தலைப்பில் உள்ள கேள்வியைக் கேட்க நேர்ந்தால் நீங்கள் சிங்கப்பூரில் இருக்கிறீர்கள் என்று புரிந்து கொள்ளவும்.அதுவும் ஆவணி மாதம் ஸ்ரவண நட்சத்திரம் அன்று ( ‘ரக்ஷா-பந்தன்’ என்றால் நமக்குப் புரியலாம் ). ஸ்மார்த்தர்களுக்கும், வைஷ்ணவர்களுக்கும் தத்துவத்தில் மட்டும் அல்ல பூணூலில் கூட வித்யாசம் உள்ளது. வைஷ்ணவர்கள் பூணூல் கொஞ்சம் தடிமனாக இருக்கும்.
வேதக் கல்வி துவங்கும் நேரத்தைக் குறிப்பது இது. ஒவ்வொரு வருடமும் வேதம் பயிலத் துவங்கும் நாள் இது.
பிரும்மாவிற்கு வேதம் கிடைத்த நாள் என்றும் சொல்கிறார்கள். வேதத்தின் பிறந்த நாள் என்று சொல்லலாம் போல் தெரிகிறது.
ஆனால் தற்போது வெறுமெனே பூணூல் மாற்றிக் கொள்ளும் ஒரு நிகழ்வாக இந்தியாவில் மாறியுள்ளது. இருப்பினும் சிங்கையில் முறையாக இன்று வேதாரம்பம் என்று கொண்டாடப்பட்டு, புதிய பூணூல் அணிந்தபின் வேத பாடம் துவங்கியது.
மிகவும் சிரத்தையாக நடந்தது இன்று. வாத்தியார்கள் ரயில் வண்டியைப் பிடிக்க ஓட வில்லை. நிறுத்தி, நிதானமாக, உச்சரிப்புக்கள் சரியாக ஒரு மணி நேரம் நடந்த நிகழ்வு. மொத்தம் மூன்று கோஷ்டிகள். காலை 6 மணிக்கு , 8 மணிக்கு, 9 மணிக்கு என்று மூன்று. அது தவிர உப-நயனம் ஆன முதல் வருடம் நடக்கும் ‘தலை ஆவணி அவிட்டம்’ ( இதற்கும் திரைப்பட நடிகருக்கும் தொடர்பில்லை) கொண்டாடப் பல குழந்தைகள் வந்திருந்தனர். ( படம் மேலே ).
வேதக் கல்வி பற்றிச் சொன்னேன். பழைய காலத்தில் கல்வித்திட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும் இரண்டு பருவங்களாகக் கொண்டிருந்தனர். செமெஸ்டர் என்று நாம் அறிவது அது தான். முதல் செமெஸ்டர் ஐந்து மாதங்கள் கொண்டது. அதற்கு ‘உபாகர்மம்’ என்று பெயர். இரண்டாவது செமெஸ்டர் ஏழு மாதங்கள் கொண்டது. அதற்கு ‘உத்ஸர்ஜனம்’ என்று பெயர்.
இன்று ‘யஜுர்-உபாகர்மம்’ துவங்கும் நாள். அதாவது யஜுர் வேதக் கல்வி துவங்கும் நாள். அடுத்த ஐந்து மாதங்கள் வேதம் பயில வேண்டும். பின்னர் ‘உத்ஸர்ஜனம்’ என்று வேதக் கல்வியை விட்டு விட வேண்டும். அதாவது வேதம் தவிர்த்து மற்ற கல்விகள் கற்கத் துவங்க வேன்டும். மஹாபாரதத்தில் துரோணர் முதலான முனிவர்கள் வில் வித்தையைக் கற்றுக் கொடுத்தது இப்படி ‘உத்ஸர்ஜன’ காலத்தில் அவ்வித்யைகளைக் கற்றுக் கொண்டபடியால் தான்.
ஒரு மாதிரியாக ‘சகல-கலா-பண்டிதர்களாக’ ஆக்குவதற்காக அக்காலத்தில் கல்வி முறை இருந்துள்ளது.
நாளை முதல் வெற்றுப் பாடம் தான் – அதான் ஸார் – வயிற்றுப் பாடம், ஆபீஸ் வேலை. வெறும் சோற்றுக் கல்வி என்று ஆன பின் வேறு என்ன செய்வது ?
சென்ற ஆண்டு நடந்த ஆவணி அவிட்டம் பற்றி நான் எழுதிய பதிவு இதோ.