காற்றில் கரைந்து காணாமல் போவது எப்படி ? ஐந்து நாடகங்கள் மூலம் பார்க்கலாம்.
நாடகம் 1
பெருமாள் முருகனின் நூல் ‘மாதொருபாகன்’ தடை செய்யப்பட வேண்டும் சென்று சில ‘அறிவாளிகள்’ கேட்டுள்ளனர். இன்னும் சிலர் அதனை எரித்தும் உள்ளனர். அது இந்து மதத்தை இழிவு படுத்துகிறது என்பது இவர்களது குற்றச்சாட்டு.
தடை செய்யக்கூடாது என்பது ஆ.. பக்கங்களின் வாதம். என்னதான் இருந்துவிடப் போகிறது அந்த நூலில் ? குழந்தை பாக்கியம் இல்லாத ஒரு தம்பதியினர் ஒரு பழைய சம்பிரதாயத்தின் வழியில் குழந்தை பெறுகின்றனர். இது புதுமையான சம்பிரதாயம் கூட அல்ல. கிட்டத்தட்ட இதே முறையில் மகாபாரதத்தில் குழந்தை பிறப்பு நிகழ்ந்துள்ளது. இந்த நூலை எரிக்க வேண்டும் என்றால் மகாபாரதத்தையும் எரிக்கலாமா ? இவர்கள் கூற்றுப்படி பார்த்தால் கம்பராமாயணம், ஆண்டாள் பாசுரங்கள், சீறாப்புராணம் என்று பலவற்றை அழிக்க வேண்டும்.
நூல் தடை கோருவது முட்டாள்தனமானது. ஓரிரு நூல்களால் இந்துமதம் அழியக்கூடியது என்று நம்புகிறார்களா இவர்கள் ? 700 ஆண்டுகால இஸ்லாமிய தாக்குதல்களால் அழியாதது இந்த வாழ்க்கை வழிமுறை. 250 ஆண்டுகால ஆங்கில ஆட்சியில் அழியாதது இது. இந்த ஒரு நூல் தான் இதனை அழிக்கப்போகிறதா ? நாடகம் நன்றாக இருக்கிறது.
நூல் எரிப்புக்கு எதிராகத் தமிழ்ப் ‘போராளிகள்’ ஒன்று திரண்டனர். ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் ‘இந்து பாசிசத்திற்கு’ எதிராக அணி திரண்டனர். கருத்துச் சுதந்திரம் பாதுகாக்கப் பட வேண்டும் என்று பெருங்குரல் எழுப்பினர். ‘முற்போக்கு’ என்ற அணியில் இவர்கள் பாசிசத்தை எதிர்த்தனர். இந்த நாடகமும் நன்றாக நடந்தேறியது.
இந்த நாடகம் இருக்கட்டும். இன்னொரு நாடகம் பற்றிப் பார்ப்போம்.
நாடகம் 2
2013ம் ஆண்டு அமினா வதூத் என்ற அமெரிக்கப் பெண் அறிஞர் சென்னைப் பல்கலையில் பேச இருந்தார். அவருக்குப் பேச அனுமதி மறுக்கப்பட்டது. இதற்காக சென்னை வந்த அவர் பேசாமலேயே திரும்பினார். அவர் ஏன் பேசவில்லை ? அவர் இஸ்லாமியப் பெண்ணீயவாதி, அறிஞர். பெண்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்று பேசி வருபவர். அவர் சென்னைப் பல்கலையில் பேசினால் ‘சட்டம் ஒழுங்கு’ பிரச்சினை ஏற்படும் என்று காரணம் கூறி அவரது பேச்சு நிறுத்தப்பட்டது.
ஆனால் பாவம் அமினா வதூத். அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க ‘போராளிகள்’ வரவில்லை. ஏனினில் அப்போது ‘தமிழ்ப் போராளிகள்’ காற்றில் கரைந்து காணாமல் போனார்கள்.
