‘பெருமாளுக்கு என்ன ராகம் உகந்தது’ என்ற எனது பதிவிற்கு நந்திதா என்னும் வாசகர் விளக்கமான பதில் அனுப்பியிருந்தார். ‘பனுவல்’ என்னும் தமிழ்ச் சொல்லிற்கு விளக்கமும் அளித்துள்ளார். தமிழ்ப் பாடல்களுக்கு ராகம் கூடாது என்றும் ‘பண்’ என்பதே உகந்தது என்றும் சொல்கிறார் அவர். அவருக்கு என் நன்றியறிதல்கள். அந்தக் கடிதம் பின்வருமாறு கொடுத்துள்ளேன். இதன் அடிப்படையில் உங்களுக்கு ஏதாவது பண் ( ராகம் ) தெரிந்தால் தெரியப்படுத்தவும். ( இசைக்கும் எனக்கும் உள்ள தொடர்பு, ராகுல் காந்திக்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு போன்றது. )
வாசகர் கடிதம் :
வணக்கம்
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
பாசுரங்களை ராகத்தில் பாடுவதினும் பண்ணில் பாடுதலே நன்று. ராகத்தில் பதச் சேதம் வரும், பண்ணில் அது கூடாது. பண்ணுக்கு தேவ பாணி என்ற ஒரு பெயர் உண்டு. தத் விப்ராஸொ விபன்யவோ என்ற வேத பதத்தில் உள்ள விபன்யவ: என்ற சொல்லுக்கு வேர்ச்சொல் பன். அதற்குப் பொருள் இறைவனைத் துதித்தல் என்பதாகும். இதனைத் தமிழில் பண் என்பர்.
பண்ணை உடையது பனுவல் (பண்ணும் பனுவலும் பரதமும் விரதமும்) என்று கண்ணெடுத்தாகிலும் காணீரோ என்ற பாடலே எடுத்துக் காட்டு. பண்ணில் சிட்டைஸ்வரம் சேர்ப்பதில்லை. கைசிகப் பண்ணில் தான் நம்பாடுவான் பாடி வேதப் பயனைப் பெற்றார் என்பது வரலாறு.
ஆடி ஆடி அகம் கரைந்து என்ற பாசுரத்தில் நாடி நாடி நரசிங்கா என்ற பதம் உதாத்தத்தில் வரவேண்டும், அமரர் திரு எம் எம் தண்டபாணி தேசிகர் பாடியுள்ள “காதலாகி கசிந்து என்ற பனுவலில் வேதம் நான்கிலும் மெய்ப்பொருளாவது என்பது உதாத்தத்தில் வரும், காரணம் அந்தப் பனுவலின் சிகரமான பதம் வேத மெய்ப்பொருள் என்பதாகும் அது போன்று ஆடி ஆடி என்ற பனுவலில் நாடி நாடி நரசிங்கா என்பதும் உதாத்தத்தில் வரவேண்டும், தேவையானால் திரு தேசிகர் பாடிய காதலாகி என்ற பனுவலை அனுப்புகிறேன்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா