நியூ யார்க் அருங்காட்சியகத்தில் பெருமாள் சேவை கிடைத்த விதம் பற்றி இங்கே எழுதி இருந்தேன். அதன் தொடர்ச்சியாக இந்தப் பெருமாள் பற்றி இன்னும் சில விஷயங்கள் பேசலாம் என்று இந்தப் பதிவு.
என்ன பயன் என்று கேட்கிறீர்களா? நீங்கள் யாராவது இந்தப் பெருமாள் எந்த ஊர் என்று தெரிவிக்கலாம். 50-60 ஆண்டுகளில் தமிழ் நாட்டின் ஏதோ ஒரு கிராமத்தின் கோவில் உடைக்கப்பட்டு பெருமாள் சிலை திருடு போயிருக்கலாம். அதைக் காவல் துறை கண்டுகொள்ளாமல் விட்டிருக்கலாம். அல்லது உங்கள் கிராமத்தை விட்டே நீங்களோ உங்கள் பெற்றோரோ வெளியேறி அந்தத் திருட்டு உங்களால் மறக்கப்பட்டிருக்கலாம். அப்படி நடந்திருந்தால் அதனை மீண்டும் நினைவு படுத்திப் பாருங்கள். உங்கள் உற்றார் உறவினர் யாராவது இந்த மாதிரியான கிராமங்களில் இருந்தால் அவர்களிடம் பகிருங்கள். அவர்களுக்கு நினைவிருக்கலாம்.
இப்படி எல்லாம் செய்து இப்பெருமாள் எந்த ஊர்க்காரர் என்று தெரிந்தால் எந்த ஊரிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டார் என்று தெரிந்தால் அரசு மூலம் ஏதாவது செய்ய முடியுமா என்று முயன்று பார்க்கலாம். நான் மத்திய அரசைச் சொல்கிறேன்.
பல ஊர்களில் பெருமாள் உற்சவர் விக்ரகம் புன்முறுவல் பூத்தபடி இருக்காது. வெகு சில ஊர்களில் மட்டுமே இவ்வாறு அமையும். எங்கள் தேரழுந்தூர்ப் பெருமாள் சிரித்தபடி இருக்கிறார். நியூ யார்க் அருங்காட்சியகப் பெருமாளும் புன்முறுவல் பூத்தபடியே இருக்கிறார். ஆக புன்முறுவல் சிரிப்பு கொண்ட உற்சவ மூர்த்திகள் எந்தெந்த ஊர்களில் இருந்தன என்று விசாரிக்கலாம்.
காஞ்சீபுரம், ஸ்ரீரங்கம், திருமலை முதலிய ஊர்களில் உள்ள உற்சவர் விக்ரஹங்கள் முகங்களில் தழும்புகள் இருக்கும். ‘அம்மை வடு’ என்று சொல்வது உண்டு. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பல ஆயிரம் முறைகள் திருமஞ்சனம் என்னும் அபிஷேகங்கள் நடந்துள்ளபடியால் அவ்வாறு ஆவது உண்டு.
ஆனால் நியூ யார்க் பெருமாள் அப்படி இல்லை. கி.பி. 10ம் நூற்றாண்டு என்று எழுதி வைத்துள்ளார்கள். ஒன்று ஆயிரம் ஆண்டுகளுக்கு அவருக்கு அவ்வளவாக திருமஞ்சனங்கள் இல்லாமல் இருந்திருக்க வேண்டும். அல்லது புதைந்த நிலையில் பல நூறு ஆண்டுகள் இருந்து, பின்னர் கண்டெடுக்கப்பட்டு / திருடப்பட்டு அமெரிக்க செல்வந்தருக்கு விற்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது பல நூறு ஆண்டுகளாகவே கோவிலில் இருந்தும் வழிபாடுகள் இல்லாமல் இருந்திருக்க வேண்டும் ; கிராமத்தில் வேலை இல்லாமல் ஊர் மக்கள் கிராமத்தைக் காலி செய்தவுடன் பெருமாள் திருடப்பட்டிருக்க வேண்டும். இந்த ஏதாவது ஒரு காரணத்தால் அவர் இன்னும் சற்று இளமையாகவே தெரிகிறார்.
