை ஆசிரியன் என்று சொல்வது எனது ஆசிரியற்குச் செய்யும் துரோகம் என்று உணர்கிறேன். ஆச்சாரியர்’ என்பது பின்னாளில் ஆசிரியர்’ அன்று மாறியது என்று ஆதாரங்களுடன் ‘தெய்வத்தின் குரலில்’ சொல்லப்பட்டிருக்கிறது.
அந்த ஆசிரியனுக்கு, மன்னிக்கவும், அயோக்கியனுக்கு 6 வயதில் மகள் இருந்திருந்தால் ?
இந்த உடற்பயிற்சி ஆசிரியன் செய்கை எப்படிப்பட்டது ? பாரதி சொல்கிறான் :
”கோயிற் பூசை செய்வோர்-சிலையைக் கொண்டு விற்றல் போலும்,
வாயில் காத்து நிற்போன்-வீட்
ை வைத்தி ழத்தல் போலும்,
…..தேயம் வைத்தி ழந்தான்-சிச்சீ சிறியர் செய்கை செய்தான்.”
தெய்வம், பூஜை, பண்பாடு, கன்யா வழிபாடு, ஆன்மீகம் பிற்போக்குத்தனங்கள்; ‘செக்யூலர் கல்வி’ என்பதனால் மேலே சொன்ன எதுவுமே இருக்கக் கூடாது என்று கடந்த 60 ஆண்டுகளில் நடந்துள்ள கல்விச் சீரழிவே இந்தப் பண்பாட்டுப் பேரிழப்புக்குக் காரணமாக இருக்க முடியும் என்று நினைக்கிறேன்.
பகுத்தறிவு, புண்ணாக்கு என்று பறைசாற்றிக் கல்வியில் இருந்து ஆன்மீக உணர்வை முற்றிலும் அழித்துவிட்டோம். விளைவு – ஆசிரியர் தொழில் பரத்தையர் ஒழுக்கம் கொண்டவர்களால் மேற்கொள்ளப்படுகிறது.
‘உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே’ என்பது தமிழ் இலக்கணம். தமிழ் மொழி உடலாகவும், ஆன்மீகம் உயிராகவும் இருந்து நமது பண்பாடு தழைத்தது. சைவைத்தையும் தமிழையும் பிரிக்க முடியாது. இதன் மூலம் ஒழுக்கம் கற்பிக்கப்பட்டது. இப்போது உயிரை நீக்கிவிட்டோம். உடல் நாற்றம் எடுக்கிறது. இது தமிழ் நாட்டில் நடைபெறவில்லை என்பதால் நடக்கவே இல்லை என்று ஆகுமா ? சமீபத்தில் ஒரு தலித் இனம் சார்ந்த பள்ளி மாணவி இறந்து கிடக்கவில்லையா ?
எந்தத் தகுதியும் இல்லாமல் வெறுமனே சாதி, மதம், பணம் முதலியன மட்டும் மூலமே கல்வி, பணி பெறலாம் என்னும் நிலையும் இதற்குக் காரணம் என்றும் எண்ணத் தோன்றுகிறது.
அத்துடன் தண்டனை பற்றிய பயம் இல்லாததும் முக்கிய காரணம்.
சிங்கப்பூரில் போதைப் பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை. அதுவும் வெகு விரைவில் வழக்கு விசாரணை. நாமோ மரண தண்டனை விலக்க வேண்டும் என்று கோருகிறோம். சாணக்கியரின் அர்த்த சாஸ்திரத்தில் ‘தண்ட நீதி’ என்னும் சருக்கத்தில் உள்ளது : சமூகத்தில் ஒழுங்கு நிலைக்க வேண்டும் என்றால் அங்கு தண்டனை பயம் இருக்க வேண்டும். வயது வராத பெண்ணுடன் ஒருவன் பலாத்காரத்தில் ஈடுபட்டால், அவனது கைகளை வெட்டி விட வேண்டும். அத்துடன் 400 பணம் தண்டம் கட்ட வேண்டும்.
பொருளியலில் முன்னேற்றம்; கைப்பேசிப் பயன்பாட்டில் முதலிடம்; விண்கலன் அனுப்புவதில் முன்னேற்றம்; ஆனாலும் பண்பாட்டில் கற்காலத்திற்குப் பிந்தைய பின்னேற்றம். நன்று நம் கொற்றம்.
எல்லாவற்றையும் விட மேலானது கர்நாடகத்தின் முதன் மந்திரி பேசியது. அவர் சொன்னார்,’இந்தச் செய்தி தவிர வேறு ஒன்றுமே இல்லையா?’, என்று. தன் நாட்டின் தலை நகரத்தில் பெரிய பள்ளியில் ஒரு குழந்தை சீர்குலைக்கப்படுகிறாள். இதைவிட வேறு என்ன செய்தி அவசியமானதாக இருக்க முடியும் ? இதுவே அவரது உறவினராக இருந்திருந்தால் ? ( நடக்க வேண்டாம். ஆனாலும் மனம் நினைக்கிறதே ).
சிட்டர் செயல் செய்யாவிட்டாலும் குலச் சிறுமை செய்யாமல் இருக்கலாம் தானே !
