‘சிறையில் இருக்கும் தெய்வங்கள் சந்தோஷப்படும்’ பதிவின் விளைவு இன்னொரு கேள்வி. அதற்கு எனது பதில் இதோ.
கே : சிலை திருட்டுக்கும் திராவிடக் கட்சிகளுக்கும் என்ன தொடர்பு ? வட மாநிலங்களில் திராவிடக் கட்சிகளா ஆட்சி செய்தன ? அங்கிருந்தும் சிலைகள் திருடப்படவில்லையா ?
தி.க.வும், தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் சிலை திருட்டு செய்தன என்று நான் சொல்லவில்லை. ஆனால் சிலைகள் திருட்டு நடைபெற வழிகோலின என்பது உண்மையே. ‘திராவிடக் கட்சிகள்’ என்று சொல்வது ஒரு குறியீடு மட்டுமே என்று
புரிந்துகொள்ள வேண்டும்.
விடுதலை வேள்வி நடைபெற்ற போது, காங்கிரஸ் கட்சியின் ஆளுமையை உடைக்க ஆங்கிலேயர் பயன்படுத்திய ஆயுதம் ‘நீதிக் கட்சி’ என்னும் பெரும் பணக்காரர்கள் கட்சி. பிராமணர் அல்லாத பெரிய ஜமீந்தார்கள், செல்வந்தர்கள் முதலியோரைத் தூண்டிவிட்டு இந்திய மக்கள் மீது காங்கிரஸ் கட்சியின் பிடியைத் தளர்த்த ஆங்கிலேய அரசு பெரு முயற்சி செய்து வெற்றியும் கண்டது. பிராமணர் அரசு அலுவலகங்களில் பெரும்பான்மை இடங்களில் பணியில் இருந்ததை சுட்டிக் காட்டி மற்றையோருக்கும் அப்பணிகளில் இடம் வேண்டும் என்று குரல் கொடுக்க வைத்தனர்
ஆங்கிலேயர்.
இப்பணியில் தெலுங்கு பேசும் ஜமீந்தார்கள் மிகப் பெரும்பான்மை அளவில் மனமுவந்து பங்கேற்றனர். அவர்களில் பனகல் அரசர் என்பாரும் உண்டு. பணம் உள்ளது, சொத்து உள்ளது, ஓரளவு கல்வியும் உள்ளது ஆனால் அரசுப்
பதவிகளில் இடம் இல்லை என்பது அப்பணக்காரர்களுக்கு ஒரு கௌரவப் பிரச்சனையாகத்தான் இருந்தது. அந்தக் குமுறலில் ஆங்கிலேயர் எண்ணெய் ஊற்ற, தீ நன்றாக எரிந்தது. அக்கட்சியில் இருந்த பலரில் ஈ.வெ.ராமசாமிப் பெரியாரும் ஒருவர். இவர் காங்கிரஸில் இருந்து வெளியேறி நீதிக் கட்சியில் சேர்ந்தார்.
கட்சி ஆரம்பித்தால் போதுமா ? செயல்பட வேண்டாமா ? அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு கேட்டுத் துவங்கினார்கள். வெள்ளை அரசும் ஊக்குவித்தது. பிராமணர் அல்லாதோர் அனைவரையும் ஈர்க்கும் விதமாக ‘பிராமண எதிர்ப்பு’ என்னும்
ஆயுதம் எடுத்தார்கள். கூட்டம் சேரத் துவங்கியது. ஆனாலும் காங்கிரஸ் பலம் குறையவில்லை. பிராமண எதிர்ப்பை அதிகமாக்கினார்கள். அதற்காக புராணங்களையும் இதிகாஸங்களையும் பழிக்கத் துவங்கினர். மக்கள் கவனம் அவர்கள்
பால் கொஞ்சம் திரும்பியது. இதிகாஸ எதிர்ப்பை ‘இந்து மத’ எதிர்ப்பு என்கிற அளவில் கொண்டு செல்லத் திட்டம் வகுக்கப் பட்டது. அதற்கு அம்மதத்தின் தர்மகர்த்தாக்களான பிராமணர்களையும் அவர்கள் சார்ந்த ஆசாரவாதத்தையும் கடுமையாகத் தாக்கினார்கள். நல்ல பலன் கிடைத்தது. ஆனால் கடவுள்களை இழிவு படுத்த முனையவில்லை.