நாடகம் 3
இத்துடன் இன்னொரு நாடகமும் நடந்தது. சாஹித்ய அக்கதெமி பரிசு பெற்ற ஜோ டி குரூஸ் அவர்களின் தமிழ் நாவல் ஆங்கிலத்தில் மொழிபெயற்கப்பட்டது. நூல் வெளியாவதற்கு முன் அவர் நரேந்திர மோடிக்கு ஆதரவாகப் பேசினார். உடனே ‘நவயானா’ பதிப்பகம் நூலை வெளியிட மறுத்துவிட்டது. ஒரு நூலாசிரியருக்கு அவருக்கென்ற ஒரு தனிக்கருத்து இருக்கக் கூடாதா ? அவருக்குக் கருத்துச் சுதந்திரம் இல்லையா என்று ‘முற்போக்கு’ எழுத்தாளர் அமைப்புகள் போர்க்கொடி தூக்கவில்லை. ஏனெனில் அவர்கள் காற்றில் கரைந்து காணாமல் போனார்கள்.
நாடகம் 4
பல ஆண்டுகள் முன்னர் ‘சாத்தானின் வேதம்’ என்ற சல்மான் ருஷ்டியின் நூலைத் தடை செய்தது இந்திய அரசு. அப்போதும் இந்த ‘முற்போக்கு முத்தண்ணாக்கள்’ தோன்றவில்லை. ஏனெனில் அவர்கள் அப்போதும் காற்றில் கரைந்து காணாமல் போனார்கள்.
நாடகம் 5
சில ஆண்டுகள் முன்பு இடது சாரிகள் ஆட்சி செய்த மேற்கு வங்காளத்திலிருந்து பங்களாதேஷ் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். அப்போதும் இந்த முற்போக்கு எழுத்தாளர்கள் காற்றில் கரைந்து காணாமல் போனார்கள்.
ஆக, நீங்களும் காற்றில் கரைந்து காணாமல் போய்த் தேவையானபோது மட்டும் தோன்றும் ஆற்றல் பெற விரும்பினால், தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் சேருங்கள்.
ஐயா பிரச்னை இப்போது எரிப்பதை பற்றியோ, தடை செய்வதைப் பற்றியோ, இல்லை அப்படியான வழக்கம் சரியா தவறா என்பதைப் பற்றியோ இல்லை. பெருமாள் முருகன், இப்படி ஒரு விஷயம் திருச்செங்கோட்டில் நடந்ததாகவும், அது மட்டுமின்றி அர்த்தனாரீஸ்வரரையும், அந்த திருவிழாவுக்கு செல்லும் ஆண்கள்-பெண்கள் அனைவரையுமே தரக்குறைவாகவும் விமர்சித்துள்ளார். இது உண்மையான நடைமுறை என்றால் எதிர்ப்பு இருந்திருக்காது. ஆனால், வெறும் கற்பனையில், சேறு வாரி தூற்றும் எண்ணத்தோடு எழுதியுள்ளார் பெருமாள் முருகன். தன் கடவுள், மரபுகள், முன்னோர், தன் வீட்டு பெண்கள்-இவை அனைத்தின் மீதும் மொத்தமாக சாக்கடையை அள்ளி வீசியுள்ளார். இதற்கு வெட்டி சாய்க்காமல் சட்ட ரீதியாக அந்த ஊர் மக்கள் (அனைத்து சாதியினரும்) சேர்ந்து புகார் அளித்துள்ளார்கள். இதுவே ஆச்சரியமளிக்கும் விஷயம்தான். இப்படி ஒரு அவதூறு செய்யும்போது நூறு சதவீதம அனைவரும் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது, சிலர் உணர்சிவசப்படத்தான் செய்வார்கள்.. இதை உளவியல் ரீதியாக, அவர்கள் நிலையில் இருந்து சிந்திக்க வேண்டும்.
இன்னும் சொல்லப் போனால் இந்த சகிப்புத் தன்மையும் எதற்கெடுத்தாலும் – கயவர்களிடமும் சூதுகாரர்களிடம் கூட முறைப்படி போகும் பழக்கத்தால் தான் காலம் காலமாக பாரத மக்கள் நாசமாகப் போய்க்கொண்டிருக்கிறார்கள்.
LikeLike
நல்ல கருத்து. பதிவிற்கு நன்றி.
LikeLike