என்ன அப்படியே நின்றுவிட்டீர்கள் ? மதிலைப் பார்த்து மலைத்துவிட்டீர்களா ? உள்ளே போங்கள். இன்னும் பல ஆச்சரியங்கள் இருக்கின்றன.
இது 1000 ஆண்டுகள் முன்பு இராமானுசர் நடந்து சென்ற பிராகாரம். வேதாந்த தேசிகரும் பிள்ளை லோகாச்சாரியாரும் நின்று கண்ணீர் மல்க வழிபட்ட சன்னிதிகள். இந்தத் தூண்களில் இராமானுசரின் கை பட்டிருக்கும். இதோ இந்தத் தூணில் சாய்ந்தபடியே கூரத்தாழ்வானின் ‘கண் போன கதையை’ இராமானுசர் கேட்டிருப்பார். அவர் உகுத்த கண்ணீரின் உப்பு இந்தத் தாழ்வாரங்களில் இன்னும் ஒரு சிறு படிமமாவது இருக்கும்.
இதோ இந்தக் குதிரைகளை, மண்டபத்தின் கற் சங்கிலிகளை இராமானுசர் பார்த்து வியந்திருப்பார். இந்த இடத்தில் நின்று நெடுஞ்சாண் கட்டையாகக் கீழே விழுந்து சேவித்துத் தனது அஞ்சலிகளை இராமானுசர் வரதனுக்குச் செய்திருப்பார். நீங்களும் அந்த இடத்தில் விழுந்து வணங்குங்கள். அவர் உடல் ஸ்பரிசம் பட்ட ஏதோ ஒரு மணல் துகள் உங்கள் உடலில் ஒட்டட்டும். அது போதும் கடைத்தேறுவதற்கு.
அதோ திருக்கச்சி நம்பிகள் என்ற வேளாள மரபில் உதித்த வைணவரிடம் இராமானுசர் அடிபணிந்து தெண்டன் சமர்ப்பிக்கிறார். கோவில் பிராகாரத்தில் இருவரும் ஒன்றாக விழுந்து சேவிக்கிறார்கள் பாருங்கள்.
இவர் யார் என்று பார்க்கிறீர்களா ? புரந்தர தாஸராக இருக்கலாம். அல்லது வேறு யாரோ அடியாராக இருக்கலாம். இக்கோவிலுக்குக் கைங்கர்யம் செய்த பல நூற்றுக் கணக்கான கைங்கர்ய பரர்களில் ஒருவராக இருக்கலாம். அவரையும் வணங்கிக் கொள்ளுங்கள்.
அட, அதோ கவிதார்க்கிக சிம்மம் என்று அழைக்கப்பட்ட வேதாந்த தேசிகர் வருகிறாரே ! அவரைப் பின் தொடர்ந்து ஒரு சீடர் குழாம் வருகிறதே ! ஏதோ வார்த்தை சொல்லியபடி வருகிறார் பாருங்கள். கருட தண்டகம் அல்லது வரதராஜ பஞ்சாசத்தாக இருக்கலாம். அவரே அருளிச்செய்த சுலோகங்களை அவரே சொல்லி வரும் அழகு என்ன அழகு !
அங்கே புஷ்கரணியின் அருகில் அரச உடையில் தோன்றுபவர்கள் யார் ? குலோத்துங்க சோழனும், விக்ரம சோழனும் ஒன்றாக வருகிறார்கள் பாருங்கள். அவர்கள் கட்டிய கோவில் அல்லவா இது ? இதோ இந்த மாபெரும் மதிள் சுவர் விக்ரம சோழன் கட்டியது அல்லவா ! அதைப் பார்க்கத்தான் வருகிறானோ அரசன் !
இல்லை இல்லை, அத்திகிரி வரதரை சேவிக்க வந்திருப்பார்கள்.
நீரின் அடியில் உறங்கும் அத்திகிரி வரதர் வெளியே வர இன்னும் பல ஆண்டுகள் உள்ளனவே ! 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை தானே வருவார் அவர் ? அதுவரை இங்கேயே இருப்பார்களோ மன்னர்கள் ? இருக்கலாம். அவர்கள் கட்டிய கோவில். வேண்டியமட்டும் இருக்கலாம்.