இடையில் பெரியார் நீதிக் கட்சியில் இருந்து விலகினார். தன்பக்கம் அதிக கவனம் ஈர்க்க தெய்வங்களை வசைபாடத் துவங்கினார். மெள்ள பலன் தெரியத் துவங்கியது. சினிமா கால் ஊன்றிய காலம் அது. அண்ணாதுரை, கருணாநிதி முதலான வசனகர்த்தாக்கள் தலை தூக்கினார்கள். சமூக சீர்திருத்தம் என்ற போர்வையில் சனாதன தர்மமும்,
அவைகளின் களஞ்சியங்களான கோவில்களும் குறிவைக்கப்பட்டன.
பிராமண ஆசாரவாதம் குலைய அவர்கள் சார்ந்த கோவில்கள் அழிய வேண்டும். கோவில்கள் அழிய அக்கோவில் தெய்வங்கள் சிறுமை படுத்தப்பட வேண்டும். எனவே ஸ்ரீரங்கம், சிதம்பரம், மதுரை முதலிய கோவில்கள், அதன் தெய்வங்கள் வசை பாடப்பட்டன.
ருசி கண்ட பூனை சும்மா இல்லை. வினாயகர், இராமர் சிலைகள், படங்கள் இழிவுபடுத்தப்பட்டன. சிலைகளை இழிவு படுத்தினால் பாதகம் ஒன்றும் இல்லை என்னும் செய்தி பரப்பப்பட்டது. சிலைகளை அவமதிப்பது ‘முற்போக்கு’ என்று
அறியப்பட்டது. சிலைத் திருட்டுக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை.
கோவில் அறங்காவலர் குழுக்களில் இறை நம்பிக்கை இல்லை என்று பறைசாற்றிய கட்சிக்காரர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் கோவில்களையும், அதன் சொத்துக்களையும் சேர்த்து அழித்தனர் அல்லது அழிப்பதைத் தடுக்காமல் நின்றனர்.
கல்விக் கூடங்களில் ஆன்மீக வகுப்புக்கள் நிறுத்தப்பட்டன. தமிழையும் ஆன்மீகத்தையும் பிரித்துப் போட்டனர். தமிழ் உயிர் வெளியேறிய வெற்று உடலானது. தமிழ் சடலமானது.
இவை தமிழக அளவில்.
இந்திய அளவில் சுதந்திரம் கிடைத்த நேரம். நேருவின் ஆளுமையில் புதிய கல்விக் கொள்கை பரப்பப்பட்டது. ‘செக்யூலரிஸம்’ என்ற போர்வையில் சம்பிரதாயம், பரம்பரியம் பின் தள்ளப்பட்டன. அதற்கு இடதுசாரிக் கல்வியாளர்கள்
துணை புரிந்தனர். கல்விக்கழகங்களில் இடதுசாரிச் சிந்தனை பரவியது. இடதுசாரி போல் பேசுவது அறிவுஜீவித்தனம் என்று கொள்ளப்பட்டது. வல்லபாய் பட்டேல் சோமனாதர் ஆலயத்தைப் புதுப்பிக்க முயன்றதற்கு நேரு மறைமுகமாக
எதிர்ப்பு தெரிவித்தார். புராதன மடங்களின் ஆளுமையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அது பட்டேலின் முயற்சியால் கைவிடப்பட்டது. ( அரசியலமைப்புச் சட்டம் எழுதப்பட்ட போதே இந்த முயற்சி நடந்தது. ஆனால் காஞ்சி
பரமாச்சாரியார் அனைத்து மடங்களின் பிரதிநிதிகளையும் அழைத்து மாநாடு நடத்தி அவர்களுக்கு நேருவின் எண்ணத்தைப் புரிய வைத்தார். அவரது சில முயற்சிகள் காரணமாக சில ஷரத்துக்கள் மாற்றப்பட்டன. இன்று இந்தியப் புராதன மடங்கள் தங்களின் நித்திய நியமங்கள் தொடர முடிகிறதென்றால் பரமாச்சாரியார் காரணம்.)
