தமிழில் எதை எழுதுவது என்று இந்த முறை அறிவுரை சொல்லப்போகிறேன் என்று யாரும் கொதிப்படைய வேண்டாம். அறிவுரை எல்லாம் இல்லை. எனக்கு அந்தத் தகுதி எல்லாம் கிடையாது.ஆனால் எதை எழுதினால் மக்கள் பார்க்கிறார்கள் என்பது தெரிகிறது. சொந்த அனுபவம் தான்.
வைணவம், இராமானுசன், கம்பன்சுவை என்றெல்லாம் எழுதிக்கொண்டிருந்தேன். படித்தவர்கள் பாராட்டினார்கள். ஏனென்றால் அவர்கள் படித்தவர்கள். பதிவை மட்டும் அல்ல, உண்மையிலேயே படித்தவர்கள். ஒரு பெரியவர் சண்டைக்கு வந்தார். ‘அத்வைதம்’ பற்றி நீ சொல்வது தவறு’ என்றார். ஆனால் நான் எழுதிய அனைத்தையும் படித்ததால் அவர் அப்படிச் சொன்னார். ஆனால் ‘நன்னா எழுதறே, தீர்க்காயுசா இரு’ என்று ஆசீர்வாதம் செய்தார். அந்தமட்டும் சந்தோஷம் தான்.
ஆனால் ஒரு கஷ்டம் உண்டு. அப்படிப் படிப்பவர்கள் வெகு சிலரே. அதுவும் தமிழ் நாட்டில் இருந்து வரும் பார்வையாளர்கள் குறைவு. இலங்கை, அமெரிக்கா என்று பல இடங்களில் இருந்தும் படிக்கிறார்கள். தமிழகத்தில் இருந்து வரும் ‘ஹிட்’கள் குறைவாகவே இருந்தன.
இத்துடன் என் ஆங்கில வலைப்பதிவும் இருக்கிறது. அங்கும் எழுதுகிறேன். அங்கு எழுதினால் உண்மையில் பலர் படிக்கிறார்கள். பின்னூட்டமும் இடுகிறார்கள். அத்துடன் மின்-அஞ்சலும் செய்கிறார்கள். தங்கள் நூல்களை ஆய்வு செய்து தரச் சொல்கிறார்கள். வலைப்பதிவர் விழாக்களுக்கு அழைக்கிறார்கள். சில விஷயங்கள் குறித்துக் கருத்துக் கேட்கிறார்கள். வங்கித் துறை பற்றிய எனது பதிவுகளை அவர்கள் ‘Re-Blog’ என்று மறு பதிவு செய்கிறார்கள். இந்தியாவிலிருந்து ‘ஹிட்’பல மடங்கு. இங்கிலாந்து, அமெரிக்கா என்று பல வாசகர்கள் கருத்து பரிமாறுகிறார்கள்.
இந்த நிலை ஏன் தமிழ்ப் பதிவுகளுக்கு இல்லை என்று யோசிக்க வைத்தது.
ஒரு பரீட்சை செய்தேன். சில வாரங்களுக்கு முன்பு ஒரு பதிவிட்டேன். ‘இலியானாவின் இடுப்பு’ என்பது தலைப்பு. ஆனால் எழுதியது ஒன்றும் இல்லை. பழைய பதிவுகளில் இருந்து சில பகுதிகளை வெட்டி நிரப்பினேன். ஆனால் ஆங்காங்கே ‘இலியானா’, ‘ நஸரியா’ என்று பல நடிகைகளின் பெயர்களை இட்டு நிரப்பினேன். அப்பதிவை நல்ல வாசகர்கள் படிக்காமல் இருக்க முகநூலில் இணைக்கவில்லை.
சரியாக ஒரு வாரம் கழித்து அப்பதிவை நீக்கினேன்.
என் கணிப்பு சரியாக இருந்தது.
‘ஹிட்’ பலமடங்கு பெருகியிருந்தது. சவூதி அரேபியா, ஓமன் முதலிய நாடுகளில் இருந்து ‘ஹிட்’ சில ஆயிரங்களைத் தொட்டது. தமிழ் நாடும் விதிவிலக்கல்ல.
இதற்கு மேல் ஒன்றும் சொல்வதற்கில்லை.
ஆனால் ஒன்று. என்னால் அப்படி எழுத முடியாது. மன்னிக்கவும்.
அன்பர் திரு.ஆமருவி தேவநாதன் அவர்களுக்கு
வணக்கம். தங்களுடைய ஆ பக்கங்களை தொடர்ந்து படித்து வருகிறேன். அதிலும் குறிப்பாக நான் ராமானுசன் தொடரையும் படித்து வருகிறேன். மிக நன்றாக உள்ளது. தங்கள் ஆக்கங்கள் பயனுள்ளவையாக உள்ளது. தொடரட்டும் தங்கள் எழுத்துப்பணி.
நா.சடகோபன்
LikeLike