
சினிமாக் கலைஞர்களுக்கு மட்டுமே விழா எடுத்த நிலை போய் தமிழில் எழுத்தாளர் ஒருவருக்கு விழா எடுப்பது ஒரு அதிசயம். அந்த எழுத்தாளர் ஜெயமோகன். அவர் எழுதிய ‘வெண்முரசு’ என்னும் மகாபாரத நாவல். உலகெங்கிலும் உள்ள மகாபாரதத்தைப் படித்து விட்டு தொடர்ந்து தினமும் மகாபாரதம் எழுதி வருகிறார் ஜெயமோகன். அடுத்த பத்து ஆண்டுகள் விடாமல் எழுதப் போகிறார் அவர். தமிழுக்கும், இந்தியப் பாரம்பரியத்திற்கும் இந்த அவரது சேவை அளப்பரியது. ‘தி ஹிந்து’ நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் ‘இந்தியாவின் வரலாற்றைப் பதிவு செய்கிறேன்’ என்று சொல்கிறார் ஜெயமோகன்.
பழம்பெரும் எழுத்தாளர் அசோகமித்ரன், பி.ஏ.கிருஷ்ணன் முதலியோர் முன்னிலையில் நடிகர் கமலஹாசன், இசையமைப்பாளர் இளையராஜா முதலியோர் பங்குபெற்ற நிகழ்வில் நேற்று சென்னை அருங்காட்சியக அரங்கில் நூல் வெளியிடப்பட்டது.
பி.ஏ.கிருஷ்ணன் ஜெயமோகனை ஒரு கழுகு என்றார். வியாசர் என்னும் கழுகு பாரதத்தின் மேல் பறந்து பாரதம் எழுதியது. பின்னர் ஜெயமோகன் என்னும் கழுகு அப்படி எழுதியுள்ளது என்று பாராட்டினார் என்று தெரிகிறது.
கமலஹாசன் ‘நீங்கள் ( வாசகர்கள்) விஷ்ணுபுரம், இளையராஜா சிவபுரம், நான் வேறுபுறம்’ என்று வழக்கம் போல் தன் நாத்திக அபிமானத்தைப் பதிவு செய்துள்ளார். ஆனால் ஜெயமோகன் மேல் அவருக்கு இருந்த மரியாதையும் ( பொறாமையும் ?? ), ஆச்சரியமும் அவரது பேச்சில் வெளிப்பட்டது என்றும் தெரிகிறது.
‘அறம்’, ‘பின் தொடரும் நிழலின் குரல்’, ‘காடு’, ‘விஷ்ணுபுரம்’ எல்லாம் ஒன்றுமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு இந்த மகா பாரதத் தொடர் அமையப் போகிறது என்று புரிகிறது. ஒவ்வொரு நாளும் அவரது மகாபாரதப் பதிவு படித்த பின் ஒரு நொடியில் சில ஆயிரம் ஆண்டுகள் பின் சென்ற அனுபவம் ஏற்படுவது உண்மை.
விழாவில் 5 மகாபாரத விரிவுரையாளர்களையும் கூத்துக் கலைஞர்களையும் ஜெயமோகன் கௌரவித்தார். இது ஒரு முக்கியமான செயல். தற்காலத்தில் ‘உபன்யாசங்கள்’ அருகியுள்ள நிலையில், மக்களுக்குத் தொலைக்காட்சியின் அழுமூஞ்சி நாடகங்கள் விதித்துள்ள சுய-சிறை-தண்டனைகளையும் மீறி ஒரு சில உபன்யாசங்கள் நடந்துகொண்டுதான் வருகின்றன. ஆனால் அக்கலைஞர்கள் சமூகத்தால் கண்டுகொள்ளப்படுவதில்லை. அப்படிப்பட்ட ஐந்து கலைஞர்களுக்குப் பாராட்டு தெரிவிப்பது பாரதப் பண்பாட்டை மேலும் முன்னகர்த்த உதவும் அறச் செயல்.
ஒரு காலத்தில் நமது பிள்ளைகள் ‘மகா பாரதம் எழுதியது யார்’ என்றால் ‘ஜெயமோகன்’ என்ற பதில் வந்தால் ஆச்சரியம் இல்லை.
All the serials- suya sirai thandanai
Very good. Is there any possibility for abandoning these serials? Expecting that day.
LikeLike