ஆக பாரதப் பண்பாட்டை இழிவு படுத்துவது அரசு ஆதரவுடன் நடந்தேறியது. அவ்வாறு செய்வது மேதாவித்தனம் என்றும் பறை சாற்றப்பட்டது. பல மேதாவிகள் கல்வியாளர்கள் என்ற பெயரில் வலம் வந்தனர். இப்படிப்பட்ட கல்வி
நிலையங்களில் பயின்ற மாணவர்கள் கோவில்களை வெறும் கற்கூடங்களாகப் பார்க்கப் பழக்கப் படுத்தப்பட்டனர். இவை பற்றி ஆராய்ச்சி என்ற பெயரில் கட்டுரைகள் எழுதுவதும் சொற்பொழிவாற்றுவதும் அறிவுஜீவித்தனம் என்று கொள்ளப்பட்டது. இந்திய வரலாற்று ஆய்வகம் ( Indian Council of Historical Research ) என்னும் அரசு
நிறுவனம் சார்பில் பல புத்தகங்கள் எழுதப்பெற்றன. அனைவரும் இடது சாரி ஆய்வாளர்கள். ( இவர்களின் இந்திய வரலாறு பற்றிய ஆய்வுகள் பல 60 வருடங்களாக இன்னமும் எழுதப்படுகின்றன என்று தெரிவிக்கிறார் திரு. அருண் ஷௌரி.)
இவற்றால் நல்ல பலன் கிடைத்தது. கோவில்கள் கலைக் குறியீடுகளாகவும், தெய்வச் சிலைகள் அடக்குமுறைச் சின்னங்களாகவும் கண்டனர் புதிய கல்விக் கொள்கையில் பயின்ற மாணவர்கள். சிலைகளில் இருந்து தெய்வத் தன்மை நீக்கம் கண்டது இவர்கள் பார்வையில். கல்வியில் இருந்து அற நெறி வகுப்புக்கள் நீக்கம் கண்டன. இந்திய அளவிலும் அற அழிப்பு நடைமுறைப் படுத்தப்பட்டது.
இந்தப் பன்முனைத் தாக்குதலால் கோவில்கள் அழிவதும், சிலைகள் காணாமல் போவதும் பெரிய விஷயமாகப் பார்க்கப்படவில்லை. பல ஊர்களில் பல நூற்றாண்டுத் தேர்கள் திடீர் என்று எரிந்து அழிந்தன. விசாரணை நடைபெறவில்லை ( தேரழுந்தூர் தேர் உதாரணம் ).
படிப்படியாகப் பண்பாட்டுச் சிதைவை மிகச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள மக்கள் பழக்கப்படுத்தப் பட்டனர். தெய்வச் சிலைகள் தெய்வத் தன்மை இழந்தன. மனிதர்களின் சிலைகள் உயிர் பெற்று வணங்கப் பட்டன. அது பகுத்தறிவு என்று கொள்ளப்பட்டது. சில தலைவர்களுக்கு அவர்கள் உயிருடன் இருக்கையிலேயே சிலைகள் வைத்தனர்.
வரலாறு படிப்படியாக அழிந்தது. முகலாய, இஸ்லாமிய மன்னர்கள் அழித்த பின்னும் மிச்சம் இருந்த வரலாறு, மக்களாட்சியின் மன்னர்களால் மறைமுகமாக அழிக்கப்பட்டது. அது முற்போக்கு என்று சொல்லபட்டது. மத மாற்றம் செய்யும் குழுக்களும் இவர்களுடன் சேர்ந்து செயல் பட்டன. இதனைத் தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் ஆட்சியும், இந்திய அளவில் இடதுசாரித் தாக்கம் கொண்ட காங்கிரஸ் அரசுகளும் செய்தன.
விளைவு திவ்யதேசப் பெருமான்கள் கடத்தல் மூலம் வெளிநாட்டு செல்வந்தர்களிடம் சென்று சேர்ந்தனர்.
—————————————————————————————————————-
தொடர்புடைய பிற பதிவுகள் :
‘சிறையில் இருக்கும் தெய்வங்கள் சந்தோஷப்படும்’
‘பெருமாளைக் காக்கலாம் வாருங்கள்’
‘ஆள் தேடிக்கொண்டிருக்கிறார் பெருமாள்’
‘