இளமையாகத் தெரிந்தாலும் முகம் ஏற்ற இறக்கம் இல்லாமல் ஒருவித சமன்பாட்டுடன் தெரிகிறது. ‘அபயஹஸ்தம்’ என்னும் அருள் வழங்கும் கையில் ரேகைகள் தெரியவில்லை. வழவழப்பாக இருக்கிறது. எனவே மிகப் பழமையானவர் தான்.
பெருமாளின் இடது நெற்றியில் ஒரு காயம் காணப்படுகிறது. அது சிலையை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகர்த்தும் / கடத்தும் போது ஏற்பட்டிருக்கலாம். அல்லது ஏற்கெனவே காயம் இருந்தால் ‘பின்னம்’ என்று சொல்லி கோவிலிலேயே ஓரமாக வைத்து விடுவர்கள் அப்படி உங்களுக்குத் தெரிந்த எந்தக் கோவிலிலாவது நடந்ததா என்று ஆராயலாம்.
பெருமாளின் பின்சேவை ( பின்புறம் )யில் சடை முடி தெரிகிறது. ஒருவேளை இவரது பெயர் ‘சௌரிராஜன்’ என்று இருந்திருக்கலாம். எனவே ‘சௌரிராஜப் பெருமாள்’ கோவில்களில் ஏதாவது சிலைகள் திருடப்பட்டனவா என்று நீங்கள் ஆராயலாம்.
பெருமாளின் பெயர் ‘கேசவன்’ என்று கூட இருக்கலாம். ‘கேசம்’ என்றால் தலை முடி என்று பொருள். ‘ஆதி கேசவன்’, ‘கேசவன்’ என்ற பெயர்களில் உள்ள பெருமாள் கோவில்களில் ஏதாவது திருட்டு நடந்துள்ளதா என்று ஆராயலாம்.
அவரது இரண்டு கைகளிலும் சிற்பங்கள் தென்படுகின்றன. அவவை ‘நாக பாச’மாக இருக்கலாம். நாக பாசம் உள்ள உற்சவ மூர்த்திகள் எந்தெந்த ஊர்களில் இருந்தன என்று கணக்கிட்டால் சில துப்புகள் கிடைக்க வழியுண்டு. அவை மகாலக்ஷ்மி போலவும் தெரிகின்றன. அதை வைத்தும் தேடலாம்.
புறப்பாடு செய்வதற்கு ஏற்றபடி பீடத்தில் வளையங்கள் தெரிகின்றன. இவை எல்லா ஊர்களிலும் இல்லை. இதையும் தேடுவதற்கு ஒரு விஷயமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இவை எல்லாம் நம் கையில் உள்ள ஆயுதங்கள். செய்தியைப் பரப்பிப் பாருங்கள். ஏதாவது ஊருக்கு ஸ்வாமி தரிசனம் செய்யச் செல்லும் போது அங்குள்ள பெரியவர்களிடம் 50-60 ஆண்டுகளில் பெருமாள் சிலை திருட்டு ஏதாவது ஏற்பட்டதா என்று கேட்டுப் பாருங்கள். முக்கியமாக ஸ்தபதிகள், அர்ச்சகர்கள் முதலியோருக்குத் தெரிந்திருக்கலாம். யாருக்காவது பொறி தட்டலாம். அதன் மூலம் சிலை திருட்டை நிரூபித்துப் பின்னர் நியூ யார்க் அருங்காட்சியகத்திற்கு அரசு மூலம் எழுதலாம்.
ஏதாவது செய்வோம். நம்மால் முடிந்ததைச் செய்வோம் வாருங்கள்.