10-08-2014 அன்று சிங்கப்பூரில் உமறுப் புலவர் தமிழ் மன்றத்தில் ஔவையார் விழாவில் பாரதியின் ‘தேடிச் சோறு..’ பாடலுடன் துவங்கினார் தமிழகப் பேச்சாளர் முனைவர்.பர்வீன் சுல்தானா.
ஔவையாரை இளம் பெண் என்று கூறினார். முதுமை அவர் மேல் ஏற்றப்பட்டது ஆணாதிக்கம் நிறைந்தது என்றார். இளம் பெண்ணாக இருந்துகொண்டு கருத்துக்கள் கூற முடியாத ஒரு பெண்ணடிமை நிலை இருந்தது என்றும் கூறினார்.
ஔவையாரின் ஆத்திச்சூடியில் இருந்து பல அடிகளுக்கும் விளக்கம் அளித்துப் பல சொந்தக் கருத்துக்கள், தனது பாட்டியாரின் நினைவுகள் என்று மேலே சென்றார் பர்வீன். எல்லா இடங்களிலும் பெண்ணீயம் தென்பட்டது.
தான் பல இடங்களிலும் கேட்ட பல செய்திகளைச் சொன்னார். ‘வாழ்க்கை முழுவதும் முட்டாளாக இருப்பதை விட ஒரு முறை முட்டாள் என்று பெயர் எடுப்பது அறிவுள்ள செயல்’ என்று ஆழ்ந்த அர்த்தம் உள்ள சீனப் பழமொழியை விளக்கினார். அதற்கு அவர் சொன்ன ‘ஒலி வாங்கி’ உதாரணம் சற்று சலிப்பு ஏற்படுத்தியது உண்மை.
கம்பன், திருமூலர், சேக்கிழார் என்று அவர் தொடாத பெரியவர்களே இல்லை. இது அவரது ஆழ்ந்த படிப்பைக் காட்டியது.
‘யாவர்க்குமாம் இறைவர்க்கோர் பச்சிலை
யாவர்க்குமாம் பசுவிற்கோர் கையுறை
யாவர்க்குமாம் உண்ணும் போது ஓர் கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே’ என்னும் திருமூலரின் பாடலைத் துணைக்கு அழைத்து அவர் சொன்ன கருத்து ரசிக்கும்படி இருந்தது.
‘பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல்’ என்று கலித்தொகை கூறுவதையும் விட்டுவைக்கவில்லை.
தகழியின் ‘தோட்டியின் மகன்’ கதை வழியாக அவர் சொன்ன ‘தனி மனித முன்னேற்றம் மட்டும் போதாது, மனிதன் சார்ந்த சமூக முன்னேற்றம் தேவை’ என்ற கருத்து வெகுவாகப் பலராலும் பாராட்டுப் பெற்றது.
தவிர்க்க வேண்டிய சில விஷயங்களும் இருந்தன. நாளடைவில் அவை தவிர்க்கப்படும் என்று எதிர்பார்ப்போம்.
பெண் அடக்குமுறை அதிகம் உள்ள ஒரு சமுதாயத்தில் இருந்து ஒரு பெண் இவ்வளவு தூரம் முன்னேறி, சிறந்த பேச்சாளர் வரிசையில் வந்திருப்பது போற்றத்தக்கது.
சின்னச் சின்ன வார்த்தைகளில் புனையப்பட்டாலும் , பெரிய பொருள்களைப் போர்த்திக் கொண்டு நிற்பவை ஔவையின் பாடல்கள்! அவற்றை எதிர்கொள்ளும் அளவுக்கு பேச்சாளர் பர்வின் சுல்தானாவின் அன்றைய தயாரிப்பு அமையவில்லை என்பது என் கருத்து. .’சொல்’ என்ற ஒரு தாத்பர்யத்தை எடுத்துக் கொண்ட அவர், அதற்கேற்ற பலரின் பாடல்களைத் தொட்டதென்னவோ சுவையாகத் தான் அமைந்தது. வாலி வதையில் கம்பனைத் தொட்ட இடம் கனகச்சிதம். போகிற போக்கில் பெரிய புராணத்திற்கு ஒரு சின்ன குட்டு வைத்ததைத் தவிர்த்திருக்கலாம்! இரண்டு மணி நேர ; ‘பிரசங்கம்’ அவருக்கு சற்று அதிகம் தான்! ஆனாலும் நல்ல ரசனைக்கு இடம் தந்தார். பாராட்டுவோம்… .
LikeLike