மொத்தத்தில் நம்மை நாமே தொலைத்துக் கொண்டிருக்கிறோம். சுயத்தை இழந்து மிருகங்களாக மாறிக் கொண்டிருக்கிறோம் என்பது மட்டும் புரிகிறது.
ஏதோ ஒன்றைப் புரிந்து கொள்ளாமலே நாம் சிலவற்றின் பேரில் கொந்தளிக்கிறோம். உங்கள் குமுறலை தவறு என நிரூபிப்பதற்காக முனையவே இல்லை.இன்றைய சினிமா,கணினித் தொடர்புகள்,வாழ்வியல் பேச்சுக்கள்,மேல்மட்ட-கீழ்மட்ட கலந்துரையாடல்கள்,தம்பதிகளின் தனிமைப் பேச்சுகள்,பாலியல் பள்ளிப் போதனை,கோடிக்கணக்கான porn websites,மறைக்க வேண்டியதை திறந்து காட்டும் மனிதப் பண்பு, (பெண்கள் மட்டுமல்ல-ஆண்களும் பான்ட் போன்ற உடை அலங்காரங்களில்) காமத்திற்காகவே ‘காதலிக்கும்’ இளைய சமுதாயம்,…இன்னும் நிறைய அடுக்கிக் கொண்டு போகலாம், இன்றைய அ ன்றாட வாழ்க்கை முறை பற்றி! நான் பேசுவது நூற்றுக்கு 99 பேர் பற்றியது.இது மிகையல்ல.அதே நேரத்தில், இதையெல்லாம் தெரியாதவன் , அல்லது தெரிந்துகொள்ள இயலாதவன் படித்தவனாக இருக்க முடியாது என்ற நிலை வந்து விட்டது. ஒரு ஆணோ-பெண்ணோ அவர்கள் எந்தப் படிப்பைப்பெற்றாலும், அவர்கள் காதலை மட்டுமல்ல காமத்தையும் உணர்வோடு தெரிந்து கொள்கிறார்கள்.அவர்கள் தெரிந்துகொள்ள அவர்களின் சூழ்நிலை நிச்சயம் இடம் தருகிறது. வசதிகள் வழி திறக்கின்றன. பெரியவர்களிடம் முறை இடுவோமேன்றால் (அரசியல்வாதிகள்-சாமியார்கள்) இந்த விஷயத்தில் , இளையர்களையும் மிஞ்சுகிறார்கள் ஆமருவியும், ராமனும் வேண்டுமானால் தவியாய்த் தவிக்கலாம்..இத்தனையும் பார்க்கும் சராசரி மனிதனுக்கு, தன வசதிக்கேற்ப எதையாவது செய்து தொலைக்கிறான். இன்று நாம் வாழும் நவ நாகரீகங்களும், அதனை ஒட்டிய வாழ்வு முறைகளுமே நூற்றுக்கு ஒருவரையாவது இப்படிச் செய்யத் தூண்டாது என்று கூற யாருக்குத் தெம்பு இருக்கிறது?. ஓரினக் காதலும், மற்ற பல செக்ஸ் வாழ்க்கைகளும் பகிரங்கமானதுடன் பல நாடுகளில் சட்ட பூர்வமாகி விட்டன. ஆணும் பெண்ணும் இணையாத பணி இடங்களே உலகில் இல்லை. கட்டி பிடிக்க வேண்டாம்-தொட்டுப் பழகும் ஒன்று போதாதா மனித சிந்தனையில் மாற்றம் வருவதற்கு? இன்றைய நவீன வாழ்வு முறை , இப்படியெல்லாம் செய்யத் தூண்டுமா என்று பொத்தாம் பொசுக்காக கேட்கலாம். வேறு என்னதான் வேண்டும் மனித உணர்வுகளைத் தூண்ட? எல்லாரும் இப்படித்தானா என்றெல்லாம் எடைக்கு மடக்காகவும் கேட்கலாம்.இன்றைய நவீன பழிக்க வழக்கங்கள் மாறாக ஒருவனை அல்லது ஒருத்தியை ஆன்மீகப் பாதையில் கொண்டு விடும் என்று நம்புகிறீர்களா?இது தான் இன்றைய வாழ்க்கை. தவறுகளைத் தவறாக நினைக்கும் மனப் பக்குவத்தை நம்மையறியாமலே நாம் மறந்துவிட்டோம் என்பதைவிட அதை மனம்விட்டுப் பேசுவும் விரும்பவில்லை.. நடந்த கொடூரத்திற்கு நற்சான்றிதழ் அல்ல இது.நமக்கு ஒரு சாதாரண , தமிழ்ப் படம் போதாதா, ஒரு ஆண் ஒரு பெண்ணைக் கெடுக்க! தலை நிமிறாப் பெண்களையும்,பதினெட்டாவது வயதிலேயே இல்லற வாழ்வை மேற்கொள்ளும் ஆண்களை நம்மால் உருவாக்க முடிகிறதா? அந்தச் சூழ்நிலையிலா நாம் வாழ்கிறோம்!
இரவு மணி மூன்றுக்கு மேல் இதை எழுதுகிறேன். உங்களை விட அதிகமாகக் கொழுந்து விட்டு எரியும் ஜ்வாலைதான் என்னிடமும்!
LikeLike
Excellent sir. Great comments from you ss always.
LikeLike