சுவர்களிலும் தரையிலும் எழுதிக்கொண்டிருக்கிறார்களே இந்தக் கல் தச்சர்களும் கல்வெட்டெழுத்தாளர்களும் கோவிலின் வரலாற்றை எழுதிக்கொண்டிருக்கிறார்கள் பாருங்கள். சோழர்கள் பற்றியும், பின்னர் வந்த பல்லவர்கள் பற்றியும் எழுதிக்
கொண்டிருக்கிறார்கள்.
நன்றாக உற்றுப் பாருங்கள் கருங்கல் சுவர்களை. தமிழில் வட்டெழுத்து, தெலுங்கு எழுத்து என்று பல வகையான எழுத்துக்கள் தெரியும். தெலுங்கு எழுத்துக்கள் கிருஷ்ணதேவராயர் செய்த உபயங்கள் பற்றியவை .
‘நீள் மதிள் அரங்கம்’ என்று கேட்டிருப்பீர்கள். இங்கு பாருங்கள். எவ்வளவு பெரிய மதிள் சுவர் ! அன்னியப் படை எடுப்புக்கு அஞ்சி எழுப்பப்பட்டவை இவை.
மேளச்சத்தம் கேட்கிறதே. அத்துடன் தியப்பிரபந்த பாரயண கோஷ்டியும் வருகிறது பாருங்கள். என்ன வேகமாகப் வரதராஜப் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருள்கிறார் ! சற்று விலகி நின்று சேவியுங்கள். இராமானுசரும் தேசிகரும்
ஒன்றாக நின்றவண்ணம் சேவிக்கிறார்கள் பாருங்கள். அவர்கள் அருகில் பவ்யமாக நின்று கொண்டிருக்கும் மணவாள மாமுனிகளைப் பாருங்கள். இரு நூறு ஆண்டு கால இடைவெளி இவர்களுக்குள் இருந்தாலும் வரதன் இவர்களுக்கு ஒருவனே.
ஆச்சாரியார்கள் ‘திரி தண்டம்’ ( மூன்று கழிகள் ) ஏந்தியுள்ளனர் பாருங்கள். ஜீவாத்மா, பரமாத்மா, ஜடப்பொருள் மூன்றும் உண்மை என்று எடுத்துரைக்கும் விசிஷ்டாத்வைத சித்தாந்தம் இந்த மூவரின் கைகளிலும் ஒளிரும் திரி தண்டத்தால் உணர்த்தப் படுகிறது. இப்படி இருக்க இவர்களுக்குள் வேற்றுமை என்ன ?
மூவரும் ஒன்றாக சூக்ஷ்ம சொருபமாக நின்று பெருமாளைச் சேவிக்கிறார்கள் பாருங்கள்.
சூக்ஷ்ம சொரூபமா ? என்ன பேச்சு இது ?
இராமானுசர் யார் தோளின் மீதோ கை வைத்தபடி செல்கிறாரே, அவர் யார் தெரிகிறதா ? நல்ல கட்டுமஸ்தான உடல் வாகு, கரிய நிறம் ஆனால் உடல் மொழியில் பவ்யம், மரியாதை. அவர் தான் மல்லர் குலத்தவரான உறங்காவில்லி தாஸர். ஸ்ரீவைஷ்ணவனுக்கு ஜாதி வித்யாஸம் இல்லை என்று பறை சாற்றிய இராமானுசர் அவ்வாறே ஒரு மல்லனைத் தனது பிரதான சீடனாகக் கொண்டிருந்தார் என்று கேட்டிருப்பீர்கள். இதோ நேரே பார்க்கிறீர்கள்.
வயதான திருக்கச்சி நம்பிகள் என்ற வைணவரை இராமானுசர் வணங்கினாரே, அதைப் பார்த்தீர்கள் தானே ? நம்பிகள் வரதராஜன் என்ற பேரருளாளனின் சன்னிதிக்குள் சென்று அவருக்கு ஆலவட்டம் வீசுகிறார் பாருங்கள். இதில் என்ன வியப்பு என்கிறீர்களா ? அவர் எண்ணெய் வியாபாரம் செய்யும் வணிகர் குலத்தில் பிறந்தவர். இதைக் கருவறைக்கு வெளியில் இருந்து சேவித்தவர் ஒரு அந்தணர். அவர் இராமானுசர். முன்னவருக்குப் பின்னவர் சீடர். இது வைணவம்.
என்ன தங்கம் போல் மிளிர்கிறதே என்று பார்க்கிறீர்களா ? ஆம், தங்க முலாம் பூசப்பட்ட விமானம் தான் அது. விமானத்துக்குத் தங்கம் பூசியாகி விட்டது. ஆனால் உள்ளங்களில் தான் இன்னும் அழுக்கு உள்ளது. இல்லாவிட்டால் வைணவர்களுக்குள்ளேயே இவ்வளவு பேதம் பார்ப்பார்களா ? சரி, எழுந்திருங்கள்.
என்ன நினைவு இது ? என்ன அருகில் யாரையும் காணோம் ? இவ்வளவு நேரம் கூட நின்று யார் பேசியது ? நான் கண்ணில் கண்ட காட்சிகள் எங்கே ? இராமானுசர் எங்கே? தேசிகர் எங்கே ? திருக்கச்சி நம்பிகள் எங்கே ? மணவாள மாமுனிகளும் தேசிகரும் ஒன்றாக நின்று பெருமாளைச் சேவிக்கிறார்களா ? அதுவும் கலை பேதம் மிகுந்த காஞ்சீபுரத்தில் இரு கலைகளையும் ஒன்று சேர விட்டுவிடுவார்களா ? எந்த நூற்றாண்டு இது ?
திடுக்கிட்டு எழுந்தேன். வரதனை சேவிக்கக் கைகளை ஊன்றிக் கீழே குனிந்திருந்தேன். அப்படியே எவ்வளவு நேரம் இருந்தேனோ தெரியவில்லை.
மெள்ள எழுந்து முன்னம் இருந்த சன்னிதியை நோக்கினேன்.
கூப்பிய கையுடன் நின்றுகொண்டிருந்தார் கருடாழ்வார், சிலை வடிவில்.
ஒருவேளை கூட இருந்து பேசியது அவரோ ?
கோவிலுக்குக் கிளம்பும்போதே மனைவி சொன்னாள்,” கொஞ்சம் பொங்கல் சாப்பிட்டுவிட்டுப் போங்கள்”, என்று. நான் தான் அவசரமாகக் கிளம்பி வந்து, பசி மயக்கத்தில் இப்போது தென்கலையாரும் வடகலையாரும் ஒன்றாகப் பிரபந்தம்
சேவிப்பது போல் அதுவும் கஞ்சீபுரத்தில் சேவிப்பது போல், ஐயங்கார்களுக்கு ஜாதி வித்யாசம் இல்லை என்றெல்லாம்…
சே, என்ன ஒரு ஹலூசினேஷன்.
ranjani135
January 3, 2015 at 8:41 pm
இளைய தலைமுறையில் இந்த மாற்றங்கள் நிகழ்ந்து வருவதாகத் தோன்றுகிறது. அதுவும் வெளிநாடுகளில் இருப்பவர்கள் இருகலையாரும் சேர்ந்து சேவிப்பதாகச் சொல்லுகிறார்கள். சிறிது காலம் ஆனாலும் நிச்சயம் நீங்கள் கண்ட கனவு நனவாகும்.
கண்கள் பனிக்க பனிக்க நீங்கள் எழுதியதைப் படித்தேன்.
LikeLike
Amaruvi Devanathan
January 3, 2015 at 9:38 pm
Very true madam. That is how it is in Singapore where I live.
LikeLike
Raghavan Sampathkumar
February 5, 2015 at 11:29 am
Yes. That’s what adiyen also believes…
தேசிகனும் மாமுனியும் தீர்க்கமாயுன் னடிபணிந்
துய்தவெம் மிராமானுச ! வாழி வாழி !!
http://wp.me/p5gvcj-p
LikeLike
R. Lakshmi Narasimhan
February 7, 2015 at 1:40 pm
Want to see kanchi varadhan very soon with all emotional and spiritual feelings attained from your writings.
LikeLike